Follow by Email

Monday, 22 July 2013

ALL NEW ஸ்பெஷல் !

ஹாட்லைன்: நண்பர்களே, மரியாதைக்கு உரியவர்களே வணக்கம் ! ரசனை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம் ; இதில் இது தான் உயர்வு இது தான் தாழ்வு என்று எதையுமே பட்டியலிட முடியாது என்பதே நிதர்சனம். நாம் உடுக்கும் உடைகள் ; நாம் விரும்பும் வர்ணங்கள் ; உண்ணும் உணவு வகைகள் என எல்லாமே மற்றவரிடம் இருந்து நாம் வேறுபடுகிறோம் ! 

நாம் நம் தனித் தன்மையை நிலைநிறுத்தும் தன்மையாலேயே ஆரறிவு படைத்த மனிதர்களாக சிந்திக்கிறோம் ; அவரவர் தகுதிக்கேற்ப சீரும் சிறப்பான வாழ்வுதனை அனுபவிக்கிறோம். ஒருவருக்கு ஒரு காமிக்ஸ் பிடிக்கிறது என்பதற்காக நாம் போலியான ஒப்புதல் வழங்க எந்த அவசியமும் கிடையாது என்பதே என் எண்ணம் ! 

ஏனெனில் நம் விருப்பு வெறுப்புகள் ; ரசனை சார்ந்த விஷயங்கள் ; மன அமைதி ; அது தரும் சந்தோஷம் என எல்லாமே நம் எண்ண அலைகளின் அளவுகோலின் படியே பயணிக்கிறது. ஒரு நல்ல ரசனை நமக்கு மனமகிழ்வை தருவதாக அமையும் போது அதை வலுக்கட்டாயமாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் எங்குமே எழுவதில்லை. ஏனெனில் நம்மால் முடிந்த வரை நம் மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ள பழகுவதே இவ்வுலக வாழ்க்கையின் பயனாகும். அறிவும் ரசனையும் வானவில்லின் இரு முனைகள் என்பதை தவிர வேறு உவமை எனக்கு இங்கு எதுவும் தோணவில்லை !     

ஷார்ட்லைன்: ரசனைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் !

ஷாட்லைன்:  ALL NEW ஸ்பெஷல் மீதான நம் வாசகர்களின் ரசனை   கிழக்கும் மேற்கும் போன்றதாகும். இத்திசைகள் என்றுமே இணைவதில்லை ! 


1. மிஸ்டர் மரமண்டை10 July 2013 21:20:00 GMT+5:30

பிரளயத்தின் பிள்ளைகள் - கதை விமர்சனம் :

*காமிக்ஸ் படிக்கும் போது மனம் இலகுவாகுகிறது ! 
*மனஅழுத்தம் வரும்போது காமிக்ஸ், இறகாய் மனதின் சிறகை விரிக்க வைக்கிறது !
*அன்றாட கவலைகள் ; தீராத கஷ்டங்கள் ஏற்படுத்தும் காயங்களுக்கு காமிக்ஸ் அருமருந்தாகிறது !
*பிரச்னைகளின் இடையில் வரும் ஒவ்வொரு விடியலும், காமிக்ஸால் பூஞ்சோலையாய் புலர்கிறது !

இதுபோல் இனி யாரும் கூறினால் அது உன்மைதானா என ஒரு கணம் யோசிக்க வைத்துவிடும் இந்த கிராபிக் நாவல். அதனால் காமிக்ஸுக்கும்  கிராபிக் நாவலுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் எப்பொழுதும் மனதிற் கொண்டால் இதுபோன்ற குழப்பங்கள் வராது என்பது நிச்சயம். நாற்பது ஆண்டுகால தமிழ் காமிக்ஸ் ரசனையின் சரித்திரத்தை தலைகீழாய் புரட்டி போட்டு விட்டது இந்தப்  'பிரளயத்தின் பிள்ளைகள்' என்றே கூறவேண்டும்..!? 2. மிஸ்டர் மரமண்டை10 July 2013 22:12:00 GMT+5:30

தாளாத சோகத்தில் ; எதிர்பாராத பெரும் இழப்பில் தொடங்கும் கதையின் வீரியம் நேரம் ஆக ஆக உச்சத்தில் கொண்டு சென்று நம்மை நிர்ச்சலனத்தில் நிறுத்தி விடுகிறது. கதையோடு பயணிக்கும் நம்முள் வலியையும் அது தரும் வேதனையையும் ஒருசேர ஊசியாய் உள்ளத்தில் தைத்து, ஏதோ ஒரு புது விடியல் வராதா ; எங்கோ ஒரு விடிவெள்ளி தென்படாதா என்று நம்மையும் துடிதுடிக்க வைக்கும் கதை இது !

கதையில் வரும் நிர்வாணங்கள், அந்த பாவப்பட்ட வாழ்க்கையின் வேதனையை கண்டு உள்ளே துயிலும் உயிரின் கருவறையை கூட அதிரச் செய்திடுமோ என அஞ்சி, இதயம் பிளந்து விட்டதோ எனும் துன்பயியல் பாடத்தை போதிப்பதாக அமைகிறது ! 

சோகத்தை இதயத் துடிப்பாய் கொண்டு, வேதனையை வழிப் பார்வையாய் விரித்து நடைபோடும் இந்த நாடோடிகளின் வாழ்க்கைப் பயணத்தில், காஸ்-சேம்பருக்கு அனுப்பப்பட்ட மாந்தர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்களோ என ஒரு கணம் நினைக்கத் தோன்றி விட்டது. கத்தியின்றி ; இரத்தமின்றி ; அணுஅணுவாய் நொடிதோறும் துடிக்கும் நரகவேதனையின்றி ; ஓய்வின்றி உழைத்து ஓடாய் தேய்ந்து ; உணவின்றி உடலிளைத்து ; நிழலாடும் நினைவுகளும் சித்த பிரமையாய் ; தவறி வரும் கனவுகளும் கர்ண கொடூரமாய் ; வாழும் வாழ்க்கையை விட சட்டென சுவாசித்து ; பொட்டென உயிர்விடும் காஸ்-சேம்பர் அந்த பாவப்பட்ட மாந்தர்களுக்கு ஒரு சொர்க்க வாசல் என்றுதான் கூற தோன்றுகிறது ! 

வலியும் அது தரும் வேதனையும் உணரும் போதல்லவா உயிர் பிரியும் வேதனையை தரும் ; அதை நமக்கு உணரவைக்க முயற்சித்த இந்த பிரளயத்தின் பிள்ளைகள் - தரும் சோகமும் என்றும் மாறாத வடுக்களே. கதையின் இறுதியில் நாடோடிகள் மூவர் சுகிக்கும் சுதந்திரமும் சுகமாய் இனிக்கவில்லை. உயிரைத் துறந்த உடலாய் ; உணர்வுகளற்ற நடைப்பிணமாய் வாழும் வாழ்க்கை அதுவென்பதை தவிர வேறென்ன..?3. மிஸ்டர் மரமண்டை11 July 2013 14:58:00 GMT+5:30

தோட்டா தேசம் - கதை விமர்சனம் :

கதையின் பெயர் தான் தோட்டா தேசம் ; ஆனால் அங்கே பயணித்து வருபவர்களுக்கு ஒரு இனம் புரியா உல்லாச உணர்வுகள் நிச்சயம் ; சொல்லிக் கொள்ளும்படி பெரியதாய் அதிரடியோ ; ஆக்ஷனோ எதுவுமே இல்லாவிட்டாலும் புத்துணர்ச்சி அல்லது அதுபோன்றதொரு பரவசநிலையை தர வல்லதாக அமைந்துள்ளது தோட்டா தேசம்..! 

முதற் காரணம் : கதையெங்கும் வியாபித்திற்கும் வெளிர் நீலவண்ணம் நம் பளீர் கண்களுக்கு இதமான குளிர் கைவண்ணத்தை காட்டுகிறது. பார்க்க பார்க்க பரவசமாக அல்லது நம்முள் பதுங்கி ஆழ்துயிலும் இன்பமயமான உணர்வுகளை ; சங்கீதம் இசைத்து தட்டி எழுப்பும் மொபைல் ரிமைன்டராக சித்திர வர்ணங்கள் நம்மை வழியெங்கும் ஆட்கொள்கின்றன.

இரண்டாவது காரணம் : வேலைத்தேடி நிராதரவாக வரும் "ரெட் டஸ்ட்" ன் முதலாளி "கமான்சே" என்ற இளநங்கை. வெளியில் எவர் மறைத்தாலும் அதனூடே கடக்கும் போது சில்லென்ற ஒரு சிலிர்ப்பும் அந்நேரம் இதமாய் வருடும் இளம் தென்றலின் சுகத்தையும் அனுபவிப்பீர்கள் என்பது உறுதி. இளமைக்காக அல்ல அந்த உணர்வு ; அங்கே புதிதாய் உருவெடுக்கும் அந்த உறவின் பிணைப்பிற்காகவே வரும் இந்த புத்துணர்வு. நம் ஒவ்வொருவர் உள்ளும் கொஞ்சமாய் "ரெட் டஸ்ட்" ஒரு ஓரமாக ஒளிந்து கொண்டுதான் இருக்கும் அல்லவா :-) 

மூன்றாவது காரணம் : இரண்டு சோப்ளாங்கி கௌ-பாய்கள் க்ளெம் மற்றும் டோபை தத்தம் வெகுளித்தனத்தாலும், மறு கேள்வியின்றி கீழ்படியும் குணத்தாலும் நம்மை சுற்றிலும் ஒரு சுகந்த வாசத்தை பரவச் செய்கிறார்கள். 

மேற்கூறிய மூன்று உணர்வுகளையும் ஒருசேர அனுபவிக்கும் பரவசத்தை, நீங்கள் தோட்டா தேசத்தில் பயணம் செய்யும் போது உணர்ந்தால் நம்மிடம் உள்ள காமிக்ஸ் ரசனை உண்மையிலேயே நமக்கு கிடைத்த புதையல் தான் :-)4. மிஸ்டர் மரமண்டை11 July 2013 20:12:00 GMT+5:30

நதியில் ஒரு நாடகம் - கதை விமர்சனம் :

எதிரியின் கையில் உள்ள துப்பாக்கியை விட நண்பனின் கையில் உள்ள மொக்க கத்தி ரொம்ப ரொம்ப டேஞ்சரானது. என்ன வாசகர்களே ஒன்னும் புரியவில்லையா? கீழ்வரும் கதை விமர்சனத்தை கொஞ்சம் படித்து தான் பாருங்களேன் :)

ஆழ்ந்த அறிவாற்றலும் ; தீர்க்கமான சிந்தனையும் ; கூர்மதியும் கொண்ட தோழன் என தொடங்கும் கதாசிரியரின் வரிகளுக்கு சொந்தக்காரரான ஷெர்லாக் ஹோம்ஸ் - ஸ்டீல் பாடியைத் தானா, இது வரை நாம் வேஸ்ட் பாடி ; வொர்ஸ்ட் பாடி என்று நக்கலும் நய்யாண்டியும் செய்து வந்தோம் என்று ஒரு கணம் அதிர்ந்து தான் போகிறோம் :-(

சிரிப்புக்கான இடமும் அதற்கான படமும் : 210 - அடங்கொக்கா மக்கா..! 

இந்த இடத்தில் நீங்கள் ஒரு தடவ சிரிச்சா அது நூறு தடவ சிரிச்சா மாதிரி..!

எனக்கென்னவோ இம்முறை நம் நாயகன் கண்டுப்பிடித்த உண்மையிலேயே நடந்த உண்மையை சிலாக்கோ ( எ ) டுபாக்கோ பிரபு தான், தன் டார்லிங் க்கு பயந்து மறைத்து கடைசியில் பீலா விட்டு விட்டார் என்று தோன்றுகிறது. எனவே அவர் ஒரு டுபாக்கூர் பிரபு என்பது உண்மையாகி விட்டது. அதற்கு தோதாக முன்பு ஒரு முறை செம மப்பில் ராணியாரை 'பப்ளிமாஸ்' என்று விமரிசித்த டாக்டர் வாட்சன் ஹிஹி ; ஹாஹா ; ஹோஹோ என்று சிரித்து, கடைசியில் நம் ஷெர்லாக் ஹோம்ஸை காமடி பீஸ் ஆக்கி விட்டார். இங்கு நீங்கள் மீண்டும் ஒரு முறை மேலே உள்ள வரியை படித்து பாருங்கள் :)

5. மிஸ்டர் மரமண்டை11 July 2013 21:58:00 GMT+5:30

கூலியில்லா கைக்கூலி - கதை விமர்சனம் :

ஸ்டீல்பாடி ஷெர்லாக் ஹோம்ஸ் இம்முறை ஹுயுமன்பாடி ஷெர்லாக் ஹோம்ஸ் ஐயும் மிஞ்சி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். என்னவொரு வேகம், அதற்கேற்ற யூகம், குற்றத்தை நிரூபிக்க துடிக்கும் உத்வேகம்... அடடா, உண்மையாகவே அவர் ஒரு ஸ்டீல் பாடி தான் சார். 

நய்யாண்டிக்காகவே உருவாக்கப்பட்ட இந்த நாயகன், தன்னை உருவாக்கிய கதாசிரியரின் கற்பனையையும் ; கைகளையும் மீறி இக்கதையில் தன் சாதனையை ; டெர்மினேட்டரை போல் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். ஸ்டீல்பாடி வேஸ்ட்பாடி என்று கூரியவர்களுக்கு, ஹாய் எவெரிபடி.. பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஃஆப் மை பாடி என்று நிரூபித்து விட்டார். வாய் விட்டு சிரிக்கவும் இங்கு சில இடங்கள் உண்டு என்பதால் டாக்டர் வாட்சனும் இக்கதையில் திடீர் பிரபல்யத்தை தேடிக்கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்..!

ஆதலினால் ஸ்டீல்பாடியும் தொடர்ந்து அதகளம் செய்வாராக :-)
6. மிஸ்டர் மரமண்டை11 July 2013 22:33:00 GMT+5:30

க்ரீன் மேனர் - கதைகள் விமர்சனம் :

க்ரீன் மேனர் கதைகளின் ஆழத்தையும், நீளத்தையும், அகலத்தையும் ஏற்கனவே நண்பர்கள் அலசி ஆராய்ந்து, துவைத்து காயப்போட்டு விட்டதால், அதன் மூலம் நாம் உணர்ந்துக் கொள்ளவேண்டிய நீதி போதனைகளை மட்டுமே இங்கு சொல்வது அவையடக்கத்திற்கு ஒரு சான்றாக அமையுமன்றோ..?!

1.கொலை செய்வீர் கனவான்களே..!
செந்தமிழும் நா பழக்கம்  சித்திரமும் கைப்பழக்கம் !

2.அவலத்தில் குதூகலம் !
பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் !

3.(ஒரு பின்குறிப்பு)
கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் !

4.சிறு கொலையும் கைப் பழக்கம் 
தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் (ஜான் ஸ்மித்) !

5.இரசித்துக் கொல்ல வேண்டும் !
களவும் கற்று மற !

6.நிஷ்டூர தண்டனை!
ஆதலினால் காதல் செய்யாதீர் !
7. மிஸ்டர் மரமண்டை13 July 2013 12:55:00 GMT+5:30

ஆசிரியர் விஜயன் : தங்களின் பதில் சார்ந்து என் கருத்தையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். கதையின் களம்: 1880. இடம்: க்ரீன் மேனர் க்ளப் !வார்தைகளில் நாகரீகத்தையும் ; வழக்கில் இல்லாத உயர்ந்த சொற்களையும் தங்களுடைய கௌரவமாக கொண்ட மிகப்பெரிய செல்வச் சீமான்கள் புழங்கும் க்ரீன் மேனர் க்ளப் ! இப்பொழுதும் சிலர் பேச்சு வழக்கில் இல்லாத உயர்ந்த ஆங்கில சொற்களை கலந்து பேசுவதையும், எழுதுவதையும் நாம் பார்க்கலாம். ஏனெனில் அது அவர்களின் தகுதியை உயர்த்து காட்டுவதாக அமைகிறது என்று நினைக்கின்றனர். அதுபோன்றதொரு க்ளப் ல் நடக்கும் கதைகளுக்கு இதுபோன்ற வார்த்தை பிரயோகம் உண்மையில் நம்மையும் அந்த காலக்கட்டத்தை கற்பனை செய்யவும், கதை களத்தை மனத்திரையில் காட்சியாக கொண்டுவரவும், கதையில் ஒன்றிட செய்யவும் உதவுகிறது. உதாரணத்திற்கு..1.யெளவனமான யுவதி: பதினாறு வயது நிறைந்த இளமை தெறிக்கும் பருவமங்கை !  இதில் இரண்டாவது அனைவருக்கும் புரியும். ஆனால் அவர்களின் கற்பனை கதையை தொலைத்து விட்டு அந்த மயக்கும் பேரழிகியை தேடி அலையும்.

2.நல் நேர நஞ்சு: எளிதில் புரியாத இச்சொல்லே என்னவென்று அறிந்துக்கொள்ளும் துடிப்பை நம்முள் விதைத்து நம்மை பிரெஞ்சுப் புரட்சியை கற்பனை செய்ய வைக்கிறது.

3.நிஷ்டூரம்: கொடுமை, கொடூரம் -  க்ரீன் மேனர் படித்த அனைவருக்கும் இச்சொல் இனம் புரியாத உணர்வையும், ஒரு புதிய சொல்லையும் தந்துள்ளது. திகில் கதைகளில் புரியாத புரிந்த சொற்கள் நம்முள் அதற்கேற்ற எண்ண அதிர்வை ஏற்படுத்துகிறது.

4.வெற்றார்ப்பரிப்பு: தேவையில்லாத ஆர்ப்பாட்டம் - முதலாவது பண்டைய க்ளப் வார்த்தையாகவும் பின்னது வீதியில் நடக்கும் விஷயத்தை கூறுவதாகவும் அமைந்து விட வழிவகுக்கும். 

இதுபோல் விளக்கங்களுக்கும் வாதங்களுக்கும் விடிவென்பதே இருப்பது இல்லை. எனவே கதைகளுக்கேற்றதொரு மொழியாக்கம் மட்டுமே அக்கதைகளில் நம்மை ஒன்றிடச் செய்வதாக அமைகின்றன. தொடர்கிறது..


8. மிஸ்டர் மரமண்டை13 July 2013 13:19:00 GMT+5:30

மாறாக வேறுவழியில் மொழிநடையை கையாளும் போது எண்ணச் சிதறல்களுக்கே வழிவகுக்கின்றன. க்ரீன் மேனரில் எழுத்தாக்கம் இவ்வகையில் இருப்பது தங்கள் மொழிபெயர்ப்பின் வெற்றி தானே தவிர வேறு எண்ணங்களுக்கு இடம் இல்லை என்றே தோன்றுகிறது.

தொன்மைவாய்ந்த மிகப்பெரிய ஆலமரம் ஒன்று இருந்ததாம்; அங்கு ஆயிரக்கணக்கில் இளைப்பார வந்து செல்வர். அப்படி வருபவர்கள் எல்லாம், இப்படி பயன் தரும் ஆலமரத்தை என்னால் முழுவதுமாக தரிசிக்க முடியவில்லை என கூறி, ஒவ்வொரு விழுதாய் வெட்டிச் சென்றால் இறுதியில் மொட்டை மரமே மிஞ்சி நிற்கும். அதுபோன்றதொரு தொன்மையான ஆலமரம்தான் நம் செம்மொழி செந்தமிழ்.

கொலை செய்வீர் கனவான்களே கதைகளில் உள்ள ஒரு சில வார்த்தைகள் அனைவருக்கும் புரியாது என்பது தானே அன்றி அதுவொன்றும் இலக்கியத் தமிழ் அல்ல. ''கனவான்களே'' என்றால் இளம்பெண்களின் ''கணவன்களே'' என்று கூட சிலர் புரிந்துக் கொள்ளலாம். நாம் புரிந்து கொள்வதற்கு கதையின் களமும் அவசியமான ஒன்றாகவே நான் கருதுகிறேன்..!


லாஸ்ட்லைன்: ரசனைகள் பலவிதம் ! உங்களின் ரசனைகள் எவ்விதம் ? 

24 comments:

 1. Replies
  1. நண்பர்களை மதிப்பதிலும் அவர்களை பாராட்டுவதிலும் என்றுமே நீங்கள் முதல்வன் தான் நண்பரே !

   Delete
 2. இங்கேயுள்ள அனைத்து விஷயங்களையும் ஏற்கனவே உங்களது கமெண்ட் வாயிலாக படித்து விட்டதால் ..........................................................  ஒரு சிறிய ஏமாற்றம்.

  ReplyDelete
  Replies
  1. என்னுடைய கமெண்ட் களை லயன் ப்ளாகில் ஆசிரியர் உட்பட யாருமே அதிகமாக படிப்பதில்லை என்றே இதுநாள் வரை நினைத்துக் கொண்டிருந்தேன். இன்று உங்களின் இந்த ஏமாற்றம் கூட எனக்கு பெரும் மகிழ்வை அளிக்கும் நிகழ்வை நான் என்னவென்று வார்த்தைகளில் எழுதுவது நண்பரே ?!

   Delete
 3. //Google+ Followers//

  Not Working.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி; இப்பொழுது சரியாகி விட்டது நண்பரே !

   Delete
 4. நண்பர் கிங் விஸ்வாவைப் போலவே எனக்கும்!

  எனினும், 'மிஸ்டர் மரமண்டையின் காமிக்ஸ் காதல் வாழ்க!' என்று ஒரு ஓரத்திலாவது வாழ்த்திவிட்டு இப்பதிவிலிருந்து விடைபெற்றுக்கொள்கிறேனே?!

  ReplyDelete
  Replies
  1. நன்றி விஜய், மீண்டும் வருக !

   Delete
 5. Ungal comics rasanaiku enadu iniya vaalthugal.

  ReplyDelete
  Replies
  1. Paranitharan K : நண்பரே அடுத்த முறையிலிருந்து என் ரசனைகளை ஏற்காமல் அது சரியல்ல ஏனெனில் என் ரசனை இப்படிப்பட்டதே என்று மறுத்து பதிவிட கோரிக்கை வைக்கிறேன் !

   Delete
 6. பின்னூட்டங்களையே பதிவாக்கிவிட்டீர்கள். அடுத்த பதிவு தனியான உங்கள் எழுத்துநடையோடு புதிதாய் எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் மிஸ்டர் பொடியன் ! பழைய லயன் பின்னூட்டங்களையே இங்கு ஒரு பதிவாக பதிவிடும் போது லயன் ப்ளாகின் நெடுநாளைய வாசகர்கள் இங்கு பார்வையிடும் பட்சத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தருவதாக அமைந்து விடுகிறது !

   தங்களின் பதிவில் மறைந்திருக்கும் கேள்விக்காண விடையை ஒரு பதிவாகவே பகிர்ந்து விடுகிறேன். ஏனெனில் அதை ஒரு கமெண்ட் க்குள் அடக்க முடியாது என்பது மட்டுமல்லாமல் அந்த புதிய பதிவு பல நண்பர்களின் சந்தேகத்தையும் தீர்த்து வைப்பதாக அமைந்து விட்டால் அதைவிட ஒரு பெரிய சந்தோஷம் இந்த வலைப்பூவுக்கு ஏதும் இருக்காது !

   அடுத்த பதிவு: Why this கொலவெறி ? தலைப்பில் மட்டும் தான் பட்டாக் கத்தி இருக்கிறது; ஆனால் பதிவு வெண்ணையாக மட்டுமே இருக்கும் !

   Delete

 7. தாமதமான வாழ்த்துக்கள்.

  உங்கள் கருத்துக்கள் தாக்கத்தை ஏற்படுத்தியதை யாரும் மறுக்கமுடியாத உண்மை.

  இனிதே எல்லாம் நடக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஹஜன் சுந்தர் : நண்பரே காமிக்ஸை பொறுத்தவரை நம் ரசனைகள், நம் கருத்துக்கள் கிழக்கும் மேற்குமாக மட்டுமே இருக்கும் என்றே கணிக்கிறேன். உதாரணமாக புத்தகங்கள் படிப்பதற்காகவா அல்லது பதுக்குவதற்காகவா என்று பட்டிமன்றம் நடந்தால் நாமிருவரும் எதிரெதிர் அணியில் தான் இருப்போம் !

   நான் பதுக்குவதற்காகவே என்ற தலைப்பில் தர்க்கம் புரிவேன். அதுபோல் இன்னும் நிறைய இருக்கலாம். தாங்கள் ஏன் அதுபோன்ற பதிவுகளை இங்கு முன்வைக்கக் கூடாது? என் கருத்துக்களில் தங்களுக்கு உடன் பாடில்லாத பட்சத்தில் அதை இங்கு பதிவிட்டால் சிறப்பாகத்தானே இருக்கும்? ஒவ்வொருவரின் மனமும் மாறக்கூடியதே, அந்த மாற்றம் நம்மால் நிகழ்ந்தது என்றால் அதுவும் ஒரு சுகம் தானே !

   Delete

  2. பட்டிமன்றமா? அல்வா சாப்பிட வலிக்குமா? நான் விருப்பமாக உள்ளேன்!

   ஆனால் புத்தகங்கள் படிப்பதற்காகவா? அல்லது பதுக்குவதற்காகவா? என்ற தலைப்பில் நீங்கள் பதுக்குவதற்காகவே என்ற தலைப்பில் தர்க்கம் புரிவது
   You are in a weak wicket.

   பல இலட்சங்கள்/ஆயிரங்கள் விற்கும் பிரதிகளில் சில நுறு பிரதிகளே சேமிக்கபடுகின்றன. அதிலும் சில பிரதிகளே பதுக்கப்படுகின்றன. பதுக்கப்படுவதர்க்கும் சேமிக்கப்படுவதர்க்கும் வித்தியாசங்கள் உள்ளன.

   அதிகவிலைக்கு விற்கவோ, இலண்டன் ஏல கம்பெனியில் தனது புத்தகம் அதிக விலைக்கு ஏலம் போவதாக கனவு காண்பதோ, புத்தகங்களை ஸ்கேன் செய்து தனது பெயரை விளம்பரபடுத்துவதோ, புத்தகங்கள் கிடைக்காத பொழுது அதை ஸ்கேன் செய்து piracy செய்வதோதான் பதுக்கலாக எடுத்துக்கொள்ளப்படும்.

   விற்பனைவாயிலாக மட்டுமல்ல நுலகங்களிலும் புத்தகங்கள் பலரால் படிக்க மட்டுமே படுகிறது.
   எனவே புத்தகங்கள் (காமிக்ஸ் மட்டுமல்ல ) படிப்பதற்காக மட்டுமே!

   வேறு ஒரு அழகிய தலைப்பில் நேரம் வரும்பொழுது வாதிடுவோம்.

   Delete
  3. பட்டிமன்ற தலைப்புக்கள் தூண்டில் போல் இருக்க வேண்டும் என்பதால் புத்தகங்கள் படிப்பதற்காகவா அல்லது பதுக்குவதற்காகவா என்று பதிவிட்டேன். ஆனால் நீங்கள் வீசிய முதல் பந்திலேயே கிளீன் போல்டு செய்து விட்டீர்கள். இரண்டு தரப்பிலும் நீங்களே வாதாடி வெற்றி வாகை சூடி விட்டீர்கள். அருமை !

   இதன் தலைப்பு காமிக்ஸ் புத்தகங்கள் படிப்பதற்காக மட்டுமா அல்லது படித்தபின் பாதுகாப்பதற்காகவா என்றே அமைந்திருக்க வேண்டும். இதில் நான் வாதிட விரும்புவது காமிக்ஸ் புத்தகங்களை படித்தபின் பாதுகாப்பதற்காகவே! என்ற தலைப்பில் தான் !

   காமிக்ஸ் புத்தகங்கள் மட்டுமல்ல எந்த புத்தகமும் பதுக்குதல் என்ற எல்லைக்குள் வருவதே இல்லை. அவைகளின் பழமையை பொறுத்தே அதனதன் மதிப்பை அவை அடைகின்றன. உதாரணமாக அரியவகை ஸ்டாம்ப், காய்ன் கலெக்ஷன் போன்ற வகைப்பட்டதே இதுவும். காமிக்ஸ் சேமிப்பும் ஒருவகையான Hobby !

   சேகரிப்பில் உள்ள பழைய காமிக்ஸ் அட்டைப்படத்தை ஸ்கேன் செய்து வெளியிடுவது விளம்பரத்திற்காகவோ அல்லது சுய தம்பட்டத்திற்காகவோ நிச்சயமாக இல்லை. தன் சேமிப்பை தமக்கு அதன் மேல் உள்ள ஆர்வத்தை நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்வதாக மட்டுமே அமைகிறது. மேலும் ஒரு காமிக்ஸை தன் பால்யத்தில் மெய்மறந்து படித்து தற்போது தன்னிடம் இல்லாத யாரோ ஒருவர் அதை fb யில் பார்க்கும் போது அவருடைய நாஸ்டாலஜி உணர்வுகள் தூண்டப்பட்டு அதன்மூலம் அவர் மனமும் இதயமும் சற்று நேரத்திற்காவது இலகுவாகிறது !

   தொடர்கிறது :-)

   Delete
  4. நூலகங்கள் என்பது பொது நலத்திற்காக உருவாக்கப்பட்டவை. அதிலுள்ள புத்தகங்கள் வங்கிகளில் உள்ள பணத்தை போன்றது. அவைகள் சுற்றி சுற்றி வந்து பலருக்கும் பயன் தருவதாகவே அமைய வேண்டும். ஆனால் நாம் படித்தபின் பாதுகாத்து வைக்கும் புத்தகமானது, நம் வருமானத்தில் செலவு போக மிச்சமாகும் பணத்தை சேமித்து பாதுகாப்பது போன்றதாகும் !

   தன்னிடம் உள்ள நல்ல விஷயங்களை வெளிப்படுத்துவது விளம்பரமாகாது. நம் எழுத்துக்கள், கருத்துக்கள், எண்ணங்கள் ஆகியவற்றை பொதுமேடையில் பகிரும்போது அது நம்மை விளம்பரபடுத்திக் கொள்வதற்காக அல்ல; அதன் மூலம் யாரோ ஒருவருக்கு நன்மை பயக்கும் என்பதால் தானே !

   எனவே காமிக்ஸ் புத்தகங்கள் அனைத்தும் படித்தபின் பாதுகாப்பதிற்காக மட்டுமே !!

   Delete
 8. இயல்பான வசன நடையே கதைகளில் வாசகனை ஒன்ற செய்யும் என்பது எனது கருத்து.....

  :-)

  ReplyDelete
  Replies
  1. நன்றி சாக்ரடீஸ் ! உங்கள் கருத்துக்களை இங்கே சகஜமாக பதிவிடுங்கள். உங்கள் கருத்தை மட்டுமல்ல இங்கு யாருடைய கருத்தையுமே மறுத்து நான் பதிவிடப் போவதில்லை. ஏனெனில் ரசனைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் !

   Delete
 9. நாம் புரிந்துக் கொள்வதற்கு கதையின் களமும் அவசியமான ஒன்றாகவே நான் கருதுகிறேன்..!இந்த கருத்துடன் உடன்படுகிறேன்.
  க்ரீன் மேனர் மொழிபெயர்ப்பை பற்றி நிறைய எழுத ஆசைதான் . வேலைப்பளு தடுக்கின்றது .

  ReplyDelete
  Replies
  1. Meeraan : உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எப்பொழுது வேண்டுமானாலும் பதியலாம். ஆறுமாதம் கழித்து இந்த பதிவில், உங்களின் ஆழ்ந்த ரசனையை பதிந்தாலும் ஒரு காமிக்ஸ் வாசகனாய் படித்தறிய நான் இங்கு இருக்கிறேன் !

   Delete
 10. நண்பர்களே உங்களின் பார்வைக்காக என் புதிய பதிவு Why this கொலவெறி !

  பொழுது போகாத நேரத்தில் உங்கள் பொழுதை போக்குவதற்கு உதவினால் மிகவும் ஆனந்தம் !

  ReplyDelete
 11. 1. யெளவனமான யுவதி: பதினாறு வயது நிறைந்த இளமை தெறிக்கும் பருவமங்கை; இதில் இரண்டாவது அனைவருக்கும் புரியும். ஆனால் அவர்களின் கற்பனையை கதையை தொலைத்து விட்டு அந்த மயக்கும் பேரழிகியை தேடி அலையும்.

  2.நல் நேர நஞ்சு: எளிதில் புரியாத இச்சொல்லே என்னவென்று அறிந்துக்கொள்ளும் துடிப்பை நம்முள் விதைத்து நம்மை பிரெஞ்சுப் புரட்சியை கற்பனை செய்ய வைக்கிறது.

  3. நிஷ்டூரம்: கொடுமை, கொடூரம்; க்ரீன் மேனர் படித்த அனைவருக்கும் இச்சொல் இனம் புரியாத உணர்வையும், ஒரு புதிய சொல்லையும் தந்துள்ளது. திகில் கதைகளில் புரியாத புரிந்த சொற்கள் நம்முள் அதற்கேற்ற எண்ண அதிர்வை ஏற்படுத்துகிறது.

  4. வெற்றார்ப்பரிப்பு: தேவையில்லாத ஆர்ப்பாட்டம்; முதலாவது பண்டைய க்ளப் வார்த்தையாகவும் பின்னது வீதியில் நடக்கும் விஷயத்தை கூறுவதாகவும் அமைந்து விட வழிவகுக்கும்.

  உங்களின் இந்த அழகான விளக்கங்களை மிகவும் ரசித்தேன் நண்பரே.. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. காமிக்ஸ் ரசிகன் (எ) புதுவை செந்தில்:

   தங்களின் பதிவு என்னை மிகவும் மகிழச் செய்கிறது; மிக்க நன்றி நண்பரே !

   Delete