Follow by Email

Thursday, 12 December 2013

Operation சூறாவளி !

ஒரு பயணத்தின் போது நீங்கள் இருவரும் அருகருகே அமர்ந்து பசுமை நினைவுகளை மீட்டெடுக்க - அழகாய் ஆரம்பிக்கும் உங்கள் வாக்கியத்திற்கு அவள் மலர் போன்ற இதழ்களால் லாவகமாய் எடுத்துக் கொடுக்க ; அவைகளை நீங்கள் வசமிழந்தவராய் வசியம் கொண்ட மலர் போல் தொடுக்க ; இதனிடையே  இருவரும் தன் வசமிழந்து போன மெல்லிய காதல் உணர்வுகளையும் மீட்டெடுத்து ; நேரம் போவதே தெரியாமல் பயணித்தால் நிச்சயமாக   நீங்கள் இருவரும் காதலர்கள் என்று சத்தியமே செய்வேன். ஏனெனில் இது போன்றதொரு உணர்வு கணவன்  மனைவியிடம் ஏற்படுவதில்லை ; அப்படியே  உங்களில் யாரவது ஒருவருக்கு வாய்த்திருந்தால், சொர்கத்தில் இடமில்லை என்று அதை  உங்களுக்கு பூலோகத்தில் அமைத்துக் கொடுக்க நினைத்த இறைவன்  உங்கள்  மனைவி மூலமாக ஏற்பாடு செய்துள்ளான் என்று பெருமை பட்டுக்கொள்ளுங்கள் !அது போன்றதொரு உணர்வு பரிமாற்றத்தை தான், கதாசிரியர் மிகவும் மெய்மறந்து கிட்டத்தட்ட ஒன்பது பக்கங்களுக்கு மேல்  விவரித்துள்ளார். இன்ஸ்பெக்டர் ஜிங்கோவும், மேட்டுக்குடி  சீமாட்டி அல்டீ யும் சேர்ந்து ஒரு காதல் கதையை விவரித்து  நம்மை டயபாலிக்கை  விட்டு வெகுதூரம் உள்ள பெக்லெய்ட் ற்கே கூட்டிச் சென்று விடுகிறார்கள் !

ஜிங்கோ ஸ்பெஷல் - குற்றம்  !
குற்றம் : குற்றம் என்றாலே அது தண்டிக்கப்பட வேண்டிய ஒரு செயல் ; தன் மனசாட்சியை அனுதினமும் குறுகுறுக்க வைக்கக் கூடிய அதர்மம் ; ஆனால் அந்த குற்றத்தை கூட ஒரு சாதனையாக செய்வதை ஒரு தொழிலாக கொண்டிருப்பது மட்டுமல்லாமல், தம் புத்திக்கூர்மையை நினைத்து பெருமிதம் கொள்ளும் மனோநிலை, மனித படைப்பின் இன்னொமொரு விசித்திரம் ! சத்தியமாக நான் ராஜாவை கூறவில்லை, அது கட்சி அரசியல் ; நான் கூறியது குற்றவியல் சக்கரவர்த்தியான இம்மாத டேஞ்சர் டயபாலிக் கை, இது காமிக்ஸ் அலசல் !    

எப்படி செய்தாலும் அது  குற்றம் தான் ; எங்கு செய்தாலும் குற்றம் குற்றம் தான். ஆனால் கொள்ளைக்காரனிடம் இருந்துதானே நான் கொள்ளையிடுகிறேன் என்ற திடமான எண்ணவோட்டத்திற்கு உலகமெங்கும் உள்ள  பாமர மக்களும், போலி பகுத்தறிவாதிகளும்  காலம் தொட்டே அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர். பிரான்ஸின்  கையிலிருந்து அதர்மமாக தட்டிப்பறித்த 2006  உலககோப்பையை, தன்  வரலாற்றின் உன்னதமான நாளாக கொண்டாடிய இத்தாலி மக்களுக்கு டேஞ்சர் டயபாலிக் - கனவுகளின் காதலனாக இளம் பெண்களுக்கும் ; கற்பனைகளின் கணவனாக பேரிளம் பெண்களுக்கும் ; நினைத்ததை முடிப்பவனாக ஆண்களுக்கும் தோன்றி, தன் புகழை எட்டுத் திக்கும் பரப்பிவருவதில் பெரிய ஆச்சர்யம் ஏதுமில்லை  தான்.   வாழ்க குற்ற சக்ரவர்த்தி டேஞ்சர் டயபாலிக் !

குற்ற சக்ரவர்த்தி டேஞ்சர் டயபாலிக் !

தடம் எண் ஒன்று : கொள்ளைப் பொருளை வாங்கிக் குவிக்கும் ரூடி யையும் அதை விற்க வந்த  போரிஸ் யும், இன்னும் சிலரையும் கன்டெய்னரோடு  அலேக்காக கிரேன் மூலம் தூக்கி, கடலில் அப்படியே போட்டு அவர்களை மூழ்கடித்து சாகடிக்கிறார் டேஞ்சர் டயபாலிக். ஏனெனில் அவர்கள் கொள்ளைக்காரர்கள். அப்படி அவர்களை ஈவிரக்கமின்றி சாகடித்தப்பின் அவர்களிடம் இருந்த 10 மில்லியன் யூரோஸ் யும், ஒரு பெட்டி நிறைய நவரத்தின கற்களையும்  டயபாலிக் கொள்ளையடிக்கிறார்.    பிறகு அங்கிருந்து தன் காதலி ஈவா வுடன் கடலிற்குள் இருக்கும் தன் பதுங்குதளத்திற்கு சென்று  பணத்தை உலரவைக்கும் போது, நாணம் கொண்ட இளம் எழில் மங்கை கொண்ட மோகம் மோதும்  நிலையினளாய் அக்கற்களுக்கு முன்பே ஈவா நிற்கிறாள்.கதையின் மத்தியில் லஸ்டென்  செல்லும் டயபாலிக், கதையின் இறுதியில் ஒரு பை நிறைய விலைமதிப்பற்ற நவரத்தின ஆபரண பொக்கிஷங்களை கொள்ளையடித்துக் கொண்டு ஊர் திரும்புகிறார் !

தடம் எண் இரண்டு : பெக்லெய்ட்டின் புரட்சி இயக்கமான க்ரே க்ரோஸ் என்ற அமைப்பு, லஸ்டென் சென்ட்ரல் பேங்க் முன்னால்  நிற்கும் இரண்டே இரண்டு காவலாளிகளை கொன்று விட்டு அங்கிருந்த செழிப்பான லாக்கர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மில்லியன்கள் பெறுமானமுள்ள நவரத்தின பொக்கிஷங்களை கொள்ளையடிக்கிறது. அவ்வளவு பணத்தையும் செலவழித்து அவர்கள் திருட நினைத்தது வெறும் இரண்டே இரண்டு பித்தளை மோதிரங்களை மட்டும் தான் என்றால் நீங்கள் நம்பவா போகிறீர்கள் ?!

தடம் எண் மூன்று : பெக்லெய்ட்டில் உள்ள லஸ்டெனில் நடக்கும் மன்னர் குடும்ப திருமண வைபவத்திற்கு,  தன் காதலி அல்டி யுடன் இன்ஸ்பெக்டர் ஜிங்கோ செல்கிறார். திருமண வைபவம் நடந்துக் கொண்டிருக்கும் போதே ஜிங்கோ அவசரமாக வெளியே போகிறார் ; சரி உச்சா போகத்தான் இருக்கும்  என்று நினைக்கும் போது, கதவருகினில் வந்து மணப்பெண்ணின் ஒன்றுவிட்ட சகோதரியும் தன் காதலியுமான அல்டீ யையும் கூப்பிடுகிறார் ; அல்டீ மெல்ல எழுந்து இரண்டடி நடப்பதற்குள்  வெடிகுண்டு வெடித்து உயிருக்கு போராடும் நிலையை பார்க்க மனம் கஷ்டப்படுகிறது. தன் உயிர் ஊசலாடிய அந்த நேரத்திலும் அல்டீ யின் திருமணம் அவளின் விருப்ப படி நடக்கிறது !

புரட்சி இயக்கத்தால் கொலை செய்யப்பட்ட போலிஸ் கமிஷனர்  நிச்டர் இடத்தில், வந்தமரும் க்ரே குரோஸ் - தலைவன் விக்டர், ஃபைல் சூறாவளியை ஜிங்கோவிற்கு கிடைக்க  விடாமல்  சதி செய்ய, சூறாவளி ரகசியம் தெரிய வேண்டிய நபருக்கு தெரிந்து விடுகிறது. பிறகு  குடியிருந்த கோயில் - MGR ஸ்டைலில் ஜிங்கோ டபுள் ஆக்டிங் செய்து புரட்சி கும்பலை வேரருக்கிறார். இறுதியில் ஜிங்கோ, தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு என்று கேப்டன் ரமணா  விஜயகாந்த் ஸ்டைலில்  கூறிக்கொண்டே டயபாலிக்கை துப்பாகியால் சுடும் போது, ஜிங்கோ  மயங்கி தரையில் சரிந்தவுடன் கதையில் ஆக்ஷன் முடிவடைகிறது !

இந்தக் கதை  படிக்க படிக்கத்  தான் பிடிக்கும் என்ற ரகத்தில் சேருவதால், முதல் முறை படித்த போது  பிடிக்காமல் போனவர்கள் இரண்டாவது முறை படிக்கவும் ; மீண்டும் பிடிக்கவில்லை என்றால் மூன்றாவது முறை படித்து பார்க்கவும். அப்பொழுதும் பிடிக்கவில்லை என்றால் லார்கோ வின்ச் புக்கை  மீண்டும் ஒரு முறை எடுத்து  படித்து ரசித்து விட்டு இதை மறந்து விடவும் !

Monday, 9 December 2013

வேங்கையின் சீற்றம் !

டைகரின் கதி இனி என்னவாகுமோ ; ஏதாகுமோ ;  வழியே இல்லாமல் அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு விட்டதே ; இனி அவர் தப்பிப்பது என்பது அசாத்தியமானது தான் என்ற பதைபதைப்புடன் மூடி வைத்த (இருளில் ஒரு இரும்புக் குதிரை) கதையை கிட்டதட்ட 11 மாதம் கழித்து படிக்கும் வாய்ப்பு வேங்கையின் சீற்றம் மூலம் கிடைத்தது !

ஐயோ பாவம், இதற்காக நீங்கள் இவ்வளவு காலம் காத்திருந்திருக்க வேண்டிய அவசியமே இல்லையே  என்று கதாசிரியர், முதல் சில பக்கங்களிற்கு உள்ளாக மூன்று கதவுகளை அகலமாக திறந்து வைத்து விடுகிறார். அதுவும் சரிதான் என்று முதல் கதவில் இருந்து எட்டிப் பார்த்தால் போக்கர் வெறியர் மிஸ்டர் மேஜர் தெரிகிறார் ; இரண்டாவது கதவுக்கு சார்ஜண்ட் க்ரேஸன் உரிமைக் கொண்டாட ; மூன்றாவது கதவுக்கு ஜெனரல் டாட்ஜ் தலைமை வகிக்கிறார் ! 

சரி, இனி எல்லாம் சுபம் என்று நினைக்கும் போதே, யாரும் எதிர்பார்க்காத தருணத்தில்   நம் டைகர்  அதிரடி ஆக்ஷனை துவக்கி சிறைக்கூடத்தை அதிரவைக்கிறார் ; கூடவே க்ரேஸன் ம் இணைந்துக்கொள்ள அங்கே அதிபயங்கரமானதொரு ச்சேஸிங் காட்சிகள் அமர்க்களப்படுதுகின்றன. சினிமாவில் நாம் ரேக்ளா ச்சேஸிங்   பார்த்திருக்கிறோம் ; பைக் ச்சேஸிங்  பார்த்திருக்கிறோம் ; கார் ச்சேஸிங்  பார்த்திருக்கிறோம் ; பஸ் ச்சேஸிங்  பார்த்திருக்கிறோம் ; லாரி ச்சேஸிங்  பார்த்திருக்கிறோம் ; போட், கப்பல் ச்சேஸிங்  பார்த்திருக்கிறோம் ; ஏரோப்ளேன் ச்சேஸிங்  பார்த்திருக்கிறோம் ; அட  அது ஏன், மிஸ்சைல் ச்சேஸிங் கூட  பார்த்திருக்கிறோம் ; ஆனால் ட்ரைன் ச்சேஸிங்  பார்த்ததுண்டா...? பார்த்ததுண்டா...? அதுவும் ஒரே ட்ராக்கில்  ச்சேஸிங் பார்த்ததுண்டாடா ..? என்று கேட்டு கதாசிரியர் சும்மா நம்மை அதிரவைத்து விடுகிறார் ! 

அப்புறம் என்ன, ஒரு சாக மறுத்த துரோகி ஹென்றி போமேன், அவனால் ஏற்படும் சில உயிரழப்புகள்,  தப்பி பிழைத்த டைகருக்கு மேலதிகாரியின் பாராட்டுக்கள், தொடரும் போட வேண்டிய கட்டாயத்திற்காக ஹென்றி போமேனின்  தப்பி ஓடிய படலம் ஒரே ஒரு வரியில். மொத்தத்தில் இந்த கதை Speed 1, Speed 2, Speed 3 வரிசையில் Train 1, Train 2 என்று டைகர் அசத்தியுள்ளார் ; முதல் பாகமான இருளில் ஒரு இரும்புக் குதிரை யிலேயே ஏகப்பட்ட ஆக்ஷன் முடிந்து விட்டதால் இரண்டாவது பாகமான வேங்கையின் சீற்றம் சற்று ஆக்ஷன் குறைவாக உள்ளதாக நீங்கள் நினைத்தால் அது டைகரின் தவறல்ல ; தனி தனியாக வந்த டைகர் கதைகளின் தவறே ஆகும் ; இரண்டும் ஒரே புத்தகமாக வந்திருந்தால் முதல் பாகத்தில் மூச்சு வாங்க ஓடிய அசுரத்தனமான கதை ஓட்டத்திற்கு இரண்டாவது பாகம் நமக்கு மூச்சு வாங்க அவகாசம் கொடுத்திருக்கும் !


Train 2 : யுத்தம் !


யுத்தம் : தர்மம் தவறி நடத்தப்படும் யுத்தங்களில், நீதி தவறி நடத்தப்படும் படுபாதக கொலைகளைக்  கூட யுத்த தர்மமாக ஏற்றுகொள்ளும் மனிதர்களின் மனப்பக்குவம் ; மனிதப் படைப்பின் விசித்திரங்களில் ஒன்றே ; தன் ரத்தம், தன் உறவு, தன் இனம், தன் கண் முன்னே மடியாதவரை,  மனிதர்களின்  மரணம் என்பது கொலையாளிகளின் வீரமாக, புத்தி சாதுர்யமாக, போர் தந்திரமாக  பார்க்கப்படுகிறது என்பதை உங்களால் மறுக்க முடியுமா வாசகர்களே ?

அது போன்றதொரு சார்பு நிலைக்கு டைகரும் விதி விலக்கல்ல என்று நிரூபித்த சாதனையை வேங்கையின் சீற்றம் புரிந்துள்ளது. 

தன் இனம் அழிந்த துயரத்தை காட்டும் டைகரின் முகம் !


எதிரியில் ஒருவன் தானே - ஓ அப்படியா ? என்று அலட்சியத்தை காட்டும் முகம் !

இதன் முதல் பாக கதை இருளில் ஒரு இரும்புக் குதிரை -  பாதிக்கு மேல் மறந்து விட்டதால் மீண்டும் படிக்கலாம் என்று டைகர் ஸ்பெஷல் கதைகளில் தேடினேன் ; கிடைக்கவேயில்லை ; எங்கோ தொலைந்து விட்டது என்று நினைக்கிறேன் :(

Friday, 6 December 2013

டிசம்பர் 5

நண்பர்களே, வாசகர்களே உங்கள் அனைவருக்கும் கள்ளம் கபடமற்ற என் வணக்கத்தை மரியாதையாக செலுத்துகிறேன்.  டிசம்பர் 5 என்று படித்தவுடன் உங்களில் சிலருக்காவது தங்களின் சிந்தனைகளும் அது தந்த எண்ணங்களும் -  நம் காசோ'வின் லோகோ'வில் கம்பீரத்தோடு கூடிய வசீகரம் கொண்ட வாலிப வயது சிங்கத்தை சுற்றிலும் சுழன்று நகரும் ஆரஞ்சு வண்ண சூரியக் கதிர்களின் அலையாக உங்களை அரவணைத்திருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் அது நீங்கள் நினைத்தது போல் அல்ல ; இன்று தான் டிசம்பர் 6 ! டிசம்பர் 5 என்பது இம்மாதம் வெளிவந்த  நான்கு இதழ்களும் முழுமையாக நம் கையில் கிடைத்த தேதியே ஆகும் !
காலை புலர்ந்ததிலிருந்து பரபரவென்று மனம் கட்டுக்குள் அடங்காமல் அலைந்திருக்கும் ; கூரியர் மூலம் இன்று புத்தகம் வருமா வராதா என்ற படபடப்பு உச்சத்துக்கு உங்களின் நாடித்துடிப்பை எகிற வைத்திருக்கும் ; கடவுளே, இந்த முறையும்  புத்தகங்கள்  கிழியாமலும், முனை மடங்காமலும் வரவேண்டுமே என்கின்ற உங்களின் உள்மனம் உங்களையும் சுயநலத்தில் அல்லாட வைத்திருக்கும். அரக்கபரக்க பொறுமையின்றி கோணலாக கவரை ஓபன் செய்து, அலுங்காமல் குலுங்காமல் புத்தகத்தை மெல்ல மெல்ல வெளியே எடுத்து வைத்து பொறுமையாக பார்த்த பிறகு தான் நம் இதயத் துடிப்பு 80 க்கு வந்திருக்கும். நான்கு புத்தகத்தை தனித் தனியாக பரப்பி வைத்து மொத்தமாக ரசிக்கும் உணர்விருக்கிறதே, அடடா.. அதை எப்படிச் சொல்வது ?! அதை எழுத்துகளால் வடிக்க முடியாது ; அது காமிக்ஸ் போன்றதொரு உணர்வு ; அனுபவித்து பார்த்தால் மட்டுமே புரியும் !    

இதுபோன்ற உணர்வுகள் எவருக்கெல்லாம் கிடைத்ததோ அவரெல்லாம்  நம் லயன் முத்து காமிக்ஸின் நெடுநாளைய சந்தாதாரர்கள் ; காமிக்ஸ் வாசிப்பு என்பது அவரின் பொழுதுபோக்கு ; காமிக்ஸ் ரசனை என்பது அவரின் கற்பனை உலகத்திற்கான திறவுகோல் ! இதை படித்தவுடன் உங்களில் எவருக்கெல்லாம் கவலை ரேகை முகத்தில் படிகின்றதோ, ஒன்று நீங்கள்   சந்தாதாரர் அல்ல என்று அர்த்தம் அல்லது நீங்கள் வெளிநாட்டில் வசிப்பதாக அர்த்தம் !

இம்மாத நான்கு புத்தகங்களையும் தனித்தனியே வைத்து மொத்தமாக ரசித்துக் கொண்டிருக்கும் போது KBGD, KBT என்று எந்த போட்டியும் அறிவிக்காமலேயே,  me the first என்று கமெண்ட் போட்டவர் நம் ரிப்போர்டர் ஜானி சார் ! 


டார்ச் அடித்து தேடினாலும் இதுபோல் அட்டைப்படம் கிடைக்காது ! 

   

தயவு செய்து முன் அட்டைக்கு சூன்யம் கீன்யம் வச்சுடாதிங்கப்பா !


Just miss, me the second  என்று 30 நிமிடம் கழித்து வந்து கமெண்டு போட்டு அலப்பரை செய்தவர் லக்கி லூக்  அட்டைப்படத்தார் !ஆஹா, ஒரிஜினல் (அட்டைப்படம்) என்றாலே ஒரிஜினல் தான் !  போச்சு எல்லாமே போச்சு, கெட்டதெல்லாம் எரிஞ்சே போச்சு !

me the third என்று லாரி கேப்பில் 3 என்ற முகமூடியை  போட்டுக்கொண்டு புனை பெயரில் பதிவிட்டவர் நம் டேஞ்சர் டயபாலிக் ஃப்ரம் இத்தாலி !


ப்ளீஸ்..  இந்த அட்டைப்படத்த பற்றி மட்டும் பேசாதீங்க !


ஹய்ய்.. ஜாலி ஜாலி நான் தான் நாலாவது என்று பெருமையாக கூறிக் கொண்டே பொறுமையாக தன்  வெற்றியை கோலாகலமாக கொண்டாடியவர் வேறு யாருமல்ல, நம் கழகத்தின் போர்வாள் மிஸ்டர் டைகரே தான் !


சத்தியமா இந்த அட்டைப்படத்தை நா சுடல, நம்புங்க ப்ளீஸ் ! 


 மிஸ்டர் சண்டியர் சிரிக்க வைக்க மறுக்கிறார் !


அட்டைப் படங்களை பொறுத்தவரை நான் பெரிதும் விரும்புவது ஒரிஜினலாக வெளிவந்த அட்டைப்படங்களையே ! தவிர்க்க இயலாத சிக்கல்கள் எழுந்தால் ஒழிய, மற்றைய சந்தர்ப்பத்தில் மாற்றாமல் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை மட்டுமல்ல கோரிக்கையும் கூட ! நம் ஓவியர் கையால் வரையப்பட்டு வெளிவந்த சென்ற ஆண்டின் அட்டைப்படங்களை என்னால் வெகுவாக பாராட்ட முடியவில்லை ; அதற்கு சமிபத்திய உதாரணம் வேங்கையின் சீற்றம் ! 

டைகரின் முகத்தை க்ளோசப்பில் பார்த்த போது, ஐயோ கடவுளே, இதற்கு நான்   டெக்ஸ் வில்லர் ரசிகனாக பிறந்திருக்கக் கூடாதா என்ற ஆதங்கம் உள்ளுக்குள் எழுந்தது. மடிப்பு கலையாத  மஞ்சள் சட்டையும், நீல கலர் ஜீன்ஸ் பேன்ட்டும் போட்டுக் கொண்டு ''நான் ஓங்கி அடிச்சா ஒன்ட்ர டன் வெயிட்டுடா''  என்று சினிமா டயலாக் கூட பேச வேண்டாம் ; ஒரிஜினலாக வரையப்பட்ட அட்டைப்படத்தோடு  இடுக்கிய கண்களோடும், வளைந்த நாசியோடும், பார்த்தவுடன் சட்டென்று புரிந்து கொள்ள முடியாத முக பாவனையுடனும், அழுக்கான உடையில் அப்பாவியாக வந்தாலே எனக்கு போதுமானது ; அவருக்காக மூன்று சந்தா கூட கட்டுவேன் ! இதில் பின்பக்கம் சண்டியர் என்ற பெயரில் ஒரு குள்ளமான குண்டு பூனை வேறு அட்டைப் படத்தை அலங்கரிக்கிறது, ரொம்ப பாவம் விருமாண்டி   கமல்ஹாசன் :) 

ஹ்ம்ம்.. சொல்ல மறந்து விட்டேன், ஜானி, லக்கி, டயபாலிக் ஆகிய மூன்று புத்தகங்களுக்கு நடுவில் வைத்து  வேங்கையின் சீற்றம் ஒல்லி   புக்கை பார்க்கும் போது,  டைகர் புத்தகம் ஒரு புக் மார்க் போலவே எனக்கு காட்சி அளிக்கிறது :)

ஒரிஜினல் என்னைக்குமே ஒரிஜினல் தான் , நா அட்டைப்படத்த சொல்லல  பாஸ் ! 

அட்டைப் படத்தை பொறுத்த வரை  ஒரிஜினலாக படைப்பாளிகளால் வரையப்பட்ட சித்திரங்களையே முழுமையாக பயன்படுத்த வேண்டும் ; அது தரும் உணர்வு என்றுமே அலாதியானது !  அதை எப்படிச் சொல்வது ?!  அது நாம் உபயோகப்படுத்தும் பிராண்டட்  பொருட்களைப் போன்றது ;  அது ஒரு உணர்வு, அதை அனுபவித்தால் மட்டுமே உணர முடியும் !

இதற்கு ஆசிரியர் முன்பே  பதிலளித்து விட்டதால் ஆனந்தமாக  கதைகளை படிக்க போகிறேன் !