Follow by Email

Thursday, 21 August 2014

இறந்த காலம் இறப்பதில்லை ! (LMS)

கல்லுக்குள் ஈரம் - சிறுகதை ! 


ஸ்விட்சர்லாந்திலுள்ள 'லுசெர்ன்' என்ற ஊரில் 'ரெனி' என்ற ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வயது 66. ஆனால் நல்ல திடகாத்திரமானவர் ; இளைஞரைப் போன்ற செயல் வேகம் கொண்டவர். அவர் ஒரு முன்னாள் பிரெஞ்சு ராணுவ வீரர் தான் என்றாலும், ராணுவத்தில் இருந்து விலகியதில் இருந்தே கூலிக்கு கொலை செய்யும் தொழிலை ஏற்றுக் கொண்டு செல்வச் சீமானாக வாழ்ந்து வருபவர். கட்டை பிரம்மச்சாரி. பெண் வாசம் என்பதே கிடையாது. 

அச்சமயம், மேற்கு ஜெர்மனியின் பெர்லின் நகரில் வசித்து வந்த பீட்டர் என்ற பத்திரிக்கையாளரைக் கொல்ல, ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்கிறார். அதனால் ரெனி, 9.11.1989 அன்று இரவு 10.00 மணிக்கு பீட்டரைத் தேடி பெர்லின் நகருக்குள் நுழைகிறார். கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் இனி ஒரே நாடாக திகழும் என்ற அறிவிப்பால் அன்றைய இரவு, பெர்லின் நகரமே கொண்டாட்டத்தில் களைகட்டியிருந்தது. பீட்டரின் வீட்டை கண்டுபிடித்து வாசலை அடைந்த ரெனி, அச்சமயம் வெளியில் வந்த பீட்டரை, தன்னுடைய 'க்ளாக் 17' ரக பிஸ்டல் மூலம் டுமீல் என்று ஒருமுறையே சுட்டுக்  கொன்று விடுகிறார். பிறகு அந்த துப்பாக்கியை அங்கே இருக்கும் manhole/ஐத் திறந்து சாக்கடையில் போட்டு விடுகிறார். 

அச்சமயம் கணவரைப்  பின் தொடர்ந்து வெளியேறி வந்த பீட்டரின் மனைவி - நிறைமாத கர்ப்பிணியான மரியா, தன் கணவன் இறந்திருப்பதைக் கண்டு மயங்கி தரையில் சரிகிறார். நிறைமாத கர்ப்பிணியான மரியாவைக் கண்டு பரிதாபப்படும் ரெனி, அவரை மருத்துவமனை ஒன்றில் சேர்க்கிறார். அங்கே அழகிய ஆண்குழந்தை ஒன்றுக்கு மரியா தாயாகிறார். தொடர்ந்த நாட்களில், ஒரு குழந்தைக்கு தாயானப் பிறகும் அவளின் இளமையும் அழகும் கட்டுக் குலையாமல் ஆளை அசரடிப்பதாகவே இருந்தது. தன்னால் காப்பற்றப்பட்ட மரியாவுக்கு ஆறுதல் கூற அடிக்கடி அவளின் வீட்டிற்கு வந்துச் சென்ற ரெனிக்கு, மரியா மீது காதல் ஏற்படுகிறது. அவளின் அழகு, அவரை அலைகழிக்க ஆரம்பித்தது. ஆனால் அப்போது அவரின் வயதோ 70 ! அதனால் தன்னுடைய காதலை சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவிக்கிறார். ஒருமுறை ஆறுதல் கூறும் நோக்கில் மரியாவின் வதனத்தில் வழிந்தோடிய கண்ணீரைத் துடைக்க எத்தனிக்கும் போது, மரியா அவர் கையைத் தடுத்து நீங்கள் எனக்கு அற்புதமான நண்பர் மட்டுமே என்று கூறி அவரின் உணர்வுகளுக்கு அணை போட்டு விடுகிறார்.

மரியாவின் ஆண் குழந்தை 'மாக்ஸ்'க்கு நான்கு வயதாகும் போது, மரியா ஒரு File/ஐத்  தன் வீட்டில் கண்டெடுக்கிறாள். அதன் மூலம் தன் கணவன் ஒரு புலனாய்வுப் பத்திரிக்கையாளர் என்று தெரிய வருகிறது. அதில் உள்ள அறிக்கையைப் படித்து, ஒசிரிஸ் 2 என்பது கம்யூனிஸவாதிகளின் ஒரு ரகசிய அமைப்பு என்றும், பதவிக்காக கொலை, ப்ளாக்மெயில் போன்றவற்றில் ஈடுபடும் அந்தப் பயங்கரவாத அமைப்பின் தலைவர் - ஜட்ஜ் ஹெரிக் பெச்டர் என்றும் தெரிந்து கொள்கிறாள். எனவே அதை ஒரு பப்ளிக் பிராக்ஸிக்யூட்டரிடம் ஒப்படைத்து விட்டு வீடு திரும்பிய சற்றைக்கெல்லாம், ஒசிரிஸ் தலைவரால் ஏவப்பட்ட கொலைகாரனால், மாக்ஸ் கண்ணெதிரே மரியா கொல்லப்படுகிறாள். அதுவரை அடிக்கடி மரியாவைப் பார்க்க பெர்லின் வந்துச் சென்ற ரெனி, மரியாவின் மரணத்திற்குப் பிறகு ஒரேடியாக லுசெர்ன் சென்று செட்டிலாகி விடுகிறார். 

மாக்ஸ் எப்படியோ கஷ்டப்பட்டு, எங்கோ வளர்ந்து பெரியவனாகி, ஒரு டிவியில் பணியில் சேர்ந்து விடுகிறான். ஒரு முறை அவனுடைய கேலி, கிண்டல், பரிகாசம் நிறைந்த VOX நிகழ்ச்சிக்காக ஒரு அரசியல்வாதியை பேட்டி எடுக்க கலாய்த்து விட்டு, அன்று காலையில் தான் புரட்டிய பழைய புத்தகத்தில், தன் தந்தை பேனாவால் எழுதியிருந்த ஒஸிரிஸ் 2 என்ற வார்த்தையை ராஜாங்க ரகசியமாக கேமரா முன் குறிப்பிடுகிறான். இந்த VOX நிகழ்ச்சியை எதேச்சையாக, லுசெர்ன்/ல் தன் வீட்டில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த ரெனி பார்க்க நேரிட்டது. தற்போது அவருக்கு 90 வயது. மூளையில் புற்று நோய் ஏற்பட்டு அவரின் நாட்கள் எண்ணப்படுவதாக, லுசெர்ன் மருத்துவமனை அளித்த அறிக்கையை, அதற்கு சற்று முன்னர் தான் வாங்கி வந்திருந்தார். வீட்டிற்குள் நுழைந்த கணமே, மரியாவின் பழைய நினைவில் மூழ்க ஆரம்பித்தவருக்கு, இந்தக் காட்சி பேரதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்தது. அதன் காரணமாக தன் கையில் பிடித்திருந்த மது கோப்பையை தவறவிட்டதால், அது கீழே விழுந்து சுக்கு நூறாக நொறுங்கியது.

ஒஸிரிஸ் 2 - என்று மாக்ஸ் உச்சரித்த கணத்திலேயே, அவனுடைய உயிர் இன்னும் சில மணி நேரங்களே என்பதை ரெனி புரிந்து கொண்டதே அவரின் அதிர்ச்சிக்கு காரணம். ஒருபக்கம் மரியாவின் நினைவு, மறுபக்கம் மூளை புற்று நோயால் விரக்தி என்று சோர்ந்திருந்த ரெனி, தான் 24 வருடங்களுக்கு முன் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேட விரும்புகிறார். 

உடனே பயணம் மேற்கொண்ட அவர், அன்று இரவு பெர்லினில் உள்ள மாக்ஸின் வீட்டை அடைகிறார். ரெனி, தன்னிடம் உள்ள மாஸ்டர் கீ மூலம் கதவைத் திறந்து உள்ளே நுழையும் போது, 'மார்ட்டினா ப்ரென்னர்' என்ற கொலைகாரி, மாக்ஸின் கழுத்தை டை'யால் இறுக்கி கொலை செய்ய முயல்கிறாள். மாக்ஸ் மயங்கிவிட்ட அந்தநிலையில்,  அந்த முயற்சியை இலாவகமாக தடுத்து, அவளை மாடியிலிருந்த ஜன்னல் வழியாக கீழே தள்ளி விட்டு அவளின் மரணத்தை உறுதி செய்யும் ரெனி, போலிஸ் விசாரணையின் போது மாக்ஸ் மாட்டாமல் இருக்க, அரசாங்க வக்கீல் ஹெலின்/க்கு போன் செய்து அனாமதேய தகவலும் தெரிவிக்கிறார். இந்தக் கொலை சம்பவம் விடியகாலை 2.55 க்கு நடைபெறுவதற்கு காரணமே, மாக்ஸ் தன் அலுவலக தோழர்களுடன் மூக்கு முட்ட நன்றாக குடித்து விட்டு, அங்கு இவனுக்குத் தெரியாமல், இவனை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த மார்ட்டினா ப்ரென்னர் என்ற தொழில்முறை கொலைகாரியை  வீட்டிற்கு தள்ளிக் கொண்டு வந்ததே காரணம். 

மாக்ஸிடம் அறிமுகம் செய்து கொள்ள, சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து நின்ற ரெனி'க்கு, மறுநாள் அந்த வாய்ப்பு வலிய வந்து சேருகிறது. மாக்ஸ் செல்லும் திசையில் எதிர்பட்ட, மூன்று தீவிர கம்யூனிஸ்ட்களால் மாக்ஸ் தாக்கப்பட, பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த ரெனி, அவர்களை மிகவும் எளிதாக அடித்து வீழ்த்துகிறார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு இருவருக்கும் அறிமுகம் ஆனாலும், மாக்ஸ் தன்னுடைய பால்ய கால நினைவுகளை மீட்டெடுக்க முடியவில்லை. 

அரசாங்க வக்கீல் ஹெலின், மாக்ஸின் வழக்கைப் பற்றி தன் தந்தையும், ஒஸிரிஸ் 2 ஜெர்மானிய தலைவருமான ஹெரிக் பெச்டரிடம் அறியாமல் விவாதிக்க, அவளிடம் இருந்து இந்த வழக்கை பிறகு பிடுங்கிக் கொள்ள அதுவே காரணமாகிறது. இதனிடையில் மாக்ஸ் குடும்ப போட்டோ ஆல்பத்தின் மூலம், பீட்டரின் நெருங்கிய நண்பரான 'கார்ல் பாயர்'/ஐத் தேடி, அவரின் சகோதரி 'இன்கா' வீட்டிற்கு ஹெலின், மாக்ஸ், ரெனி மூவரும் செல்கிறார்கள். ஆனால் அவளோ,  தன் சகோதரன் எங்கிருக்கிறான் என்றுத் தனக்கு தெரியவே தெரியாது என்று சாதிக்கிறாள். ஆனால் அங்கிருந்த ஏர்மெயில் கவர் மூலம், கார்ல் பாயர் இருப்பது, போலந்திலுள்ள போஸ்னான் என்று ரெனி கண்டுபிடிக்கிறார். அதன்பிறகு தன்னுடைய அதிரடி வழிமுறை மூலம்,  எல்லா விஷயங்களையும் அன்றைய இரவே கண்டுபிடிக்கிறார். பீட்டரும், அவர் நண்பரும் போட்டோகிராபருமான கார்ல் பாயர்/ம் ஒருமுறை ஒஸிரிஸ் 2 சம்பந்தப்பட்ட கொலை ஒன்றைப்  படம் பிடிக்கிறார்கள். ஏற்கனவே ஒஸிரிஸ் 2 சம்பந்தமாக புலனாய்வு செய்து வந்த காரணத்தால் பீட்டர், தொடர்ந்த நாட்களில் கொலை செய்யப்படுகிறார். இதில் பீதியுற்ற கார்ல் பாயர், போஸ்னான் சென்று பதுங்கி வாழ்கிறார் என்பதே அந்த உண்மை.

இதற்கிடையே ஹெலினிடம் இருந்து மாக்ஸின் வழக்கு பறிக்கப்பட்டு, இன்னொரு அரசாங்க வக்கீலான நியூமானுக்கு  கொடுக்கப்படுகிறது. இதற்கு அவளின் தந்தை ஹெரிக் பெச்டர் தான் மறைமுகமான காரணகர்த்தாவாக இருக்கிறார். அதேநாளில், திரும்பவும் மாக்ஸை  கொல்ல  இருவர், மாக்ஸின் வீட்டிற்குள் நுழைகிறார்கள். அந்த இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, திரும்பவும் மாக்ஸ்/ஐ ரெனி காப்பற்றுகிறார்.  அந்த நிகழச்சி, மாக்ஸின் பால்ய நினைவுகளையும், தன்னுடைய தாயான மரியாவின்   மரணத்தையும் கண்முன்னே கொண்டு வருவதாக அமைந்து விடுகிறது. அங்கு வரும் ஹெலினா, ரெனி ஒரு தொழில் முறை கொலைகாரனகத் தான் இருக்க முடியும் என்று சந்தேகப்பட, ரெனியும் ஒத்துக் கொண்டு அவளிடம் சரணடைகிறார்.  ரெனியை நியூமானிடம் ஒப்படைக்க அழைத்துச் செல்கிறாள் ஹெலினா.  ஆனால், நியூமானின்  அணுகுமுறை பிடிக்காமல், மீண்டும் மாக்ஸ் வீட்டிற்கே திரும்புகிறாள்.

மூளை புற்று நோயின் தீவிரத்தால், தன்னுடைய வாழ்நாள் இன்னும் சில நாட்களே  என்பதாலும், எப்படியும் ஹெலினா தன்னை போலீசில் ஒப்படைத்து விடுவாள் என்பதாலும், தன்னுடைய ஒரு தலைபட்ச காதலி மரியாவின் கணவன் பீட்டரின் மரணத்திற்கு பிராயச்சித்தம் தேடும் வகையிலும், தன் அளப்பரிய சொத்திற்கு ஒரே வாரிசாகப் போகும் மாக்ஸின் மனதில் நீங்கா இடம் பிடித்து மரணத்திற்குப் பிறகு வாழவும் - மாக்ஸின் கையால் மரணத்தை தழுவ முடிவு  செய்கிறார் ரெனி. அதே நேரம் கொலைகும்பல் ஒன்றும்  மாக்ஸின் வீட்டை நெருங்க, அங்கே ஒரு துப்பாக்கிச் சண்டை நடக்கிறது.

ஏற்கனவே தன்னிடமிருந்த க்ளாக் 17 ரக பிஸ்டலை மாக்சிடம் கொடுத்து, கதவைத் தட்டாமல் தடாலென்று உள்ளே வருகிறவனுக்கு உன் உயிர் தான் குறி - என்று எச்சரிக்கிறார். இதே வழிமுறையில் தான் மரியாவின் மரணமும் நிகழ்ந்தது என்பதை  மாக்ஸ் அறிந்திருந்தான். வெளியில் சென்று கொலை கும்பலை அழித்து கொண்டிருக்கும் போது, மரியாவும் துப்பாக்கியுடன் ஒருவனை குறிப்பார்க்க, அவனோ  இவளைச் சுடாமல் விட்டுச் செல்கிறான். இதைக் கவனித்த ரெனி, அவளின் கழுத்தை நெருக்கி மயக்கமுறச் செய்து, ஒவ்வொருவனாக, அனைவரையும்  சுட்டு வீழ்த்தி, இந்த வயதிலும் தான் ஒரு தலைசிறந்த தொழில் முறை கொலையாளி என்பதை நிரூபிக்கிறார்.

மயக்கம் தெளிந்து எழுந்த ஹெலினா, இறந்து கிடக்கும் ஒருவன் முகமூடி இல்லாமல் இருப்பதை பார்த்தவுடன், நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்து கொள்கிறாள். உடனே பதறியடித்து, மாஸின் அறைக்குள் கத்திக்கொண்டே நுழைகிறாள். ஆனால், அதற்கு முன்பே மாகஸ் ரெனியை சுட்டு கொன்று வீழ்த்தி விடுகிறான். மரணத்தின் வாயிலில் இருக்கும் நிலையில் கூட, உண்மையச் சொல்லாமல், உன் கையால் சாக வேண்டும் என்றே முகமூடி அணிந்து வந்ததாக ரெனி  கூறுகிறார்.  மேலும், ஹெலினா உன்னை அவர்கள் கொல்லக் கூடாது என்பது மேலிடத்து உத்தரவு என்று ஒரு புள்ளி வைத்து விட்டு இறந்துப் போக, ஹெலினா அந்தப் புள்ளியில் ஒரு கோலமே போட்டு விடுகிறாள்.  அந்த நேரம் தன் தந்தையிடம் இருந்து ஹெலினாவுக்கு போன் வருகிறது.  தான் இங்கிருப்பதை நியூமான்   தான், தன் தந்தையிடம் தெரிவித்ததை அறிந்து, தன் வீட்டில் உள்ள இரகசியக் காப்பறையில் இருந்து, மாக்ஸின் தந்தை பீட்டரின் புலனாய்வு அறிக்கையை கைப்பற்றுகிறாள்.  உண்மையை தெரிந்து கொண்ட ஹெலினா, அந்நேரம் வந்த தன் தந்தையிடம்  மனக் குமுறலை கொட்டுகிறாள். அவர்  ஒரு துரோகி என்றும், போலீசில் ஒப்படைக்கப் போவதாக கூறிக்  கொண்டே வெளியேற, ஹெரிக் பெச்டர் தன்னைத் தானே துப்பாகியால் சுட்டுக் கொண்டு இறக்கிறார். இதனிடையில் மாக்ஸிடம்,  லுசெர்ன் நோட்டரி, ரெனியின் உயிலைப் பற்றி தெரிவிக்க, அவன் ஹெலினாவிடம் ஓடுகிறான். தந்தை இழப்பால் தவித்திருந்த அவளிடம், ஏற்கனவே அவர்கள் இருவருக்குள்ளும் அரசல் புரசலாக இருக்கும் காதலை  வெளிப்படுத்தி,  ஸ்விட்சர்லாந்து செல்ல அழைக்க, ஹெலினாவும் புதிய வாழ்க்கைக்கு காதலுடன் ஓகே சொல்கிறாள்.

தந்தையை இழந்த ஹெலினாவும், ரெனியை  இழந்த மாக்ஸும் துயரத்தில் தான் பல காலம் இருப்பார்கள் என்று நினைக்கும் போதே, லுசெர்ன்/ல் இருக்கும் ரெனியின் இருபது  மில்லியன் யூரோக்கள்   பெறுமானமுள்ள மாளிகைக்குள் நுழைந்த மறுகணமே, செல்வம் தந்த போதையால், காதல் போதை தலைக்கேறி  சல்லாபம் செய்கிறார்கள்.  ஆனால் விதி வலியது அல்லவா? அச்சமயம்,  ரெனியின் லேப் டாப்/ற்கு ஒரு மெயில் வருகிறது. அதற்குள் கொஞ்சம் யூகித்திருந்த மாகஸ், password மரியா என்று அடிக்க மெயில் திறந்து கொள்கிறது.   அதில் இருக்கும் FTP/ல்  ஒரு ஒப்பந்தத்தை காண்கிறான். அது அவர்கள் இருவரையும் கொள்வதற்காக, ரெனி என்ற தொழில் முறை கொலையாளிக்கு வந்திருக்கும் மரண ஒப்பந்தம் என்பது தெரிந்து திக்கித்து நிற்கிறான்.

இனி, தான் அனுபவிக்கப் போகும் சொத்துகள் அனைத்தும் பலரின்  கொலை மூலமாகவே சம்பாதித்து என்பதை  அறிந்து, அதை அனுபவிக்காமல் இருக்கப் போகிறானா அல்லது தப்பான வழியில் ரெனி சம்பாதித்து இருந்தாலும், தனக்கு பரிகாரமாக வந்த சொத்துகள் தானே என்று, வாழ்க்கையை சுகபோகமாக அனுபவிப்பானா என்பதை காலம் தான் முடிவு செய்யும் !

- முற்றும் -


கிராபிக் நாவல் என்றால் என்ன? அது, ஒரு நாவலைப் போன்ற  முயற்சி ; அது, ஒரு ஒன் ஷாட் கதை - என்ற கதையை எல்லாம் விட்டு விட்டு யதார்த்தத்திற்கு வருவோம். அழுத்தமான கதைக்களம் ; யதார்த்தமான கதை ; சுவாரசியமான தேடல் ; அந்தக் கதையைச் சொல்லும் போது வேண்டுமென்றே சில விஷயங்களைச் சொல்லாமல் விடுவது ; சொல்லாமல் விட்ட வார்த்தைகளுக்குப் பதிலாக, சித்திரத்தில் குறிப்பு தருவது ; படிப்பவர் மனதில்    தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு, ஒரு சோகத்தை பின்புலமாக கொண்டிருப்பது ; முதல் முறை படித்தவுடன் புரியாதபடிக்கு, வேண்டுமென்றே குழப்புவது ; கடைசியில், இப்படி நடந்து இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று, வாசகர்கள் ஆதங்கப்படும் வகையில் முடிவை கொண்டிருப்பது என - நாம் இதுவரை படித்த கிராபிக் நாவல்கள் அனைத்தும்  இப்படித்தான் இருந்தன. இனிமேலும் இப்படித்தான் இருக்கும் !

ஒவ்வொரு பொய்யிலும் கொஞ்சம் உண்மை கலந்திருக்க வேண்டும் ; ஒவ்வொரு உண்மையிலும் கொஞ்சம் பொய் கலந்திருக்க வேண்டும் ; கடைசியில், கதையில் வரும் சம்பவங்கள் உண்மையா அல்லது பொய்யா என்ற மயக்க நிலையை, ஒரு காமிக்ஸ் கொண்டு வந்தால் அது கிராபிக் நாவல் என்றும் வேறுவகையில் அர்த்தம் கொள்ளலாம் !

காமிக்ஸ் வேறு, கிராபிக் நாவல் வேறு ! இரண்டு இரசனைகளும் ஒன்றாக, ஒரு புள்ளியில் சங்கமிக்கும் என்று சொல்லவே முடியாது. கிராபிக் நாவலை ரசித்துப் படிக்கும் வாசகர்களுக்கு - லக்கி லூக், சிக் பில், ரின் டின் கேன், ப்ளு கோட்ஸ், யகாரி, சுட்டி லக்கி போன்ற கார்ட்டூன் ரகக் கதைகள் - குபீர் சிரிப்பை வரவைக்காமல் போகலாம். ஆனால், காமெடிக் கதைகளுக்கு விழுந்து விழுந்து சிரிக்கும் காமிக்ஸ் வாசகர்களுக்கு - பயங்கரமான தலைவலி வந்தே தீரும் என்பது மட்டும் நிச்சயம் !

கிராபிக் நாவல் படிக்கும் போது, ஒவ்வொரு பக்கத்திற்கும் ஏன்? ஏன்? என்ற கேள்வி எழும் ; விடை எங்கே? எங்கே? என்று சிறுமூளையும் பெருமூளையும், மூலை முடுக்கெல்லாம் தேடும் ; இரணமானதொரு வலி சுவடின்றி, மனதிற்குள் மெல்ல மெல்ல குத்துக் காலிட்டு அமரும் ; கடைசியில் ஙா..ஙா..ஙா.. நை..நை..நை.. ஙன..ஙன.. ங்ன..ங்ன.. என்று - காதல் பரத் போன்று உங்களுக்குள் ஒரு ஃபீலிங் வந்தால், நீங்கள் ஒரு தீவிரமான காமிக்ஸ் வாசகர் மட்டுமல்ல, குழந்தை மனமும் கொண்டவர் என்று அர்த்தம் !

இப்படிப்பட்ட குழப்பமான நிலையை நீங்கள் வெகுவாக ரசித்தால் - நீங்கள் ஒரு கிராபிக் நாவல் ரசிகர் என்று அர்த்தம். அதே சமயம், இந்தக் காமிக்ஸ் சமூகம் உங்களுக்கு அறிவு ஜீவி என்ற பட்டத்தை அளிக்க தயாராக இருக்கும். ஆனால், உங்களின் காமிக்ஸ் மனம், காணாமல் போய்  வெகுகாலம் ஆகிவிட்டது என்றும்  அர்த்தம் கொள்ளலாம்.  உங்களால் லாஜிக் இல்லாத கதைகளை  ரசிக்கவோ ; கார்ட்டூன் கதைகளுக்கு விழுந்து விழுந்து சிரிக்கவோ முடிந்தால், நிச்சயமாக நீங்கள் ஒரு அதிசயப்பிறவி தான் !

பெரும்பாலும், நாம் காமிக்ஸ் படிப்பதே அன்றைய நாளின் பிரச்சனையை மறப்பதற்கு தான் ; நாம் காமிக்ஸ் படிப்பதே அழகான கற்பனை உணர்வுகளால் மனதை இலேசாக மாற்றத்  தான் ; நாம் காமிக்ஸ் படிப்பதே ஒரு சுவாரசியமான  பொழுதுபோக்காக இருக்கும் என்பதால் தான் ; இதிலும் நை நை என்று, பிக்கல்  பிடுங்கல் மட்டுமே வருமென்றால், அதற்குப் பதிலாக ஒரு ராஜேஷ்குமார் க்ரைம் நாவலையோ அல்லது சுபா நாவல்களையோ படித்து விட்டு சென்று விடலாமே ?!

ஸ்பைடர்களும், ஆர்ச்சிகளும் நிறைந்த உலகிலிருந்து நாம் பயணித்துள்ள தூரம் அசாத்தியமானது தான் என்றாலும் - ஆழ்ந்த கதைக்கரு உள்ள கிராபிக் நாவல்களைப் படிக்க, நம் இரசனையை மேலும் மேலும் வளர்த்து கொள்வதன் மூலம்,   லாஜிக் இல்லாத கதைகளிலிருந்தும் நாம் வெகு தூரம் பயணித்து விடக்கூடாதே என்பது தான் என் ஆதங்கம். ஏற்கனவே நமக்கு கேப்டன் டைகர் கதைகள் போரடித்து விட்டன. டெக்ஸ் வில்லர் கதைகளில்  இருக்கும் ஓட்டைகளைப்  பெரிதாக அலசவும் ஆரம்பித்து விட்டோம். நிலவெளியில் ஒரு நரபலி - படித்தவுடன் பூத வேட்டை நமக்குப்  போரடித்தது ; நில் கவனி சுடு  - படித்தவுடன் சட்டம் அறிந்திரா  சமவெளி போரடிக்கிறது. இதில் நம் இரசனையை இன்னும் வளர்த்து கொள்ள, அழுத்தமான கதைகளும்,  நுணுக்கமான லாஜிக் தேடலும் உள்ள கிராபிக் நாவலை ஆராதிக்க கற்றுக்  கொண்டால், டெக்ஸ் வில்லர் கதைகள் கூட சின்னப்பிள்ளைகள் சமாச்சாரமாக தெரியும் அபாயம் இருப்பதையும் இங்கு சொல்லாமல் இருக்க முடியவில்லை !

இன்றும் கூட, பிரளயத்தின் பிள்ளைகள், எமனின் திசை மேற்கு, ஒரு சிப்பாயின் சுவடுகள், இறந்த காலம் இறப்பதில்லை என - இந்த கிராபிக் நாவல்கள் ஏற்படுத்திய பாரம் மனதில் இருந்து   இன்னும் அகலவே இல்லை. இதை வெற்றி என்று கொண்டாடும் அதே வேலையில், நம் மனதை பட்டாம் பூச்சியாய் பறக்க வைத்து இலகுவாக்கிய, டெக்ஸ் வில்லர்/ன் கதைகள் நமக்கு மொக்கையாக தெரிய ஆரம்பித்துள்ள பரிமாணம்  - ஒரு தோல்வியின் ஆரம்பமாக ஏன் இருக்கக் கூடாது என்பதே என் கேள்வி ?

13 comments:

 1. // நம் மனதை பட்டாம் பூச்சியாய் பறக்க வைத்து இலகுவாக்கிய, டெக்ஸ் வில்லர்/ன் கதைகள் நமக்கு மொக்கையாக தெரிய ஆரம்பித்துள்ள பரிமாணம் - ஒரு தோல்வியின் ஆரம்பமாக ஏன் இருக்கக் கூடாது என்பதே என் கேள்வி ? //

  Same Blood! ரசனை விஷயங்களில் ஏறுமுகம் என்ற ஒன்று உண்மையில் இருக்கிறதோ இல்லையோ, பொழுதுபோக்கு விஷயங்களில் இறங்குமுகம் மட்டுமே ஆத்ம திருப்தியை தரக்கூடியது. இலகுவான விஷயங்கள் எவையும் சிறந்த பொழுதுபோக்கு சாதணமே! அந்த வகையில் டெக்ஸ் வில்லர் / லக்கி கதைகளை என்னுடைய 60 ஆவது வயதிலும் படிக்க வாய்ப்புள்ளது.

  அட்வென்ச்சர் & அமானுஷ்யம் சம்பந்தப்படாத, ஆழமான க்ராஃபிக் நாவல்கள் அனைத்தும் நமது பொழுதுபோக்கின் தன்மையையும் அதன் தொடர்ச்சியாக நமது Life Style'ஐயும் மாற்றக்கூடிய சக்திபடைத்தவை என்பதை சில ஆண்டுகளுக்குமுன் லேசாக உணர்ந்திருக்கிறேன். இப்போது ஆழமாக!

  ஒரு கட்டத்தில் டிடெக்டிவ், அட்வென்ச்சர் ரகங்களைக்கூட மூட்டைகட்டிவிட்டு Walt Disney கார்ட்டூன்கள், Thumbelina போன்ற Fairy Tale வகையறாக்களிலும் முழுகவேண்டிய கட்டாயமே கூட எனக்கு வந்தது (குறிப்பிட்ட காலத்தில் அவைமட்டுமே என் 16 மணிநேர வேலைப்பளுவுக்கு ஒத்தடமாக அமைந்தன).

  Thanks for this detailed post MM! :)

  ReplyDelete
  Replies
  1. அருமையான பின்னூட்டம் Mr.ரமேஷ் ! சிந்தனைக்கும், ஆராய்ச்சிக்கும் உரிய ஆழமான கருத்துகள் என்பதில் சந்தேகமே இல்லை. காமிக்ஸ் படிப்பது என்பது வெறும் பொழுதுபோக்கு தான் என்றாலும், அதையும் கடந்து, நம் வாழ்க்கையில் சில மாற்றங்களை உண்டு பண்ணும் சக்தியாகவும் காமிக்ஸ் விளங்குகிறது என்பதை உங்கள் பின்னூட்டத்தால் உணர முடிகிறது !

   டெக்ஸ் வில்லர் கதைகளைப் படித்ததால் மட்டுமே, இழந்த தங்களின் தன்னம்பிக்கையை பெற்றதாக, ஏற்கனவே சில வாசகர்கள் தெரிவித்தப்படி - உண்மையாகவே பல அற்புதங்களை நம் வாழ்க்கையில் நிகழ்த்தும் மாயாஜாலம் தான் காமிக்ஸ் என்பதில் நானும் உடன்படுகிறேன். வாழ்க்கையின் பல சோதனையான காலக்கட்டங்களை, கடக்க உதவும் தோணியாக காமிக்ஸ் திகழ்கிறது என்றால் அதில் குறையேதும் இல்லை !

   Delete
  2. நான் மிகவும் ரசித்த உங்களின், இறந்த காலம் இறப்பதில்லை - லயன் ப்ளாக் கமெண்ட்ஸ் !

   1.//*மிஸ்டர் மரமண்டை குறிப்பிடுவது ரசனைகளின் Wideness சம்பந்தப்பட்ட விஷயமில்லை, மாறாக Strain level சம்பந்தமானது என நினைக்கிறேன். காமிக்ஸை இலகுவான பொழுதுபோக்காக மட்டும் ஏற்பவர்கள் க்ராபிக் நாவல்களின் சிக்கலான Plot'களை ஏற்பது Rare case. அதே நேரம் கிராபிக் நாவலை விரும்புவோர் டாம் & ஜெர்ரியைகூட முழுமையாக (சிரித்தோ / சிரிக்காமலோ) பார்ப்பது சாத்தியம்.

   இறந்த காலம் இறப்பதில்லை, கதையை பொருத்தவரையில் எனக்கு இப்படி தோன்றியது. இவ்வளவு Strain பண்ணி இதை இப்போது படிப்பதற்கு பதிலாக அடுத்தவாரம் பார்த்துக்கலாமோ? எனக்கு லக்கி லூக்கை கையிலெடுக்கும்போது இம்மாதிரி தோன்றியதில்லை. So I can categorize myself as a simple / cartoon lover rather than a (graphic) novel lover.*//

   2.//*எல்லாவற்றையும் ரசிப்பது என்பது Special case. ஆனால் செலக்டிவாக வேண்டியது எது என்பதை தேர்ந்தெடுத்து படிப்பதுதான் பொதுவான வழக்கம், உலக நடைமுறை. விதிவிலக்குகளை ஆராய்வது வேஸ்ட்! நமக்கும் ஒரு 20 வெரைட்டிகளில் மாதா மாதம் காமிக்ஸ் வெளிவந்தால், க்ராபிக் நாவல் ரசிப்பவர்கள் ஒரு வட்டமாகவும், கார்ட்டூன் வகைகளை ரசிப்பவர்கள் தனி வட்டமாகவும் இருப்பதை காணமுடியும். இரண்டு வட்டத்திலும் கால் வைப்போர் இருப்பார்கள் - அதன்எண்ணிக்கைக்கும் ஆழத்துக்கும் உறுதி கிடையாது. தினமும் மதியான வேளையில் பரோட்டா சாப்பிடுவோருக்கும் தயிர் சாதம் சாப்பிடுவோருக்கும் நாக்கில் வித்தியாசம் இருக்காது. செரிமானத்தில் பெரிய வித்தியாசம் இருக்கும், அதுபோலதான் இதுவும்*//

   Delete
 2. அட்டகாஷ்!

  நீங்கள் அனுப்பிய குருஞ்செய்தி கிடைத்தது, நன்றி.

  ReplyDelete
  Replies
  1. கேட்கக்கூடாத கேள்வி:

   அந்தக் குறுஞ்செய்தியில் என்ன இருந்தது?

   Delete
  2. King Viswa : //*நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்தி கிடைத்தது, நன்றி.*//

   ஆச்சரியமாக இருக்கிறது நண்பரே ! தங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்ப, என்னிடம் தங்களின் மொபைல் நம்பர் இல்லை. அதேபோல், தங்களுக்கு ஈமெயில் அனுப்பவும், என்னிடம் தங்களின் மெயில் id யும் இல்லை. வேறு யாராவது தங்களிடம் விளையாடி இருப்பார்களோ என்ற ஐயம் அழுத்தமாக ஏற்படுகிறது !

   இயலுமெனில், அந்த செய்தி என்னவென்று இங்கு பகிர்ந்துக் கொள்ளலாமே ?!

   Delete
  3. @மிஸ்டர் மரமண்டை,
   கடவுளே... இந்த குழப்பத்தில் நீங்களும் பலிகடாவா? ;)

   @King Viswa,

   ஏற்கெனவே கேட்கவேண்டும் என இருந்தேன். லயன் ப்ளாகில் இவை வேண்டாம் என்பதால் இங்கே கேட்கிறேன். தயவுசெய்து இதனை Casual'ஆக எடுத்துக்கொள்ளவும்.

   பின்னூட்டங்களில் எதையாவது பேசிக்கொண்டிருக்கும்போது புதிய நபர்களிடம்கூட "அடுத்த வாரம் அங்கே சந்திப்போமா", "இந்த நாளில் இங்கே சந்திப்போமா" என கேட்டுவிடுகிறீர்கள். இதுவரை நான் தங்களை நேரில் சந்தித்ததில்லை. இயல்பாகவே சந்திப்பதற்கான அவசியமும் இல்லை. (Think about it. We can't meet someone just because of our familiarity/friendship through comics blogs or social media)

   இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் இவற்றை மனம் நோகாமல் எப்படி நாசூக்காக மறுப்பது என்ற விஷயமே ஒரு தர்மசங்கடத்தையும் தருகிறது. வேலை நேரத்திற்கிடையில் எனக்கு கருத்துக்களை பகிர அவகாசம் கிடைக்கிறது சார், ஆனால் கண்டிப்பாக நேரடி சந்திப்பு எனும்போது பக்கத்துத்தெரு நண்பராக இருந்தாலும் எனக்கு நேரமில்லை!

   Delete
 3. கிராபிக் நாவல் வாசிப்பது இலக்கியம் வாசிப்பது போல உழைப்பை கோருவது.எனவேதான் பலருக்கும் பாகற்காய்.இலக்கிய வாசிப்பில் வரிகளுக்கிடையே நம் கற்பனையை நிரப்பி வாசிப்பது போல தவளை பாய்ச்சலில் செல்லும் கிராபிக் நாவல்களும் வாசிப்பின் அடுத்த நிலைக்கு
  நம்மை மேம்படுத்துகின்றன என்பதை உங்கள் பதிவு வெளிச்சமிடுகிறது.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. Thirumavalavan p : வருகைக்கும், அழகான பதிவுக்கும், அழுத்தமான கருத்துக்கும் நன்றி நண்பரே !

   //*கிராபிக் நாவல் வாசிப்பது இலக்கியம் வாசிப்பது போல உழைப்பை கோருவது. இலக்கிய வாசிப்பில் வரிகளுக்கிடையே நம் கற்பனையை நிரப்பி வாசிப்பது போல தவளை பாய்ச்சலில் செல்லும் கிராபிக் நாவல்களும் வாசிப்பின் அடுத்த நிலைக்கு நம்மை மேம்படுத்துகின்றன*//

   +1

   Delete
 4. //கிராபிக் நாவல் என்றால் என்ன? அது, ஒரு நாவலைப் போன்ற முயற்சி ; அது, ஒரு ஒன் ஷாட் கதை - என்ற கதையை எல்லாம் விட்டு விட்டு யதார்த்தத்திற்கு வருவோம். அழுத்தமான கதைக்களம் ; யதார்த்தமான கதை ; சுவாரசியமான தேடல் ; அந்தக் கதையைச் சொல்லும் போது வேண்டுமென்றே சில விஷயங்களைச் சொல்லாமல் விடுவது ; சொல்லாமல் விட்ட வார்த்தைகளுக்குப் பதிலாக, சித்திரத்தில் குறிப்பு தருவது ; படிப்பவர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு, ஒரு சோகத்தை பின்புலமாக கொண்டிருப்பது ; முதல் முறை படித்தவுடன் புரியாதபடிக்கு, வேண்டுமென்றே குழப்புவது ; கடைசியில், இப்படி நடந்து இருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று, வாசகர்கள் ஆதங்கப்படும் வகையில் முடிவை கொண்டிருப்பது//

  +1

  this post of yours kind of full spoiler, not just review. but i like the way you keep the things in straight line in your way of filling the blacks!

  :)

  this is one of gem comics in our Lion brand, this is never before type of comics I feel. and perfect in terms of keeping the blocks in perfect places for curious thriller/detective type readers. this is one of my all time favorite comics ever from Lion.

  ReplyDelete
  Replies
  1. //*this is one of my all time favorite comics ever from Lion*//

   தற்போதைக்கு என்று, வேண்டுமானால் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இது நிரந்தரமல்ல எ.எ.கருத்து !

   Delete
  2. @Friend


   lets wait for next surprise.!
   :)

   Delete
  3. //*lets wait for next surprise*//

   +1

   :-)

   Delete