Follow by Email

Friday, 6 December 2013

டிசம்பர் 5

நண்பர்களே, வாசகர்களே உங்கள் அனைவருக்கும் கள்ளம் கபடமற்ற என் வணக்கத்தை மரியாதையாக செலுத்துகிறேன்.  டிசம்பர் 5 என்று படித்தவுடன் உங்களில் சிலருக்காவது தங்களின் சிந்தனைகளும் அது தந்த எண்ணங்களும் -  நம் காசோ'வின் லோகோ'வில் கம்பீரத்தோடு கூடிய வசீகரம் கொண்ட வாலிப வயது சிங்கத்தை சுற்றிலும் சுழன்று நகரும் ஆரஞ்சு வண்ண சூரியக் கதிர்களின் அலையாக உங்களை அரவணைத்திருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் அது நீங்கள் நினைத்தது போல் அல்ல ; இன்று தான் டிசம்பர் 6 ! டிசம்பர் 5 என்பது இம்மாதம் வெளிவந்த  நான்கு இதழ்களும் முழுமையாக நம் கையில் கிடைத்த தேதியே ஆகும் !
காலை புலர்ந்ததிலிருந்து பரபரவென்று மனம் கட்டுக்குள் அடங்காமல் அலைந்திருக்கும் ; கூரியர் மூலம் இன்று புத்தகம் வருமா வராதா என்ற படபடப்பு உச்சத்துக்கு உங்களின் நாடித்துடிப்பை எகிற வைத்திருக்கும் ; கடவுளே, இந்த முறையும்  புத்தகங்கள்  கிழியாமலும், முனை மடங்காமலும் வரவேண்டுமே என்கின்ற உங்களின் உள்மனம் உங்களையும் சுயநலத்தில் அல்லாட வைத்திருக்கும். அரக்கபரக்க பொறுமையின்றி கோணலாக கவரை ஓபன் செய்து, அலுங்காமல் குலுங்காமல் புத்தகத்தை மெல்ல மெல்ல வெளியே எடுத்து வைத்து பொறுமையாக பார்த்த பிறகு தான் நம் இதயத் துடிப்பு 80 க்கு வந்திருக்கும். நான்கு புத்தகத்தை தனித் தனியாக பரப்பி வைத்து மொத்தமாக ரசிக்கும் உணர்விருக்கிறதே, அடடா.. அதை எப்படிச் சொல்வது ?! அதை எழுத்துகளால் வடிக்க முடியாது ; அது காமிக்ஸ் போன்றதொரு உணர்வு ; அனுபவித்து பார்த்தால் மட்டுமே புரியும் !    

இதுபோன்ற உணர்வுகள் எவருக்கெல்லாம் கிடைத்ததோ அவரெல்லாம்  நம் லயன் முத்து காமிக்ஸின் நெடுநாளைய சந்தாதாரர்கள் ; காமிக்ஸ் வாசிப்பு என்பது அவரின் பொழுதுபோக்கு ; காமிக்ஸ் ரசனை என்பது அவரின் கற்பனை உலகத்திற்கான திறவுகோல் ! இதை படித்தவுடன் உங்களில் எவருக்கெல்லாம் கவலை ரேகை முகத்தில் படிகின்றதோ, ஒன்று நீங்கள்   சந்தாதாரர் அல்ல என்று அர்த்தம் அல்லது நீங்கள் வெளிநாட்டில் வசிப்பதாக அர்த்தம் !

இம்மாத நான்கு புத்தகங்களையும் தனித்தனியே வைத்து மொத்தமாக ரசித்துக் கொண்டிருக்கும் போது KBGD, KBT என்று எந்த போட்டியும் அறிவிக்காமலேயே,  me the first என்று கமெண்ட் போட்டவர் நம் ரிப்போர்டர் ஜானி சார் ! 


டார்ச் அடித்து தேடினாலும் இதுபோல் அட்டைப்படம் கிடைக்காது ! 

   

தயவு செய்து முன் அட்டைக்கு சூன்யம் கீன்யம் வச்சுடாதிங்கப்பா !


Just miss, me the second  என்று 30 நிமிடம் கழித்து வந்து கமெண்டு போட்டு அலப்பரை செய்தவர் லக்கி லூக்  அட்டைப்படத்தார் !ஆஹா, ஒரிஜினல் (அட்டைப்படம்) என்றாலே ஒரிஜினல் தான் !  போச்சு எல்லாமே போச்சு, கெட்டதெல்லாம் எரிஞ்சே போச்சு !

me the third என்று லாரி கேப்பில் 3 என்ற முகமூடியை  போட்டுக்கொண்டு புனை பெயரில் பதிவிட்டவர் நம் டேஞ்சர் டயபாலிக் ஃப்ரம் இத்தாலி !


ப்ளீஸ்..  இந்த அட்டைப்படத்த பற்றி மட்டும் பேசாதீங்க !


ஹய்ய்.. ஜாலி ஜாலி நான் தான் நாலாவது என்று பெருமையாக கூறிக் கொண்டே பொறுமையாக தன்  வெற்றியை கோலாகலமாக கொண்டாடியவர் வேறு யாருமல்ல, நம் கழகத்தின் போர்வாள் மிஸ்டர் டைகரே தான் !


சத்தியமா இந்த அட்டைப்படத்தை நா சுடல, நம்புங்க ப்ளீஸ் ! 


 மிஸ்டர் சண்டியர் சிரிக்க வைக்க மறுக்கிறார் !


அட்டைப் படங்களை பொறுத்தவரை நான் பெரிதும் விரும்புவது ஒரிஜினலாக வெளிவந்த அட்டைப்படங்களையே ! தவிர்க்க இயலாத சிக்கல்கள் எழுந்தால் ஒழிய, மற்றைய சந்தர்ப்பத்தில் மாற்றாமல் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை மட்டுமல்ல கோரிக்கையும் கூட ! நம் ஓவியர் கையால் வரையப்பட்டு வெளிவந்த சென்ற ஆண்டின் அட்டைப்படங்களை என்னால் வெகுவாக பாராட்ட முடியவில்லை ; அதற்கு சமிபத்திய உதாரணம் வேங்கையின் சீற்றம் ! 

டைகரின் முகத்தை க்ளோசப்பில் பார்த்த போது, ஐயோ கடவுளே, இதற்கு நான்   டெக்ஸ் வில்லர் ரசிகனாக பிறந்திருக்கக் கூடாதா என்ற ஆதங்கம் உள்ளுக்குள் எழுந்தது. மடிப்பு கலையாத  மஞ்சள் சட்டையும், நீல கலர் ஜீன்ஸ் பேன்ட்டும் போட்டுக் கொண்டு ''நான் ஓங்கி அடிச்சா ஒன்ட்ர டன் வெயிட்டுடா''  என்று சினிமா டயலாக் கூட பேச வேண்டாம் ; ஒரிஜினலாக வரையப்பட்ட அட்டைப்படத்தோடு  இடுக்கிய கண்களோடும், வளைந்த நாசியோடும், பார்த்தவுடன் சட்டென்று புரிந்து கொள்ள முடியாத முக பாவனையுடனும், அழுக்கான உடையில் அப்பாவியாக வந்தாலே எனக்கு போதுமானது ; அவருக்காக மூன்று சந்தா கூட கட்டுவேன் ! இதில் பின்பக்கம் சண்டியர் என்ற பெயரில் ஒரு குள்ளமான குண்டு பூனை வேறு அட்டைப் படத்தை அலங்கரிக்கிறது, ரொம்ப பாவம் விருமாண்டி   கமல்ஹாசன் :) 

ஹ்ம்ம்.. சொல்ல மறந்து விட்டேன், ஜானி, லக்கி, டயபாலிக் ஆகிய மூன்று புத்தகங்களுக்கு நடுவில் வைத்து  வேங்கையின் சீற்றம் ஒல்லி   புக்கை பார்க்கும் போது,  டைகர் புத்தகம் ஒரு புக் மார்க் போலவே எனக்கு காட்சி அளிக்கிறது :)

ஒரிஜினல் என்னைக்குமே ஒரிஜினல் தான் , நா அட்டைப்படத்த சொல்லல  பாஸ் ! 

அட்டைப் படத்தை பொறுத்த வரை  ஒரிஜினலாக படைப்பாளிகளால் வரையப்பட்ட சித்திரங்களையே முழுமையாக பயன்படுத்த வேண்டும் ; அது தரும் உணர்வு என்றுமே அலாதியானது !  அதை எப்படிச் சொல்வது ?!  அது நாம் உபயோகப்படுத்தும் பிராண்டட்  பொருட்களைப் போன்றது ;  அது ஒரு உணர்வு, அதை அனுபவித்தால் மட்டுமே உணர முடியும் !

இதற்கு ஆசிரியர் முன்பே  பதிலளித்து விட்டதால் ஆனந்தமாக  கதைகளை படிக்க போகிறேன் !

10 comments:

 1. டைகர் அட்டைபடம் சரியில்லைதான் அதற்காக கட்சி மாற நினைப்பதெல்லாம் நல்லா இல்லை. நீங்கள் மாற நினைக்கும் நபர் கதையே சரியாக இருக்காதே அதற்கு என்ன செய்ய போகிறீர்கள்?

  ReplyDelete
  Replies
  1. இல்லை நண்பரே, நிச்சயமாக கட்சி எல்லாம் மாற மாட்டேன் ; உள்ளுக்குள் எழுந்த ஆதங்கத்தை பதிவிட்டுள்ளேன் அவ்வளவு தான் ; நீ சாப்பிடாவிட்டால் உன்னை பூச்சாண்டியிடம் பிடித்து கொடுத்து விடுவேன் என்று சின்ன வயசில் நம் அம்மா நம்மை பயமுறுத்தி இருப்பார்கள் அல்லவா, அதுபோலத் தான் இதுவும் :)

   இன்னும் உங்களுக்கு அதிக நம்பிக்கை வர ஒரு ரகசியத்தை கூறுகிறேன், கேளுங்கள் ; மின்னும் மரணம் முழுவண்ண முழு மறுபதிப்பிற்கு மொத்தம் 6 புத்தகங்கள் முன்பதிவு செய்யப் போகிறேன்..!

   Delete
 2. முதல் பதிவிற்கு வாழ்த்துகள் .. :-)

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும், முதல் கமெண்ட் ற்கும் நன்றிகள் :)

   Delete
 3. எனக்கு இன்று மதியம்தான் புத்தகம் கிடைத்தது. அட்டைபட விசயத்தில் உங்களுடைய கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

  ReplyDelete
 4. மிஸ்டர் ம ம
  நீங்களாவது வாரம் ஒருமுறை காமிக்ஸ் சம்பந்தமான பதிவை வெளியிடலாமே?

  ReplyDelete
  Replies
  1. //மிஸ்டர் ம ம. நீங்களாவது வாரம் ஒருமுறை காமிக்ஸ் சம்பந்தமான பதிவை வெளியிடலாமே?//

   மிக்க நன்றி ; உங்களின் இந்த கமெண்ட் எனக்கு மிகவும் மனநிறைவை தருகிறது. நானும் இதுபோலவே பதிவிட எண்ணியிருந்தேன் ; இடையில் 4 நாட்கள் விடுமுறையாக - திருவண்ணாமலை கிரிவல பயணத்திற்காகவும், மீண்டும், நாளையிலிருந்து கிட்டத்தட்ட 20 நாட்கள் வெளியூர் பயணத்திற்காகவும் இங்கு பதிவிட வழியற்று போகிறது என்பதால் தான் தொடர்ந்து பதிவிடவில்லை. காமிக்ஸ் பதிவுகள் என்பது ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு என்பது மட்டுமல்லாமல், நம் எண்ணங்களின் அதிர்வலையை குறைக்கும் ஓர் ரகசியமாகவும் செயல்படுகிறது என்பதை எத்தனை காமிக்ஸ் பதிவர்கள் உணர்ந்திருப்பார்கள் என்பது இந்த வலையுலகில் ஓர் கேள்விக்குறியே..!

   பின்குறிப்பு : இந்த பதிவிற்குபின் வேங்கையின் சீற்றம் & Operation சூறாவளி என இரண்டுபதிவுகள் உள்ளது, ஆனால் அங்கு உங்களின் கமெண்டை பதிவிடாமல் இங்கு பதிவிட்ட காரணம் என்னவாக இருக்கும் என்று அறிய மிகவும் ஆவலாக இருக்கிறேன் நண்பரே..!

   Delete