Follow by Email

Wednesday, 24 December 2014

வல்லவர்கள் வீழ்வதில்லை..!

நண்பர்களே,

வணக்கம். நமக்குச் சில விஷயங்கள் பிடிக்கும் போது அதை வழக்கமாக ஏற்படுத்திக் கொள்கிறோம் ; வழக்கம் தொடர்ந்து நடைபெறும் பட்சத்தில் அதுவே பழக்கமாகிறது ; பழக்கம் அதிகமாக, அதிகமாக அது நம்மை பழக்கத்திற்கு அடிமைப் படுத்துகிறது. அந்நிலையில் நம் வாழ்கையின் சிறந்த காரணி அதுவென்றோ, அது இல்லாவிட்டால் வாழ்க்கையே சூன்யம் என்றோ அதன் வழி தொடர்ந்து கவலைப்படுகிறோம். சில காலங்களில், சில காரணிகளின் பிடிப்பின்றி தம் வாழ்வே இல்லை எனும் நிலையைக் கூட எடுத்து விடுகிறோம் ; மாற்றுக் கருத்துக்கு அங்கே இடமே இல்லாமல் மதிமயங்கி புத்தி பேதலிக்கிறோம். ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால் காலம் இடைவெளியை ஏற்படுத்தும் போது, அதுவரை உயிரை, அனுதினமும் மாய்த்து வந்த காரணி கேலிக்குரியதாகி விடும் ; நம்மை நினைத்து நாமே நகைக்கும் அளவிற்கு கேலிப்போருளாகி  விடும் ! அதற்கு நம்மிடையே சமீபத்திய மிகச் சிறிய உதாரணமாக திகழ்வது தான் நித்தமும் காமிக்ஸ் கமெண்டு போடுவது. காமிக்ஸ் கமெண்ட் போடாவிட்டால் தூக்கம் இல்லை ; காமிக்ஸ் கமெண்ட் படிக்காவிட்டால் நிம்மதி இல்லை என்ற நிலைமை - கொஞ்ச நாள் ஒதுங்கி இருந்தால், இவ்வகை எண்ணங்கள் இருந்த இடம் தெரியாமல் காற்றில் கரைந்த கற்பூரமாக மட்டுமே மணம் வீசி ஒரு ஓரமாக நின்று, பிறகு சென்றே விடுகிறது ! 

தான் செய்யும் வினையிலிருந்து யாருமே தப்புவதில்லை ; நற்செயலாக இருந்தாலும், தீச்செயலாக இருந்தாலும் அதன் பலன்கள் ஒவ்வொருவருக்கும் உடனக்குடன் நடந்தே வருகிறது. ஆனால் தான் செய்த செயலுக்கான பலன் தான் இதுவென்று பகுத்தறிய தெரியாத காரணத்தால் தான் ஒரு மனிதன், மீண்டும், மீண்டும் அதே தவறை தொடர்ந்து செய்கிறான். துவேஷம் கொண்டு இன்னொருவரை  தூஷிப்பதால்,  அதன் துர்ப்பலன் பத்து மடங்கு அதிகமாக தன்னையும், தன் சிறிய குடும்பத்தையும் தாக்குவதை அவன் உணரும் வேலையில், மீண்டும் ஒரு முறை அது போன்ற வக்கிரம் அவன் மனதில் வரவே வராது என்பது சத்தியம் ! அதுவரை தன் நிலைக்கெட்டு, தரம்தாழ்ந்து அடுத்தவரை சாடுவதில் சிற்றின்பம் கொள்கிறான் !

சமீபத்தில் என்னை சிந்திக்க வைத்த ஒரு விஷயம் ரொம்பவே சுவாரசியமானது..
''டெக்ஸ்வில்லர் காமிக்ஸில் கதை இருந்தால் என்னால் ரசிக்க முடியவில்லை'', ஏனெனில்
//"உண்மையிலயே நான் இன்னும் வளர வில்லை"//  என்று     

தலைவர்    தாரை தப்பட்டை அவர்கள் கூறி இருக்கிறார். உடனே அதற்கு பதிலளித்து,

சாந்த சொரூபியான மதுரை அரவிந்தர்   அவர்கள் இவ்வாறு  கூறுகிறார் :-

//ஆமாம், நானும் இன்னும் வளரவே இல்லை..
கிராபிக் நாவல் எனக்கு நன்றாக புரிகிறது.
அது உண்மையா? அல்லது தவறான புரிதலா? என்று தெரியவில்லை.
இல்லை புரிந்த மாதிரி நடிக்கிறேனா என்பதும் தெரியவில்லை.//

என்ன கொடுமை கார்சன் இது..? இதையெல்லாம் டெக்ஸ் வில்லர், தன்னுடைய  குதிரையில் வந்தா துப்பறிய முடியும்..?! இன்னும் வளரவே வளராத சின்னப் பையன்களின் கூட்டத்திலேயா நாம் குப்பைக் கொட்டுகிறோம் என்று நினைக்கும் போது, காமிக்ஸ் வாசிப்பு என்பது சற்று நெருக்கத்தை இழப்பதாகத் தோன்றுகிறது. ஹ்ம்ம்.. காமிக்ஸ் என்பது நம் ஊரில், இன்னும் கூட சின்னப் பிள்ளைகள் சமாச்சாரம் தான் போலிருக்கிறது :( (இவையனைத்தும் ஜாலியான கருத்துகள் மட்டுமே)  


வல்லவர்கள் வீழ்வதில்லை..! கதை விமர்சனம் :)

அனுப்புநர் :-

Addiction வில்லர் க்ரூப்,
செத்தாண்டா சேகரு உள் அரங்கம் (AC),
தென்சென்னை.


பெறுநர் :-

டெக்ஸ் வில்லர் ரசிகர் மன்றம்,
மொபைல் கலாய்த்தல் பிரிவு, 
NH 47.

உடன்பிறப்பே,

நானும் ஒரு தீவிர டெக்ஸ் ரசிகன் தான் என்பது நீயும் அறியாததல்லவே ! ஒவ்வொரு கதையிலும் தவறாமல் காணக் கிடைக்கும் பாலை நிலமும், பாழுங் கணவாயும் ; கொத்திவிடும் விரியனும், சுட்டுவிடும் விரோதியும் - என்னை கதி கலங்க செய்பவை.. போலவே, தாக சாந்திக்கு ராவான விஸ்கியும், சைட் டிஷ்ஷிற்கு பக்குவமான வறுத்த கறியும், வேகவைத்த ஆப்பிளும், வேகமாய் இழுத்து விடும் ஸ்மோக்கிங்கும் என்னை மதி மயங்க செய்பவை என்பதில் உனக்கேதும் மாற்றுக் கருத்து இருக்கிறதா என்ன.., என் உடன்பிறப்பே ?!

வல்லவர்கள் வீழ்வதில்லை கதையை நானும் படித்தேன், அற்புதமான கதைக் களம் ; அருமையான கதை ; சுவாரசியமான நடை என உன்னைப் போலவே நானும் இரண்டு நாட்கள் புளகாங்கிதம் அடைந்தேன். நாலு இட்லி ஒரு வடைக்கு, திருடப்பட்ட கதையில் கல்லா கட்டிய லாடு லபக்குதாஸின் சுத்தி  படம் போலவே, தோராயமாக, நானூறு டாலருக்கு வாங்கிய கேப்டன் டைகரின், மின்னும் மரணம் கதையின் உட்டாலக்கடி கதையே இதுவென்று எதிர் அணியினர், பசப்பும் தம் வார்த்தைகளை, விஷம் தோய்த்த செவ்விந்திய அம்பாய் உன்னை நோக்கி எய்துவார்கள், தயவு செய்து உன் தலை கொடுத்து, என் ''தல''யை இழந்து விடாதே உடன்பிறப்பே..!

சரி, கதைக்கு வருவோம்.. அமெரிக்க அரசாங்கத்தின் நீதி பரிபாலனம் தனக்கு ஒத்து வரவில்லை என்ற காரணத்தால் கையில் ஒத்தை டாலரோடு, மெக்ஸிகோ' வில் நாடோடியாக ஒதுங்கும் டெக்ஸ் வில்லர், தம்முடைய பாச்சாதாபத்தைச் சம்பாதிக்கப் படாத பாடு படுகிறார். தெரியாமல் தான் நான் கேட்கிறேன், அமெரிக்காவின் நீதி பரிபாலனமே இவருக்காக மாற்றி அமைக்க வேண்டும் என்று இவர் எதிர்பார்க்கும் அளவிற்கு இவர் என்ன.. அவ்வளவுப் பெரிய அப்பாடக்கரா..?!  ஒருக்கால் ஜனாதிபதி தேர்தலுக்குப் போட்டியிட்டாரா? அல்லது செனட்டராகத் தான் பதவி வகித்தாரா? உடன்பிறப்பே, இதையெல்லாம் நீ கவனிக்க மாட்டாயா..? உண்மைதான் உனக்கெங்கே நேரம் இருக்கப் போகிறது? ஒரு ப்ளேட் மட்டன் பிரியாணிக்கும், இரண்டு ப்ளேட் அவிச்ச முட்டைக்கும் அடங்கிப் போகும் ஆத்மா தானே நீ..? (தயவு செய்து மற்ற நண்பர்கள் அனைவரும் என்னை மன்னிக்கவும்) 

சரி, அது தான் போகட்டும் என்று பார்த்தால், கதையின் நாயகன் ஷான் ஓ டான்னெல் தான் என்று, காமிக்ஸ் வாசகர்கள் எங்கும் பரவலாகப் பேசிக் கொள்கிறார்களே? அதாவது உனக்குத் தெரியுமா? தேசப்பக்தியிலும், தோழமையிலும், வீரத்திலும், அர்ப்பணிப்பிலும், தியாகத்திலும், நட்பிலும் - ஷான் கதையெங்கும் ஓடும் இரத்தநாளங்களாய்  வியாபித்து, காமிக்ஸ் வாசகர்கள் மனமெங்கும் நிறைந்து விட்டதை நீ அறிந்தால், இது ஒரு டெக்ஸ் வில்லர் கதையென்றே கூற மாட்டாய் :P 

பத்து வருடத்துக்கு முந்தைய ஒரு பழைய கடிதத்தின் தேதியை திருத்தியும், உள்ளூர் போலீஸுக்கு பயந்து, போக்குக் காட்டியும் 10, 20 பக்கங்களைக் கபளீகரம் செய்யும் ஹீரோயிஸத்தையா   உன்  பாசத் தலைவனிடம் எதிர்பார்த்தாய்? ஐயகோ.. நகைப்புக்கு இடமளித்து விட்டாரே உன் Super star..? 

கதையின் ஒரு கட்டம் ரொம்பவே என்னைப் பாதித்தது உடன்பிறப்பே..  ''உன் மென்னியை முறிக்க நான் வெறிகொண்டு அலைந்த காலம் ஒன்று உண்டு! ரேஞ்சர்! அது மெய்ப்படாமல் போனது நான் செய்த புண்ணியம்'' என்று  - க்ரேடி கூறிய அடுத்த நொடியில் அவனைப் பலிக் கொடுத்து விட்டு வேடிக்கைப் பார்க்கும் உன் தானைத் தலைவனை எவ்வளவு திட்டினாலும் தகும் என்று நீயும் தானே நினைக்கிறாய்..? வெட்டிப் பேச்சு வேலைக்கு ஆகாது.. ஓவர் ஷோ ஒடம்புக்கு ஆகாது.. என்று, யாராவது டெக்ஸ் வில்லரிடம் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம் !

டைகர் கதைக் களத்தில் நுழைந்ததும் அல்லாமல், இரண்டு கதாநாயகர்கள் ரோலில், இரண்டாம் நாயகனாக நடித்ததும் அல்லாமல், கடைசி 73 பக்கங்கள் முழுவதும் டுமீல் ! டுமீல் ! டுமீல் ! டுமீல் ! டுமீல் ! டுமீல் ! டுமீல் ! டுமீல் ! டுமீல் ! டுமீல் ! டுமீல் ! டுமீல் ! என்று ஒரே தலைவலி ! துப்பாக்கிச் சத்தத்தில், இரண்டு நாட்கள் காது இரண்டும் சரியாக கேட்கவே இல்லை என்றால் நீயே பார்த்துக் கொள் என் உடன்பிறப்பே...

ஹ்ம்ம்.. என்ன  சொல்லி என்ன பயன்? உனக்குப் புரியவா போகிறது? வறுத்த கறி சாப்பிடச் சொன்னால் வாண்டடாக வண்டியில் ஏறி வடதிசை நோக்கிப் பயணிக்கும் நீ, தென்திசையில் நடந்தேறிய இந்தக் கூத்துக்கு செவி சாய்க்கவா போகிறாய்? எல்லாவற்றையும் ஜீரணிக்கும் உன்னால் இதுபோன்ற கடுமையான விவாதங்களை ஜீரணிக்க முடியாது என்று எனக்கும் தெரியும். நான் உன்  நலனுக்காகத் தான் சொல்கிறேன், இனியும் அந்த டைகர் பயலைக் கனவிலும் கலாய்க்க நினைக்காதே... மின்னும் மரணம்  என்ற மகா காவியம் விரைவில் வரப்போகிறதாம் என் உடன்பிறப்பே.. என்ன செய்யப் போகிறாய்? ஒன்று செய்,  பேசாமல் நாலைந்து மாதம் எங்காவது சென்று மறைந்து கொள், முக்கியமாக 1200+ மெம்பர்ஸ் உள்ள Facebook க்ரூப் ல் பெரிய அப்பாடக்கர் போன்று கமெண்டு போடாதே ; WhatsApp க்ரூப் ல் எதையாவது படித்து விட்டு வெளியில் போய் நக்கல் செய்யாதே ! ஏதோ நீயும், நானும் டெக்ஸ் ரசிகன் என்ற தோழமையில் உரிமை கொண்டு இந்தக் கதை விமர்சனத்தை எழுதி விட்டேன். டெக்ஸ் வில்லர் என்றாலே இரணகளம் தான் என்பதில் இனியும் நீ மாற்றுக் கருத்து கொள்ளப் போகிறாயா என்ன ? :))

பின்குறிப்பு : நண்பர்களே,  இது ஒரு ஜாலியான கலாய்த்தல் பதிவு மட்டுமே.. தயவு செய்து யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாமே.. ப்ளீஸ்..! விமர்சனம் செய்ய வேண்டும் என்றால் இரண்டு நாட்களுக்குள் செய்து விடுங்கள்.. பதிலளிக்க தயாராக இருக்கிறேன்.. பிறகு வந்து, பூட்டிய வீட்டிற்கு முன் சத்தம் எழுப்பினால் பயன் இருக்காது நண்பர்களே ! நன்றி ! நன்றி !

Tuesday, 16 December 2014

உயரே... ஒரு ஒற்றைகழுகு..!

நண்பர்களே, 

வணக்கம். மனம் முழுவதும் சிலசமயம் சட்டென்று உல்லாசமாக இருக்கும் ; நம் உடலையும், உள்ளத்தையும் வானத்திலிருந்து வரும் ஒரு இளம் தேவதை  தாலாட்டுவதாக உணர்வோம் ; இறைவா... இப்படியே என் உலகம், காலம் முழுவதும் இருந்துவிடக் கூடாதா என்ற ஏக்கம் படரும் ; நேரம், காலம் மறந்து, மனம் மட்டுமே மோகிக்கும் அந்நிலை சில நொடிகளே நீடிக்கும் என்றாலும் அளப்பரியது !

இதற்கெல்லாம் காரணம் என்னவாக இருக்க முடியும் ? அது நமக்குள் சயனித்திருக்கும் கற்பனாச் சக்தியாகத் தான் இருக்க வேண்டும். அந்தக் கற்பனைச் சக்தியில் தான் அனைத்துமே அடங்கி இருக்கிறது என்பதில் தான் வாழ்க்கையின் சூட்சமும் அத்தனையும் உள்ளடங்கி இருக்கிறது.  இந்தக் கற்பனாச் சக்தி, நமக்கு எந்தளவு உணர்வோடு கலந்து, உயிரோடு கரைந்திருக்குமோ அந்தளவு நம் வாழ்க்கை இனிமை நிறைந்ததாக இருக்கும் !

நம் தலைமுறையின் சிறுவயதில் அநேகமாக அனைவருமே பூந்தளிர், அம்புலிமாமா, பாலமித்ரா, கோகுலம் எனும் சிறுவர் மலர்களில் ஏதும் ஒன்றையாவது வாசித்திருப்பார்கள் ; அந்த வாசகர்களில் பலரும் காமிக்ஸ் வாசிப்பிலும் வசமிழந்து இவ்வுலகை மறந்திருப்பார்கள் ;  அதில் சிலராவது மாயாலாஜக் கதைகளைப் படித்து, அந்த மாயலோகத்தில் சஞ்சரித்து, அங்கே காணக் கிடைத்த மந்திர தந்திரங்களால், தன் மதி மயங்கி பிரம்மை பிடித்தவர்களாக கொஞ்ச காலம் வாழ்ந்திருப்பார்கள். இவை எதுவுமே கிடைக்கப் பெறாதவர்களுக்கு பாட்டி சொன்னக்  கதைகள் வழியாகவாவது கற்பனைகள் எல்லையின்றி விரிந்திருக்கும் !

இதுபோன்ற காமிக்ஸ், மற்றும் மாயாஜாலக் கதைகளே நம் கற்பனை சக்தியின் பிறப்பிடமாக இருக்கிறது. அதன் வலிமை, ஒவ்வொருவரின் பால்ய காலத்தில் ஏற்படுத்திய தாக்கத்தின் அளவில் தான் முழுமையாக அளவிடப்படுகிறது. இம்மாத வெளியீடான மேஜிக் விண்ட்/ன் உயரே ஒரு ஒற்றைக் கழுகு அது போன்ற தனித்துவம் வாய்ந்த கதையாக அமைந்திருக்கிறது !தமிழ் காமிக்ஸ் வாசகர்களாகிய நாமெல்லாம்,  கௌபாய் உலகத்தினில் முழுமையாக மூழ்கடிக்கப்பட்டு விட்டோம். அதனால் தான் மேஜிக் விண்ட்/ம் ஒரு கௌபாய் கதையாக அறிமுகப்படுத்தப்பட்டு, அதே மனநிலையில் படிக்கவும் பழகிவிட்டோம். கதையின் ஆரம்பத்தில் சுட்டி லக்கி போன்று சாதராணமாக படிக்கும் மனநிலை எழுந்த போதும், சிறுவனை ஒரு கழுகு உயரே தூக்கிச் செல்ல ஆரம்பித்தவுடன் ஒரு இனம் புரியாத சிலிர்ப்பு, பின் மீண்டும் அதே கௌபாய் உலகம், செவ்விந்திய கிராமம் என்று சாதாரணமாகக் கதை நகருகிறது. இருப்பினும் கதையின் பாதியில் மேஜிக் விண்ட், மரணக் கால்வாயில் கால் பாதிக்கும் போது,  எங்கிருந்தோ வரும் மாயக் காற்று மெதுவாக நம்மைச் சுற்றிச் சுழல ஆரம்பிக்கிறது. திடிரென பட்டுப்போன மரங்களும்  நடக்க ஆரம்பித்தவுடன் நம்மை சூழ்ந்திருந்த மாய வளி, ஒரேடியாக நம்மை தூக்கி வாரிப் போட்டது போன்ற ஒரு உணர்வு  ; அதன் கதையும், கதையின் தன்மையும் ஒரேடியாக மாறியது போன்ற உணர்வுகளால் வேகவேகமாக நகர்ந்து சட்டென்று கதையும் முடிந்துப் போனவுடன், வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு நிறைவான காமிக்ஸ் பிடித்த திருப்தி மனமெங்கும் வியாபித்து இருந்தது. இன்னும் கூட கொஞ்சம் யதார்த்தத்தைக் குறைத்து, ப்ளாக் உல்ஃபின் உலகத்தை இன்னும் கூட கொஞ்சம் அதிகரித்து இருந்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்குமே என்ற ஆதங்கம் மட்டுமே இக்கதையில் ஒரு குறையாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இது ஒரு மனநிறைவை அளிக்கும் அருமையான காமிக்ஸ், அதுமட்டுமல்ல கிராபிக் நாவல் ரசிகர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய காமிக்ஸும் கூட !உயரே ஒரு ஒற்றைக் கழுகு - கற்பனா உலகத்தின் முதல் மண்டலதிற்கோர்  மீடியம் !

Friday, 12 December 2014

வானமே எங்கள் வீதி..!

நண்பர்களே,

வணக்கம். எப்பொழுதுமே எனக்குப் புத்தகம் கையில் கிடைத்த நாளே அனைத்து காமிக்ஸையும் படித்து விடுவேன். இதுவரை எந்தக் காமிக்ஸையும் இரண்டு நாட்களுக்கு மேல் படிக்காமல் ஒத்தி வைத்ததில்லை. முதல் வாசிப்பில் என்னவிதமான எண்ணங்கள் எனக்குத் தோன்றுகிறதோ அதையே என் கருத்தாக லயன் ப்ளாகிலும்,  இங்கு பதிவு போடுவதாக இருந்தாலும், அந்தச் சிந்தனைகளை மட்டுமே பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளேன் - படித்துப்   பல நாட்கள் கழிந்தப் பின்னும் ! எனவே என் பதிவுகள் அனைத்தும், என்னுடைய முதல் வாசிப்பின் சிந்தனைகளாக மட்டுமே இருக்கும். நீங்கள் என்னுடைய பதிவைப் படிக்கும் போது, அதில் மாறுபட்ட பார்வைகளோ  ; ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துகளோ இருக்கிறது என்று கருதும் பட்சத்தில், தாரளமாக நீங்கள் உங்களுடைய கருத்துகளை முன்வைக்கலாம் ; அல்லது மறுத்தும் பதிவிடலாம்.  நன்றி !

தற்போதெல்லாம் அடுத்த மாதம் ஏதாவது கிராபிக் நாவல் இருக்கிறதா என்ற தேடல் அதிகமாகி விட்டது ; கிராபிக் நாவல் இருக்கும் பட்சத்தில் அந்தப் புத்தகம் எப்பொழுது நம் கைகளில் கிடைக்கும் என்ற ஏக்கம் தொடங்கி விட்டது ; கதை பிடிக்குமா? பிடிக்காதா? என்ற சிந்தனை கொஞ்சம் கூட எழுவதில்லை ! பிடித்தாலும் சரி, பிடிக்கா விட்டாலும் சரி, ஆனால் அந்தக் கிராபிக் நாவல் நமக்குள் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் எப்படிப் பட்டதாக இருக்கக் கூடும் ? ; படித்தவுடன் பிடிக்குமா ? படிக்கப் படிக்கப் பிடிக்குமா ? ; தனிமையில் படிக்க வேண்டுமா ? இரவின் இருளும் சூழ வேண்டுமா ? ; அல்லது அதற்கு முன் ஒரு காமிக்ஸ் படித்தவுடன் கிடைக்கும் இலகுவான மனநிலை அவசியமா ? ; படிக்கும் மனநிலை வரும் வரை, ஆறுமாதமோ ஒரு வருடமோ படிப்பதை ஒத்திப் போட வேண்டியது  அவசியமா ? 

என்பது போன்ற சிந்தனைகள், மோடி சிறப்புரையாற்றிய நியூயார்க் கூட்டத்தில் எழுந்த ஆரவாரம் போல், ஒவ்வொரு முறையும் எண்ணங்கள் கரகோஷம் எழுப்புகின்றன !   இந்தச் சிந்தனைகளும், இயல்பாய் ஆர்ப்பரிக்கும் எண்ணங்களும், காமிக்ஸ் வாசகனாகிய எனக்குப் புதிய அனுபவம் தான் என்றாலும் அதிலும் ஒரு சுகம் இருக்கவே செய்கிறது ! அது போன்ற ஒரு எதிர்பார்ப்பில் படித்தக் கதை தான்  வானமே எங்கள் வீதி..! 


பார்வையில் பச்சிளம் பாலகர்களாகத் தோன்றும் மாக்ஸ், வெர்னர், ஹன்னா மூவருக்கும் அறிவுக்கு மீறிய விஷய ஞானம் ; வயதுக்கு மீறிய பேச்சுகள் ; சிறுவர்களுக்கே உரிய குறும்புத் தனம், கள்ளம் கபடமற்ற துடுக்குத் தனம் ; அவர்களுக்குள்ளும் இனம், மதம், பேதம் போன்ற பாகுபாடுகள் என்று, சலசலவென்று ஓடும் நதி போல் கதையின் ஆரம்பத்தில் நம் எண்ணங்களில் சிலச் சலனங்கள் ! அதுவும், அவர்களின் வசிப்பிடம் சைலஸி பிராந்தியத்தில் இருக்கும் சிறு மலைக் கிராமமான ஒபோல் என்பதும், கதையின் காலக்கட்டம் 1930 எனும் போது, நமக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மையை தவிர்த்து கொள்ள அனைவருக்கும் இயலுமா என்பது மிகப்பெரிய   கேள்விக்குறி தான் !

நாகரீகத்திலும், அறிவின் முதிர்ச்சியிலும், விஷய ஞானத்திலும்,  நாட்டு நடப்பிலும்  நாம் இன்றும் கூட எவ்வளவு பின்தங்கி உள்ளோம் என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது. கதையே என்றாலும் அதையே அளவுகோலாக்கிப் பார்க்கும் போது, கிட்டத்தட்ட 84 வருடங்கள் கழிந்தப் பின்னும் நம் வீட்டுச் சிறுவர்களின் திறன் மீது பச்சாதாபம் மட்டுமே ஏற்படுகிறது... இதில் எங்கு நம் தேசம் கோட்டை விடுகிறது ? கல்வியிலா? ; கற்பித்தலிலா? : ஜாதி மத துவேஷங்களிலா? ; கழக கட்சிகளின் சகாயத்தாலா? ; கட்டவுட் பாலபிஷேக விசிலடிச்சான் குஞ்சுகளின் ஞான சூன்யத்தாலா? ; சினிமா, டிவி போன்ற சமூக சீரக்கேடுகளாலா? - என்று  மனம் மட்டுமே இங்கு பதறித் துடிக்கிறது. இன்னும் எத்தனைக் காலத்திற்கு தான் இப்படி அடிமுட்டாள்களாகவே நம் மக்களில் பெரும்பான்மையானவர்கள், மாற்றமே இன்றி வாழப்போகிறார்கள் என்று தெரியவில்லை :(

இந்தக் கிராபிக் நாவல் படித்தவுடன் பிடிக்கும் வகையைச் சார்ந்தது. சட்சட்டென்று மாறுவது இறந்தகாலம், நிகழ்காலம் மட்டுமல்ல, நிறைய கதாப்பாத்திரங்களின் குணாதிசியங்களும் கூட தான் ! மாறுபட்ட மனிதர்கள்  ; விமானங்கள் ; யுத்தக் களரிகள் ; உயிர் ஆபத்தை சாதாரணமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவப்பட்ட மாந்தர்கள் - என அனைத்தும் ஹிட்லரின் இராஜ்ஜியம் எனும்  மையப்புள்ளியில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இங்கு கதையை விட, கதையில் வரும் கதாப்பதிரங்கள் நம்மை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்கின்றன. ஒரு விஷயத்தைப் படித்துக் கிரகித்து கொள்ளும் முன்பே, அடுத்த விஷயம் கண் முன் தோன்றுவதே  இதன் சிறப்பு !

கதை நெடுக மாக்ஸ் குர்ட்மேன் என்ற சிறுவனை மட்டுமே மையமாக வைத்து,  நெருடலின்றி சுவாரசியமாக நகரும் கதையில், இப்படியும் இருக்குமோ என்று கதையின் கடைசிப் பக்கத்தில்  ஒரு விஷயம் உறுத்தியது, லெப்டினென்ட் மாக்ஸ் குர்ட்மேனாக வருவது உண்மையில் 'வெர்னர் கோனிக்ஸ் பெர்க்' ஆகத் தான் இருக்க முடியும் என்பதே அது... கடைசிப் பக்கம் முடிந்தவுடன் பரபரவென்று முன்பக்கத்தைப் புரட்டிப் பார்த்தால், வெர்னரின் முகச்சாயல் அப்பட்டமாக மாக்ஸிடம் தெரிகிறது. தன்னுடைய ஆத்ம நண்பனுக்காக தன் வலது கையின் இரண்டு விரல்களைக் கூட   வெட்டிக் கொள்ளும் துணிவு கொண்டவன் தானே வெர்னர்? அப்படி இருக்கும் பட்சத்தில் அடுத்து வரும் ஆல்பம் மூன்றோடு முடிந்துப் போகும் தொடராக நிச்சயமாக இது  இருக்கப் போவதில்லை ! இந்தக் கருத்து  தவறாகவும் இருக்கலாம், ஆனால் தற்சமயத்திற்கு இதுபோன்ற யூகங்களும், காத்திருப்பும் நிச்சயம் சுவாரசியம் தரும் நிகழ்வாகவே அமைந்திருக்கிறது !

இயல்பாகவே, மாக்ஸ் நாஜிக்களின் மேல் காட்டும் வெறுப்பும், வெர்னரின் ஜெர்மானிய உணர்வுகளும், ஹன்னா/வின், தன்னிகரற்றப் பெண்ணாக சாதிக்க வேண்டும் என்ற பிறவிக் குணமும் அழகழகாக ஆங்காங்கே சித்தரிக்கப்பட்டுள்ளதே இந்தக் கதையின் உயிர் நாடியாக இருப்பதாக நான் கருதுகிறேன் !

முத்தாய்ப்பாக கூறுவதென்றால் ஹிட்லரின் இளைஞர் அணி பட்டாளத்தைக் கூறலாம்... சத்தியமாகக்  கூறுகிறேன், இளைஞர் என்ற சொற்பதத்தின் பொருள் இன்றுவரை நம் சமூகத்திற்கு தெரியாது. அதனால் தான் காசி இராமேஸ்வரம் போகும் 60+ வயதில் இளைஞர் அணி தலைவராக ஒருவர் காலத்தை ஓட்ட முடிகிறது ; 65 வயதில் 20 வயது பெண்ணுடன் ஒருவர் சினிமாவில் டூயட் பாட முடிகிறது ; 40+ வயதில் ஒருவர் கல்லூரி முதல் வருடப் படிப்பில் காதலிக்க முடிகிறது.  ஆனால் இக்கதையில், இளைஞர் அணி உறுப்பினர்கள் அனைவரும் துடிப்பு மிக்கச் சிறுவர்கள் ; உயிருக்கு அஞ்சாத மாவீரர்கள் ; பயம் என்றால் என்னவென்றே அறியாத இளஞ்சிங்கங்கள் !

இக்கதையில் வரும் இளைஞர் அணிபாலகர்களுக்குள்ளும் ; ஒவ்வொரு தன்னார்வ விமான பைலட் சிறுவர்களுக்குள்ளும் தெறிக்கும் உற்சாக உணர்வுகளும்,  யுத்த வெறிகளும், உயிருக்கு துணிந்த தியாகத்தையும் பார்க்கும் போது, ஒரு விஷயம் மட்டுமே திரும்பத் திரும்ப மனதில் நிழலாடுகிறது - இது உண்மையான வரலாறாக இருந்திருக்கும் பட்சத்தில், ஏன் அடால்ப் ஹிட்லரால் உலகம் முழுவதையும் வெற்றி கொள்ள முடியவில்லை ? சிறு குறிப்பு : காமிக்ஸ் சேகரிப்பாளர்கள் இந்தப் புத்தகத்தை எந்த வரிசையில் வைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை, ஆனால் நான் கீழ்காணும் வரிசையில் புத்தக ஷெல்பில் வைத்துள்ளேன் ; இப்படி வைத்ததிலிருந்து அந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம் ஒரு இனம் தெரியாத ஆத்ம திருப்தி உண்டாகிறது, நீங்களும் முயற்சித்து தான் பாருங்களேன் நண்பர்களே..!

1.எமனின் திசை மேற்கு !
2.க்ரீன் மேனர் !
3.மனதில் மிருகம் வேண்டும் !
4.ஒரு சிப்பாயின் சுவடுகளில் !
5.தேவ ரகசியம் தேடலுக்கல்ல !
6.இரவே.. இருளே.. கொள்ளாதே !
7.வானமே எங்கள் வீதி !

Wednesday, 19 November 2014

ஒரு நிழல் நிஜமாகிறது !

நண்பர்களே வணக்கம். தன்னுடைய படம் வெளிவரும் போதெல்லாம் அரசியல் ஸ்டண்ட் அடித்து, அளவற்ற துட்டு பார்க்கும் தமிழக சூப்பர் ஸ்டாரை நாம் பார்த்து விட்டோம் ; நாலு இட்லி, ஒரு வடையில் திருடிய ஒரு திரைக்கதையில் 120 கோடி கல்லா கட்டிய, சமுதாயத்தின் மேல் அளவிட இயலாத அக்கறையுள்ள (!!)  producer cum director யும் பார்த்து விட்டோம் ; சமுதாய அவலங்களைக் கண்டு சீறி எழுந்து, அடுத்த 24 மணி நேரத்திற்கு மட்டுமே தம் சீரிய எண்ணங்களை சிதறடிக்கும், Facebookன் அட்டக் கத்தி   அலெக்ஸாண்டர்களையும் நாம் பார்த்து விட்டோம் ;  ஒரு தலைமுறையையே சீரழித்து, வரும் வருமானத்தில் இலவசங்களை கொடுத்து, வறுமையையே   வாட வைத்ததாக கொக்கரிக்கும் ஆட்சிகளையும் பார்த்து விட்டோம் !

பாலியல் வன்கொடுமையை, ஒரு வாரம் திரும்பத் திரும்ப ஒளிபரப்பியும் ;  தீக்குளிக்கும் நபரின் கடைசி மூச்சு நிற்கும் வரை, துடிக்கத் துடிக்கக் காட்சிப்படுத்தியும் ; பெட்ரோல், டீசல் விலை உயர்வைப் பற்றிய மக்கள் கருத்தாக, 7.20 கோடியில் வெறும் நான்கு முகத்தை மட்டுமே காட்டியும் ; கலாச்சார சீரழிவையும் ; மாமா.. மாமா.. எப்ப..  ட்ட்..ரீட்டு..  என்று அந்த வேலையையும் கூட திறம்பட செய்தும் ; தாம் வாழும் சமூகத்தின் பண்பாட்டைத் தவிர மற்ற அனைத்தையும் காட்சிப் பொருளாக்கி, தத்தம் TRP  ratingஐ உயர்த்தி காசாக்கும் டிவி சேனல்களையும் முழுமையாக பார்த்து விட்டோம்; ஆனால்,

சமுதாய கடமை என்றால் என்னவென்று மட்டும் இன்று வரை நமக்குத் தெரியவே இல்லை. அதனால் தான் அடுத்தவர் தெருவில் போடும் குப்பையை நாம் பெருக்கிச் சுத்தம் செய்து,  சமூக சேவையில் நாமும் ஐக்கியம் ஆகி விட்டதாக பெருமிதம் கொள்கிறோம் ! என்னைப் பொறுத்தவரை சமூக சேவை என்பது, சமுதாய விழிப்புணர்ச்சியில் தான் முழுமைப் பெறுகிறது. நம் வீதியில் இருக்கும் குப்பையை நாம் சுத்தம் செய்வதை விட, நம் தெருவில் குடியிருக்கும் மக்கள், குப்பையை தெருவில் வீசாமல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த எவரால் முடிகிறதோ, அவரே சிறந்த சமூக சேவகன் ; தம் நாட்டின் நலன் மீது அக்கறையும் கொண்டவர் ; அவரே உயர்ந்தவர் ; அவருக்கே பேறும், புகழும் ஒன்றாய்ச்  சேரும் !

அதனால் தான், ஒவ்வொரு லார்கோ வின்ச் கதையைப் படிக்கும் போதும் அதன் கதாசிரியரான வான் ஹாமே ஒரு மிகச் சிறந்த சமூக சேவகராக எனக்குத் தெரிகிறார். இந்த மாத வெளியீடான ஒரு நிழல் நிஜமாகிறது ! கதையும் அதற்கு விதிவிலக்கல்ல ! தங்க முக்கோணம் என்றால் என்னவென்பதையும் ; அதில் பயிராகும் கஞ்சாவில் இருந்து கடத்தல் வரையும் ; மார்பின்/லிருந்து  உருமாறும் ஹெராயின் செய்முறையும் ; அதற்குண்டான துல்லியமான விலையும் ; உலகமெங்கும் இருக்கும் நெட்ஓர்க்கும் ; அதனால் ஏற்படும் சீரழிவும் சேதாரமும் - என அனைத்தையும் ஒரு காமிக்ஸில் கொண்டு வந்து, கொஞ்சம் கூட சலிப்புத் தட்டாமல் ஒருவரால்  சமுதாய விழிப்புணர்ச்சியைக் கொண்டு வரமுடியுமென்றால் அது வான் ஹாமேவாகத் தான் இருக்க முடியும் !

தமிழ் காமிக்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் ஹெராயின் சம்பந்தமாக ஒரு Ph.D. வாங்கும் அளவிற்கு ஆராய்ச்சி அறிவு இன்று இருக்கிறது     என்றால் அதற்கு காரணம்,   லார்கோ வின்ச்/ன் துரத்தும் தலைவிதி ! என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை தான் ! அது போன்றே ஒரு சமுதாய விழிப்புணர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதை தான் ஒரு நிழல் நிஜமாகிறது ! சுவாரஸ்யமான கதை மட்டுமல்ல, உலக சூதாட்ட அரங்கங்களின் தலைநகரமான  லாஸ் வேகஸ்/லிலும் ரெனோ/விலும் திரை மறைவில் நடக்கும் அவலங்களைத்  தோலுரித்து கட்டுகிறது !

வேலைத் தேடி வரும் இளம்பெண்களும், ஆசிய நாடுகளிலிருந்து கடத்தப்பட்டு கொண்டு செல்லப்படும் சிறுமிகளும் சென்றடையும் விபச்சார விடுதிகளில், அவர்கள் அனுபவிக்கும் நரகத்தை இவ்வளவு தெளிவாக மட்டுமல்லாது வெளிப்படையாகவும் உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட முடியுமா என்ற பிரமிப்பு எழுகிறது. உலகமெங்கும் உள்ள உல்லாச விரும்பிகள் காமிக்ஸ் தீவிர வாசகர்களாக இருக்கும் பட்சத்தில் அடுத்தமுறை, லாஸ் வேகஸ் சென்றாலோ ; ரெனோ சென்றாலோ  அவர்கள் அங்குள்ள விடுதிகளில் இருக்கும் இளம்பெண்களைப் பார்க்கும் பார்வையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்றே நினைக்கிறேன். அதுதான் லார்கோ கதைகளின் வெற்றி ; அதுவே வான் ஹாமே சத்தமின்றி மனித சமுதாயத்திற்கு ஆற்றி வரும் சமூக சேவை ; அதுவே நம் வாழ்க்கைக்கும் ஓர் அர்த்தம் தருவதாகவும் அமைகிறது ! என்னைப் பொறுத்தவரை ஒரு காமிக்ஸின் வெற்றி எதில் அடங்கி இருக்கிறது என்றால் - நல்ல தூக்கக் கலக்கத்திலோ ; மன அழுத்தத்தினால் ஏற்படும் அயர்ச்சியினாலோ ; கவலையிலோ சோர்ந்து இருக்கும் போது, ஒரு காமிக்ஸ் படிக்க நேர்ந்தால் - அத்தனையும் இருந்த சுவடுத் தெரியாமல் காணாமல் போக வைக்கும் சக்தி எந்த காமிக்ஸிற்கு இருக்கிறதோ அதுவே சிறந்த காமிக்ஸ் கதை என்று அடித்து கூறலாம் !

பயணக் களைப்பும், தூக்கக் கலக்கமும், உடல் தளர்வும் கொண்ட நிலையில் லார்கோ கதையைப் படிக்கக் கையில் எடுத்தேன். முதல் 18 பக்கங்களில் சைமன் போட்ட மொக்கையால் பிறகு படித்து கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்த நான், அதன் பிறகு கதையின் விறுவிறுப்பாலும், வாசகர்களை தன்னுள் இழுத்துக் கொள்ளும் அந்த காந்தச் சக்தியாலும் எப்படித்தான் படித்து முடித்தேன் என்றே தெரியவில்லை. பொம்மலாட்ட வித்தைக்காரனின் விரலசைவுக்கு ஏற்ப நாட்டியமாடும் பொம்மையைப் போலவே, கதையில் வரும் சம்பவங்களுக்கு ஏற்ப நம் உணர்வுகளும் மாறி மாறி நர்த்தனம் ஆடுவது லார்கோ கதைகளுக்கு என்றே இருக்கும் சூட்சமம் !

Golden Gate சீரியலின் நடிப்பில் சொதப்பும் சைமன், இம்முறை கதை முழுவதிலும் சொதப்பி உள்ளார். முதல் 18 பக்கங்கள் அறுவை மட்டுமல்ல அப்பட்டமான செயற்கை. ஒரு அல்லக்கை ஹீரோவாக நடித்தால் எப்படி இருக்குமோ அப்படி கதையில் மட்டுமல்ல, நிஜத்திலும்  இருக்கிறது. லார்கோ வின்ச்/ன் ஹீரோயிசம் கூட ஆங்காங்கே செயற்கையாகத் தெரிந்தாலும், இந்தக் கதையின் உண்மையான ஹீரோவான கதைக்கரு - எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது !

மேலோட்டமாக பார்த்தால் அதிக விமர்சனத்திற்கு உள்ளாவதைப் போல் தோன்றும் கழுத்து வரை புதைக்கப்பட்ட லார்கோவும், தேள் ; ஓணான் ; செந்நிற கடி எறும்புக்  கூட்டமும்  - கதையோடு நீங்கள் ஒன்றிபோய் படித்திருக்கும் பட்சத்தில் அதன் பின்னணியில் இருக்கும் லாஜிக்கை நீங்களும் ரசித்திருப்பீர்கள் ; சைக்கோவான ப்ளார் டி லா க்ரூஸ்/ன் லார்கோவை பழிவாங்குதலின் எண்ணவோட்டங்களை உங்களாலும் படித்தறிய முடியும் ; செந்தேள் பறந்து தூர விழும் போதில் லார்கோ வின்ச்/ன் திடமனமும், மனோ தைரியமும் எந்தளவு வலிமையானவை என்பதும் புலனாகும் ; லார்கோ காப்பற்றப்படுவதில் உள்ள வேகமும், விவேகமும், கதாசிரியரின் லாவகமும் இத்தொடரின் நிர்ணயிக்கப்பட்ட வெற்றியை எட்டுத் திக்கும் பறைசாற்றும் !


லார்கோ வின்ச் கதைத் தொடரில் இந்தக் கதை சற்றே சுமார் ரகம் தான் என்றாலும் - மற்றக் கதை வரிசைகளுடன் ஒப்பிடும் போது இது ஒரு மெஹா ஹிட் கதை என்பதில் ஐயமில்லை ! ஏனெனில் இந்தக் கதையை  படிப்பதற்கு என ஸ்பெஷலான  மனநிலையோ ; இரவின் தனிமையோ ; இருளின் நிர்சலனமோ  ; ஒத்தி வைக்கப்படும் காலநிலையோ ; காத்திருக்கும் மனோநிலையோ தேவையில்லை. ஏனெனில் புத்தகம் கிடைத்தவுடன்  ; கவரை கிழித்தவுடன் படித்து முடிக்கப்படும் காமிக்ஸ் எதுவோ அதுவே ரசனையிலும் ; பொழுதுபோக்கிற்கும் சிறந்தது !

சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே யின்படி - நம் காமிக்ஸ்  வட்டத்தில் 90 சதவீதம்  வாசகர்கள் 35+ வயதில் உள்ள வாசகர்கள். அதிலும், சில அப்பாவி வாசகர்களைத் தவிர மற்ற அனைவருமே உலக ஞானமும், பொது அறிவும் கொண்டவர்கள். நீங்கள் ஒரு காமிக்ஸைப் படிக்க கையில் எடுக்கும் அதே நேரத்தில், உங்களின் கேள்வி ஞானமும், காமிக்ஸ் ஆர்வமிக்க உங்கள் மனமும் - அந்தக் கதைக்களத்திற்குச் சென்று அழகாய் சம்மணமிட்டு அமர்ந்துக் கொள்ளும் என்பதில் ஐயமேது ?!

McDonald's ல்  இட்லி கிடைக்காது என்பதும் ; KFC யில் மசால் தோசை கிடைக்காது என்பதும் ; Pizza Hut ல் தயிர் வடை கிடைக்காது என்பதும் - நமக்குப் பிறர் சொல்லி தான் தெரிய வேண்டும் என்பதில்லை. உலக நாடுகளின் கலாச்சாரங்கள் ; நடைமுறைகள் ; நடை, உடை, பாவணைகள் ; பேச்சு வழக்குகள் என அனைத்தும்,  காமிக்ஸ் வாசகர்கள் அனைவரும் ஓரளவிற்காவது அறிந்த விஷயம் தான். அதனால் தான் லார்கோ வின்ச், வேய்ன் ஷெல்டன் - என புதிய கதைகள் அறிமுகம் ஆன கையோடு அவைகள் முதலிரண்டு இடத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டன !   

எனவே தான் ஆரம்பம் முதலே நான் ஒரு விஷயத்தை வலியுறுத்தி வருகிறேன். இது போன்ற ஐரோப்பிய ; அமெரிக்க ; ஆங்கில கதைகளின் மொழியாக்கத்தின் போது  காமெடிக்காகவோ ; லோக்கல் டச்சிங்கிற்காகவோ - கவுண்டமணி, வடிவேலு ஜோக்குகளையோ ; தமிழ் சினிமா டயலாக்குகளையோ சேர்க்கக்  கூடாது என்கின்ற என்  நிலைபாட்டில் மிகவும் உறுதியாக இருக்கிறேன். ஏனெனில்..

முதற் காரணம், என்னைப் போன்ற சினிமா, டிவி ஆர்வலர்களாக அல்லாத பட்சத்தில் - அந்த வார்த்தையின்  Sense of humour என்னவென்றே புரியாது. இரண்டாவது காரணம் - ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப்  பிறகு இணையும் இளம் வாசகர்களுக்கு, இதன் சாராம்சம் எதுவுமே புரிந்து வராது. அதே நேரம் இவ்வித வசனங்கள், வாசகர்களை கதைக் களத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது போலவும் அமைந்து விடும் ! சரி அதற்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று யாராவது கேட்பதற்கு முன்பே காரணத்தை கூறி விடுகிறேன். இக்கதையில் வரும் வசனங்களான...

1. குட்டிப்பா     
2. மிஸ்டர் ஜூப்பர் ஸ்டார் 
3. ஐஸ்வர்யா ராயுடன் பல்லாங்குழி ஆடுவதாக... 
4. இந்தியா பக்கமாய்... ஹீரோயின் வேஷம் கொடுத்து ஒரு தென்னை மரத்தைச் சுற்றி ஆட ... 

என்னதான் முயன்றாலும் ''குட்டிப்பா'' தரும் உண்மையான அர்த்தம் எனக்குப் புரியவேயில்லை. ''குட்டிப்பா'' பற்றி தெரியாதது என் குற்றமாகவே இருந்தாலும், நாம் பயணிக்கும் டவுன் பஸ் சட்டென்று  திடீர் ப்ரேக் அடித்து  நம்மை முன்னால்  இருக்கும் கம்பியில் முட்டிக் கொள்ளச் செய்தால் எப்படி இருக்குமோ அப்படி நான் உணர்ந்தது நிச்சயமாக என் தவறல்ல என்பது மட்டும் உண்மை ! ஐஸ்வர்யா ராயுக்கும், லார்கோ வின்ச் ற்கும் என்னப்பா சம்பந்தம் ?! மிஸ்டர் ஜூப்பர் ஸ்டார் என்று விளிக்கும் (!) லார்கோ  வின்ச்  - ஐய்யோ மாமா.. ட்ரவுசர் கழண்டுரிச்சு மாமா... போன்ற படத்தில் வரும் விஜய் சேதுபதியாகவே காட்சி தர ஆரம்பித்து விடுகிறார்.  

சமீபத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்து வெளிவந்த வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில் வரும் அமுல் பேபி வில்லன் இவ்வாறு கூறுவான் - இவனப் பார்த்தாலே எரிச்சலாக இருக்கிறது... இந்த மாதிரி  லோக்கல் பசங்கள சின்ன வயசிலிருந்தே எனக்குப் புடிக்காது... அது என்னமோ  தெரியல.. எனக்கும் இந்த மாதிரி லோக்கல் வசனங்களைப் படிக்க சின்ன வயசிலிருந்தே பிடிப்பது இல்லை :))) 

Sunday, 21 September 2014

காதலிக்கக் குதிரையில்லை !

நண்பர்களே,

வணக்கம். சில சமயம் பெரிய பின்புலம் இருக்கும் ; வரலாற்றுப் பின்னணிச் சார்ந்த  கதைக்களம் இருக்கும் ; நகைச்சுவையும், நையாண்டியும் கொட்டிக் கிடக்கும் ; ஒவ்வொரு கதையும், ஒரு உண்மைச்  சம்பவத்தைக் கூறுவதாக இருக்கும் ; பொழுது போக்கிற்கு ஏற்ற கார்ட்டூன் ரக ஓவியங்கள், தொடரின் பலமாக அமைந்து இருக்கும் !

ஆனால், அந்தத் தொடர் பலருக்கும் பிடிக்காமல் போகலாம், சில சமயம் வெற்றி அடையாமல் கூடப் போகலாம் ; இதற்குக் காரணம் - ரெண்டும் கெட்டான் கதை வரிசையாக இருக்கலாம் ; சிறுவர்களுக்கா அல்லது பெரியவர்களுக்கா என்ற குழப்பம் மேலோங்கி, குழப்பத்தை உண்டு பண்ணுவதாக அமையலாம் ; கேணங்கித்தனமான  வசனங்களும், கோணங்கித்தனமான செய்கைகளும், நம்  IQ லெவலுக்கு சவால் விடுவதாக இருக்கலாம் ; சிரிப்பிற்குப்  பதில், சில நேரம் நமக்கு கடுப்பை உண்டாக்கலாம் ; நகைச்சுவை என்ற பெயரில், அடிமட்ட முட்டாள் தனம் கதையெங்கும் நிரம்பியிருக்கலாம் ; நாம் சிரிப்பதற்குப் பதில், அரைக்கல்லை எடுத்து அவன் மண்டையை உடைக்கலாமா? என்று ஆத்திரம் வரும் அளவிற்கு காமெடி செய்திருக்கலாம்   ; இதுபோன்ற கதைகளில் வரும் 90 சதவீதம் நபர்கள், மடச்சாம்பிராணிகளாக இருக்கலாம் ; அதைப் படித்து நாமும் வாய்விட்டு சிரிக்க வேண்டுமானால், ஒன்று, நமக்கு IQ,  danger லெவலில் இருக்க வேண்டும் அல்லது மூளை என்ற வஸ்து அடிக்கடி மரத்துப் போயிருக்க வேண்டும் !

இது போன்றதொரு கதைத் தொடர் தான்,  ப்ளூகோட் பட்டாளம் ! ஒரே வகையான டெம்ப்ளேட் வகைக் கதைகள் ; கோபம் வரும் மாதிரியான காமெடிகள் ;  முட்டாள் தனமான செய்கைகள், அதற்கும் சில வியாக்கனங்கள் ; சொல்ல வருவதை தெளிவாக சொல்ல இயலாத குழப்ப நிலை ; நையாண்டி என்ற பெயரில், வடக்கத்திய ராணுவத்தை மட்டம் தட்டும் செயல் ; முத்தாய்ப்பாக கூறுவதென்றால், தெற்கத்தியப் புரட்சிப் படை ஆதரவாளர்களின் Troll தனம் என்றும் கூறலாம் !  இந்த ப்ளூகோட் பட்டாளத்தின் கதைத் தொடரின் அனாடமி இவ்வாறு இருந்தாலும், அந்தக் குள்ளப் பயலால்  மட்டுமே இந்தத் தொடர்களை  நம்மால் ஓரளவுக்கு ரசிக்கவோ ; ரிலாக்ஸாக படிக்கவோ இயலுகிறது ! 


காதலிக்கக் குதிரையில்லை - கதைக்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லை ! காதலிக்க எதுக்குச் சாமி குதிரை என்று, டின் டின்னாக அசடு வழிய வேண்டியிருக்கிறது. வழக்கம் போல இதிலும் IQ குறைந்த ஆசாமிகள் உயர் அதிகாரிகளாக வலம் வருகிறார்கள்.  யூனியன் படையின் உயரதிகாரிகள், கேணப்பயல்களாக   காணப்படும் அதே வேலையில், புரட்சிப் படையின் அதிகாரி அதிபுத்திசாலியாக காட்சியளிக்கிறார். நம் தமிழ்நாட்டில் உலவித்திரிந்து பரப்புரையாற்றும் புலி ஆதரவு பிரச்சாரர்கள் போல், தெற்கத்தியப் படைக்கும் ஒரு பெரிய ஆதரவு கூட்டமே இருக்கும் போல் தோன்றுகிறது ! 

அதே நேரம், நகைச்சுவை என்ற பெயரில் அரங்கேறும் ப்ராங்கோ பென்னியின் கூத்துகள்,  சிரிப்புக்குப் பதிலாக, அடப் போங்கடா... நீங்களும் உங்க காமெடிகளும் என்று சத்தமாகப் புலம்பத் தோன்றுகிறது. ஒரு முறை குதிரையிலிருந்து கீழே விழுந்தாலே முன்வரிசைப் பல்லுக்கு கேரண்டி இல்லை ; எழுந்து திடமாக நிற்க எலும்புக்கும், எனர்ஜிக்கும் உத்திரவாதம் இல்லை ; இதில் மேன்மை தாங்கிய    புளிச்.. தூ.. இரவெல்லாம் பறந்து பறந்து தூர போய் விழுகிறார்.   WWF ல் கூட இத்தனை மணி நேரம் சண்டை நடப்பதில்லை !

புரட்சிப் படையுடன் போரிடுவதற்கு ஒரு இதய நோயாளியான நோஞ்சான் குதிரை, மூன்று கழுதைகள், ஒரு ஒட்டகம் ஆகியவற்றை அனுப்பிவைக்கும் மத்திய தலைமை, எப்பேர்பட்ட கூமுட்டைகளாக  இருப்பார்கள்? அவற்றைப் படித்து, அவற்றை நம்பி, நாமும் சிரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்... ரின் டின் கேன்ல் வரும் மேன்மைதாங்கிய மை கர்னல்   எவ்வளவோ புத்திசாலி  மக்கழே !கதையின் பலம் : காதலிக்கக் குதிரையில்லை - கதையில் வரும் பல நகைச்சுவை வசனங்கள் ரசிக்க வைக்கின்றன ; சில யுத்த யுக்திகள் மலைக்க வைக்கின்றன ! உதாரணமாக, தெற்கத்திய ஜெனரலின் ரகசியத் திட்டமும், சார்ஜெண்ட் ரூபியின் மதியூகமும், குள்ளப் பயல் ஸ்கூபியின் தடாலடியும் இந்தக் கதைக்கு அச்சாணியாக திகழ்கின்றன ! செவ்விந்தியர்களின் உடையும்,  உருவமும் நம்மை சிரிக்க வைக்கின்றன ; மதியும், மதியூகமும் நம்மை பாராட்ட வைக்கின்றன ! குள்ளனின் சேஷ்டைகள் நம்பும்படியாகவும், நகைச்சுவை மிகுந்ததாகவும் இருக்கின்றன !

இதுபோன்ற கதைகளை, தற்போது நடைமுறையில் உள்ளது போன்றே தனித் தனி பாகமாக வெளியிட்டு, வேறு ஜனரஞ்சகமான கதைத் தொடர்களை, சிறிய குண்டு புக் வடிவில் வெளியிடுவதே சாலச் சிறந்தது !

ப்ளூ கோட்ஸ் - ரெண்டும் கெட்டான் ! காதலிக்கக் குதிரையில்லை - பாம்புன்னு அடிக்கவும் முடியாது, பழுதுன்னு தாண்டவும் முடியாது !பரவாயில்லை படிக்கலாம், மோசமில்லை ரசிக்கலாம், மனமிருந்தால் கொஞ்சம் சிரிக்கலாம் !

Friday, 19 September 2014

நான்... எனது... 2015..!

நண்பர்களே,

வணக்கம். எப்படியும் எடிட்டர், லார்கோ 4 இதழ்கள், ஷெல்டன் 3 இதழ்கள், கமான்சே 6 கதைகள் என்று நிச்சயமாக வெளியிடப்போவதில்லை என்பதாலும், மீண்டும் 2016ல் இதே போன்றதொரு சிந்தனையில் பதிவிட வழிவகை அமையும் என்பதாலும், இந்தப் பதிவுகள் அனைத்தையும் தொகுப்பாக படிக்கவும், கோர்வையாக புரிந்து கொள்ளும் நோக்கிலும் - இவையனைத்தையும் தனிப் பதிவாக என் ப்ளாகில் பதிவேற்றம் செய்ய விரும்புகிறேன். அடடா.. இது என்ன காப்பி பேஸ்ட் போஸ்ட் என்று யாரும் நினைக்க வேண்டாம் நண்பர்களே :​-)
1.மிஸ்டர் மரமண்டை16 September 2014 19:07:00 GMT+5:30

கிட்டத்தட்ட 30 வருடங்கள் ; குற்றம் நடந்தது என்ன? நடப்பது என்ன? நடக்கப் போவது என்ன? என அனைத்தும், அனைவருக்கும் மனப்பாடம் ; பரவசமூட்டாத நகர்வலம் ; பசியாற முடியாத வறுத்த கறி ; தாகச் சாந்தி செய்ய இயலாத சலூன்கள் ; பயந்த ரவுடிகள் ; பதுங்கும் கோழைகள் என படித்துப் படித்து - ஆயாசமாகி விட்டது ! திகைக்க வைக்கும் ஆச்சரியங்களோ ; அகலவிடாத கதைக் கருவோ இன்னும் கூட இருக்கிறதா என்ற சந்தேகம் வலுத்து விட்டது !

வயதாகிய டெக்ஸ் ; கிழமாகிய கார்சன் ; கூட்டமாய் சுற்றி நின்று சுட்டாலும், தெறித்து தூர விழவைக்கும் கவசமாய் மஞ்சள் சட்டை என கதையின் பலவீனங்கள் கண்ணுக்கும், மனதுக்கும் புலப்பட ஆரம்பித்து விட்டன ! அன்று, எல்லையின்றி பாலைவனத்தில் பரந்து விரிந்த எண்ணங்கள், கவலையோடு கதையின் பலவீனத்தில் குவிந்து, குமிந்து நிற்கின்றன இன்று ! 
2.மிஸ்டர் மரமண்டை16 September 2014 19:45:00 GMT+5:30

கைவசம் கணக்கிலடங்காத தொடர்கள் ; இன்னும் படித்தறியா கதைக் களங்கள் - ஒரு வருட slotல் இடம் கிடைக்காமல், வரிசைக்கட்டி lotல் குவிந்து கிடக்கின்றன ! அடுத்தது என்ன என்று யூகிக்க முடியாத தொடரும் பாகங்கள் ; தொட்டு விடத் துடிக்கும் மனதோடு, எட்டி நின்று ஏங்க வைக்கும் புதிய வெற்றிக் கூட்டணிகள் ; நிகழ்கால கதைகள் ; ஹாலிவுட்டை மிஞ்சும் லார்கோ வின்ச், வேயின் ஷெல்டன் திரைக் கதைகள் ; திகைக்க வைக்கும் திரில்லர் - டைலன் டாக் கதைகள் ; இன்னும் கதையின் போக்கே புரியாத மேஜிக் விண்ட் wild westன் சாகஸ கதைகள் ; கற்பனைகளைப் பகுத்தறிய விடாத யதார்த்தங்கள் ; கமான்சேவின், காமிக்ஸ் பூஞ்சோலைகள் ; தோர்கல்/ன் மாய உலகங்கள் - என இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம், ஆனால் இவையனைத்தும் நாம் ரசிக்கும் காலத்திலேயே கிடைக்க வேண்டும் அல்லவா?

இன்னும் பத்து வருடம் கழித்தும் கூட, இவை நமக்குப் புதிய வெளியீடுகளாக கிடைக்கலாம் ; நிலையற்ற ரசனையில், இவையனைத்தும் கூட, நாளை போரடித்து விடலாம் ; பழையன கழிதலும், புதியன புகுதலும் காலத்தால் கருணையின்றி செவ்வனே நடப்பவை ! காலத்தே பயிர் செய்வதும், பருவத்தே அறுவடை செய்வதும் செழிப்பான விவசாயத்திற்கு உத்திரவாதம் அல்லவா? எனவே தான், 27 வருடம் 25 வருடமாக தொடர்ந்து வெளிவரும் தொடர்கள் ; நாயகர்கள் ; டெம்ப்ளேட் வகைக் கதைகள் ; மனப்பாடமாகி விட்ட கதா நாயகனின் வசனங்கள் - நமக்குப் போரடிக்கவோ ; சலிப்படையவோ ; ஆயாசமடையவோ - ஆயத்தமாகி விட்டன ! 3.மிஸ்டர் மரமண்டை16 September 2014 21:32:00 GMT+5:30

உண்மையைக் கூற வேண்டுமானால், கேப்டன் டைகரின் இரத்தத் தடம் கதை முதல் வெளிவந்த எந்தக் கதையும் சோபிக்கவில்லை என்பதே உண்மை. கேப்டன் டைகர் ரசிகனான எனக்கு, எடுத்தோம் ; படித்தோம் ; கவிழ்த்தோம் என்று படிக்கக் கூட முடியாமல், சுவாரசியம் குறைந்தே காணப்பட்டது. ஒன்று, ஒவ்வொரு கதையிலும் செவ்விந்தியர்களிடம் தூது போகிறார் ; கடைசியில் உயரதிகாரிக்கு அடிபணிந்து அவர்களை பலி கொடுக்கிறார். அல்லது கதையின் ஆரம்பத்தில் இவரின் உயரதிகாரி இவரை, முரடன், ராணுவ ஒழுங்கு அற்றவன், கீழ்படியாதவன் - என்று வசைபாடி விட்டு, கதையின் இறுதியில் டைகரை போல் வரவே வராது என்று பாராட்டுகிறார்கள். இதற்கு காரணம், கதையில் உள்ள வலுவற்ற தன்மையால், இவர்களே டைகருக்கு துதி பாட ஆரம்பித்து விட்டார்கள். என்னைப் பொறுத்தவரை, டைகரோ ; டெக்ஸ்சோ - கதையைப் படித்து விட்டு நாம் தான் அவர்களைப் பாராட்ட வேண்டுமே தவிர, கதையில் வரும் கதாபாத்திரங்களே - பக்கத்திற்கு ஒரு முறை வல்லவன் ; நல்லவன் ; அசகாயசூரன் என்று துதி பாடுவது ஏற்புடையதாக இல்லை !

கடைசியாக வந்த மார்ஷல் டைகர் கதையைப் பற்றிக் கூற வேண்டுமானால் - பசியோடு சாப்பிட உட்கார்ந்தவன், ஒரு வாய் கவளத்தோடு எழுந்து கைகழுவிய நிலைமையில் தான் இருக்கிறேன். இனி அடுத்த பாகம் வருவதற்குள், நமக்கு முதல் பாகம் மறந்து போயிருக்கும். இதே நிலைமை தான், அனைத்து தொடர் கதைகளுக்குமான நிலை. இதற்கு காரணம், ஏகப்பட்ட கதைத் தொடர்கள் நம் கைவசம் இருக்கும் நிலையிலும், வருடத்திற்கு 50 கதைகளுக்கு மேல் பதிவிட இயலாத வியாபார வட்டம் தான் என்பது, அனைவருக்கும் தெரிந்தே தான் இருக்கிறது. சரி, இதற்கு தீர்வு தான் என்ன? இதை அலசப்போவதே என்னுடைய இந்தப் பதிவு. மாறாக டெக்ஸ், டைகர், லக்கி லூக், சிக் பில் கதைகளை குறை சொலவதல்ல என்னுடைய நோக்கம் ! 4.மிஸ்டர் மரமண்டை17 September 2014 09:26:00 GMT+5:30

இந்த வலைதளம் பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. மிக கடுமையான பல வாதங்களை முன் வைத்திருக்கிறது. ஆனால் இது கொஞ்சம் விசித்திரமானது. வாய்தா மேல் வாய்தா வாங்கி தினம் தினம் பதிவிட்டாலும், வருகின்ற சனிக்கிழமை இரவு வரை நமக்கு நேரம் இருக்கிறது !

2015 அட்டவணை - ஏற்கனவே, எடிட்டரால் முழுமையாக இறுதி செய்யப்பட்டு விட்டது ; இதில் புதிதாக நான் கூறி 2015ல் மாற்றம் ஒன்றும் நடக்கப் போவதில்லை தான் ; ஆனால் குறைந்தபட்சம் 2016 அட்டவணைக்காவது, இந்த எண்ணங்கள் ஒரு சிறிதளவு சிந்தனையைத் தூண்டுவதாக அமையட்டும் என்ற எண்ணத்திலேயே இந்தத் தொடர் பதிவு பதிவிடப்படுகிறது ! 

இப்படி நாம் ஒவ்வொருவரும், நம் எண்ணங்களை வெளியில் கூறாமல் இருப்பதால் தான், பல அரிய காமிக்ஸ் பொக்கிஷ குவியல்கள் நமக்கு கிடைக்காமலேயே சென்று விடுகிறது. உதாரணமாக சாகஸ வீரர் ரோஜர்/ஐக் கூறலாம். இதுவரை பார்த்திராத சாகஸப் பயணங்கள் ; ஆர்ப்பரித்து ஓடும் ஆறுகள் ; சுழித்து உள்ளிழுக்கும் சுழல்கள் ; முதலைகள் ; ஆட்கொல்லி மீன்கள் ; சூறைக்காற்று ; பேய்மழை ; அடர் வனத்திற்குள் ஒரு அட்வெஞ்சர் ட்ரெக்கிங் ; வழியெங்கும் காத்து நிற்கும் கொடூர ஆபத்துகள் ; இயற்கை சீற்றங்கள் ; பழங்குடியின் பழிதீர்க்கும் கொடூரங்கள் ; ஆப்பிரிக்காவின் இயற்கை எழில் கொஞ்சும் வனங்கள் ; புதைபொருள் அகழ்வு ஆராய்ச்சிகள் கண்டெடுக்கும் வரலாற்று ஆவணங்கள் ; இது அத்தனையும் அழகான வர்ணங்களில் என இன்னும் கூட சொல்லிக் கொண்டே போகலாம் - காலத்தின் கால் சுவடுகள்ஐப் பற்றி..!

புதையல் பாதை ; யானைக் கல்லறை/க்குப் பிறகு, அருமையான உணர்வுகளைத் தந்த அற்புதமான வெளியீடாக காலத்தின் கால் சுவடுகள் இருந்தது. ஆனால் நடந்தது என்ன? பெரும்பான்மையான வாசகர்கள் கூறியது என்ன? என்று யோசித்தோமேயானால், எங்களுக்கு அரைத்த மாவையே அரைத்து, மீண்டும் அரைத்து, அதில் விருந்து படையுங்கள் என்பதாகவே இருக்கிறது ! இதில் சம்பந்தப்படும் வியாபார இலாப நஷ்ட கணக்குகளையும் ; விற்பனை எண்ணங்களையும் ; ரசிகர் மன்றங்களின் பிரச்சனைகளையும் பிறகு பார்க்கலாம். அதற்கு முன்... 
5.மிஸ்டர் மரமண்டை17 September 2014 15:13:00 GMT+5:30

கணம் கோர்ட்டார் அவர்களே, எதிர்தரப்பு வக்கீல் சதீஷ் குமார் அவர்கள் நன்றாக வாதிடுகிறார். நல்ல பல அரிய கருத்துகளை முன் வைக்கிறார். என்னைப் போல் அல்லாமல் அவர், சட்டப் படிப்பான B.A.B.L. படித்து இந்த வக்கீல் தொழிலுக்கு வந்திருப்பார் என்றே நினைக்கிறேன் ! 

அவர் நடத்தும் குறுக்கு விசாரணையில், நான் என்ன சொல்ல வருகிறேன் என்று எனக்கே மறந்து போய் விடும் போலிருக்கிறது. எனவே, நான் எதற்காக இந்தப் பொதுநல வழக்கை இங்கே கொண்டு வந்தேன் என்றும், எதற்காக வாதம் புரிகிறேன் என்பதையும் இங்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். இந்த வழக்கின் கருப்பொருளாக நான் கருதுவது - எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே ஆகும். எதையும் வேண்டாம் என்று கூறப் போவதில்லை ; அதற்காக வருடத்திற்கு 150 வேண்டும் என்றும் கேட்கப்போவதில்லை ; அதை எப்படி சொல்லப் போகிறேன் என்றும் தெரியவில்லை ; ஏனெனில் இன்னும் எனக்கு எந்த சிந்தனையும் உதிக்கவில்லை !

ஐயோ.. கடவுளே.. இதுக்கு தான் யாரும் குறுக்க பேசாதீங்கன்னு சொன்னேன். கேட்டீங்களா? இப்ப பாருங்க நானே குழம்பி போயிட்டேன். இனி அடுத்த பதிவ போட்டா தான், நான் என்ன எழுதப் போறேன்னு எனக்கே தெரியும் :-))6.மிஸ்டர் மரமண்டை17 September 2014 16:09:00 GMT+5:30

அதற்கு முன், வரும் 2015 எப்படியிருந்தால் எனக்குப் பிடிக்கும் என்பதை இங்கு சொல்லி விடுகிறேன். அது நடைமுறைக்கு சாத்தியமில்லா விட்டாலும், 2016ல் சாத்தியமாக, சில யோசனைகளும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். முதலில் நம் இலக்கு என்னவென்று தெரிந்தால் தான், நம் பாதை எதுவென்று புரியும் என்ற நம்பிக்கையில் விருப்பத்தைக் கூறுகிறேன். பாதை மட்டும் தெரிந்து விட்டால், அதில் பயணிக்க வருத்தமோ ; செப்பனிட சிரமமோ இருக்காது என்ற தொலைநோக்கு பார்வையில் முதலில் நமக்கு (எனக்கு) எது வேண்டும் என்று பார்ப்போமே ! 

லார்கோ வின்ச் !

இதில் குறையே வைக்காமல், எடிட்டர் இரண்டு கதைகளை (two volumes - as original) ஒன்றிணைத்து, ஒரே ஆல்பமாக தருகிறார் ; அதுவும் கைக்கு அடக்கமான அழகிய குண்டு புக் உருவில் ! முதலில் அதற்காக எடிட்டருக்கு பாராட்டும், நன்றியையும் தெரிவிப்பது என் கடமையாக கருதுகிறேன். இப்படி இரண்டு கதைகளும் ஒரே புத்தகமாக வராவிட்டால், நாம் இந்தளவு வசியப்பட்டு இருப்போமா என்பதும் கேள்விக்குறியே ! 

தற்போது 4 கதைகளை, இரண்டு சிறிய குண்டு புத்தகமாக எடிட்டர் நமக்கு தருகிறார். இப்படி நாம் படிக்கும் பட்சத்தில் இந்தத் தொடர் முடிய இன்னும் ஒரு 6 வருடங்கள் நாம் காத்திருக்க வேண்டும். அதற்குள் இதுவும் பழைய தொடராக மாறிவிடும். பழக பழக பாலும் புளிப்பது போல், இறுதி வருடங்களில் அதிகளவு விமர்சனத்திற்கும், வியாபார தேக்கத்திற்கும் வழி வகை ஏற்படலாம். அதற்குப் பதிலாக, வருடத்திற்கு 8 கதைகள் கொண்டதாக 4 சிறிய குண்டு புத்தகங்களை வெளியிட வேண்டும் என்பதே என் ஆசை ! So,

1.Largo Winch - 4 books - @ 120 !7.மிஸ்டர் மரமண்டை17 September 2014 16:34:00 GMT+5:30

வேய்ன் ஷெல்டன் !

இதுவும் நமக்கு, குண்டு புத்தக வடிவிலேயே கிடைக்கிறது. இவர் தற்போது இரண்டாம் இடத்தில் கோலோச்சுகிறார். பரபரப்பிற்கும், கதையின் வேகத்திற்கும், விருவிருப்பிற்கும் பஞ்சமே இல்லை என்பதே இவரின் ஸ்பெஷாலிட்டி ! என்ன கருத்துக் கணிப்பு? யார் எடுத்த கருத்துக் கணிப்பு என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு, நம் சக்தியை விரயம் செய்யாமல் உண்மையை கொஞ்சம் ஒத்துக் கொள்வோமே !

இவர்களுக்கு முன், எம்ஜிஆர் - சிவாஜி ; ரஜினி - கமல் போன்று, டெக்ஸ் வில்லர் - கேப்டன் டைகர் என்ற இரண்டு குதிரை வாலாக்கள், பாலைவனத்தில் குப்பைக் கொட்டிக் கொண்டிருந்தது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம் தானே?! ஆனால் அந்தக் காலம் எல்லாம் மலையேறிப் போய் விட்டது. லார்கோ வின்ச் - வேய்ன் ஷெல்டன் என்பதே தற்போதைய trend. தற்போது இவரின் கதைகள் (two volumes - as original) ஒரு வருடத்திற்கு ஒன்று என்ற ரேஷன் முறையில் தான் கிடைக்கிறது. இதை வருடத்திற்கு 3 ஆக அனுமதிக்க வேண்டும் என்பதே என் ஆசை ! So, 

2.Wayne Shelton - 3 books - @ 120 !
8.மிஸ்டர் மரமண்டை17 September 2014 17:14:00 GMT+5:30

கமான்சே !

இந்தக் கதையைப் பற்றி எழுதச் சொன்னால், நாள் முழுக்க எழுதிக் கொண்டே இருக்கலாம். அப்படி ஒரு எனர்ஜி இந்தக் கதைத் தொடரில் கொட்டிக் கிடக்கிறது என்பதை, இதுவரை வண்ணத்தில் வந்த மூன்று பாகங்களும் நமக்கு பறைசாற்றுகின்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நமக்கு 2 கதைகள் மட்டுமே 2015ல் 60 விலையில் கிடைக்க வாய்ப்புள்ளது !

இது மற்ற தொடர்களைப் போலல்லாமல், படித்தவரை ஒன்றுகொன்று மிகவும் தொடர்பு கொண்டிருக்கிறது. ஒரு கதையை விட்டு ஒரு கதையைப் படிக்கும் போது, முழுமையான அனுபவம் கிடைப்பதில்லை என்பதே இதுவரை வந்துள்ள வெளியீடுகளின் அனுபவப் பாடம். தனித்தனியாக கதை அமைப்பு இருப்பது போல் தோன்றினாலும், இவையனைத்தும் உண்மையான தொடர்கதைகள் தான். எனவே இக்கதைகளில் காணக் கிடைக்கும் எல்லையற்ற உற்சாக உணர்வுகளை கருத்தில் கொண்டு - 3 பாகங்களை ஒன்றாக ஒருங்கிணைத்து, ஒரே புத்தகமாக 150 விலையில் தரவேண்டும் என்பதே என் ஆசை ! So,

3.Comanche - 2 books @ 150 !
9.மிஸ்டர் மரமண்டை17 September 2014 17:31:00 GMT+5:30

தோர்கல் !

இந்தக் கதையை தொடராக மட்டுமே படிக்க வேண்டும். ஏனெனில் நமக்குப் புரியாத ஒரு கதைக் களத்தில், நம் மனம் ஒன்றுவதற்கு நிறைய நேரம் பிடிக்கும். மெல்ல மெல்ல அதில் கால் வைக்கும் நிலையில், சட்டென கதை முடிந்து விடுவதாக இருப்பது மிகவும் சோகமயமான நிகழ்வாக அமைகிறது. அடி எது? முடி எது? என்று தெரியாமல் ஒவ்வொரு பாகமாக படிப்பது, ரசனைக்கு நாம் செய்யும் சங்கடமாகவே அமையும் என்பது என் கருத்து. இந்தத் தொடரில் Spin-Off எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 40 கதைகளுக்கு மேல் இருப்பதால், இதன் தொகுப்பும் அவசியமாகிறது. 

2015ல் 3 கதைகள் கொண்ட தொகுப்பாக ஒரு குண்டு புத்தகம் நிச்சயமாக வெளிவரும் என்றாலும், நமக்கு அது போதாது என்றே தோன்றுகிறது. எனவே, 3 கதைகள் கொண்ட தொகுப்பாக, 2 வெளியீடுகள் வர வேண்டும் என்பதே என் ஆசை ! So,

3.Thorgal - 2 books @ 150 !10.மிஸ்டர் மரமண்டை17 September 2014 18:10:00 GMT+5:30

இங்கு ஒரு விஷயத்தை சிந்திப்போம். டெக்ஸ் வில்லர் கதைகள் அனைத்தும், விற்பனைக்கு உத்திரவாதமானது என்பதை நாம் அனைவரும் எடிட்டர் வாயிலாக அறிந்திருக்கிறோம். விற்பனைக்கான காரணம் - டெக்ஸ் ; அதிகப் பக்கங்கள் ; சிறிய அளவு ; குறைந்த விலை ; 35 அல்லது 60 - என்பது போன்ற பல காரணங்கள் இருந்தாலும், ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, இத்தனை ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தும், ஒரு டெக்ஸ் வில்லர் கதை புத்தகம் முழுமையாக விற்றுத் தீர, குறைந்தபட்சம் ஒரு வருடம் அவசியமாகிறது ! 

தோராயமாக 5000 x 35 அல்லது 60ல், சந்தாப் பிரதிகள் போக விற்று முடிக்க ஒரு வருடமும், அதற்கு எல்லா ஊரிலும் புத்தகத் திருவிழா ஸ்டால்களும் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு ஊரிலும் புதிய வாசகர் அறிமுகம் என்பது முதல் இரண்டு புத்தகக் கண்காட்சியிலேயே முடிந்து விடும். எனவே அதற்குப் பிறகு, புத்தகக் கண்காட்சிக்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்யப்படும் பணமும், கமிஷன் போக வரும் விற்று முதலும் கையை கடிக்காமல் இருக்க வேண்டும். அப்படியென்றால் டெக்ஸ் வில்லர் விற்பனை என்பது ஒரு மாயை என்பது நமக்குப் புரிந்து வரும் ! 

இருந்தாலும், டெக்ஸ் வில்லர் கதைகளை நாம் அப்படியே விட்டு விட வேண்டாம். அவை நமக்கு அவசியம் வேண்டும். ஏனெனில், குறைந்தபட்ச விலையை எதிர்பார்க்கும் கடைகளுக்கும் ; ஏஜெண்டுகளுக்கும் ; பொதுநல விரும்பிகளுக்கும் ; மாணவர்களுக்கும் ; புதிய அறிமுக வாசகர்களுக்கும் ; புத்தகக் கண்காட்சிகளுக்கும் ; ரசிகர்மன்ற தோழர்களுக்கும் - அவசியம் டெக்ஸ் வில்லர் வேண்டும். எல்லோரும் கூறுவது போல் மிகப்பெரிய வெற்றி நாயகனான டெக்ஸ் வில்லரை - ஏன், சந்தாவில் சேர்க்க வேண்டும் என்பதே என் கேள்வி ? 

டெக்ஸ் வில்லரை சந்தாவில் சேர்ப்பதற்கு பதிலாக, அவர் இடத்தை மேஜிக் விண்ட் மூலம் இட்டு நிரப்பலாம் என்பது என் கருத்து. கிட்டத்தட்ட 130 கதைகள் கொண்ட தொடராக இது இருப்பதால், நமக்கு வேண்டிய மட்டும் கதைகள் கிடைப்பது மட்டும் அல்லாமல், புதிய பாணியில் வெளிவரும் கதைத் தொடரை கொஞ்ச காலம் ரசிக்கலாம். அப்படி என்றால் டெக்ஸ் வில்லரை என்ன செய்வது? எப்படி வெளியிடுவது? என்ற கேள்விகள் எழும்...11.மிஸ்டர் மரமண்டை17 September 2014 18:31:00 GMT+5:30

டெக்ஸ் வில்லர் !

அப்படி என்றால் டெக்ஸ் வில்லரை என்ன செய்வது? எப்படி வெளியிடுவது? என்ற கேள்விகள் எழும்.. இதற்கு நாம், வருடத்தின் ஆரம்பத்திலேயே, இரண்டுக்கு மேற்பட்ட சந்தா முறைகளை அறிமுகப்படுத்துவதே இதற்கெல்லாம் ஒரே தீர்வாக அமையும் என்பது என் கருத்து. அது எவ்வகையில் இருக்கலாம் என்பதை பிறகு ஆலோசிக்கலாம் !

ஒவ்வொரு வருடமும், டெக்ஸ் வில்லர் அவர்களை தீபாவளி மலரில் ; முழு வண்ணத்தில் ; இரண்டு பெரிய அட்டகாசமான கதைகள் கொண்டு, 500 பக்கங்களுக்கு மேற்பட்டு, குண்டு புத்தகமாக தரிசிக்க வேண்டும் என்பதே என் ஆசை ! அது போக, 35 விலையிலும், 60 விலையிலும் புத்தகக் கண்காட்சிக்காக கருப்பு வெள்ளையில் டெக்ஸ் வில்லர், டேஞ்சர் டயபாலிக், மற்ற கருப்பு வெள்ளை கதைகள் என்று தனியாக ஒரு சந்தாவை அறிமுகப்படுத்தலாம். சந்தா அதிகம் சேராவிட்டாலும், புதிய வாசகர்களின் அறிமுகத்திற்காகவும், புத்தகக் கண்காட்சி விற்பனைகளுக்காகவும், அனைவரும் எளிதாக வாங்கவும், குறைந்த விலையில் காமிக்ஸ் அறிமுகத்திற்காகவும் - இந்தத் தனி வரிசை பேருதவியாக அமையும் என்பது என் கருத்து !
12.மிஸ்டர் மரமண்டை18 September 2014 08:34:00 GMT+5:30

Satishkumar S : //*அப்படியென்றால் டெக்ஸ் வில்லர் விற்பனை என்பது ஒரு மாயை என்பது நமக்கு புரிந்து வரும் ! //*//*your words inviting TEX fans for duel.. best avoid such controversial facts manufacturing and baseless allegations on TEX sale*//

நண்பரே, தங்களின் கூற்று உண்மைதான் என்றாலும், இது ஒரு எளிமையான கணக்கை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. ஈரோடு புத்தகத் திருவிழா - updates (fly.விஜய்) மற்றும் இந்த மாத வெளியீடுகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ள கையிருப்பு பிரதிகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. அதில் மற்ற எல்லா இதழ்களையும் போலவே, டெக்ஸ் வில்லரின் விலை குறைந்த வெளியீடுகளும் ஸ்டாக்கில் இருப்பதாக நமக்குத் தெரிகிறது !

1.சிகப்பாய் ஒரு சொப்பனம் - 50
2.நிலவொளியில் ஒரு நரபலி - 50
3.பூத வேட்டை - 50
4.நில் கவனி சுடு - 65
5.காவல் கழுகு - 35

எனவே, நான் கூறுவதில் உள்ள அடிப்படை கருத்து அனைவருக்கும் புரியும் என்றே நினைக்கிறேன். நன்றி !13.மிஸ்டர் மரமண்டை18 September 2014 08:55:00 GMT+5:30

சந்தா எண் 3 - கருப்பு வெள்ளை & டெக்ஸ் ஸ்பெஷல் !

1.தீபாவளி மலர் - டெக்ஸ் வில்லரின் இரண்டு கதைகள் ; முழு வண்ணத்தில் !
2.டெக்ஸ் வில்லர் - 1
3.டேஞ்சர் டயபாலிக் - 1
3.மர்ம மனிதன் மார்ட்டின் - 1
4.
5.
6.
7.
8.
9.
10.
11.
12.

வருடத்திற்கு 12 வெளியீடுகள் ; தீபாவளி மலர் ; தீபாவளி மலரை தவிர அனைத்தும் கருப்பு வெள்ளை கதைகள் ; packing and forwarding charges are additional ! இது நன்றாக workout ஆகும் என்று நான் நினைக்கிறேன் !14.மிஸ்டர் மரமண்டை18 September 2014 15:27:00 GMT+5:30

தற்போது, அநேகமாக எல்லா நகரங்களிலும் நம் காமிக்ஸ் கிடைக்கிறது ; worldmart லும் கிடைக்கிறது ; landmark போன்ற ஷாப்பிங் மால் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது ; இலக்கியவாதிகள், புத்தக நண்பர்கள், பதிப்பக நண்பர்கள் நடமாடும் discovery book palace போன்ற exclusive book store களிலும் நம் காமிக்ஸ் தடையின்றி கிடைக்கிறது ; சிட்டி பஸ்டேண்ட் பெட்டிக் கடைகளிலும் கிடைக்கிறது ; சிறிய புத்தகக் கடைகளிலும் கிடைக்கிறது ; புத்தகத் திருவிழாக்களிலும் நம் ஸ்டால் அமைகிறது ; ஃபோன் செய்து, நெட்டில் பணபரிமாற்றம் செய்து, வேண்டியவற்றை மட்டும் வாங்கும் வசதியும் இருக்கிறது ; சில ஊர்களில் வாசக ஏஜெண்டுகள் மூலம், டோர் டெலிவரியிலும் கிடைக்கிறது ! 

ஷ்ஷப்ப்பா... ஒரு காமிக்ஸ் வாங்க, இத்தனை வசதிகள் இருந்தால், சந்தா எண்ணிக்கை எப்படி அதிகரிக்கும் என்பதே என் கேள்வி? இவை அனைத்தையும் மீறி சந்தா செலுத்தி, நான் காமிக்ஸ் சந்தாதாரர் என்று பெருமையுடன் சொல்லும் வாசகர்கள் தான், காமிக்ஸ் தீவிரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் ; நம் காமிக்ஸ் நிறுவனத்திற்கு தூண் போன்றவர்கள் ! இவர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர், படிக்க ஒன்று ; பாதுகாக்க ஒன்று, என்று இரட்டைச் சந்தா கட்டுபவர்கள் ; இவர்கள் எந்தக் காமிக்ஸ் வந்தாலும் கலெக்ஷனுக்காகவும், படித்து பரவசம் அடையவும் கண்டிப்பாக வாங்கியே தீருவார்கள் ; இவர்களின் காமிக்ஸ் பசி அடங்குவதே இல்லை !

இவர்களை மையப்படுத்தியே சந்தா எண் - 1 அமைய வேண்டும். அதாவது ரெகுலர் சந்தா !15.மிஸ்டர் மரமண்டை18 September 2014 16:18:00 GMT+5:30

சந்தா எண் 1 - ரெகுலர் சந்தா !

தற்போது நடைமுறையில் உள்ள, காமிக்ஸ் வாங்கும் வசதிகளால், பெரும்பான்மையான வாசகர்கள், ஒவ்வொரு மாதமும் தமக்குப் பிடித்த காமிக்ஸ் மட்டுமே வாங்கிக் கொள்கிறார்கள். அதுவும் cover priceல். எனவே இவர்களை மையப்படுத்தி, விலையிலோ ; கதைத் தேர்விலோ மாற்றத்தைக் கொண்டு வரும்போது, எங்களைப் போன்ற பெரும்பான்மையான சந்தா வாசகர்களுக்கு, அது பெரும் இழப்பாகவே அமைகிறது. அந்த இழப்பு என்பது, கதையில் இருக்கலாம் ; எங்கள் ரசனையில் இருக்கலாம் ; எண்ணிக்கையில் இருக்கலாம் ; அல்லது வருடக்கணக்கில் நீளும் தொடர் கதைகளால் இருக்கலாம் ; இப்படி எதில் வேண்டுமானாலும் எங்களின் இழப்பு இருக்கலாம் !

உதாரணமாக, மிகக் குறைந்த விலையை நிர்ணயிக்க வேண்டும் என்ற அக்கறையில், குறைந்தபட்ச அதிக எண்ணிகையிலான ப்ரிண்ட் ரன் இருக்க வேண்டும் என்பதால், கொடௌன் ஸ்டாக் (godown stock maintain) அதிகமாகிறது ; முதலீடு முடங்குகிறது ; எண்ணிக்கை குறைகிறது ; தொடர்கதைகள் அந்தரத்தில் தொங்குகிறது ; பதிப்பிடும் ஆர்வத்தில் சிரமத்தை நுழைக்கிறது !

எனவே இதில் சில மாற்றங்கள் செய்வது, நீண்டகால காமிக்ஸ் பயணத்திற்கு உதவும் பாலைவனச் சோலையாக அமையும் என்பது என் கருத்து. ஆரம்பத்தில் சிறிதளவும், போகப் போக தேவைக்கேற்ப முழுமையான அளவிலும் செய்யலாம். அவைகள் எப்படி இருக்கலாம் என்பதற்கு சில உதாரணங்களை ஆலோசனைக்காக முன் வைக்கிறேன்..16.மிஸ்டர் மரமண்டை18 September 2014 16:36:00 GMT+5:30

சந்தா எண் 1 - ரெகுலர் சந்தா !

*இதில், மொத்தம் 24 வெளியீடுகள் (கதைகள் அல்ல) கொண்டதாக மட்டுமே அமைக்கலாம் !

*ஆனால், தொடர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வெளிவர வேண்டும் ! (example : two volume, 3 volumes & 1) 

* cover priceஐ அதிகரித்து, subscription discount கொடுத்து - புத்தகத் திருவிழாக்கள், கடைகளில் வாங்கப்படும் விலைகளுடனான சமநிலையை எட்ட வேண்டும். எந்த வழிமுறையில் வாங்கினாலும் ஒரே விலை கொண்டதாக அமைய வேண்டும் ! 

*முதலீடு ஒரேடியாக முடங்குவதை தடுக்க, print runஐக் குறைக்கலாம் ; அதற்கான விலையை நிர்ணயிக்கலாம் !

*ஜனரஞ்சகமான தேர்வாக கதைகளை அமைக்கலாம் !

ஏனெனில், சந்தாதாரர்கள், எந்தக் காமிக்ஸ் வந்தாலும் வாங்குபவர்கள் ; அவர்களின் காமிக்ஸ் பசி அடங்குவதே இல்லை ! அதே நேரம் சந்தாதாரர்கள் அல்லாத, ஏனைய வாசகர்கள் தங்களுக்குப் பிடித்த புத்தகத்தை மட்டுமே கடைகளில் வாகுகிறார்கள் !17.மிஸ்டர் மரமண்டை18 September 2014 17:19:00 GMT+5:30

சந்தா எண் 1 - ரெகுலர் சந்தா - எனது ஆசை !

1.Largo Winch - 4 books (120)
2.Wayne Shelton - 3 books (120)
3.Comanche - 2 books (150)
4.Thorgal - 2 books (150)
5.The Bluecoats - 2 books (60)
6.XIII - 1 book (120)
7.Magic Wind - 2 books (65)
8.Lucky Luke - 2 books (60)
9.Chick Bill - 1 book (60)
10.Iznogoud - 1 book (120)
11.மார்ஷல் டைகர் - 1 book (120)
12.கிராபிக் நாவல் - 2 books (120)
13.புதிய அறிமுகம் - 1 book (120)

மொத்தம் 24 காமிக்ஸ் மட்டுமே ! இந்த விலை குறியீடு, புத்தகத்தின் அளவு நமக்குத் தெரிய வேண்டும் என்பதால் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தில் ஏறும், டாலர் விலையைப் பொருத்தும், பேப்பர் விலையைப் பொருத்தும், ப்ரிண்ட் ரன்/ஐப் பொருத்தும், விலையை நிரணயிக்கும் முழு உரிமையும் எடிட்டர் அவர்களுக்கே உள்ளது ! 18.மிஸ்டர் மரமண்டை18 September 2014 17:30:00 GMT+5:30

//why only 24 books in regular சந்தா, is there any logic?//

லாஜிக் எல்லாம் ஒன்றுமில்லை நண்பரே, 

சந்தா எண் - 1 = 24 BOOKS 
சந்தா எண் - 3 = 12 BOOKS 
சந்தா எண் - 2 = 06 BOOKS 

மொத்தம் 42 வெளியீடுகள் (மறைமுகமாக நிறைய கதைகள்) ! சந்தா தொகையும் குறைவு, கதைகளும் அதிகம் ! புதிய கதைகளும் கிடைக்கும், கருப்பு வெள்ளையும் கிடைக்கும் ! டெக்ஸ் வில்லரும் வரும், தீபாவளி மலரும் வரும் !

19.மிஸ்டர் மரமண்டை19 September 2014 08:33:00 GMT+5:30

சந்தா எண் 2 - Super Six !

1.டைலன் டாக் !
2.Editors' Choice !
3.ditto
4.ditto
5.ditto
6.ditto

ஒவ்வொரு சந்தாவிலும் ஒரு குருவி இருக்குமாறு, இந்தச் சந்தா முறைகள் அமைக்கப்பட்டுள்ளது. சந்தா எண் ஒன்றில் - லார்கோ வின்ச் ; இரண்டில் - டைலன் டாக் ; மூன்றில் - டெக்ஸ் வில்லர் ! எனவே சந்தாதாரர்கள் பலரின் கவனத்தையும் இது கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது !

Packing and courier charges are additional ! 20% discount on super subscriptions which includes all 3 in 1 package ! 

சரி, இதையல்லாம் நடைமுறைபடுத்த எடிட்டர், எந்தவித மனநிலையில் இருக்க வேண்டும் என்று பார்ப்போம்?!

contd.. final lap !
20.மிஸ்டர் மரமண்டை19 September 2014 09:35:00 GMT+5:30

ஒரு சாதனையாளனின் மனநிலையில் இருக்க வேண்டும் ; நாளை என்பது நிச்சயமில்லை என்று கருதியே செயல்பட வேண்டும் ; 100 meters ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கும் ஓட்டப்பந்தய வீரரின் மனநிலையை அடைய வேண்டும், ஒரு நொடியில் 10ல் ஒரு பங்குக் கூட நமக்குச் சொந்தமில்லை என்ற எண்ணவோட்டத்தில் இருப்பவரே 100 meters பந்தயத்தில் ஜெயிக்க முடியும் ! 

அடுத்த வருடமே, புதிய பதிப்பகம் ஒன்று வந்து விட்டால் என்ன செய்வது என்ற போட்டி மனப்பான்மையிலேயே செயல்பட வேண்டும் ; வேறு ஒரு ஜாம்பவான் பதிப்பகம், லார்கோ வின்ச் - பதிப்பக உரிமையில் பாதியை வாங்கி விட்டால் என்ன செய்வது? வேயின் ஷெல்டனில் - மீதியை வாங்கி விட்டால் என்ன செய்வது? என்ற பதைபதைப்புடனேயே ஒவ்வொரு வருடமும் திட்டமிடல் வேண்டும் !

விலை நிர்ணயம் என்பது, வெறும் பேப்பருக்கு ஆகும் செலவும், ப்ரிண்டிங்கிற்கு ஆகும் செலவும், royalty க்கு கொடுக்கும் பணமும் என்று நினைத்து, கூட்டி கழித்து, border marginல் cover price  fix செய்யாமல் - தன்னுடைய அனுபவத்திற்கும் ; நிறுவனத்தின் Goodwill ற்கும் ; மொழிபெயர்ப்பு தரத்திற்கும் ; கதை தேர்வுக்களுக்கும் ; விற்காமல் முடங்கிவிடும் பிரதிகளுக்கும் சேர்த்தே Rate fix செய்ய வேண்டும் !

காமிக்ஸை வியாபாரமாக கருத வேண்டாம், ஆனால், வாடிக்கையாளர் சேவை என்பது, வெறும் குறைந்த விலையில் மட்டுமே அமைவதில்லை ; தரத்திலும், அந்தத் தொழிலை நலிவடையாமல் காப்பாற்றுவதிலும், இலாபகரமான தொழிலாக மாற்றுவதிலும், ஒரு நிலையிலிருந்து அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் அளவிற்கும் - ஒரு தொழிலை நடத்த முயற்சி செய்யும் பொது, அது தானாகவே பலரையும் சென்றடையும் ; அல்லது வேறு பல பதிப்பகங்களும் இந்தத் தொழிலில் கால் பதிக்க ஆசைப்படும் நிலையை தோற்றுவிக்கும் !

காமிக்ஸ் படிக்கும் மனம் கொண்ட அனைவரும், தற்போது காமிக்ஸ் படிக்க ஆரம்பித்து விட்டார்கள் ; வாங்கும் சக்தி கொண்ட அனைவரும் தற்போது நம்மிடையே சந்தாதாரர்கள் ஆகி விட்டார்கள் ; இனி சந்தா அதிகரிக்கவோ, வாசகர் வட்டம் விரிவடையவோ வழியே இல்லை என்ற முடிவுக்கு வந்து, 2015ன் print run/ஐ நிர்ணயம் செய்ய வேண்டும். இன்றைய நிலையில் உள்ள வாசகர் வட்டத்தை கருத்தில் கொண்டே, அனைத்தையும் திட்டமிடல் வேண்டும் ; நாளை ஏற்படும் மாற்றத்தை நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தை கொண்டிருக்க வேண்டும் ; இன்று என்பது மட்டுமே நிச்சயம், என் உழைப்பு, என் அனுபவம், என் ரசனை, என் சேவை, என் பங்களிப்பு - என அனைத்தையும் இன்றே அளித்து விடுவதே என் பாக்கியம் என்பதுபோல், கர்ம யோகம் போன்றதொரு நிலையை எட்ட வேண்டும் ! 

அனைவருக்கும் அனைத்தையும் கொடுக்க இறைவனாலேயே முடியாத போது, சாதாரண மனிதர்களாகிய நம்மால், என்ன செய்து விட முடியும்? என்ற ஞான யோகம் கொண்டு, இறைவனால் நமக்கிடப்பட்ட கடமையை, அவன் துணை கொண்டு பழுதில்லாமல் நடத்திச் செல்ல வேண்டும். எனவே, நம்மால் முடிந்தளவு மேற்கூறிய மூன்று சந்தாக்களை அறிமுகப்படுத்த வேண்டும் ; premium, medium, General என்ற முறையில் திட்டமிடல் வேண்டும். எவரால் எது இயலுகிறதோ அதை அவர்கள் அடைந்தே விடுவார்கள் என்ற வகையில், நாம் மன சஞ்சலமற்று பணியாற்ற வேண்டும் ; உதாரணமாக mobile recharge போன்றோ, மொபைல் போன்களின், மாடலுக்கேற்ற விலையைப் போன்றோ - அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் !இது ஒரு காமிக்ஸ் வாசகனின் எண்ணவோட்டங்கள் மட்டுமே ; எடிட்டருக்கான யோசனையோ, அவருக்கான ஆலோசனையோ அல்ல என்பதை, நண்பர்கள் உணர்ந்து இதைப் படிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி !

Sunday, 14 September 2014

செங்குருதிச் சாலைகள்..!

புத்தகத்தை விரித்தவுடன் படரும் முதல் பார்வையிலேயே நமக்குள் ஏற்படும் ஓர் உற்சாகம் ; தென்றலாய் மேனியெங்கும் பரவும் பரவசம் ; காலநிலை யாவும் காமிக்ஸிற்குள் புதைந்துப் போகும் அதிசயம் ; கலங்கடிக்கும் கவலைகள் கூட கானல் நீராய் தொலைந்து தொலைவில் நிற்கும் அற்புதம் - என தற்போது ஒரு தமிழ் காமிக்ஸ்  தொடர் வெளிவருகிறது என்றால், அது கமான்சேவின் கௌபாய் சாகசங்கள் தான் ! 

இதற்கு காரணம், அதன் ஓவியங்களா? ; இல்லை வெளிர் நீல வர்ணங்களா? ; அல்லது இடையிடையே தாலாட்டும் மஞ்சள் நிறங்களா? ; காடு, மலை, மேடு என பார்க்கும் காட்சியெங்கும் ஒடுங்கி நிற்கும் ஏகாந்தமா? ; யதார்த்தமான கதையா? ; கதைதோறும் நடமாடும் சாதாரணமான மாந்தர்களா? ; சிக்கலற்ற எளிய கதையமைப்பா? ; இல்லை கமான்சேவின் நடை, உடை, பாவனையில் தெரியும் கண்ணியமும், முகம் சுளிக்க வைக்காத கவர்ச்சியுமா? ; அவளின் அன்பான குணமா? ; மிடுக்கான தோற்றமா? ; துடுக்கான இளமையா? ; அல்லது அகலவிடாத அவளின் அரவணைப்பா? ; கடவுளே, சத்தியமாக எதுவென்றும் தெரியவில்லை ; இவையனைத்துமா என்றும் புரியவில்லை !காமிக்ஸ் எனும் இலகுரக பொழுதுபோக்கிற்கு மிகச் சிறந்த உதாரணமாக ; கவலைகளை மறக்க வைக்கும் மருந்தாக ; காதலின்றி கவிதை எழுத ; கவிதை இன்றி கால்கள் காற்றில் இடற ; உள்ளமெங்கும் உற்சாக வெள்ளத்தில் மிதக்க வைக்கவும் ஒரு காமிக்ஸ் தற்போது நமக்கு கிடைக்கிறது என்றால், அது  கமான்சேவின் கௌபாய் சாகசங்கள் தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை. அப்படியும் உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்றால், நீங்கள்  தேவ இரகசியம் தேடலுக்கல்ல கதையில் வரும் ஜாங் ஜியின்  கலாபக் காதலனே தான் என்பதிலும் ஐயமே இல்லை !

யதார்த்தம், யதார்த்தம் அத்தனையும் willd westன் யதார்த்தம். அதுவும் காமிக்ஸ் எனும் காவியத்தில் கற்பனை கலந்து நிற்கும் போது, அதன்  கதை ஒரு வரியில் இருந்தாலென்ன? ஒன்பது வரியில் இருந்தாலென்ன? எல்லாம் சுகமே ! ஓநாய் கணவாய் தவிர்த்து, இதுவரை முழு வண்ணத்தில் வெளிவந்துள்ள கமான்சேவின் மூன்று கதைகளும்  ஒரே உணர்வை தருவதாக அமைந்திருப்பதே இந்தத் தொடரின் சிறப்பு ! 

எனவே COMANCHE தொடரை மூன்று மூன்று ஆல்பமாக ஒன்றிணைத்து அழகான சிறிய குண்டு புக் அளவில் வெளியிடுவதே - அந்தத் தொடரைப் படைத்த படைப்பாளிகளுக்கு எடிட்டர் செய்யும் பிரதியுபகாரமாக அமையக்கூடும் ; மேலும்,  வாசகர்களுக்கு செய்யக் கூடிய தன்னலமற்ற சேவையாக  தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் இடம் பெறக்கூடும் ! நான் மிகவும் ரசித்துப் படிக்கும் ஒரு தொடராக கமான்சே இருப்பது மட்டுமல்ல, மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் மிக இலகுரக பொழுதுபோக்கு சாதனமாகவும் கமான்சே 2014ல்  கோலோச்சுகிறது என்பதில் நான் எப்பொழுதும் மாற்றுக் கருத்து கொள்ளப் போவதில்லை !

கட்டிளம் காளையர்களை கவர்ந்திழுக்கும் அழகில், கமான்சே சில மாற்று குறைவென்றாலும், ஏனோ வசீகரிப்பில் பத்தரை மாற்று தங்கமாக  ஜொலி ஜொலிக்கிறாள் ; அதிகாரத்தில் ஆணவம் கொண்டாலும், தன் அன்பை வெளிக்காட்டும் உற்சாகத்தில் கண்களிலும், உதட்டிலும் ஆர்ப்பரிக்கிறாள் நம் இதயம் கவர்ந்த கமான்சே ! 

ஹீரோயிஸம் குறைந்தே காணப்பட்டாலும், வேகத்திலும், நேர்மையிலும், துடிப்பிலும், தமிழ் வாசகர்களின் இதயம் கவர்ந்தவனாகிறான் ரெட் டஸ்ட் ! அதிலும் ரஸ் டோப்ஸை  நிராயுதபாணியாக மாற்ற யுக்தி அமைத்து, கடைசியில் கணநேரமும் தயங்காமல் சுட்டு வீழ்த்தும் க்ளைமேக்ஸ் - wild west வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய யதார்த்தம். நல்லதை நிலை நாட்டுபவனே ஹீரோ ; ஹீரோயிஸம்    காட்டுபவன் எல்லாம் பல சமயம் ஜீரோவாக காட்சியளிக்கும் wild west உலகில், நிஜமான ; சராசரியான ; யதார்த்தமான ஹீரோவாக வாழ்ந்து காட்டியிருக்கும் ரெட் டஸ்ட் அவர்களுக்கு ஒரு hats off !

சமகாலத்தில் நமக்கு கிடைத்திருக்கும் காமிக்ஸ் பொக்கிஷ குவியலில் விலை மதிக்க முடியாத ரத்தினமாக ; மனதை குளிர்ச்சியூட்டும் மஞ்சள் புஷ்பராகமாக நம்மில் உற்சாகத்தை விதைத்து, நம் மனதை இலகுவாக்கும் காமிக்ஸாக கமான்சே திகழ்கிறது. அதில் செங்குருதிச் சாலைகள் எனும் பாதையில் நாம் கடந்து விட்ட தூரத்தை 4 என்று இந்த மைல்கல் நமக்கு காட்டுகிறது !இரயிலில் வரும் கடிதமாகட்டும் ; கடிதத்தைப் படிக்கும் கமான்சேவின் முக பாவனையாகட்டும் ; டோபி, க்ளெம் இருவரின் வெள்ளந்தியான வெகுளித் தனமாகட்டும் - ஆஹா.. அற்புதமான காமிக்ஸ் உணர்வுகள் ! ரெட் டஸ்டின் தேடலாகட்டும் ; அவ்வப்போது உதிர்க்கும் வசனங்களாகட்டும் ; துப்பாக்கி சண்டையிடும் கடைசி கட்டமாகட்டும் ; சட்டத்தின் முன் புலம்புவதாகட்டும் - ஆஹா.. யதார்த்தமான பகிர்வுகள் !

கதையிடை நகரும் கதா பாத்திரங்கள் யாவும் நடமாடும் மாந்தர்களாய், கதையை அழகாக நகர்த்திச் செல்வது - அலுங்காமல் குலுங்காமல் பயணிக்கும் பயணிகள் இரயிலைப் போன்று மெதுவாகப் பயணித்தாலும், ரிலாக்ஸான மனநிலைக்கு உத்திரவாதம் அளிக்கிறது ! எங்கோ தொலைவில், ஆர்ப்பரிக்கும் நதியின் நளினமான அரவணைப்பில், ஒரு ஒதுக்குப் புறமான  பண்ணை வீட்டில் வாழும் அம்ப்ரோஸியஸூம், அவர் தாயாரும், சின்னப் பெண்ணும், வேலையாளும் - பழைய MGR காலப் படங்களை ஞாபகப்படுத்துகிறார்கள் !

மொத்தத்தில், சுவையான வாழைக்காய் பஜ்ஜியும், சூடான சிங்கிள் டீயும் போல் - மாலை நேர ஸ்நாக்ஸாக காம்ன்சே நிம்மதி தருகிறது !   

Thursday, 4 September 2014

தேவ இரகசியம் தேடலுக்கல்ல !

நண்பர்களே,

வணக்கம். மூன்று பாகமும் ஒரே புத்தகமாக - கலெக்டர்ஸ் ஸ்பெஷல் இதழாக வெளிவந்துள்ள சாதனைக்காகவும் ; அற்புதமான, அழகான ஓவியங்களை காமிக்ஸ் வடிவில் நமக்கு ரசிக்கத் தந்த, அகண்ட காமிக்ஸ் தேடலுக்கும் ; கைக்கு அடக்கமான குண்டு புக்கிற்கும் ; படிக்க படிக்க கதை சட்டென முடிந்து விடாமல் பக்கங்கள்  நகர்ந்து கொண்டே இருப்பதற்கும் ; மறுமுறை படிக்கத் தூண்டும் கதைக் களத்திற்கும் - முதலில் என் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் ! இந்த கிராபிக் நாவலை, ஒவ்வொரு பாகமாக வெளியிடத் தீர்மானித்து இருந்திருந்தால், அடுத்த பாகத்தை வெளியிடும் அளவிற்கு நம் காமிக்ஸ் வாசகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்குமா என்பது சந்தேகமே !

மழையோடு சேரும் மண்வாசம் நம்மை மெய்மறக்க செய்வதைப் போல் ; காற்றோடு கலக்கும் பூ வாசம் நம்மை பரவசமாகுவதைப் போல் ; சாயும் பொழுதோடு தேயும் நிலவொளி நம்மில் ஏகாந்தத்தை விதைப்பது போல் - அற்புதமான ஓவியங்கள் இயற்கையோடு கைகோர்க்கும் போது அங்கே காமிக்ஸ், பொக்கிஷமாகிறது ! அதுவே கதைக் களத்தோடு ஒன்றிவிடும் போது காமிக்ஸ் ராஜ்ஜியம் நமக்கு சொந்தமாகிறது !
தேவ இரகசியம் தேடலுக்கல்ல ! எனும் வசீகரமான தலைப்பைக் கொண்டு வெளிவந்திருக்கும் இம்மாத கிராபிக் நாவல் மூலம் இயேசு பிரானின் கல்லறை - நம் இந்திய காஷ்மீர் மாநிலத்தின்   ஸ்ரீநகரில் உள்ள ரோசா பால் (RozaBal) என்ற இடத்தில் இருப்பதாக நமக்கு தெரிய வருகிறது ; தெரிய வருகிறது என்று சொல்லும் போதே, அதற்கு முன் நமக்கு தெரிந்திருக்கவில்லை  என்று அர்த்தமாவதால், கதையைப் படிக்கும் பலருக்கும் கதையில் ஒன்ற முடியாமல் போகலாம். ஒரு காமிக்ஸ் கதைக் கரு நம்மை ஈர்க்கவில்லை என்றால் அங்கே நம் ஈடுபாடு குறைந்தே தான் போகிறது !

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை அவர் அன்னை மரியாவும், தாமஸும் மீட்டெடுத்து,  திபெத் வழியாக ஸ்ரீநகரில் தஞ்சம் அடைந்ததாகவும்,  நீண்ட பயணத்தில் ஏற்பட்ட தள்ளாமை காரணமாக மரணமடையும் அன்னை மரியா அவர்களின்  நல்லடக்கம் பாகிஸ்தானிலுள்ள ராவல்பிண்டியின் (Rawalpindi) முர்ரீ என்ற சிற்றூரில் நடந்ததாகவும்,  Yuz Asaf என்ற பெயரில் இயேசு பிரான் திபெத்தில் சிலகாலம் தங்கியிருந்ததாகவும் இந்தக் கதை நமக்கு கூறுகிறது. அதன் சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, ஆவணங்கள் மூலம் புரபஸர் ஈகோன் பாயெர் அதை நிரூபிப்பதாகவும்  கதை நகர்கிறது !

சிலுவையில் மரித்து விட்ட இயேசு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த இறைசக்தியையும் ; அற்புதத்தையும் மறுப்பதாக அமையும் இந்த கிராபிக் நாவல் - புரபஸர் ஈகோன் பாயெர் முன் Yuz Asaf  தோன்றி, அவரை மரணத்தின் பிடியிலிருந்து மீட்டெடுத்து காப்பாற்றுவதாகவும், பரிசுத்த ஆத்மாவாக புரபஸரை உருவகப்படுத்துவதும், ரோசா பால் கல்லறையின் வம்சாவளி பாதுகாவலனாக - ஜாடா பஷாரட் சலீம் இருப்பதாக காட்டுவதும் - அழகான முரண்பாடுகள் ! 

ஒருபக்கம் இறைவனை சாதாராணமான மனிதன் என்று சித்தரிப்பதும் ; மறுபக்கம் மனிதனை அற்புத ஆன்மபலம் பெற்றவராக காட்டுவதையும் பார்க்கும் போது - நம்மூர் பழமொழி ஒன்று ஞாபகம் வருவதை தடுக்க முடியவில்லை. பாம்பும் சாகக் கூடாது ; பாம்பை அடிக்கும் கம்பும் கையும் நோகக் கூடாது என்ற பழமொழியை இக்கதை பறைசாற்றுகிறது ! 

திபெத்தின் பனிமலைகளும் ; மடாலயங்களும் நம்மை வசீகரித்தாலும் கதை என்னவோ மிகவும் தொய்வாகவே நகர்கிறது. அடுத்தது என்ன? என்று மனமெங்கும் ஆர்ப்பரிக்கும் காமிக்ஸ் பரவசத்தையோ ; பக்கங்களை அவசர அவசரமாக புரட்டும் ஆர்வத்தையோ இந்த கிராபிக் நாவல் தன்னிடம் இழந்து நிற்பதால், பரவாயில்லை படிக்கலாம் என்ற ரகத்தை சேர்ந்ததாக இருக்கிறது !
சீன ஸ்பெஷல் ஏஜென்ட் ஜாங் ஜியின் இளமையும், அழகும், மிடுக்கும்  நம்மை வசீகரிக்க தவறவில்லை. பனி முகில் மறைத்த நிலவின் இரவின் இருளில் சம்பவிக்கும் மோகமும் தாபமும் அச்சூழலுக்குள் நம்மை இழுப்பது மட்டுமல்லாமல், நாயகன் கெவின் மெக் ப்ரைட்டை  வெறுக்க வைத்து, சீன இளங்குமரியின் மேல் நம்  எண்ணங்களை அலைப்பாய வைப்பதாக இருக்கிறது. காதலுக்கு கண் இல்லை என்பது மட்டுமல்ல, எல்லையும் இடைஞலாக இருக்கவே முடியாது என்பதை நம் மனம் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவதும் ஒரு வித பரவசமே !

காமிக்ஸ் எனும் இந்த கிராபிக் நாவலின் பரிமாணம், நம் காமிக்ஸ் ரசனையின் செரிமானத்தை பதம் பார்ப்பதாக, ஆண் பெண்  அந்நியோன்யக்  காட்சிகள், அழகான ஓவியங்களால் அழுத்தமாக நம்மை முகம் சுளிக்க வைப்பதாக சில இடங்களில் ஆக்கிரமிக்கிறது. மிகச் சரியாக  அந்தப் பக்கங்களின் வாசிப்பில் இருந்த போது, யதேச்சையாக அருகில் நகர்ந்த மனைவியால் பதற்றம் கொண்டு, சட்டென இரண்டு பக்கங்களை அனிச்சையாக  திருப்பி விட்டேன். எப்பொழுதும் டைனிங் டேபிளில் கேட்பாரற்று பல நாட்களாவது இருக்கும் காமிக்ஸ் இம்முறை  பரிணாம வளர்ச்சி பெற்று, படித்து முடித்தவுடன்  ஷெல்பில் அழகாக அடக்கமாகி விட்டதும் நம் காமிக்ஸ் ரசனையின் எல்லை விரிவாக்கமே !பாவ்லோ க்ரெல்லா !

ஓவியரின் அர்ப்பணிப்புக்காகவும், அற்புதமான சித்திரங்களிற்காகவும், நம் சிந்தனைகளை விரிவாக்க உதவிய கதைக் களத்திற்காகவும் இந்த கிராபிக் நாவலுக்கு வரவேற்பு அளிக்கலாமே தவிர - தலையில் வைத்து கொண்டாடும் அளவிற்கு எல்லாம் இது இல்லை என்பதே உண்மை !

Wednesday, 27 August 2014

அந்தி மண்டலம் ! (LMS)

காலம் ரொம்பவே கெட்டுப் போய் விட்டது ; தற்போதெல்லாம் பேய் பிசாசுகளுக்கு மரியாதை துளியும் இல்லாமல் போய் விட்டது என்பதெல்லாம் நிதரிசனமான உண்மையாகி விட்டது. போகிற போக்கில் இக்காலச் சிறுவர்கள் கூட, பேய் பிசாசு எல்லாம் உண்மையில் இருக்கிறதா என்று கேட்பார்கள் போலிருக்கிறது. ஏதோ, போன ஜென்மத்தில் பேய்கள் செய்த புண்ணியம் - சந்திரமுகி, அருந்ததீ, காஞ்சனா, 13-ம்  நம்பர் வீடு போன்ற தமிழ் திரைப்படங்கள் வெளிவந்து பேய்களை இன்னும் வாழ வைத்து கொண்டிருக்கின்றன. இன்னும் எத்தனைக் காலத்திற்கு இது செல்லுபடியாகும் என்றும் தெரியவில்லை ?!

நாம் சிறுவர்களாக இருந்த போது, கொடி கட்டிப் பறந்த - புளியமர பேய்களும் ; நள்ளிரவில் நித்தம் நம் வீதியெங்கும் உலாவரும் தீக்குளித்து இறந்தப் போன இளம்பெண் பேய்களும் ; வீட்டு வாசலையும் மீறி உள்ளே வந்து பயமுறுத்தும் எமகாத பேய்களும் இன்றைக்கு எங்கே போய்விட்டது என்றே தெரியவில்லை. கிராமத்தின் ஏரி மேட்டில் நர்த்தனம் ஆடிய மோகினிப் பிசாசுகளும் ; சோளக்காட்டிலும், கருவேலங்காட்டிலும் இரவில் சுதந்திரமாய் திரிந்த கொள்ளிவாய்ப் பிசாசுகளும் ; ஒற்றைப் பனைமர அடங்கா முனியும் ; சோற்றில் கல்லையும் மண்ணையும், வீட்டு ஓட்டின் மேலிருந்து கொட்டிய குட்டிச் சாத்தான்களும் ; செய்வினை செய்யப்பட்ட வீட்டில், பசு மாட்டின் தடம் பதித்து மறைந்துப் போகும் ஒடியனும் - இன்னும் இந்த தமிழ் மண்ணில் இருக்கிறதா என்று தேடக்கூடிய நிலையில் தானே நாம் இருக்கிறோம்?!

நள்ளிரவில் குலை நடுங்க வைத்த நடுநிசி நாய்களின் அகோர குரைப்பையும், இடைவிடா ஊளையிடலையும் இன்று நினைத்தாலும் உடல் முழுதும் ஜில்லிடுகிறது. பதறியடித்து விழித்தப் பின்பும், தொடர்ந்து கேட்ட சலங்கை ஒலியும், மொட்டை மாடியில் உறங்கிய நாட்களின் நள்ளிரவில், சுவற்றைப் பார்த்து விடாமல் குரைத்து, பயந்து பின்வாங்கி, மீண்டும் பாய்ந்து முன்னேறி சுவற்றைப் பார்த்து மட்டுமே குரைத்த வீட்டு நாயின் பாதுகாப்பையும் மீறிய குலை நடக்கமும் - அப்பப்பா.. இன்று நினைத்தாலும் முதுகுத் தண்டு ஜில்லிட்டுப் போகிறது.  இன்று எங்கே போனது இந்தப் பேய் பிசாசுகள் ?!

பேய் பிசாசுகளின் வரலாற்றை அடுத்த தலைமுறை வாசகர்களுக்கு கொண்டுச் செல்வதே தற்போது நமக்குள்ள  மிகப்பெரிய சமுதாய கடமையாகும்.  அழகான வண்ணத்தில், அடி வயிற்றைக் கலக்கும் அகோரப் பேய்களின் கதைகளை, காமிக்ஸ் மூலமாக தொடர்ந்து வெளியிடுவதன் மூலமே நம்மால் இந்த மிகப்பெரிய பொறுப்பை செவ்வனே நிறைவேற்றி சாதிக்க முடியும். ஆனால் சென்ற மாதம் வரை  நம் தமிழ் காமிக்ஸில் பேய்க் கதைகளோ ; அமானுஷ்ய திகில் கதைகளோ  சமீபத்தில்  வெளிவரவே இல்லை. இப்படி ஒவ்வொருவரும் தன் பொறுப்பை தட்டிக் கழிப்பதால் தான், பேய் பிசாச பூத இனங்களை, ஒவ்வொன்றாக நாம் இழந்து வந்திருக்கிறோம் என்பது கண்கூடு ! ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு பேய் இனம் என்று பலி கொடுத்து விட்டு, இன்று பேய் பிசாசுகள் வெகுவாக குறைந்து விட்டதே என்று, இங்கும் அங்கும் அல்லாடுகிறோம் என்பது தானே உண்மை ?!

நம்முடைய எள்ளு தாத்தா காலத்தில் - பிரம்ம இராட்சஷன் என்ற தலையாய பேய் இனம் அழிந்து போனது. நம்முடைய கொள்ளு தாத்தா காலத்தில் - பூத இனம் மண்ணோடு மண்ணானது. நம் தாத்தா காலத்திலோ - இரத்தக் காட்டேரி என்ற இன்னொமொரு கொடூர பேய் இனமும், கொள்ளிவாய்ப் பிசாசும், குட்டிச் சாத்தானும், ஒடியனும் ஒட்டுமொத்தமாய் காணாமல் போய் விட்டது. நம்முடைய அப்பா காலத்தில் மோகினிப் பிசாசுகளின் வாழ்வாதாரம் அழிந்து காற்றோடு காற்றாய் கரைந்துப் போனது. நம் காலத்தில் - கண்ணுக்கு தெரிந்தே பேய்களின் அழிவுக்கு காரணமாக இருக்கிறோம் என்பதை இங்கு எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள் ? 

இந்த ஒட்டுமொத்த அழிவுக்கு அச்சாரமாக நான் கருதுவது, அரசிளங்குமரி என்ற சினிமா படத்திற்காக,    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் இயற்றிய பாடல் ஒன்றைத் தான் :

வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க - உன்தன்
வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே - நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பிவிடாதே - நீ வெம்பிவிடாதே

நண்பர்களே, போனதை பற்றி வெம்பி இனி எந்தப் பயனும் நமக்கு கிடைக்கப் போவதில்லை. இதோ மீண்டும் ஒரு பொற்காலம் தொடக்கம் பெற்று விட்டது. இது பேய்களுக்கான வசந்த காலமாகவே என்றும்  இருக்க வேண்டும்  என்ற நம் எண்ணமும் இனி வீண்போகப்போவதில்லை. கறுப்புக் கிழவியின் சகாப்தம் முடிந்து போனாலும் அவள் விதைத்துப் போன விதைகள் தற்போது துளிர்க்க ஆரம்பித்து விட்டன. அவை யாவும் ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம்சூழ  வாழ - நம் ஆதரவை இன்றும் என்றும் அமனுஷ்யத்திற்கு காணிக்கையாக்குவோம். வாருங்கள் ஒன்றுபடுவோம் ; பேய்களுக்கான உலகை மறுசீரமைப்போம் ; அதற்குமுன் அந்திமண்டலம் அமானுஷ்யக் கதையை நமக்களித்த லயன் முத்து  காமிக்ஸ் உரிமையாளரும், பதிப்பகத்தாருமான  திரு. விஜயன் அவர்களுக்கு  நம் நன்றியை தெரிவித்து கொள்வோம் !

அந்தி மண்டலம் என்ற தலைப்பை முதன் முறையாக படித்தவுடன் எனக்குள் எழுந்த உணர்வுகளை இங்கே எழுத்தில் வடித்திருக்கிறேன். அமானுஷ்யம் தரும் உணர்வுகளே கூட, அடங்காமல் ஆர்ப்பாட்டம் செய்யும் நிலையில், அமானுஷ்யம் கண்ணெதிரில் தோன்றினால், நம்முள் இருக்கும் சகலஜீவநாடிகளும் ஒடுங்கி விடும் என்பதால் தானே திகில் கதைகளுக்கும் பேய்க் கதைகளுக்கும் நாம்  இன்றுவரை அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதல்லவா உண்மை !

சுகமான மனதிற்கு இதமான பொழுதில், மயிர்க்கால்கள் யாவும் குத்திட்டு நிற்க, அமானுஷ்ய அலைகள் நம்மீது குளிர் தென்றலென ஜில்லிட, அந்தி மாலையில் மருளும் பார்வை கொண்டு, எங்கோ தூரத்தில் சுழலும் சூன்யத்தை நோக்கி காட்சிகள் விரிந்தோட, காலநிலை யாவும் மறந்து, நிற்கும் இடம் கூட தொலைந்து, மேலே மேலே லேசாகி பறக்கும் உணர்வு கொண்டு, அதலபாதாளத்தில் விழுகின்ற பரிதவிப்பில் ஏற்படும் உணர்வுகளில் சகலமும் அடங்கி, உயிர் நாடியும் ஒடுங்கி மெல்ல மெல்ல அந்த மணடலத்தில் கரைந்து விடும் உணர்வையே இந்த அந்தி மண்டலம் தலைப்பு  எனக்கு தருகிறது !

இதுபோன்ற உணர்வுகளை டைலன் டாக் கதைக்களம் தருவதாக அமைந்துவிட்டால், உண்மையாகவே, எனக்கு இது ஒரு காமிக்ஸ் பொக்கிஷம் தான். தலைப்பே இப்படி ஒரு அதகளமாக அமைந்தப்பின் கதை எப்படி இருக்கும்  என்ற எதிர்பார்ப்பு நிச்சயம் மிகவும் அதிகமே ! அந்த எதிர்பார்ப்பை அந்தி மண்டலம் பூர்த்தி செய்ததா என்று கேட்டால், ஆமாம்  செய்தது - ஆமாம் செய்யவில்லை என்று அறுதியிட்டுக் கூற இயலாத அந்தி மண்டலத்து உணர்வுகளே  இன்னும் என்னுள் மேலோங்கி இருக்கிறது !


இன்வெராரி என்ற கிராமத்தில் இருக்கும் பேரழகி மேபெல் இந்த அமானுஷ்யக் கதையை, அவளைப்போலவே அழகாக,    தொடங்கி வைக்கிறாள்.   சதை உடைந்து பொலபொலவென ரத்தமேயின்றி  உதிரும் சருமம் கொண்ட இரு லைப்ரெரியன்களைப்  (librarians) பார்த்து பதறி துடித்து, காப்பாற்ற உதவிக் கோரி, கதறித் தவிக்கும் மேபெல்லை - பெல்க்நாப்பும், மிஸஸ்  லாங்கும் மடக்கிப் பிடித்து, பயத்தில் அலற அலற அவளுக்கு ஊசி போடும் போது, நமக்கு பயத்திலும், இயலாமையின் பரிதவிப்பிலும் பேச்சின்றி, துக்கமும் பயமும் தொண்டையை அடைக்க    நாமும் செய்வதறியாது திகைத்து நிற்கிறோம்.  துயிலெழுந்தப் பின் அவளும் அவ்வாறே செய்வதறியாது வீடு வந்து சேருகிறாள். ஆனால் அன்றைய இரவு தரும் கனவில் நடந்த உண்மையை உணர்ந்து, இலண்டன் நகர வாசியான, தீக்கனவு புலனாய்வு நிபுணர் டைலான் டாக்/ற்கு போன் செய்ய, நாமும் கொஞ்சம் ஆறுதலாகவே உணர்கிறோம்... இன்வெராரியின் ஃபைன் ஏரி படகுத் துறையில், தன்னுடைய புராதன  சொகுசுக் கப்பலுடன் காத்திருக்கும் சரோன்ம் அவர் புராதானக் கப்பலும் -  நம்மை திகலடையச் செய்வதாக இருக்கிறது. இதயத் துடிப்பு எகிற நாமும் அவர்களோடு பயணிப்பதான உணர்வுகள் நிச்சயம் திகில் கதைகளின் அதிர்வலைகளே ! படகு பயணத்தின் பாதியிலேயே,  மேபெல் தண்ணீருக்குள் விழுந்து தத்தளிப்பதைக் கண்டு டைலான் டாக் ஏரிக்குள் குதிக்க, நாம் பதறித் துடிக்கும் மனதோடும், ஐயோ கடவுளே அவளைக் காப்பாற்று என்ற பிரார்த்தனையும் கொண்டு பக்கங்களை கபளீகரம் செய்ய - டைலான்  டாக் எதுவுமே செய்ய இயலாமல் அவளை நீர்ச்சுழலுக்கு தாரைவார்க்கும் போது, எழுத்தில் வடிக்க இயலாத உணர்வுகள், நம்மை உள்ளுக்குள் சத்தமின்றி பதம் பார்க்கின்றன !.  
மேபெலின் மரணச் செய்தியை அவள் தாயிடம் தெரிவிக்க வரும் டைலான் டாக் - அங்கே மேபெல் உயிரோடு இருப்பதைக் கண்டு திடுக்கிடுகிறார்.  நம் கண்முன்னே நடந்த நிழ்ச்சியை, கண்கொட்டாமல் பார்த்து வந்த நமக்கோ அது எப்படி சாத்தியம் என்று யூகிக்க முடியாவிட்டாலும் சந்தோஷத்திலும், அதிர்ச்சியிலும், திகிலுடன் கூடிய  சந்தோஷ பெருமூச்சு ஒன்றை  விடுகிறோம் !  

மீண்டும் ஒரு மூடுபனி, நம்மையும் கதையின் நாயகர்களையும் இன்வெராரியின் சுடுகாட்டிற்கு அழைத்துச் செல்கிறது. அந்த  அற்புதமான மயான உணர்வுகள்  ஒரு சில நிமிடங்களே நீடிக்க, மேபெலின் வயது 61 என்று தெரியவரும் போது நம் மனம் சுக்குநூறாக உடையும் சத்தம் நமக்கே கேட்கிறது. இது என்னவிதமான உணர்வுகள் என்று இனம் காண விழையும் போதே பிணம் ஒன்று  சவப்பெட்டியிலிருந்து எழுந்திருக்க - நம் பேய்க்கதை ஆர்வமும், இந்த மானிடப் பிறப்பும் ஜென்ம சாபல்யம்  அடைகிறது !
இதற்கு பிறகு வரும் கதையில்,  மேபெலும் ஒரு ஸோம்பியே (zombie) என்பதும், அந்தக் கிராமத்தின் அத்தனை ஜனங்களும் வெறும் பிணங்களே என்பதும்,  டாக்டர்  ஹிக்ஸ் ஸோம்பிகளின் கடவுள் என்பதும், காலச் சக்கரம் சுழலாமல் நின்று போன கிராமமே இன்வெராரி என்பதும் போன்ற பல பகிர் உண்மைகள் நமக்கு தெரியவந்தாலும் அதன் பிறகு, திகிலுறையும் உணர்வுகள் மட்டும் நமக்கு வரவேயில்லை என்பது தான் மிகப்பெரிய குறை !!டைலான் டாக் - சிவப்பு சட்டையிலும் கருப்பு கோட்டிலும் மிகவும் வசீகரிக்கிறார் ! 

டைலான் டாக் உதவியாளர் பேசும் வசனங்கள் சில சமயம் கடியாக, சில சமயம் ஜோக்காக  இருந்தாலும் - நமக்கு  சிறுவயது  ஞாபகத்தை மீள்பதிவு செய்வதாகவே அமைந்திருக்கிறது. சிறுவயதில் நாம், மாலை முழுவதும் மணலில், மண்ணில், செம்மண் ரோட்டில், கடகால் குழியில், எங்கெங்கும் நிறைத்து கிடந்த காலி கிரௌண்டில் - பள்ளி அலுப்புத்தீர விளையாடி, அயர்ச்சியோடு இரவில் கும்மிருட்டில் வீடுவந்து,  கைகால் முகம் அலம்ப  கொல்லைப்பக்கம்  இருக்கும் கிணற்றிற்கு நீர் இறைக்கச் செல்லும் போது 'அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா' என்று திக்கித் திணறி பாடுவோமே - அந்த அந்தி சாய்ந்த இருண்ட பொழுதுகளை மனக்கண் முன்னே கொண்டு வருவதாக இருக்கிறது !  Well done Mr.க்ரௌச்சோ !

ஒரு ஸோம்பியான டாக்டர் ஹிக்ஸ், தன் கிராமத்து  ஸோம்பிகளுடன் மட்டுமே பழகிப்  பழகி காலமெல்லாம் போரடித்திருந்த நிலையில் - வெளி மனிதனான டைலான் டாக்/ஐக் கண்டவுடன் தன் உணர்ச்சிகளை கொட்டித் தீர்த்துவிடுவது நம்மால் புரிந்து கொள்ள கூடிய ஒன்று தான் ! பேய்களின்  கதையாக  இது இல்லையென்றாலும், பிணங்களின் கதையாக இது இருப்பதால் அந்தி மண்டலம், காலமெல்லாம் காலச் சக்கரம் சுழலாமல் ஜீவனோடு ஜீவித்திருக்க ஹிக்ஸை மனதார வாழ்த்துவோம் !