Follow by Email

Wednesday, 27 August 2014

அந்தி மண்டலம் ! (LMS)

காலம் ரொம்பவே கெட்டுப் போய் விட்டது ; தற்போதெல்லாம் பேய் பிசாசுகளுக்கு மரியாதை துளியும் இல்லாமல் போய் விட்டது என்பதெல்லாம் நிதரிசனமான உண்மையாகி விட்டது. போகிற போக்கில் இக்காலச் சிறுவர்கள் கூட, பேய் பிசாசு எல்லாம் உண்மையில் இருக்கிறதா என்று கேட்பார்கள் போலிருக்கிறது. ஏதோ, போன ஜென்மத்தில் பேய்கள் செய்த புண்ணியம் - சந்திரமுகி, அருந்ததீ, காஞ்சனா, 13-ம்  நம்பர் வீடு போன்ற தமிழ் திரைப்படங்கள் வெளிவந்து பேய்களை இன்னும் வாழ வைத்து கொண்டிருக்கின்றன. இன்னும் எத்தனைக் காலத்திற்கு இது செல்லுபடியாகும் என்றும் தெரியவில்லை ?!

நாம் சிறுவர்களாக இருந்த போது, கொடி கட்டிப் பறந்த - புளியமர பேய்களும் ; நள்ளிரவில் நித்தம் நம் வீதியெங்கும் உலாவரும் தீக்குளித்து இறந்தப் போன இளம்பெண் பேய்களும் ; வீட்டு வாசலையும் மீறி உள்ளே வந்து பயமுறுத்தும் எமகாத பேய்களும் இன்றைக்கு எங்கே போய்விட்டது என்றே தெரியவில்லை. கிராமத்தின் ஏரி மேட்டில் நர்த்தனம் ஆடிய மோகினிப் பிசாசுகளும் ; சோளக்காட்டிலும், கருவேலங்காட்டிலும் இரவில் சுதந்திரமாய் திரிந்த கொள்ளிவாய்ப் பிசாசுகளும் ; ஒற்றைப் பனைமர அடங்கா முனியும் ; சோற்றில் கல்லையும் மண்ணையும், வீட்டு ஓட்டின் மேலிருந்து கொட்டிய குட்டிச் சாத்தான்களும் ; செய்வினை செய்யப்பட்ட வீட்டில், பசு மாட்டின் தடம் பதித்து மறைந்துப் போகும் ஒடியனும் - இன்னும் இந்த தமிழ் மண்ணில் இருக்கிறதா என்று தேடக்கூடிய நிலையில் தானே நாம் இருக்கிறோம்?!

நள்ளிரவில் குலை நடுங்க வைத்த நடுநிசி நாய்களின் அகோர குரைப்பையும், இடைவிடா ஊளையிடலையும் இன்று நினைத்தாலும் உடல் முழுதும் ஜில்லிடுகிறது. பதறியடித்து விழித்தப் பின்பும், தொடர்ந்து கேட்ட சலங்கை ஒலியும், மொட்டை மாடியில் உறங்கிய நாட்களின் நள்ளிரவில், சுவற்றைப் பார்த்து விடாமல் குரைத்து, பயந்து பின்வாங்கி, மீண்டும் பாய்ந்து முன்னேறி சுவற்றைப் பார்த்து மட்டுமே குரைத்த வீட்டு நாயின் பாதுகாப்பையும் மீறிய குலை நடக்கமும் - அப்பப்பா.. இன்று நினைத்தாலும் முதுகுத் தண்டு ஜில்லிட்டுப் போகிறது.  இன்று எங்கே போனது இந்தப் பேய் பிசாசுகள் ?!

பேய் பிசாசுகளின் வரலாற்றை அடுத்த தலைமுறை வாசகர்களுக்கு கொண்டுச் செல்வதே தற்போது நமக்குள்ள  மிகப்பெரிய சமுதாய கடமையாகும்.  அழகான வண்ணத்தில், அடி வயிற்றைக் கலக்கும் அகோரப் பேய்களின் கதைகளை, காமிக்ஸ் மூலமாக தொடர்ந்து வெளியிடுவதன் மூலமே நம்மால் இந்த மிகப்பெரிய பொறுப்பை செவ்வனே நிறைவேற்றி சாதிக்க முடியும். ஆனால் சென்ற மாதம் வரை  நம் தமிழ் காமிக்ஸில் பேய்க் கதைகளோ ; அமானுஷ்ய திகில் கதைகளோ  சமீபத்தில்  வெளிவரவே இல்லை. இப்படி ஒவ்வொருவரும் தன் பொறுப்பை தட்டிக் கழிப்பதால் தான், பேய் பிசாச பூத இனங்களை, ஒவ்வொன்றாக நாம் இழந்து வந்திருக்கிறோம் என்பது கண்கூடு ! ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு பேய் இனம் என்று பலி கொடுத்து விட்டு, இன்று பேய் பிசாசுகள் வெகுவாக குறைந்து விட்டதே என்று, இங்கும் அங்கும் அல்லாடுகிறோம் என்பது தானே உண்மை ?!

நம்முடைய எள்ளு தாத்தா காலத்தில் - பிரம்ம இராட்சஷன் என்ற தலையாய பேய் இனம் அழிந்து போனது. நம்முடைய கொள்ளு தாத்தா காலத்தில் - பூத இனம் மண்ணோடு மண்ணானது. நம் தாத்தா காலத்திலோ - இரத்தக் காட்டேரி என்ற இன்னொமொரு கொடூர பேய் இனமும், கொள்ளிவாய்ப் பிசாசும், குட்டிச் சாத்தானும், ஒடியனும் ஒட்டுமொத்தமாய் காணாமல் போய் விட்டது. நம்முடைய அப்பா காலத்தில் மோகினிப் பிசாசுகளின் வாழ்வாதாரம் அழிந்து காற்றோடு காற்றாய் கரைந்துப் போனது. நம் காலத்தில் - கண்ணுக்கு தெரிந்தே பேய்களின் அழிவுக்கு காரணமாக இருக்கிறோம் என்பதை இங்கு எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள் ? 

இந்த ஒட்டுமொத்த அழிவுக்கு அச்சாரமாக நான் கருதுவது, அரசிளங்குமரி என்ற சினிமா படத்திற்காக,    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் இயற்றிய பாடல் ஒன்றைத் தான் :

வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க - உன்தன்
வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே - நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பிவிடாதே - நீ வெம்பிவிடாதே

நண்பர்களே, போனதை பற்றி வெம்பி இனி எந்தப் பயனும் நமக்கு கிடைக்கப் போவதில்லை. இதோ மீண்டும் ஒரு பொற்காலம் தொடக்கம் பெற்று விட்டது. இது பேய்களுக்கான வசந்த காலமாகவே என்றும்  இருக்க வேண்டும்  என்ற நம் எண்ணமும் இனி வீண்போகப்போவதில்லை. கறுப்புக் கிழவியின் சகாப்தம் முடிந்து போனாலும் அவள் விதைத்துப் போன விதைகள் தற்போது துளிர்க்க ஆரம்பித்து விட்டன. அவை யாவும் ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம்சூழ  வாழ - நம் ஆதரவை இன்றும் என்றும் அமனுஷ்யத்திற்கு காணிக்கையாக்குவோம். வாருங்கள் ஒன்றுபடுவோம் ; பேய்களுக்கான உலகை மறுசீரமைப்போம் ; அதற்குமுன் அந்திமண்டலம் அமானுஷ்யக் கதையை நமக்களித்த லயன் முத்து  காமிக்ஸ் உரிமையாளரும், பதிப்பகத்தாருமான  திரு. விஜயன் அவர்களுக்கு  நம் நன்றியை தெரிவித்து கொள்வோம் !

அந்தி மண்டலம் என்ற தலைப்பை முதன் முறையாக படித்தவுடன் எனக்குள் எழுந்த உணர்வுகளை இங்கே எழுத்தில் வடித்திருக்கிறேன். அமானுஷ்யம் தரும் உணர்வுகளே கூட, அடங்காமல் ஆர்ப்பாட்டம் செய்யும் நிலையில், அமானுஷ்யம் கண்ணெதிரில் தோன்றினால், நம்முள் இருக்கும் சகலஜீவநாடிகளும் ஒடுங்கி விடும் என்பதால் தானே திகில் கதைகளுக்கும் பேய்க் கதைகளுக்கும் நாம்  இன்றுவரை அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதல்லவா உண்மை !

சுகமான மனதிற்கு இதமான பொழுதில், மயிர்க்கால்கள் யாவும் குத்திட்டு நிற்க, அமானுஷ்ய அலைகள் நம்மீது குளிர் தென்றலென ஜில்லிட, அந்தி மாலையில் மருளும் பார்வை கொண்டு, எங்கோ தூரத்தில் சுழலும் சூன்யத்தை நோக்கி காட்சிகள் விரிந்தோட, காலநிலை யாவும் மறந்து, நிற்கும் இடம் கூட தொலைந்து, மேலே மேலே லேசாகி பறக்கும் உணர்வு கொண்டு, அதலபாதாளத்தில் விழுகின்ற பரிதவிப்பில் ஏற்படும் உணர்வுகளில் சகலமும் அடங்கி, உயிர் நாடியும் ஒடுங்கி மெல்ல மெல்ல அந்த மணடலத்தில் கரைந்து விடும் உணர்வையே இந்த அந்தி மண்டலம் தலைப்பு  எனக்கு தருகிறது !

இதுபோன்ற உணர்வுகளை டைலன் டாக் கதைக்களம் தருவதாக அமைந்துவிட்டால், உண்மையாகவே, எனக்கு இது ஒரு காமிக்ஸ் பொக்கிஷம் தான். தலைப்பே இப்படி ஒரு அதகளமாக அமைந்தப்பின் கதை எப்படி இருக்கும்  என்ற எதிர்பார்ப்பு நிச்சயம் மிகவும் அதிகமே ! அந்த எதிர்பார்ப்பை அந்தி மண்டலம் பூர்த்தி செய்ததா என்று கேட்டால், ஆமாம்  செய்தது - ஆமாம் செய்யவில்லை என்று அறுதியிட்டுக் கூற இயலாத அந்தி மண்டலத்து உணர்வுகளே  இன்னும் என்னுள் மேலோங்கி இருக்கிறது !


இன்வெராரி என்ற கிராமத்தில் இருக்கும் பேரழகி மேபெல் இந்த அமானுஷ்யக் கதையை, அவளைப்போலவே அழகாக,    தொடங்கி வைக்கிறாள்.   சதை உடைந்து பொலபொலவென ரத்தமேயின்றி  உதிரும் சருமம் கொண்ட இரு லைப்ரெரியன்களைப்  (librarians) பார்த்து பதறி துடித்து, காப்பாற்ற உதவிக் கோரி, கதறித் தவிக்கும் மேபெல்லை - பெல்க்நாப்பும், மிஸஸ்  லாங்கும் மடக்கிப் பிடித்து, பயத்தில் அலற அலற அவளுக்கு ஊசி போடும் போது, நமக்கு பயத்திலும், இயலாமையின் பரிதவிப்பிலும் பேச்சின்றி, துக்கமும் பயமும் தொண்டையை அடைக்க    நாமும் செய்வதறியாது திகைத்து நிற்கிறோம்.  துயிலெழுந்தப் பின் அவளும் அவ்வாறே செய்வதறியாது வீடு வந்து சேருகிறாள். ஆனால் அன்றைய இரவு தரும் கனவில் நடந்த உண்மையை உணர்ந்து, இலண்டன் நகர வாசியான, தீக்கனவு புலனாய்வு நிபுணர் டைலான் டாக்/ற்கு போன் செய்ய, நாமும் கொஞ்சம் ஆறுதலாகவே உணர்கிறோம்... இன்வெராரியின் ஃபைன் ஏரி படகுத் துறையில், தன்னுடைய புராதன  சொகுசுக் கப்பலுடன் காத்திருக்கும் சரோன்ம் அவர் புராதானக் கப்பலும் -  நம்மை திகலடையச் செய்வதாக இருக்கிறது. இதயத் துடிப்பு எகிற நாமும் அவர்களோடு பயணிப்பதான உணர்வுகள் நிச்சயம் திகில் கதைகளின் அதிர்வலைகளே ! படகு பயணத்தின் பாதியிலேயே,  மேபெல் தண்ணீருக்குள் விழுந்து தத்தளிப்பதைக் கண்டு டைலான் டாக் ஏரிக்குள் குதிக்க, நாம் பதறித் துடிக்கும் மனதோடும், ஐயோ கடவுளே அவளைக் காப்பாற்று என்ற பிரார்த்தனையும் கொண்டு பக்கங்களை கபளீகரம் செய்ய - டைலான்  டாக் எதுவுமே செய்ய இயலாமல் அவளை நீர்ச்சுழலுக்கு தாரைவார்க்கும் போது, எழுத்தில் வடிக்க இயலாத உணர்வுகள், நம்மை உள்ளுக்குள் சத்தமின்றி பதம் பார்க்கின்றன !.  
மேபெலின் மரணச் செய்தியை அவள் தாயிடம் தெரிவிக்க வரும் டைலான் டாக் - அங்கே மேபெல் உயிரோடு இருப்பதைக் கண்டு திடுக்கிடுகிறார்.  நம் கண்முன்னே நடந்த நிழ்ச்சியை, கண்கொட்டாமல் பார்த்து வந்த நமக்கோ அது எப்படி சாத்தியம் என்று யூகிக்க முடியாவிட்டாலும் சந்தோஷத்திலும், அதிர்ச்சியிலும், திகிலுடன் கூடிய  சந்தோஷ பெருமூச்சு ஒன்றை  விடுகிறோம் !  

மீண்டும் ஒரு மூடுபனி, நம்மையும் கதையின் நாயகர்களையும் இன்வெராரியின் சுடுகாட்டிற்கு அழைத்துச் செல்கிறது. அந்த  அற்புதமான மயான உணர்வுகள்  ஒரு சில நிமிடங்களே நீடிக்க, மேபெலின் வயது 61 என்று தெரியவரும் போது நம் மனம் சுக்குநூறாக உடையும் சத்தம் நமக்கே கேட்கிறது. இது என்னவிதமான உணர்வுகள் என்று இனம் காண விழையும் போதே பிணம் ஒன்று  சவப்பெட்டியிலிருந்து எழுந்திருக்க - நம் பேய்க்கதை ஆர்வமும், இந்த மானிடப் பிறப்பும் ஜென்ம சாபல்யம்  அடைகிறது !
இதற்கு பிறகு வரும் கதையில்,  மேபெலும் ஒரு ஸோம்பியே (zombie) என்பதும், அந்தக் கிராமத்தின் அத்தனை ஜனங்களும் வெறும் பிணங்களே என்பதும்,  டாக்டர்  ஹிக்ஸ் ஸோம்பிகளின் கடவுள் என்பதும், காலச் சக்கரம் சுழலாமல் நின்று போன கிராமமே இன்வெராரி என்பதும் போன்ற பல பகிர் உண்மைகள் நமக்கு தெரியவந்தாலும் அதன் பிறகு, திகிலுறையும் உணர்வுகள் மட்டும் நமக்கு வரவேயில்லை என்பது தான் மிகப்பெரிய குறை !!டைலான் டாக் - சிவப்பு சட்டையிலும் கருப்பு கோட்டிலும் மிகவும் வசீகரிக்கிறார் ! 

டைலான் டாக் உதவியாளர் பேசும் வசனங்கள் சில சமயம் கடியாக, சில சமயம் ஜோக்காக  இருந்தாலும் - நமக்கு  சிறுவயது  ஞாபகத்தை மீள்பதிவு செய்வதாகவே அமைந்திருக்கிறது. சிறுவயதில் நாம், மாலை முழுவதும் மணலில், மண்ணில், செம்மண் ரோட்டில், கடகால் குழியில், எங்கெங்கும் நிறைத்து கிடந்த காலி கிரௌண்டில் - பள்ளி அலுப்புத்தீர விளையாடி, அயர்ச்சியோடு இரவில் கும்மிருட்டில் வீடுவந்து,  கைகால் முகம் அலம்ப  கொல்லைப்பக்கம்  இருக்கும் கிணற்றிற்கு நீர் இறைக்கச் செல்லும் போது 'அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா' என்று திக்கித் திணறி பாடுவோமே - அந்த அந்தி சாய்ந்த இருண்ட பொழுதுகளை மனக்கண் முன்னே கொண்டு வருவதாக இருக்கிறது !  Well done Mr.க்ரௌச்சோ !

ஒரு ஸோம்பியான டாக்டர் ஹிக்ஸ், தன் கிராமத்து  ஸோம்பிகளுடன் மட்டுமே பழகிப்  பழகி காலமெல்லாம் போரடித்திருந்த நிலையில் - வெளி மனிதனான டைலான் டாக்/ஐக் கண்டவுடன் தன் உணர்ச்சிகளை கொட்டித் தீர்த்துவிடுவது நம்மால் புரிந்து கொள்ள கூடிய ஒன்று தான் ! பேய்களின்  கதையாக  இது இல்லையென்றாலும், பிணங்களின் கதையாக இது இருப்பதால் அந்தி மண்டலம், காலமெல்லாம் காலச் சக்கரம் சுழலாமல் ஜீவனோடு ஜீவித்திருக்க ஹிக்ஸை மனதார வாழ்த்துவோம் !


Thursday, 21 August 2014

இறந்த காலம் இறப்பதில்லை ! (LMS)

கல்லுக்குள் ஈரம் - சிறுகதை ! 


ஸ்விட்சர்லாந்திலுள்ள 'லுசெர்ன்' என்ற ஊரில் 'ரெனி' என்ற ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வயது 66. ஆனால் நல்ல திடகாத்திரமானவர் ; இளைஞரைப் போன்ற செயல் வேகம் கொண்டவர். அவர் ஒரு முன்னாள் பிரெஞ்சு ராணுவ வீரர் தான் என்றாலும், ராணுவத்தில் இருந்து விலகியதில் இருந்தே கூலிக்கு கொலை செய்யும் தொழிலை ஏற்றுக் கொண்டு செல்வச் சீமானாக வாழ்ந்து வருபவர். கட்டை பிரம்மச்சாரி. பெண் வாசம் என்பதே கிடையாது. 

அச்சமயம், மேற்கு ஜெர்மனியின் பெர்லின் நகரில் வசித்து வந்த பீட்டர் என்ற பத்திரிக்கையாளரைக் கொல்ல, ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்கிறார். அதனால் ரெனி, 9.11.1989 அன்று இரவு 10.00 மணிக்கு பீட்டரைத் தேடி பெர்லின் நகருக்குள் நுழைகிறார். கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் இனி ஒரே நாடாக திகழும் என்ற அறிவிப்பால் அன்றைய இரவு, பெர்லின் நகரமே கொண்டாட்டத்தில் களைகட்டியிருந்தது. பீட்டரின் வீட்டை கண்டுபிடித்து வாசலை அடைந்த ரெனி, அச்சமயம் வெளியில் வந்த பீட்டரை, தன்னுடைய 'க்ளாக் 17' ரக பிஸ்டல் மூலம் டுமீல் என்று ஒருமுறையே சுட்டுக்  கொன்று விடுகிறார். பிறகு அந்த துப்பாக்கியை அங்கே இருக்கும் manhole/ஐத் திறந்து சாக்கடையில் போட்டு விடுகிறார். 

அச்சமயம் கணவரைப்  பின் தொடர்ந்து வெளியேறி வந்த பீட்டரின் மனைவி - நிறைமாத கர்ப்பிணியான மரியா, தன் கணவன் இறந்திருப்பதைக் கண்டு மயங்கி தரையில் சரிகிறார். நிறைமாத கர்ப்பிணியான மரியாவைக் கண்டு பரிதாபப்படும் ரெனி, அவரை மருத்துவமனை ஒன்றில் சேர்க்கிறார். அங்கே அழகிய ஆண்குழந்தை ஒன்றுக்கு மரியா தாயாகிறார். தொடர்ந்த நாட்களில், ஒரு குழந்தைக்கு தாயானப் பிறகும் அவளின் இளமையும் அழகும் கட்டுக் குலையாமல் ஆளை அசரடிப்பதாகவே இருந்தது. தன்னால் காப்பற்றப்பட்ட மரியாவுக்கு ஆறுதல் கூற அடிக்கடி அவளின் வீட்டிற்கு வந்துச் சென்ற ரெனிக்கு, மரியா மீது காதல் ஏற்படுகிறது. அவளின் அழகு, அவரை அலைகழிக்க ஆரம்பித்தது. ஆனால் அப்போது அவரின் வயதோ 70 ! அதனால் தன்னுடைய காதலை சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவிக்கிறார். ஒருமுறை ஆறுதல் கூறும் நோக்கில் மரியாவின் வதனத்தில் வழிந்தோடிய கண்ணீரைத் துடைக்க எத்தனிக்கும் போது, மரியா அவர் கையைத் தடுத்து நீங்கள் எனக்கு அற்புதமான நண்பர் மட்டுமே என்று கூறி அவரின் உணர்வுகளுக்கு அணை போட்டு விடுகிறார்.

மரியாவின் ஆண் குழந்தை 'மாக்ஸ்'க்கு நான்கு வயதாகும் போது, மரியா ஒரு File/ஐத்  தன் வீட்டில் கண்டெடுக்கிறாள். அதன் மூலம் தன் கணவன் ஒரு புலனாய்வுப் பத்திரிக்கையாளர் என்று தெரிய வருகிறது. அதில் உள்ள அறிக்கையைப் படித்து, ஒசிரிஸ் 2 என்பது கம்யூனிஸவாதிகளின் ஒரு ரகசிய அமைப்பு என்றும், பதவிக்காக கொலை, ப்ளாக்மெயில் போன்றவற்றில் ஈடுபடும் அந்தப் பயங்கரவாத அமைப்பின் தலைவர் - ஜட்ஜ் ஹெரிக் பெச்டர் என்றும் தெரிந்து கொள்கிறாள். எனவே அதை ஒரு பப்ளிக் பிராக்ஸிக்யூட்டரிடம் ஒப்படைத்து விட்டு வீடு திரும்பிய சற்றைக்கெல்லாம், ஒசிரிஸ் தலைவரால் ஏவப்பட்ட கொலைகாரனால், மாக்ஸ் கண்ணெதிரே மரியா கொல்லப்படுகிறாள். அதுவரை அடிக்கடி மரியாவைப் பார்க்க பெர்லின் வந்துச் சென்ற ரெனி, மரியாவின் மரணத்திற்குப் பிறகு ஒரேடியாக லுசெர்ன் சென்று செட்டிலாகி விடுகிறார். 

மாக்ஸ் எப்படியோ கஷ்டப்பட்டு, எங்கோ வளர்ந்து பெரியவனாகி, ஒரு டிவியில் பணியில் சேர்ந்து விடுகிறான். ஒரு முறை அவனுடைய கேலி, கிண்டல், பரிகாசம் நிறைந்த VOX நிகழ்ச்சிக்காக ஒரு அரசியல்வாதியை பேட்டி எடுக்க கலாய்த்து விட்டு, அன்று காலையில் தான் புரட்டிய பழைய புத்தகத்தில், தன் தந்தை பேனாவால் எழுதியிருந்த ஒஸிரிஸ் 2 என்ற வார்த்தையை ராஜாங்க ரகசியமாக கேமரா முன் குறிப்பிடுகிறான். இந்த VOX நிகழ்ச்சியை எதேச்சையாக, லுசெர்ன்/ல் தன் வீட்டில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த ரெனி பார்க்க நேரிட்டது. தற்போது அவருக்கு 90 வயது. மூளையில் புற்று நோய் ஏற்பட்டு அவரின் நாட்கள் எண்ணப்படுவதாக, லுசெர்ன் மருத்துவமனை அளித்த அறிக்கையை, அதற்கு சற்று முன்னர் தான் வாங்கி வந்திருந்தார். வீட்டிற்குள் நுழைந்த கணமே, மரியாவின் பழைய நினைவில் மூழ்க ஆரம்பித்தவருக்கு, இந்தக் காட்சி பேரதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்தது. அதன் காரணமாக தன் கையில் பிடித்திருந்த மது கோப்பையை தவறவிட்டதால், அது கீழே விழுந்து சுக்கு நூறாக நொறுங்கியது.

ஒஸிரிஸ் 2 - என்று மாக்ஸ் உச்சரித்த கணத்திலேயே, அவனுடைய உயிர் இன்னும் சில மணி நேரங்களே என்பதை ரெனி புரிந்து கொண்டதே அவரின் அதிர்ச்சிக்கு காரணம். ஒருபக்கம் மரியாவின் நினைவு, மறுபக்கம் மூளை புற்று நோயால் விரக்தி என்று சோர்ந்திருந்த ரெனி, தான் 24 வருடங்களுக்கு முன் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேட விரும்புகிறார். 

உடனே பயணம் மேற்கொண்ட அவர், அன்று இரவு பெர்லினில் உள்ள மாக்ஸின் வீட்டை அடைகிறார். ரெனி, தன்னிடம் உள்ள மாஸ்டர் கீ மூலம் கதவைத் திறந்து உள்ளே நுழையும் போது, 'மார்ட்டினா ப்ரென்னர்' என்ற கொலைகாரி, மாக்ஸின் கழுத்தை டை'யால் இறுக்கி கொலை செய்ய முயல்கிறாள். மாக்ஸ் மயங்கிவிட்ட அந்தநிலையில்,  அந்த முயற்சியை இலாவகமாக தடுத்து, அவளை மாடியிலிருந்த ஜன்னல் வழியாக கீழே தள்ளி விட்டு அவளின் மரணத்தை உறுதி செய்யும் ரெனி, போலிஸ் விசாரணையின் போது மாக்ஸ் மாட்டாமல் இருக்க, அரசாங்க வக்கீல் ஹெலின்/க்கு போன் செய்து அனாமதேய தகவலும் தெரிவிக்கிறார். இந்தக் கொலை சம்பவம் விடியகாலை 2.55 க்கு நடைபெறுவதற்கு காரணமே, மாக்ஸ் தன் அலுவலக தோழர்களுடன் மூக்கு முட்ட நன்றாக குடித்து விட்டு, அங்கு இவனுக்குத் தெரியாமல், இவனை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த மார்ட்டினா ப்ரென்னர் என்ற தொழில்முறை கொலைகாரியை  வீட்டிற்கு தள்ளிக் கொண்டு வந்ததே காரணம். 

மாக்ஸிடம் அறிமுகம் செய்து கொள்ள, சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து நின்ற ரெனி'க்கு, மறுநாள் அந்த வாய்ப்பு வலிய வந்து சேருகிறது. மாக்ஸ் செல்லும் திசையில் எதிர்பட்ட, மூன்று தீவிர கம்யூனிஸ்ட்களால் மாக்ஸ் தாக்கப்பட, பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த ரெனி, அவர்களை மிகவும் எளிதாக அடித்து வீழ்த்துகிறார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு இருவருக்கும் அறிமுகம் ஆனாலும், மாக்ஸ் தன்னுடைய பால்ய கால நினைவுகளை மீட்டெடுக்க முடியவில்லை. 

அரசாங்க வக்கீல் ஹெலின், மாக்ஸின் வழக்கைப் பற்றி தன் தந்தையும், ஒஸிரிஸ் 2 ஜெர்மானிய தலைவருமான ஹெரிக் பெச்டரிடம் அறியாமல் விவாதிக்க, அவளிடம் இருந்து இந்த வழக்கை பிறகு பிடுங்கிக் கொள்ள அதுவே காரணமாகிறது. இதனிடையில் மாக்ஸ் குடும்ப போட்டோ ஆல்பத்தின் மூலம், பீட்டரின் நெருங்கிய நண்பரான 'கார்ல் பாயர்'/ஐத் தேடி, அவரின் சகோதரி 'இன்கா' வீட்டிற்கு ஹெலின், மாக்ஸ், ரெனி மூவரும் செல்கிறார்கள். ஆனால் அவளோ,  தன் சகோதரன் எங்கிருக்கிறான் என்றுத் தனக்கு தெரியவே தெரியாது என்று சாதிக்கிறாள். ஆனால் அங்கிருந்த ஏர்மெயில் கவர் மூலம், கார்ல் பாயர் இருப்பது, போலந்திலுள்ள போஸ்னான் என்று ரெனி கண்டுபிடிக்கிறார். அதன்பிறகு தன்னுடைய அதிரடி வழிமுறை மூலம்,  எல்லா விஷயங்களையும் அன்றைய இரவே கண்டுபிடிக்கிறார். பீட்டரும், அவர் நண்பரும் போட்டோகிராபருமான கார்ல் பாயர்/ம் ஒருமுறை ஒஸிரிஸ் 2 சம்பந்தப்பட்ட கொலை ஒன்றைப்  படம் பிடிக்கிறார்கள். ஏற்கனவே ஒஸிரிஸ் 2 சம்பந்தமாக புலனாய்வு செய்து வந்த காரணத்தால் பீட்டர், தொடர்ந்த நாட்களில் கொலை செய்யப்படுகிறார். இதில் பீதியுற்ற கார்ல் பாயர், போஸ்னான் சென்று பதுங்கி வாழ்கிறார் என்பதே அந்த உண்மை.

இதற்கிடையே ஹெலினிடம் இருந்து மாக்ஸின் வழக்கு பறிக்கப்பட்டு, இன்னொரு அரசாங்க வக்கீலான நியூமானுக்கு  கொடுக்கப்படுகிறது. இதற்கு அவளின் தந்தை ஹெரிக் பெச்டர் தான் மறைமுகமான காரணகர்த்தாவாக இருக்கிறார். அதேநாளில், திரும்பவும் மாக்ஸை  கொல்ல  இருவர், மாக்ஸின் வீட்டிற்குள் நுழைகிறார்கள். அந்த இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, திரும்பவும் மாக்ஸ்/ஐ ரெனி காப்பற்றுகிறார்.  அந்த நிகழச்சி, மாக்ஸின் பால்ய நினைவுகளையும், தன்னுடைய தாயான மரியாவின்   மரணத்தையும் கண்முன்னே கொண்டு வருவதாக அமைந்து விடுகிறது. அங்கு வரும் ஹெலினா, ரெனி ஒரு தொழில் முறை கொலைகாரனகத் தான் இருக்க முடியும் என்று சந்தேகப்பட, ரெனியும் ஒத்துக் கொண்டு அவளிடம் சரணடைகிறார்.  ரெனியை நியூமானிடம் ஒப்படைக்க அழைத்துச் செல்கிறாள் ஹெலினா.  ஆனால், நியூமானின்  அணுகுமுறை பிடிக்காமல், மீண்டும் மாக்ஸ் வீட்டிற்கே திரும்புகிறாள்.

மூளை புற்று நோயின் தீவிரத்தால், தன்னுடைய வாழ்நாள் இன்னும் சில நாட்களே  என்பதாலும், எப்படியும் ஹெலினா தன்னை போலீசில் ஒப்படைத்து விடுவாள் என்பதாலும், தன்னுடைய ஒரு தலைபட்ச காதலி மரியாவின் கணவன் பீட்டரின் மரணத்திற்கு பிராயச்சித்தம் தேடும் வகையிலும், தன் அளப்பரிய சொத்திற்கு ஒரே வாரிசாகப் போகும் மாக்ஸின் மனதில் நீங்கா இடம் பிடித்து மரணத்திற்குப் பிறகு வாழவும் - மாக்ஸின் கையால் மரணத்தை தழுவ முடிவு  செய்கிறார் ரெனி. அதே நேரம் கொலைகும்பல் ஒன்றும்  மாக்ஸின் வீட்டை நெருங்க, அங்கே ஒரு துப்பாக்கிச் சண்டை நடக்கிறது.

ஏற்கனவே தன்னிடமிருந்த க்ளாக் 17 ரக பிஸ்டலை மாக்சிடம் கொடுத்து, கதவைத் தட்டாமல் தடாலென்று உள்ளே வருகிறவனுக்கு உன் உயிர் தான் குறி - என்று எச்சரிக்கிறார். இதே வழிமுறையில் தான் மரியாவின் மரணமும் நிகழ்ந்தது என்பதை  மாக்ஸ் அறிந்திருந்தான். வெளியில் சென்று கொலை கும்பலை அழித்து கொண்டிருக்கும் போது, மரியாவும் துப்பாக்கியுடன் ஒருவனை குறிப்பார்க்க, அவனோ  இவளைச் சுடாமல் விட்டுச் செல்கிறான். இதைக் கவனித்த ரெனி, அவளின் கழுத்தை நெருக்கி மயக்கமுறச் செய்து, ஒவ்வொருவனாக, அனைவரையும்  சுட்டு வீழ்த்தி, இந்த வயதிலும் தான் ஒரு தலைசிறந்த தொழில் முறை கொலையாளி என்பதை நிரூபிக்கிறார்.

மயக்கம் தெளிந்து எழுந்த ஹெலினா, இறந்து கிடக்கும் ஒருவன் முகமூடி இல்லாமல் இருப்பதை பார்த்தவுடன், நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்து கொள்கிறாள். உடனே பதறியடித்து, மாஸின் அறைக்குள் கத்திக்கொண்டே நுழைகிறாள். ஆனால், அதற்கு முன்பே மாகஸ் ரெனியை சுட்டு கொன்று வீழ்த்தி விடுகிறான். மரணத்தின் வாயிலில் இருக்கும் நிலையில் கூட, உண்மையச் சொல்லாமல், உன் கையால் சாக வேண்டும் என்றே முகமூடி அணிந்து வந்ததாக ரெனி  கூறுகிறார்.  மேலும், ஹெலினா உன்னை அவர்கள் கொல்லக் கூடாது என்பது மேலிடத்து உத்தரவு என்று ஒரு புள்ளி வைத்து விட்டு இறந்துப் போக, ஹெலினா அந்தப் புள்ளியில் ஒரு கோலமே போட்டு விடுகிறாள்.  அந்த நேரம் தன் தந்தையிடம் இருந்து ஹெலினாவுக்கு போன் வருகிறது.  தான் இங்கிருப்பதை நியூமான்   தான், தன் தந்தையிடம் தெரிவித்ததை அறிந்து, தன் வீட்டில் உள்ள இரகசியக் காப்பறையில் இருந்து, மாக்ஸின் தந்தை பீட்டரின் புலனாய்வு அறிக்கையை கைப்பற்றுகிறாள்.  உண்மையை தெரிந்து கொண்ட ஹெலினா, அந்நேரம் வந்த தன் தந்தையிடம்  மனக் குமுறலை கொட்டுகிறாள். அவர்  ஒரு துரோகி என்றும், போலீசில் ஒப்படைக்கப் போவதாக கூறிக்  கொண்டே வெளியேற, ஹெரிக் பெச்டர் தன்னைத் தானே துப்பாகியால் சுட்டுக் கொண்டு இறக்கிறார். இதனிடையில் மாக்ஸிடம்,  லுசெர்ன் நோட்டரி, ரெனியின் உயிலைப் பற்றி தெரிவிக்க, அவன் ஹெலினாவிடம் ஓடுகிறான். தந்தை இழப்பால் தவித்திருந்த அவளிடம், ஏற்கனவே அவர்கள் இருவருக்குள்ளும் அரசல் புரசலாக இருக்கும் காதலை  வெளிப்படுத்தி,  ஸ்விட்சர்லாந்து செல்ல அழைக்க, ஹெலினாவும் புதிய வாழ்க்கைக்கு காதலுடன் ஓகே சொல்கிறாள்.

தந்தையை இழந்த ஹெலினாவும், ரெனியை  இழந்த மாக்ஸும் துயரத்தில் தான் பல காலம் இருப்பார்கள் என்று நினைக்கும் போதே, லுசெர்ன்/ல் இருக்கும் ரெனியின் இருபது  மில்லியன் யூரோக்கள்   பெறுமானமுள்ள மாளிகைக்குள் நுழைந்த மறுகணமே, செல்வம் தந்த போதையால், காதல் போதை தலைக்கேறி  சல்லாபம் செய்கிறார்கள்.  ஆனால் விதி வலியது அல்லவா? அச்சமயம்,  ரெனியின் லேப் டாப்/ற்கு ஒரு மெயில் வருகிறது. அதற்குள் கொஞ்சம் யூகித்திருந்த மாகஸ், password மரியா என்று அடிக்க மெயில் திறந்து கொள்கிறது.   அதில் இருக்கும் FTP/ல்  ஒரு ஒப்பந்தத்தை காண்கிறான். அது அவர்கள் இருவரையும் கொள்வதற்காக, ரெனி என்ற தொழில் முறை கொலையாளிக்கு வந்திருக்கும் மரண ஒப்பந்தம் என்பது தெரிந்து திக்கித்து நிற்கிறான்.

இனி, தான் அனுபவிக்கப் போகும் சொத்துகள் அனைத்தும் பலரின்  கொலை மூலமாகவே சம்பாதித்து என்பதை  அறிந்து, அதை அனுபவிக்காமல் இருக்கப் போகிறானா அல்லது தப்பான வழியில் ரெனி சம்பாதித்து இருந்தாலும், தனக்கு பரிகாரமாக வந்த சொத்துகள் தானே என்று, வாழ்க்கையை சுகபோகமாக அனுபவிப்பானா என்பதை காலம் தான் முடிவு செய்யும் !

- முற்றும் -


கிராபிக் நாவல் என்றால் என்ன? அது, ஒரு நாவலைப் போன்ற  முயற்சி ; அது, ஒரு ஒன் ஷாட் கதை - என்ற கதையை எல்லாம் விட்டு விட்டு யதார்த்தத்திற்கு வருவோம். அழுத்தமான கதைக்களம் ; யதார்த்தமான கதை ; சுவாரசியமான தேடல் ; அந்தக் கதையைச் சொல்லும் போது வேண்டுமென்றே சில விஷயங்களைச் சொல்லாமல் விடுவது ; சொல்லாமல் விட்ட வார்த்தைகளுக்குப் பதிலாக, சித்திரத்தில் குறிப்பு தருவது ; படிப்பவர் மனதில்    தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு, ஒரு சோகத்தை பின்புலமாக கொண்டிருப்பது ; முதல் முறை படித்தவுடன் புரியாதபடிக்கு, வேண்டுமென்றே குழப்புவது ; கடைசியில், இப்படி நடந்து இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று, வாசகர்கள் ஆதங்கப்படும் வகையில் முடிவை கொண்டிருப்பது என - நாம் இதுவரை படித்த கிராபிக் நாவல்கள் அனைத்தும்  இப்படித்தான் இருந்தன. இனிமேலும் இப்படித்தான் இருக்கும் !

ஒவ்வொரு பொய்யிலும் கொஞ்சம் உண்மை கலந்திருக்க வேண்டும் ; ஒவ்வொரு உண்மையிலும் கொஞ்சம் பொய் கலந்திருக்க வேண்டும் ; கடைசியில், கதையில் வரும் சம்பவங்கள் உண்மையா அல்லது பொய்யா என்ற மயக்க நிலையை, ஒரு காமிக்ஸ் கொண்டு வந்தால் அது கிராபிக் நாவல் என்றும் வேறுவகையில் அர்த்தம் கொள்ளலாம் !

காமிக்ஸ் வேறு, கிராபிக் நாவல் வேறு ! இரண்டு இரசனைகளும் ஒன்றாக, ஒரு புள்ளியில் சங்கமிக்கும் என்று சொல்லவே முடியாது. கிராபிக் நாவலை ரசித்துப் படிக்கும் வாசகர்களுக்கு - லக்கி லூக், சிக் பில், ரின் டின் கேன், ப்ளு கோட்ஸ், யகாரி, சுட்டி லக்கி போன்ற கார்ட்டூன் ரகக் கதைகள் - குபீர் சிரிப்பை வரவைக்காமல் போகலாம். ஆனால், காமெடிக் கதைகளுக்கு விழுந்து விழுந்து சிரிக்கும் காமிக்ஸ் வாசகர்களுக்கு - பயங்கரமான தலைவலி வந்தே தீரும் என்பது மட்டும் நிச்சயம் !

கிராபிக் நாவல் படிக்கும் போது, ஒவ்வொரு பக்கத்திற்கும் ஏன்? ஏன்? என்ற கேள்வி எழும் ; விடை எங்கே? எங்கே? என்று சிறுமூளையும் பெருமூளையும், மூலை முடுக்கெல்லாம் தேடும் ; இரணமானதொரு வலி சுவடின்றி, மனதிற்குள் மெல்ல மெல்ல குத்துக் காலிட்டு அமரும் ; கடைசியில் ஙா..ஙா..ஙா.. நை..நை..நை.. ஙன..ஙன.. ங்ன..ங்ன.. என்று - காதல் பரத் போன்று உங்களுக்குள் ஒரு ஃபீலிங் வந்தால், நீங்கள் ஒரு தீவிரமான காமிக்ஸ் வாசகர் மட்டுமல்ல, குழந்தை மனமும் கொண்டவர் என்று அர்த்தம் !

இப்படிப்பட்ட குழப்பமான நிலையை நீங்கள் வெகுவாக ரசித்தால் - நீங்கள் ஒரு கிராபிக் நாவல் ரசிகர் என்று அர்த்தம். அதே சமயம், இந்தக் காமிக்ஸ் சமூகம் உங்களுக்கு அறிவு ஜீவி என்ற பட்டத்தை அளிக்க தயாராக இருக்கும். ஆனால், உங்களின் காமிக்ஸ் மனம், காணாமல் போய்  வெகுகாலம் ஆகிவிட்டது என்றும்  அர்த்தம் கொள்ளலாம்.  உங்களால் லாஜிக் இல்லாத கதைகளை  ரசிக்கவோ ; கார்ட்டூன் கதைகளுக்கு விழுந்து விழுந்து சிரிக்கவோ முடிந்தால், நிச்சயமாக நீங்கள் ஒரு அதிசயப்பிறவி தான் !

பெரும்பாலும், நாம் காமிக்ஸ் படிப்பதே அன்றைய நாளின் பிரச்சனையை மறப்பதற்கு தான் ; நாம் காமிக்ஸ் படிப்பதே அழகான கற்பனை உணர்வுகளால் மனதை இலேசாக மாற்றத்  தான் ; நாம் காமிக்ஸ் படிப்பதே ஒரு சுவாரசியமான  பொழுதுபோக்காக இருக்கும் என்பதால் தான் ; இதிலும் நை நை என்று, பிக்கல்  பிடுங்கல் மட்டுமே வருமென்றால், அதற்குப் பதிலாக ஒரு ராஜேஷ்குமார் க்ரைம் நாவலையோ அல்லது சுபா நாவல்களையோ படித்து விட்டு சென்று விடலாமே ?!

ஸ்பைடர்களும், ஆர்ச்சிகளும் நிறைந்த உலகிலிருந்து நாம் பயணித்துள்ள தூரம் அசாத்தியமானது தான் என்றாலும் - ஆழ்ந்த கதைக்கரு உள்ள கிராபிக் நாவல்களைப் படிக்க, நம் இரசனையை மேலும் மேலும் வளர்த்து கொள்வதன் மூலம்,   லாஜிக் இல்லாத கதைகளிலிருந்தும் நாம் வெகு தூரம் பயணித்து விடக்கூடாதே என்பது தான் என் ஆதங்கம். ஏற்கனவே நமக்கு கேப்டன் டைகர் கதைகள் போரடித்து விட்டன. டெக்ஸ் வில்லர் கதைகளில்  இருக்கும் ஓட்டைகளைப்  பெரிதாக அலசவும் ஆரம்பித்து விட்டோம். நிலவெளியில் ஒரு நரபலி - படித்தவுடன் பூத வேட்டை நமக்குப்  போரடித்தது ; நில் கவனி சுடு  - படித்தவுடன் சட்டம் அறிந்திரா  சமவெளி போரடிக்கிறது. இதில் நம் இரசனையை இன்னும் வளர்த்து கொள்ள, அழுத்தமான கதைகளும்,  நுணுக்கமான லாஜிக் தேடலும் உள்ள கிராபிக் நாவலை ஆராதிக்க கற்றுக்  கொண்டால், டெக்ஸ் வில்லர் கதைகள் கூட சின்னப்பிள்ளைகள் சமாச்சாரமாக தெரியும் அபாயம் இருப்பதையும் இங்கு சொல்லாமல் இருக்க முடியவில்லை !

இன்றும் கூட, பிரளயத்தின் பிள்ளைகள், எமனின் திசை மேற்கு, ஒரு சிப்பாயின் சுவடுகள், இறந்த காலம் இறப்பதில்லை என - இந்த கிராபிக் நாவல்கள் ஏற்படுத்திய பாரம் மனதில் இருந்து   இன்னும் அகலவே இல்லை. இதை வெற்றி என்று கொண்டாடும் அதே வேலையில், நம் மனதை பட்டாம் பூச்சியாய் பறக்க வைத்து இலகுவாக்கிய, டெக்ஸ் வில்லர்/ன் கதைகள் நமக்கு மொக்கையாக தெரிய ஆரம்பித்துள்ள பரிமாணம்  - ஒரு தோல்வியின் ஆரம்பமாக ஏன் இருக்கக் கூடாது என்பதே என் கேள்வி ?

Sunday, 17 August 2014

சட்டம் அறிந்திரா சமவெளி ! (LMS)

நண்பர்களே, இது கேப்டன் விஜயகாந்த் நடித்திருக்க வேண்டிய சூப்பரான கதை ! அலட்டல் ; உருட்டல் ; மிரட்டல் ; அடி ; உதை ; குத்து ; புல்லட்டை மிஞ்சிய வேகம் ; புயல் காற்றில் கூட கலையாத கேசம் ; சலூனுக்குள் வயிறு முட்ட தாக சாந்தி - என அற்புதமான திரைக்கதை ! ஆனால், கேப்டன் விஜயகாந்த் முழு நேர அரசியலுக்கு வந்து விட்டதால், இந்தக் கதையை யாரோ 'போனேலி' கம்பெனிக்கு, நான்கு வருடம் முன்பே அனுப்பி வைத்து, கொஞ்சம் துட்டு பார்த்து விட்டார்கள் போலத் தெரிகிறது :)

இப்பொழுதும் கூட ஒன்றும் குறைந்துப்  போய் விடவில்லை. கதை கிடைக்காமல் கஷ்டப்படும் நம் இளையத் தளபதிக்கு இதை அனுப்பி வைத்தால் - நம் தமிழ்நாட்டிற்கு மரண மாஸ் படம் ஒன்று கிடைத்து விடும். முதல் நாள் வசூல் 14 கோடி ; பலநாள் வசூல் பல நூறு கோடி என்று, விசிலடிச்சான் குஞ்சுகளின் பணத்தை, மொத்தமாக அள்ளி விடலாம் என்பது என் கருத்து :)


கார்சன் : காரில் வந்து காலாற காலையில் வாக்கிங் போகும் - பார்க்கில் முகம் மட்டுமே பார்த்துப் பழகிய பெரியவர் போல் ஒரு தோற்றம். எதிரிகள் சூழ்ந்து துப்பாக்கி விளையாட்டு நடுத்தும் போதெல்லாம்,  அந்தப் பெரியவரை பார்த்து பரிதாபம் ஏற்படும்படியான பஞ்சுப் போன்ற தலைக் கேசமும், ஒடுங்கிய வதனமும் ! ஏதோ அவ்வப்போது வறுத்த கறியும், சுக்கா மட்டனும், வயிறு நிறைய பீரும் கிடைப்பதால் தான் - டெக்ஸ் வில்லருடன் குப்பை கொட்ட முடிகிறது என்பதான தோற்றம். ஹ்ம்ம்.. காலத்திற்கு தான் எவ்வளவு அசூர வேகம் ; கடைசியில் காலனுக்கு தானே மிஞ்சும் இந்தத் தேகம் !

டெக்ஸ் கிட் : விஜய் டிவி பெருமையுடன் வழங்கும் - கிச்சன் லிட்டில் சூப்பர் ஸ்டார்/ல் வரும் போட்டியாளர் போலவே - மஞ்சள் சட்டையில், சிவப்புத் துணியை தைத்துக் கொண்டு வந்துப் போகும், முழி பிதுங்கும் கேரக்டர் :) அதிலும் 107 ஆம் பக்கத்தில் டெக்ஸ் கிட்/ன் இயலாமை நன்றாகவே வெளிப்படுகிறது ! 

செவ்விந்திய டைகர் : வருடம் 36% வட்டி தரும் பைனான்ஸ் கம்பெனியின் - செக்யூரிட்டி போலவே விறைப்பாக வந்து விறைப்பாக, டெக்ஸ் வில்லர் கூடவே பயணிக்கிறார். அவ்வப்போது சூப்பராக சீன் போடுகிறார். அதுமட்டுமல்ல 51 ஆம் பக்கத்தில், தானும் ஒரு மாஸ் ஹீரோ தான் என்பதையும் நிரூபிக்கிறார் :)

இனி, கதை விமர்சனத்திற்கு போகலாம் நண்பர்களே.. 

ஆனால் ஒன்று, இதுபோன்ற நகரம் சம்பந்தமான கதைகள் மட்டுமே தொடர்ந்து வந்தால், டெக்ஸ் வில்லரின் கதைகளே என்றாலும் - சீக்கிரம் நம் இரசனையும் மாறி விடும் என்றுத் தோன்றுவதை, சட்டம் அறிந்திரா சமவெளியின் வண்ணச் சித்திரங்களே தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது ! ஏனெனில் புதுமை என்றாலே நமக்கு எப்பொழுதும் பரவசம் தான் ; புரிந்து விட்டால் எல்லாமே நமக்கு திவ்ய தேசம் தான் ! 

காடு, மலை, மேடு, புழுதி, மணல், வெயில், குளிர், அபாச்சோ, விஷ அம்பு, மண்டைத் தொலி, எருமை வேட்டைகள், போக்கிரிகள், துப்பாக்கி குண்டு, ஒண்டிக்கு ஒண்டி, சலூன்கள் - என மூச்சிரைக்க ஜீவன்கள், உயிர்த் தப்ப நடத்தியப் போராட்டமே, நம்மில் புதைந்துப் போயிருந்த சோகத்தை அகற்றும் மாயாஜாலமாக அமைந்தது. சிறிய கோட்டிற்கு அருகில் வரைந்த பெரிய கோடாக, அக்கதைகளில் காணப்படும் ஜீவமரணப் போராட்டம் - நம் பிரச்சனைகளின் வீரியத்தைக் குறைப்பதாக அமைந்தது !

பரந்து விரிந்த பாலைவனம் ; கண்ணுக்கு எட்டியத் தூரம் வரை மணற் புழுதி அல்லது மலை முகடு ; மரணக் கால்வாய்கள் ; கற்றாழைகள் ; பகலில் சுட்டெரிக்கும் வெயிலென்றால் இரவிலோ கடுங்குளிர் ; விரியன்கள் மறைந்து வாழும் பாறை முகடுகள் - என நம்மை வசீகரித்து கட்டி போட்ட டெக்ஸ் வில்லர் கதைகள் தான் ஏராளம் ! அது போன்ற கதைகள், நம் எண்ணங்களை எல்லையின்றி விரியச் செய்து ஒரு பரவச நிலையை அடையச் செய்தது என்றால் அது மிகையல்ல ! 

உங்கள் மனம் சோகத்தில் இருந்து விடுபட வேண்டும் என்றால், நீங்கள் ஆகாயத்தை வெறித்துப் பாருங்கள் - சோகத்தின் அழுத்தம் குறைய ஆரம்பிக்கும் ; உங்களுக்கு அது பிடித்து இருந்தால் கொஞ்சம் இரசித்துப் பாருங்கள் - உங்களின் சோகம் கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் கரைய ஆரம்பிக்கும் ; உங்கள் மனம் இலேசாக ஆரம்பித்தால், ஆகாயத்தை அழகாய் வர்ணித்துப் பாருங்கள் - நம் வாழ்க்கை வசந்தத்தின் வீடாக தெரியும் ; அப்படித் தெரிந்தால் அந்த நினைவுகள்,  உங்களை விட்டு அகலாமல் இருக்க அந்த நினைவுகளை திரும்பத் திரும்ப மனக்கண்ணில் கொண்டு கற்பனையில் கனவு காணுங்கள் - உங்கள் வாழ்க்கை கிடைப்பதற்கரிய பொக்கிஷமாகும் !

இப்படிச் செய்ய இயலாதவர்கள் அற்புதமான டெக்ஸ் வில்லர் கதை ஒன்றை எடுத்துப் படியுங்கள் - இரண்டுக்கும் வேறுபாடே இருக்காது ; இது தான் டெக்ஸ் வில்லர் வெற்றியின் மர்மம். அப்படி ஒரு கதையாக டெக்ஸ் வில்லரின் - சட்டம் அறிந்திரா சமவெளி ! - இருந்ததா என்றால், அதற்கான பதில் இல்லை என்பதே !


டெக்ஸ் வில்லரின் கதைகள் அனைத்துமே,  டெம்ப்ளேட் வகையச் சார்ந்தது தான் என்றாலும் இது ஒரு அக்மார்க் காப்பி பேஸ்ட் டெம்ப்ளேட் கதையாக தெரிவதே இப்படி ஒரு விமர்சனம் எழுத காரணம். icc world cup matchல் இந்தியா ஆஸ்திரேலியா semi final நடைபெறும் போது,  match fixing  நடந்து ஆஸ்திரேலியா தான் ஜெயிக்கும் என்று, ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்து விட்டால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? என்ன தான் இந்தியா  boundary, sixer என்று விளாசித்  தள்ளினாலும் - உங்களுக்கு எந்தளவு சுவாரசியம் இருக்கும்? அப்படி ஒரு கதையாக தான் சட்டம் அறிந்திரா சமவெளி ! இருக்கிறது.

ஒரு காமிக்ஸ்  கதையே என்றாலும், அதில் கொஞ்சமாவது மர்மம் இருக்க வேண்டும் ; எதிர்பாராத சில திருப்பங்கள் இருக்க வேண்டும் ; வில்லன்கள் கொஞ்சமாவது தாக்குப் பிடிக்க வேண்டும் ; சிறிதாவது பரபரப்பு இருக்க வேண்டும் ; ஆனால் இந்தக் கதையில் அப்படி  எதுவுமே இல்லை ! டெக்ஸ் வில்லர் மட்டுமே இருக்கிறார் ;  கேப்டன் விஜயகாந்த் போல் அடி, உதை, குத்து என்று பக்கத்திற்கு பக்கம் ஓவராக சீன் போடுகிறார் ; தன் முகம் ரொம்ப வயதானது போலுள்ளதைக்  கூட  கண்ணாடியில் பார்க்காமல், கார்சனை, பெருசு என்று நக்கலடிக்கிறார் ! கதையின் முதல் பக்கத்திலேயே வில்லன் யார் என்று சொல்லி விடுகிறார்கள், அவருக்குத் துணையாக ஷெரிப் இருப்பதையும் கூறுகிறார்கள், டெக்ஸ் வில்லரால் தான் ஜெயிக்க முடியும் என்பதையும் சத்தியம் செய்கிறார்கள், ஒவ்வொரு வில்லனைப் பற்றியும் 20 பக்கம் முன்பாகவே கூறி விடுகிறார்கள், எல்லா இரகசியங்களையும் தெரிந்து கொண்டு, இவர் அவர்களை நெருங்குவது கொஞ்சம் அல்ல அதிகமாகவே சுவாரசியத்தைக் குறைக்கிறது.

இருந்தாலும், ஊருக்குள் வர விடாமல் வில்லனின் அடியாட்கள் கும்பல்  வழியை மறிப்பதும், அவர்களை ஏமாற்றும் மாற்று யுக்தி கொண்டு ஊருக்குள் அதிரடியாக டெக்ஸ் வில்லர் நுழைவதும்   மட்டுமே,  இக்கதையை ஓரளவுக்கு  தூக்கிப் பிடிக்கிறது. ஆனால், அதைக் கெடுத்தது, இரண்டு இடத்தில் நடைபெறும் துப்பாக்கிச்  சண்டை தான். கெவின் கிராஸ்பையின் 12 நபர்கள் அடங்கிய கும்பல் தன்னிடம் இருக்கும்  வின்செஸ்டர் ரைஃபிள்கள் மூலம், தங்களிடம் இருந்து தப்பி ஓடும் டெக்ஸ் வில்லர் & coவில் ஒருவரைக் கூட,  சுட முடியாமல் கோட்டை விடுவதை கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை. அதே சமயம் ஓடும் வண்டியிலிருந்து ரிவர்ஸில் திரும்பி டெக்ஸ் குரூப் சுட்டு, ஐந்து நபர்கள் எமலோகம் போவது எல்லாம் ரொம்பவே அநியாயம். அதிலும் கார்சன் பிஸ்டல் மூலம் சுட்டு, கும்பலில் ஒருவனை பரலோகம் அனுப்புவது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.   அதுமட்டுமல்ல 51 ஆம் பக்கத்தில் வரும் டுமில் டுமில்  காட்சி, நாம் சிறு வயதில் தீபாவளி அன்று நிகழ்த்திய திருடன் போலிஸ் விளையாட்டை ஞாபகப்படுத்தி பரவசப்படுத்தியது என்றே கூறலாம் :)


ஸப்போர்டில் உள்ள  வயதான குடிமக்கள் நால்வர், டெக்ஸ் வில்லர் & co க்கு உதவ வருவதும், அந்த உதவியை இவர்கள் ஏளனமாக மறுப்பதும், பிறகு அவர்களாலேயே  டெக்ஸ் வில்லர் & co உயிர் பிழைப்பதாக கதையை முடித்திருப்பதும் நல்ல யதார்த்தம் மட்டுமல்ல கொஞ்சம் முன்னேற்றமும் கூட.

சீரும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்ற, நம்மூர் ஆட்டோ வாசகத்தை கதாசிரியர் படித்திருப்பார் போலும். ஆசைநாயகி லோலோவின் கேரக்டரை அற்புதமாகவும், அழுத்தமாகவும் கதைக்குள் நுழைத்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. அதே போல் லோலோவின் சகோதரன் பகோ சாவெஸ், கூலிப்படைத் தலைவன் கெவின் கிராஸ்பை, மாக் கார்மிக், பில் கார்மென், பால் மோரிஸன் என பல யதார்த்தமான  ; அழுத்தமான கேரக்டர்கள்.  இப்படி பல விஷயங்கள் பிளஸ் பாயிண்டாக இருந்தாலும்  ஏதோ ஒன்று  குறைவது போன்றே தெரிகிறது. அதற்கு காரணம் முன்பே கூறியது போன்று, இந்தக் கதை - நகரமும் நகரம் சார்ந்த கதை என்பதால் இருக்கலாம் ; துப்பாக்கிச் சண்டையில் ஒட்டு மொத்தமாக நையாண்டி செய்து, கோட்டை விட்டதால் இருக்கலாம் ; டெக்ஸ் வில்லரின் ஒன் மேன் ஷோ என்பதால் இருக்கலாம் ; அல்லது நில்..கவனி..சுடு.. கதையைப் போன்றே இதுவும் சிட்டி ஹண்ட் ஆக இருப்பதால் கூட இருக்கலாம் !

எது எப்படி இருந்தாலும், ஒரு சூப்பர் ஹீரோவின்  கதை நமக்கு போரடிக்க ஆரம்பித்தால் - நாம் அடுத்த கட்ட இரசனையை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டோம் என்பதே உண்மை ; ஒரு  மாஸ் ஹீரோவின் கதை நமக்கு போரடிக்க ஆரம்பித்தால் - நாம் வேறொரு ஹீரோவை நோக்கி பயணிக்க ஆரம்பித்து விட்டோம் என்பதும் உண்மை !