Follow by Email

Saturday, 18 January 2014

தோர்கல் !

 வாரான் வாரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே 
வாரணாசி கோட்டை தாண்டி மெயிலு வண்டியிலே 
ரயிலு வண்டியிலே மெயிலு வண்டியிலே 

பறந்து வாராண்டா பாய்ஞ்சு வாராண்டா 
காட்டு வழியிலே எதிர் மேட்டு வழியிலே 
தீ வைக்க வாராண்டா கொடி  நாட்ட வாராண்டா 

 வாரான் வாரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே 
வாரணாசி கோட்டை தாண்டி மெயிலு வண்டியிலே 


இது போன்றதொரு மெயிலு வண்டியிலிருந்து சமிபத்தில் வந்திறங்கிய மூன்றாவது பூச்சாண்டி தான் தோர்கல். 2012 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நீங்கள் உங்கள் காமிக்ஸ் நண்பர்கள் யாரிடமாவது  கேட்டிருந்தால், என்னது தோர்கல் லா ? அதெல்லாம் இந்த ஜென்மத்தில் தமிழில் வராது என்று கூறியிருந்திருப்பார்கள் ;)

ஆம், தமிழில் வரவே வராது என்று பல திறமைமிகு வாசகர்கள் திடமாக நம்பியிருந்த க்ரீன் மேனர், ப்ளு கோட்ஸ், தோர்கல் அனைத்தும் அந்த வாசகர்கள் கற்பனை செய்து பார்க்கும் முன்பே  எடிட்டர் விஜயன் அவர்கள் அவைகளை தமிழுக்கு கொண்டு வந்து பெரும் சாதனை படைத்து விட்டார் !

Raymond ஷோ ரூமிற்குள் நுழைந்தது போன்ற ஒரு பரவசத்தை, பிராண்டட் ஆன ஒரிஜினல் அட்டைப்படங்கள் நம் உணர்வை ஆக்கிரமிக்கின்றன. அதுவும் பின்னட்டை  கதைச் சுருக்கம் அபாரம் ; மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் வசிய வரிகள் ; தோர்கல் கதைத் தொடர் முழுவதிற்கும் முத்திரை பதிப்பதாக அமைந்திருக்கிறது. சன்ஷைன் கிராபிக் நாவலின் முதல் புத்தகத்தில் எடிட்டரின் ஹாட்லைன் இருந்திருந்தால் அழகுக்கு இன்னும் அழகு சேர்த்திருக்கும். ஹாட்லைன் பக்கத்திற்கு பெயர் தேர்ந்தெடுக்க நேரமின்மையால் விட்டு விட்டார் என்றே தோன்றுகிறது. அல்லது ஆங்கில புத்தகங்களைப் போல கொண்டு செல்ல நினைக்கிறாரா என்றும் தெரியவில்லை என்றாலும் அடுத்தடுத்த இதழில் உறுதியாகிவிடும் :)


கதையை படிக்கச் செல்லும் முன்பே மண்டையை வெடிக்கச் செய்த ஒரு விஷயம் என்னவென்றால் அது சன்ஷைன் கிராபிக் நாவலின் லோகோ தான். ஒவ்வொருவருக்கும் ஒரு அபிப்பிராயம் இருக்கும் என்று அவரின் பதிவில் கூறிய எடிட்டர், அவருக்கு அழகாய் தெரிந்த அந்த லோகோ,பெரும்பான்மையான வாசகர்களுக்கு மிகவும் சுமாராகத்தான் தோற்றமளிக்கப் போகிறது என்பதை கணிக்கத்  தவறி விட்டார் என்றே தோன்றுகிறது. இது நிற்க;

ஒரிஜினல் பெயர்களை அப்படியே மொழி மாற்றம் செய்திருப்பதால், உலக தமிழ் காமிக்ஸ் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றுத் தரும் உலகத்தரம் வாய்ந்த ஒரு  சீரான தொடராக இது அமையப்போகிறது. அதுவுமல்லாமல் A சென்டர் B சென்டர், C சென்டர் -  வாசகர்கள் என்ற பாகுபாடின்றி அனைவரின் உள்ளங்களிலும் தோர்கல் நிலைத்து நிற்க போகிறது என்பது நிச்சயம். 

முதல் நான்கு பக்கங்களை படிப்பதற்குள் குறைந்தது மூன்று முறை பின்னட்டையில் உள்ள கதைச் சுருக்கத்தை அனிச்சையாக படித்து விட்டேன். இது போன்ற அனுபவம் உங்களில்  யாரோ ஒருவருக்காவது நிகழ்ந்திருக்கலாம். ஏனெனில் தோர்கல் சாதாரண மனிதனாக மட்டுமே கதை நெடுக சித்தரிக்கப்பட்டுள்ளான். 

ஒருவன் ராட்சஸன் மற்றவன் விசித்திரக் குள்ளன் என்று, பழம்பெருமை வாய்ந்த   மகோன்னத ராஜ்ஜியமான பனிக்கடல் தீவின் ராணி ஸ்லிவ் கூறும்போது - ஆண்டாண்டு காலமாக நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட வெள்ளையர்கள் நம் நாட்டின் அளப்பரிய செல்வத்தை மட்டும் தான் சுரண்டி சென்றனர் என்ற என் நெடுங்கால நினைப்பில் மண் விழச் செய்தது. ஆம் உண்மைதான், ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி இருக்கும் ஒரு மலை உச்சியில் - என்று தொடங்கும் நம் மாயாஜால கதைகளையும், அம்புலிமாமா, பாலமித்ரா போன்ற புத்தகங்களையும் சேர்ந்தே களவாடிச் சென்று சரிபாதி     கதாசிரியர் வான் ஹாமே வுக்கும், சரிபாதி ஹாரி பாட்டர் நாவலாசிரியைக்கும் கொடுத்து விட்டனரோ என்ற ஐயம் எழுவதை கதை நெடுக தவிர்க்கவே இயலவில்லை.
பூக்களும் பழங்களும், நீரோடையும் நீர்வீழ்ச்சியும், தும்பிகளும் பட்டாம் பூச்சிகளும், கிளிகளும் பறவைகளும் எங்கும் நிறைந்த பசுமையான சோலைகள் ; அங்கே வானம் அற்ற விசாலம் ஆயினும் வெளிச்சமும் வெப்பமும் அளவோடு நிறைந்த சொர்க்கம் ; மன்மதனின் கரும்பு வில்லென வளைந்த புருவத்தின் கீழே நொடியில் வசியப்படுத்தும் பச்சை நிற கயல் விழிகளைக் கொண்டு இளமையும் அழகும் பொங்கி வழியும் யுவதிகள் இருவர் ; மாறாத இளமை காலமெல்லாம்  அழியாத தேகம் என தேடிவந்த சொர்க்கமாய் தோர்கல் ஐ தத்து எடுக்கும்  இரண்டாம் கதையான ஏறத்தாழ சொர்க்கம் உண்மையில் இரண்டாம் உலகம் தான்.


நிழலுக்கும் நிஜத்திற்கும்  இடையே நடக்கும் யுத்தத்திற்கு திடிரென தலைமை தாங்கும் ஸ்காடியா, இரண்டாம் உலகத்தில் நிழலாய் நடந்ததும் நிஜமானது தான் என்பதால் நிஜ உலகத்தில்  பதப்படுத்தப்பட்ட மம்மியாக மாறிவிடுகிறாள். அந்த கட்டத்தில் வாசகர்கள் அனைவரும் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று அசடு வழிந்திருப்பர். அதுவுமல்லாமல் முகத்தில் ஈயாடவில்லை  என்ற உதாரணத்திற்கு உண்டான அர்த்தம் நிச்சயமாக அப்பொழுது அங்கே அனைவருக்கும்  புரிந்திருக்கும் ;)

மாயையை ஜெயித்து மாவீரனாக மலையேறிய தோர்கல் ஐ மீண்டும் இவ்வுலக மாயை ஜெயிப்பதே கதையின் முடிவு.
தோர்கல் - கண்களுக்கு அருமையான விருந்து !