Follow by Email

Wednesday, 27 November 2013

காமிக்ஸ் யாதெனில் ?

நண்பர்களே, வணக்கம் ! இவர்கள் தனது பள்ளி இறுதி தேர்வுகளுக்குக்  கூட இப்படி படித்து இருக்க மாட்டார்கள் ; இவர்கள் தனது கல்லூரி செமஸ்டர் தேர்வுகளுக்குக் கூட இப்படி ஆராய்ச்சி செய்து இருக்க மாட்டார்கள். ஆனால் விஜயன் தயாரிப்பில் வெளிவரும் தமிழ் காமிக்ஸ் என்றால் மட்டும் இவர்கள் படிப்பில் புலியாக மாறிவிடுகிறார்கள் ; ரசனையில் அன்னமாக உருமாறுகிறார்கள் ; குற்றம் குறை கண்டுப்பிடிப்பதில் நக்கீரனாகிறார்கள் ! அதோ அந்த மூலையில் ஓர் ரகசியம் உறைந்து கிடக்கிறது ; இதோ இந்த பேனலின் குடிசை வீடு கொண்டாட்டடத்தை தருகிறது ; ஏன் இந்த மூலத்தில் இல்லாத வரிகள் ; மொழிபெயர்ப்பில் அனர்த்தமாக்கப்பட்ட அர்த்தங்கள் ; சிந்தனையை தடை செய்யும் வளமாக்கப்பட்ட வசனங்கள் என இவர்கள் இடும் கமெண்டுகளை படிக்கும் போது,    நமக்கு பள்ளிப் பருவத்தில் எளிதில் வராத கணிதம், வரலாறு, அறிவியல் என இன்றும் காமிக்ஸ் படிப்பதை புதிராகவே தோன்றச் செய்து விடுகிறது !

பொதுவாக கூறுவதென்றால், பலவகையான வெட்டி பொழுது போக்குகளில் ஒன்று தான் காமிக்ஸ் புத்தகம் படிப்பதும் ;  நமக்கு கிடைக்கும் வேலையற்ற ஏதோ ஒரு பொழுதை காமிக்ஸ் படிக்க ஒதுக்கி மனதை இலகுவாகவோ, உற்சாகமாகவோ மாற்றிக் கொள்ளும் பயன் மட்டுமே காமிக்ஸ் படிப்பதால் ஏற்படுகின்றதே தவிர, வேறு என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் இந்த ரசனையின் அடுத்த கட்டமாக என்னை போன்றவர்கள் இதை படித்து முடித்தப்பின் அழகாக சேகரித்து, நீண்ட நெடுங்காலம் பாதுகாக்க நினைக்கிறோம். இவ்வகை ரசனைகள், அரிய வகை ஸ்டாம்ப் கலெக்ஷன், காய்ன் கலெக்ஷன் போன்றவைகளாக பார்க்கப்படுகிறது. அதற்காத்தான் தற்போதைய தரத்தை நிரந்தரமாக்கவும், இன்னும் அதிகரிக்கவும் அவ்வப்போது பதிவிடுகிறோம் !   

இவ்விரண்டு காரணங்களைத் தவிர காமிக்ஸ் படிப்பதால் ; காமிக்ஸ் வாங்குவதால் வேறு என்ன பயன் இருக்கிறது என்று சத்தியமாக எனக்கு தெரியவில்லை. அப்புறம் ஏன் காமிக்ஸிற்காக   இத்தனை அக்கப்போர்? இதற்கான காரணம் என்னவாக இருக்கக் கூடும் என்று அலசி ஆராய்ந்து, அடித்து துவைத்து, தலைகீழாய் மாட்டி  காயப்போட்டு, நன்றாக காய்ந்தப்பின் இஸ்திரி போடும்போது பார்த்தால் ஒரு காரணம் மட்டும் தெளிவாக புரிகிறது, 

அது மற்ற வாசகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க நினைக்கும் ஆசை ! 
மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு தனித்தன்மையுடன் நிற்க வேண்டும் என்ற எண்ணம் !

உண்மைதான் இது தவறல்ல ! ஏனெனில் இது அனைவருக்கும் உள்ள குணம் தான் ! எனவே இதை தவறென்று கூற விரும்பவில்லை. ஆனால் வரி வரியாக ; பேனல்  பேனலாக ; பக்கம் பக்கமாக அகழ்வாராய்ச்சி செய்து பதிவிடுவது தான் கொஞ்சம் ஓவராக தெரிகிறது. பதிவிடுங்கள் ; இன்னும் நிறைய பதிவிடுங்கள் ; வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் கதை  பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை என்று  காரணங்களை   அடுக்கி பதிவிட்டால் இன்னும் சுவாரசியமாக இருக்கும் என்பது என் கருத்து :)

அதேநேரம் ஒரிஜினல் கதையை மாற்றி அமைக்கும் எந்த ஒரு மொழிபெயர்ப்பும் பெரும்பான்மையான வாசகர்களால் ஏற்றுக் கொள்ள இயலாது என்பதை  ஆசிரியரும் புரிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல பின்பக்க அட்டைப்படத்தில் ஓவியரின் புகைப்படம் போடுகிறோம் ; கதாசிரியரின் புகைப்படம் போடுகிறோம் ; ஏனெனில் இது அவர்களின் கடின உழைப்பு ; அவர்களின் காமிக்ஸ் அர்ப்பணிப்பு என்பதால் படைப்பாளிகளை கௌரவிக்க நினைக்கிறோம் ! எனவே ஒரிஜினல் கதையில் நாம் ஏற்படுத்தும் மாற்றம் படைப்பாளிகளுக்கு நாம் இழைக்கும் அநீதியாகக் கூட கருத இடமுண்டு. உதாரணத்திற்கு,

துரத்தும் தலைவிதி - லார்கோ ஸ்பெஷலில் பக்கம் 19ல்...

ஒருவேளை, ஸ்கார்பா ஒரு பெண் பித்தர் என்று ஒரிஜினலில் காட்டப்பட்டு, அதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து இருந்திருந்தால் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும்.  ஏனெனில் அக்கதையில் சைமன் ஒரு இடத்தில் கூறுவான், குழுமத்தில் உள்ள பிரஸிடெண்ட்களாகிய நீங்கள் மலை மலையாய் பணம் பண்ணுகிறீர்கள் ; உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மன்னரின் செல்வாக்கும், சக்தியும் சுலபமாய் கிட்டுகிறது என்று ! இப்படிப்பட்ட செல்வாக்கு கொண்ட பிரஸிடெண்ட்   ஸ்கார்பா, தன் குழுமத்தின் தலைவரான  லார்கோ வின்ச்/ற்கு துரோகம் இழைக்க காரணமாயிருந்தது, அவரின் பெண் சபலம் மட்டும்  தான் என்பது பக்கம் 73ல் விடையாக சொல்லப்படுகிறது. அப்படியெனில் கதாசிரியர் அதற்கான முடிச்சை பக்கம் 19ல் நமக்காக அவ்வாறு கோடிட்டு காட்ட நினைத்திருக்கலாம் அல்லவா ?

ஒரு சிப்பாயின் சுவடுகள் - க்ளைமேக்ஸ் பக்கம் 112ல்...

எனக்கென்னமோ எடிட்டர் விஜயன், முன்பு  தான் கொடுத்த வாக்கை காப்பற்றுவதற்காக மட்டுமே கதையின் முடிவை மாற்றி விட்டாரோ என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் முன்பு ஒருமுறை ஒசிசு அழுவாச்சி காவியம் அல்ல ; வித்தியாசமானதொரு கிராபிக் நாவல் ; இதுவரை படித்திராத கதைக்கரு என்பதால் யாரும் பயப்பட வேண்டாம் என்று வாழைப்பூ போராட்ட குழுவிற்கு உறுதி அளித்திருந்தார். அதை மெய்யாக்க  கதையை பொய்யாக்கி விட்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது !

எல்லா கதைகளையும் நம் தமிழ்நாட்டு ரசனைக்கு ஏற்றபடி மாற்றுகிறேன் என்று - Pizza Cornerலிருந்து வெளிவரும் சைமன், தலப்பாக்கட்டு பிரியாணி சூப்பர் என்றோ ; KFCயில் இருந்து வெளிவரும் வேய்ன் ஷெல்டன், வாழைக்காய் பஜ்ஜியும் தேங்காய் சட்னியும் சும்மா நச் என்றோ ; McDonald'sலிருந்து வெளிவரும் லார்கோ வின்ச், பரோட்டாவும் சால்னாவும் சாப்பிட்டு நாக்கில் ஜலம் கொட்டிடுத்து என்றோ ;  Subway Restaurantsலிருந்து வெளிவரும் மாடஸ்டி பிளைசி, கல்தோசையும் கறிக்குழம்பும் செம கலக்கல் என்றோ கூறுவது போல் மொழிபெயர்த்தால் எப்படி இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன் ;)

Jean Van Hamme


1.மர மண்டை20 December 2012 09:47:00 GMT+5:30

ஆயிரம் உள் அர்த்தங்கள் எல்லாமே ஆனந்த ராகங்கள் !
ஏன் எதற்கு இங்கே? எல்லாமே காமிக்ஸ் ரசனை என்ற மந்திர சொல்லிற்காக !
 • விதைக்கப்பட்ட விதைகள் முளைக்கா விட்டால் புதைக்கப் பட்டவையாகின்றன !
 • வாங்கப்பட்ட புத்தகங்கள் வாசிக்கப்படா விட்டால் அறிவின் வறுமைக்கு வாழ்க்கைப்படுகின்றன !
 • படிக்கப்பட்ட புத்தகங்கள் பாதுகாக்கப்படா விட்டால் கிழிக்கப் பட்டவையாகின்றன !
 • உணரப்பட்ட ரசனைகள் உள்ளத்திலேயே உறங்கிவிட்டால்  யாவரும் எதிரிகளே !
பாலோடு நீர் கலந்திருந்தாலும் அன்னப்பறவைக்கு பாலை மட்டும் அருந்த தெரியுமாம் ! சலசலத்து சிதறி தெறிக்கும் தண்ணீரை சற்றும் சலனப்படாமல் வழித்துவிட தாமரை இலைக்கு அது இயற்கையாம் ! ஒழுக்கமும் அதன்பால் வரும் ஊக்கமும் எறும்புக்கு வாழ்க்கையாம் ! பூவும் அதனுள் உள்ள தேனும் எங்கிருக்கும் என்று தேனிக்கு புரியுமாம் ! என இன்னும் இதுபோல் இவையனைத்தையும், ஓரறிவு முதல் ஐந்தறிவு கொண்ட உயிர்களின் சிறப்பனைத்தையும் ஒருங்கிணைக்க சிந்தித்து, இறைவன் படைத்த கற்பகவிருட்சம் தான் மனிதன் ! இந்த இயற்கை ரகசியத்தை சிந்தித்து உணர்ந்து அதை உலகுக்கு எளிய முறையில் கற்றுக் கொடுக்க நினைத்த ஒரு சிந்தனையாளன் படைத்த சகாப்தம் தான் காமிக்ஸ் !

காமிக்ஸ் படித்தவன் இங்கே ரசனையாளராகின்றான் !
படித்தும் புரியாதவன் எங்கும் ரசவாதியாகின்றான் !

William Vance


2.மர மண்டை17 January 2013 19:25:00 GMT+5:30 

சிறுவயதில் நீங்கள் பார்த்து ரசித்த பாடல்களோ, சினிமா படங்களோ உங்களுக்கு எந்த அளவு ஞாபகம் இருக்கிறது? ஆயின்  நான் சிறுவயதில் காமிக்ஸ் படித்தேன் ;  அதன் ரசனையில் உணர்வை இழந்தேன் ; சிறு பாலகனாய் காமிக்ஸ் படித்த நான், குடும்பத் தலைவனான பின்பும் காமிக்ஸ் ரசனை வயப்பட்டு, அதனால் வசியப்பட்டு, அதன் வழி மீது விழி வைத்து நோக்கி, தொலைந்துவிட்ட என் இளமையை காமிக்ஸ் புத்தகத்தில் தேடித் தேடி மகிழ்கின்றேன் என்பதாய் ஏனந்த NOSTALGIA  பதிவு ? 

காரணம் ஒன்றே தான் ! காமிக்ஸ் தான் சிறுவர்களுக்கு அளவிடமுடியாதது ! அதனால் தான் சக்திமான் போன்று, பறக்க நினைத்து மாடியில் இருந்து குதித்து உயிரை இழந்த சிறுவனை போன்ற பல சான்றுகள் இன்றும் நம்மிடம் உள்ளன ! காமிக்ஸை  ரசித்து படிக்கும் சிறார்களுக்கு அங்கே காண்பவையும், அதனால் ஏற்படும் கற்பனையும் தான் அவர்களின் வாழ்க்கை வேதம். இதை மறுக்கவோ, மறுதலிக்கவோ சற்றும் முடியாது. அப்படி வீணே எதிர் கருத்துகளை வீசுவது விதண்டா வாதமாகவே ஏற்கபடும் !


Jean Giraud


3.மர மண்டை12 March 2013 20:56:00 GMT+5:30

வளவள என்று எழுதுவதே சங்கடம் தரும் பதிவுகள் ; ஆயாசம் தரும் பின்னூட்டங்கள் ; ஆயின் வளமாய் எழுதுவதில் ஏதும் தவறு இல்லை ; அது NBSன் DUST COVER போன்றது ; அது அவசியமற்றது போல் வெளிப் பார்வைக்கு தோன்றினாலும் காரணமின்றி தயாரிக்கப்படவில்லை ! தினம் தினம் நாம் அரிசி சாதம் சாப்பிடுகிறோம் ; வாரத்தில் பல நாட்கள் சாம்பார், ரசம், மோர் என உணவில் சேர்த்து கொள்கிறோம் ; ஆண்டுகள் பல சென்றாலும் இன்றுவரை நமக்கு சலித்ததில்லை ; வேண்டாம் என்று பல நாட்கள் நாம் பட்டினி கிடப்பதில்லை !

ஆனால் SHSS நமக்கு சலிப்புற்றது ஏன், எதனால் என்று எவராவது, என்றாவது ஆராய்ந்தோமா? இல்லையே, அது ஏன்? ஏனெனில் காமிக்ஸ் படிப்பது என்பது நமக்கு, கற்பனையாக விரிந்த காலம் மறைந்து, தற்போது ஒரு HOBBYயாக, ஒரு FASHION ஆக நினைத்து படிக்க ஆரம்பித்து விட்டோம் ! அதனால் காமிக்ஸ் உணர்வோடு கலந்த அந்த பொற்காலம் மறைந்து, இன்று மனதோடு உறவாடி, மாலையில் மறைந்து போகும் மதி மயக்கமாக உணர்கிறோம் !

Raoul Cauvin 


4.மிஸ்டர் மரமண்டை17 June 2013 15:54:00 GMT+5:30

அனைத்திந்திய டெக்ஸ் வில்லர் ரசிகர்மன்ற உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள் ! டெக்ஸ் வில்லரின் பூதவேட்டை 15 வருடங்களுக்கு முன்பே விளம்பரமாக வந்த கதை ;  டெக்ஸ் வில்லரின் நிலவொளியில் ஒரு நரபலி டெக்ஸ் வில்லரின் கதை வரிசை 600 ; அப்படியெனில் பூதவேட்டை கதையில்..
 • பக்கம் 63 ல் "நாம் சமிபமாய் பனி மூட்ட வேதாளங்களோடு மோதினோமே-அது ஞாபகம் இருக்கிறதல்லவா?
 • பக்கம் 65 ல் "அட போங்கப்பா! மனுஷனை ரோஸ்ட் போட்டுத் தின்னும் ஒரு கருங்காலிக் கூட்டத்திடமிருந்து தப்பி வந்து ஒரு மண்டலம் கூட ஆகவில்லை"
 • பக்கம் 231 ல் "நரமாமிசம் தின்னும் வேதாளங்கள்...பூதங்களாய் மாறும் மானிடர்கள்..இனி.. "
இவைகளை குறிக்கும் கதை என்ன கதை? அதன் பெயர் என்ன? சரியான விடையை விளக்கத்தோடு பதிலளிக்குமாறு பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன் !


கதைகள் ஒரிஜினலாய் வெளியானது வெவ்வேறு era -க்களில் ; ஆனால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் என்பதால் குறிப்பிட்ட அவ்வசனம் நமது சேர்க்கையே !

Gianlugi Bonelli 


5.மிஸ்டர் மரமண்டை18 June 2013 08:26:00 GMT+5:30

கனிவான பதிலுக்கு நன்றி சார் ! இப்படித்தான் இருக்கும் என்று யூகம் கொண்டிருந்தாலும் "வெறும் யூகம் மட்டுமே உண்மையாகி விடாது" என்பதால் தான் பழைய டெக்ஸ் ரசிகர்களுக்கு கேள்வியாக முன் வைத்தேன் !

தங்களின் இதுபோன்ற அருமையானதொரு வசனசேர்க்கையால், பூதவேட்டை கதையில் கதாப்பாத்திரங்களின் உண்மை தன்மையும் ஒரு வித அன்னியோன்யமும் ஒரு சேர மிளிர்கிறது. இதன் மூலம் மொழிபெயர்ப்பு என்பது உள்ளதை உள்ளபடி அர்த்தமாக்கி காட்டிடும் DICTIONARY அல்ல என்பதையும், நாம் படிக்கும் காலகட்டத்தில் கதையோடு ஒன்றி, அதனோடு பயணமாகி, கதையின் கற்பனையை நிஜமாக்கி, மனம் லயித்து ரசிக்கவைக்கும் கலைதான் மொழிபெயர்ப்பு என்பதையும் எங்களுக்கு 40 ஆண்டுகாலமாக உணரவைத்து வருகிறீர்கள் !


Aurelio Galleppini 


6.மிஸ்டர் மரமண்டை13 July 2013 14:47:00 GMT+5:30

காமிக்ஸும், உரைநடை பாடப்புத்தகமும் !

அகத்திற்கு அளவான அலங்காரச் சொற்களும், ஆங்காங்கே ஆணிவேரின் கிளைகளாக பிரிந்துச் செல்லும் உவமைகளும் காமிக்ஸ் படிக்கும் நம்முள் ரசனையையும் கற்பனைகளையும் விஸ்தரிக்கச் செய்வதாக அமைகின்றது ! காமிக்ஸ் கதைகளை சட்டென புரிந்து கொள்வதற்காக யாரும் படிப்பதில்லை ; அக்கதைகளில் நாமும் ஐக்கியமாகி, கதை நடந்த காலத்திற்கு பயணமாகி, கதையின் களத்தில் பிரயாணம் செய்து, நம் ரசிப்புத் தன்மையை விசாலமாக்குவதே காமிக்ஸின் வெற்றியாக இருக்கக்கூடும் ; அதுபோன்ற சொற்களும் உவமைகளும், அதற்கான வாசலை அகலத் திறந்து வைப்பதாக அமையக் கூடும் !

மாறாக, உள்ளதை உள்ளபடி சொல்லும் நேரடியான மொழிமாற்றமும், எழுத்து நடையும், நாம் ஒரு பாடப் புத்தகத்தை படிக்கும் உணர்வுகளையே தருவதாக அமையும் என்று நான் எண்ணுகிறேன். அது எப்படியிருக்குமெனில் பக்குவமாய் வடிக்கப்பட்ட சோற்றில், ஆச்சி சாம்பார் ஊற்றி, நல்ல உதயம் நெய் கலந்து, கைநிறைய எடுத்து, வாய்நிறைய சாப்பிடும் சுகத்தை வேண்டுமானால் தரலாம் ; ஆனால் நான்கே நான்கு கவளத்தில் வயிறு நிரம்பி விடும் ; கடைசியில் உள்ள சாதம் உண்ணவும் வாயும் வயிறும் மறுத்து விடும். ஆயின் கூட்டு, பொரியல், வறுவல், உப்பு, ஊறுகாய், அப்பளம், சாம்பார், வத்தக்கொழம்பு, ரசம், தயிர், மோர் என பசியாரும் போது அதில் கிடைக்கும் சுகம் அலாதியானது ; அதுவே ரசனையின் உச்சமானது !


7.மிஸ்டர் மரமண்டை13 July 2013 17:06:00 GMT+5:30

நாம் உஜாலா வெள்ளையில் வேஷ்டி கட்டி, மினிஸ்டர் வொயிட்டில் சட்டை போட்டு வெளியில் சென்றாலும், பாதையில் எங்காவது தென்படும் சில குழிகளில் உள்ள நீர் தெறித்து, சில சமயம் அனைத்தும் அழுக்காகி விடுகிறது. எனவே ஒரே ஒரு வாக்கியத்திற்காக இங்கு ஒரு மீள்பதிவு :-(

அகத்திற்கு அளவான அலங்காரச் சொற்களும், ஆங்காங்கே ஆணிவேரின் கிளைகளாக பிரிந்துச் செல்லும் உவமைகளும் காமிக்ஸ் படிக்கும் நம்முள் ரசனையையும் கற்பனைகளையும் விஸ்தரிக்கச் செய்வதாக அமைகின்றது ! காமிக்ஸ் கதைகளை சட்டென புரிந்து கொள்வதற்காக யாரும் படிப்பதில்லை ; அக்கதைகளில் நாமும் ஐக்கியமாகி, கதை நடந்த காலத்திற்கு பயணமாகி, கதையின் களத்தில் பிரயாணம் செய்து, நம் ரசிப்புத் தன்மையை விசாலமாக்குவதே காமிக்ஸின் வெற்றியாக இருக்கக்கூடும் ; அதுபோன்ற சொற்களும் உவமைகளும், அதற்கான வாசலை அகலத் திறந்து வைப்பதாக அமையக் கூடும் !

இதுபோன்ற மொழிபெயர்ப்பே நம் ஆசிரியரின் வெற்றி. இன்றுவரை நாம் அடிமைப்பட்டு கிடப்பதும் ; சலிக்காமல் மீண்டும் மீண்டும் காமிக்ஸ் படித்து அலசி ஆராய்ந்து மகிழ்வதும் அவரின் மொழிநடையால் மட்டுமே இன்றுவரை நமக்கு சாத்தியப்படுகிறது என்பதையே உள்ளர்த்தமாக கொள்க !


Morris 


8.மிஸ்டர் மரமண்டை8 August 2013 09:44:00 GMT+5:30

சில கதைகளின் தோல்விகள் ஏன்? ஓர் அலசல் - ஸ்டீல் பாடி ஷெர்லாக் ஹோம்ஸ் !

ஸ்டீல் பாடியார் ஓய்வு நாடி ஸ்காட்லாந்து கிளம்பி விட்டது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. எனக்கு இந்த தொடர் மிகவும் பிடித்திருந்தது. இப்படி நான் சொல்வதால் சிலர், ''இவர் என்ன பாஸா இல்லை லூஸா'' என்ற டயலாக்கை வாசகன் இடத்தில் வைத்து என்னை நக்கலாக பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் :)

நீங்கள் இங்கு கூறுவது போல மதியில்லா மந்திரியும் தொடர்ந்து filler page ஆக வருமானால், கதையோ அல்லது உற்சாக மிகுதியில் கதைக்களத்தை விட்டு விலகிய மொழிபெயர்ப்போ சுவாரசியத்தை தராமல் போய் விடுமானால், அதுவும் நம் ரசனையின் வரவேற்பை கண்டிப்பாக இழந்து விடும். அதனால் ஸ்டீல் பாடியாரின் தோல்வியின் தன்மைகளை அலசி ஆராய்வதே சிறந்த வழியாகும். ஏனெனில் ஸ்டீல் பாடி என்னைப் பொறுத்தவரை வித்தியாசமான நகைச்சுவை உணர்வை கொண்டுள்ளது. இக்கதைகளின் மூலம் சில அரிய விஷயங்களின் அறிவையும் விளையாட்டாய் பெற்றுவிட்டோம். ஃபில்லர் பேஜுக்கு இதைவிட வேறு அதிகம் தேவையில்லை அல்லவா ?

முதல் காரணம் - முன் பின் முரணான வெளியீடு..? தடகளத்தில் ஒரு அதகளம் கூலியில்லா கைக்கூலி ALL NEW ஸ்பெஷலில் வந்திருக்கலாம், கூலியில்லா கைக்கூலி மூலம் நிச்சயம் ஒரு வெற்றியை இரண்டு கதைகளும் ஈட்டியிருக்கும் !

இரண்டாவது காரணம் - தொடர்ந்து filler page ஆக வரும்போது எந்தக் கதை தொடரும் சலிப்பின் எல்லையை, அருகில் சென்று ஆராய ஆரம்பிக்கும் !

மூன்றாவது காரணம் - கதைக்களம் ; அதன் காலக் கட்டம் ஆகியவற்றை விலகி நிற்கும் மொழிபெயர்ப்பு..? உதாரணமாக ஜெல்லிபிஷ் மண்டையா... இதுபோன்ற தமிழ் சினிமாவின் ட்ரேட் மார்க் வசனங்கள்... இந்த வசனங்களில் நாம் ஊடுருவும் போது, திடிரென ஒரு கவுண்டமணியோ அல்லது கைப்புள்ள வடிவேலுவோ வந்து நம் கண்முன் நின்று விடுவார்கள். எனவே கதைக் களத்திற்கும் அதன் காலக் கட்டத்திற்கும் பொருத்தமான வசனங்கள் நாம் கதையோடு ஒன்றிட வழிவகுக்கும் !

காமிக்ஸ்  யாதெனில் முன்னட்டையில் நாம் போகும் ஊரின் பெயர் பார்த்து, அதன் சித்திரங்கள் எனும் வாசல் வழியே நுழைந்து, நிகழ்காலம் மறந்து போய்விட்ட கற்பனையில், கதானாயகனோடும் கதைக் களத்தோடும் நாமும் பயணித்து, அதன் காலக் கட்டத்தில் கொஞ்சநேரம் வாழ்ந்திருப்பதே அதன் வெற்றி என்பது என் கருத்து !
9.Vijayan9 August 2013 13:34:00 GMT+5:30

மிஸ்டர் மரமண்டை //ஒரு parody ; நையாண்டி ரகக் கதை எனும் போதே - 'எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள் ; இது ஜாலியான கலாய்ப்பு' என்று அதன் ஆசிரியரே சொல்லாமல் சொல்லி விடுகிறார் ! So - இந்தக் கதைக்கான களம் ; அதற்கான mood ; மொழிபெயர்ப்பு மரபுகள் என்றெல்லாம் தலையைப் பிய்த்துக் கொள்வது அவசியம் ஆகாது என்பது எனது கருத்து !

சிக் பில் ; லக்கி லூக் கதைகளைப் போலொரு natural background அமைத்த பின்னே, கதையினில் ; நிகழ்வுகளில் ; சம்பாஷணைகளில் காமெடி பின்னப்படும் போது மேற்சொன்ன அத்தனையும் நிச்சயம் தேவை !


Goscinny 10.மிஸ்டர் மரமண்டை5 August 2013 15:51:00 GMT+5:30

மேற்கே ஒரு சுட்டிப் புயல் !

மேற்கே ஒரு சுட்டிப் புயலைப் பொறுத்தவரை சூப்பர் என்ற வார்த்தையை தவிர வேறொன்றும் எழுத தோணவில்லை. அட்டகாசமான குட்டிப் பயல் லக்கி லூக் ; அதகளம் செய்யும் அலறும் பன்றிக்குட்டி ; தர்ப்பூசணி தபிதாவின் பாசமலர் முள்ளங்கி மண்டையன் ; பறக்கும் பன்றியாரின் நெருப்புத் தண்ணி வேட்கை ; காட்டெருமை கறியை காயப்போட்டு வறுத்தெடுத்த பெம்மிகன் ; குட்டி ஜாலி ஜம்பரின் கனிவான பார்வைகள் ; தெனாவட்டுப் பேர்வழி மாந்த்ரீகனின் உடான்ஸ் ; இலவு காத்த கிளியான லெப்டினெண்ட் க்ளோவர் - அடடா.. அடடா.. சொல்ல வார்த்தைகளே இல்லை ! அற்புதமான கதையும் அதற்கேற்ற அட்டகாசமான மொழிபெயர்ப்பும் நம்மை துள்ளாட்டம் போட வைக்கிறது !

ஆனால் ஒரே ஒரு நெருடல், பக்கம் 18 ல் உள்ள வசனம் (என்னோட பேஸ்புக் அக்கவுண்டிலே புதுசா யார்கிட்டேயிருந்து 'லைக்' வந்துச்சு தெரியுமா..) சுத்தமாக கதையோடும் நகைச்சுவையோடும் ஒட்டவில்லை. அது எப்படியெனில் திடிரென தர்ப்பூசணி தபிதா கதைக் களத்திலிருந்து நம்மை பிடித்து இழுத்து, ஆற்றுக்குள் வீசிடும் உணர்வை ஏற்படுத்துவதாகவே நான் உணர்ந்தேன் !

நீதி : விளையும் பயிர் முளையிலேயே தெரியும் !

Willy Lambil 11.மிஸ்டர் மரமண்டை5 August 2013 16:03:00 GMT+5:30

இவனொரு ஜெர்மன் பைலட் !

ஒரு முறைதான் படித்தேன். ஏனோ மனதில் ஒட்டவில்லை. அதற்கு காரணம் மஞ்சள் பேக்கிரவுன்டும் சிகப்பு அவுட்லைனும் கொண்ட ஓவியங்களாகவோ ; சுவாரசியமில்லாத கதையோ காரணமாக இருக்கலாம் !

மிஸ்டர் கார்பீல்ட் & மிஸ்டர் சண்டியர்

என்னால் ரசிக்க முடியவில்லை. இதற்கு, மியாவிக்கு கோயில் கட்டி கும்பிடலாம் :)


2 comments:

 1. இன்னும் கமெண்ட்ஸ் பதிவு முடியலையா .... :-(

  ReplyDelete
  Replies
  1. போராட்டக்குழு தலைவர் கோபமாக இருப்பது போல் தோன்றுகிறதே :)
   இன்னும் இரண்டே இரண்டு பதிவுகளுடன் முடித்துக் கொள்கிறேன் தலைவரே !

   பி.கு:பழைய கமெண்ட்ஸ் பதிவுகள் தான் என்றாலும் ஒவ்வொரு பதிவிலும் வருகின்ற முன்னுரைகள் புதியனவாகவும், ஒரு பதிவுக்கு உண்டான அளவிலும் தானே இருக்கிறது ?! இதுவரை நான் எந்த பழைய கமெண்ட் டிலும் எழுதாத விஷயங்களையே எழுதி வந்துள்ளேன் என்பதை இங்கு நான் பதிவு செய்தால் அது என் பழைய பதிவுகளுக்கு கொடுக்கப்படும் சிறு மரியாதையாக இருக்கலாம் என்பதால் மட்டுமே இந்த விளக்கம் :)

   Delete