Follow by Email

Wednesday, 27 August 2014

அந்தி மண்டலம் ! (LMS)

காலம் ரொம்பவே கெட்டுப் போய் விட்டது ; தற்போதெல்லாம் பேய் பிசாசுகளுக்கு மரியாதை துளியும் இல்லாமல் போய் விட்டது என்பதெல்லாம் நிதரிசனமான உண்மையாகி விட்டது. போகிற போக்கில் இக்காலச் சிறுவர்கள் கூட, பேய் பிசாசு எல்லாம் உண்மையில் இருக்கிறதா என்று கேட்பார்கள் போலிருக்கிறது. ஏதோ, போன ஜென்மத்தில் பேய்கள் செய்த புண்ணியம் - சந்திரமுகி, அருந்ததீ, காஞ்சனா, 13-ம்  நம்பர் வீடு போன்ற தமிழ் திரைப்படங்கள் வெளிவந்து பேய்களை இன்னும் வாழ வைத்து கொண்டிருக்கின்றன. இன்னும் எத்தனைக் காலத்திற்கு இது செல்லுபடியாகும் என்றும் தெரியவில்லை ?!

நாம் சிறுவர்களாக இருந்த போது, கொடி கட்டிப் பறந்த - புளியமர பேய்களும் ; நள்ளிரவில் நித்தம் நம் வீதியெங்கும் உலாவரும் தீக்குளித்து இறந்தப் போன இளம்பெண் பேய்களும் ; வீட்டு வாசலையும் மீறி உள்ளே வந்து பயமுறுத்தும் எமகாத பேய்களும் இன்றைக்கு எங்கே போய்விட்டது என்றே தெரியவில்லை. கிராமத்தின் ஏரி மேட்டில் நர்த்தனம் ஆடிய மோகினிப் பிசாசுகளும் ; சோளக்காட்டிலும், கருவேலங்காட்டிலும் இரவில் சுதந்திரமாய் திரிந்த கொள்ளிவாய்ப் பிசாசுகளும் ; ஒற்றைப் பனைமர அடங்கா முனியும் ; சோற்றில் கல்லையும் மண்ணையும், வீட்டு ஓட்டின் மேலிருந்து கொட்டிய குட்டிச் சாத்தான்களும் ; செய்வினை செய்யப்பட்ட வீட்டில், பசு மாட்டின் தடம் பதித்து மறைந்துப் போகும் ஒடியனும் - இன்னும் இந்த தமிழ் மண்ணில் இருக்கிறதா என்று தேடக்கூடிய நிலையில் தானே நாம் இருக்கிறோம்?!

நள்ளிரவில் குலை நடுங்க வைத்த நடுநிசி நாய்களின் அகோர குரைப்பையும், இடைவிடா ஊளையிடலையும் இன்று நினைத்தாலும் உடல் முழுதும் ஜில்லிடுகிறது. பதறியடித்து விழித்தப் பின்பும், தொடர்ந்து கேட்ட சலங்கை ஒலியும், மொட்டை மாடியில் உறங்கிய நாட்களின் நள்ளிரவில், சுவற்றைப் பார்த்து விடாமல் குரைத்து, பயந்து பின்வாங்கி, மீண்டும் பாய்ந்து முன்னேறி சுவற்றைப் பார்த்து மட்டுமே குரைத்த வீட்டு நாயின் பாதுகாப்பையும் மீறிய குலை நடக்கமும் - அப்பப்பா.. இன்று நினைத்தாலும் முதுகுத் தண்டு ஜில்லிட்டுப் போகிறது.  இன்று எங்கே போனது இந்தப் பேய் பிசாசுகள் ?!

பேய் பிசாசுகளின் வரலாற்றை அடுத்த தலைமுறை வாசகர்களுக்கு கொண்டுச் செல்வதே தற்போது நமக்குள்ள  மிகப்பெரிய சமுதாய கடமையாகும்.  அழகான வண்ணத்தில், அடி வயிற்றைக் கலக்கும் அகோரப் பேய்களின் கதைகளை, காமிக்ஸ் மூலமாக தொடர்ந்து வெளியிடுவதன் மூலமே நம்மால் இந்த மிகப்பெரிய பொறுப்பை செவ்வனே நிறைவேற்றி சாதிக்க முடியும். ஆனால் சென்ற மாதம் வரை  நம் தமிழ் காமிக்ஸில் பேய்க் கதைகளோ ; அமானுஷ்ய திகில் கதைகளோ  சமீபத்தில்  வெளிவரவே இல்லை. இப்படி ஒவ்வொருவரும் தன் பொறுப்பை தட்டிக் கழிப்பதால் தான், பேய் பிசாச பூத இனங்களை, ஒவ்வொன்றாக நாம் இழந்து வந்திருக்கிறோம் என்பது கண்கூடு ! ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு பேய் இனம் என்று பலி கொடுத்து விட்டு, இன்று பேய் பிசாசுகள் வெகுவாக குறைந்து விட்டதே என்று, இங்கும் அங்கும் அல்லாடுகிறோம் என்பது தானே உண்மை ?!

நம்முடைய எள்ளு தாத்தா காலத்தில் - பிரம்ம இராட்சஷன் என்ற தலையாய பேய் இனம் அழிந்து போனது. நம்முடைய கொள்ளு தாத்தா காலத்தில் - பூத இனம் மண்ணோடு மண்ணானது. நம் தாத்தா காலத்திலோ - இரத்தக் காட்டேரி என்ற இன்னொமொரு கொடூர பேய் இனமும், கொள்ளிவாய்ப் பிசாசும், குட்டிச் சாத்தானும், ஒடியனும் ஒட்டுமொத்தமாய் காணாமல் போய் விட்டது. நம்முடைய அப்பா காலத்தில் மோகினிப் பிசாசுகளின் வாழ்வாதாரம் அழிந்து காற்றோடு காற்றாய் கரைந்துப் போனது. நம் காலத்தில் - கண்ணுக்கு தெரிந்தே பேய்களின் அழிவுக்கு காரணமாக இருக்கிறோம் என்பதை இங்கு எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள் ? 

இந்த ஒட்டுமொத்த அழிவுக்கு அச்சாரமாக நான் கருதுவது, அரசிளங்குமரி என்ற சினிமா படத்திற்காக,    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் இயற்றிய பாடல் ஒன்றைத் தான் :

வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க - உன்தன்
வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே - நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பிவிடாதே - நீ வெம்பிவிடாதே

நண்பர்களே, போனதை பற்றி வெம்பி இனி எந்தப் பயனும் நமக்கு கிடைக்கப் போவதில்லை. இதோ மீண்டும் ஒரு பொற்காலம் தொடக்கம் பெற்று விட்டது. இது பேய்களுக்கான வசந்த காலமாகவே என்றும்  இருக்க வேண்டும்  என்ற நம் எண்ணமும் இனி வீண்போகப்போவதில்லை. கறுப்புக் கிழவியின் சகாப்தம் முடிந்து போனாலும் அவள் விதைத்துப் போன விதைகள் தற்போது துளிர்க்க ஆரம்பித்து விட்டன. அவை யாவும் ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம்சூழ  வாழ - நம் ஆதரவை இன்றும் என்றும் அமனுஷ்யத்திற்கு காணிக்கையாக்குவோம். வாருங்கள் ஒன்றுபடுவோம் ; பேய்களுக்கான உலகை மறுசீரமைப்போம் ; அதற்குமுன் அந்திமண்டலம் அமானுஷ்யக் கதையை நமக்களித்த லயன் முத்து  காமிக்ஸ் உரிமையாளரும், பதிப்பகத்தாருமான  திரு. விஜயன் அவர்களுக்கு  நம் நன்றியை தெரிவித்து கொள்வோம் !

அந்தி மண்டலம் என்ற தலைப்பை முதன் முறையாக படித்தவுடன் எனக்குள் எழுந்த உணர்வுகளை இங்கே எழுத்தில் வடித்திருக்கிறேன். அமானுஷ்யம் தரும் உணர்வுகளே கூட, அடங்காமல் ஆர்ப்பாட்டம் செய்யும் நிலையில், அமானுஷ்யம் கண்ணெதிரில் தோன்றினால், நம்முள் இருக்கும் சகலஜீவநாடிகளும் ஒடுங்கி விடும் என்பதால் தானே திகில் கதைகளுக்கும் பேய்க் கதைகளுக்கும் நாம்  இன்றுவரை அடிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதல்லவா உண்மை !

சுகமான மனதிற்கு இதமான பொழுதில், மயிர்க்கால்கள் யாவும் குத்திட்டு நிற்க, அமானுஷ்ய அலைகள் நம்மீது குளிர் தென்றலென ஜில்லிட, அந்தி மாலையில் மருளும் பார்வை கொண்டு, எங்கோ தூரத்தில் சுழலும் சூன்யத்தை நோக்கி காட்சிகள் விரிந்தோட, காலநிலை யாவும் மறந்து, நிற்கும் இடம் கூட தொலைந்து, மேலே மேலே லேசாகி பறக்கும் உணர்வு கொண்டு, அதலபாதாளத்தில் விழுகின்ற பரிதவிப்பில் ஏற்படும் உணர்வுகளில் சகலமும் அடங்கி, உயிர் நாடியும் ஒடுங்கி மெல்ல மெல்ல அந்த மணடலத்தில் கரைந்து விடும் உணர்வையே இந்த அந்தி மண்டலம் தலைப்பு  எனக்கு தருகிறது !

இதுபோன்ற உணர்வுகளை டைலன் டாக் கதைக்களம் தருவதாக அமைந்துவிட்டால், உண்மையாகவே, எனக்கு இது ஒரு காமிக்ஸ் பொக்கிஷம் தான். தலைப்பே இப்படி ஒரு அதகளமாக அமைந்தப்பின் கதை எப்படி இருக்கும்  என்ற எதிர்பார்ப்பு நிச்சயம் மிகவும் அதிகமே ! அந்த எதிர்பார்ப்பை அந்தி மண்டலம் பூர்த்தி செய்ததா என்று கேட்டால், ஆமாம்  செய்தது - ஆமாம் செய்யவில்லை என்று அறுதியிட்டுக் கூற இயலாத அந்தி மண்டலத்து உணர்வுகளே  இன்னும் என்னுள் மேலோங்கி இருக்கிறது !


இன்வெராரி என்ற கிராமத்தில் இருக்கும் பேரழகி மேபெல் இந்த அமானுஷ்யக் கதையை, அவளைப்போலவே அழகாக,    தொடங்கி வைக்கிறாள்.   சதை உடைந்து பொலபொலவென ரத்தமேயின்றி  உதிரும் சருமம் கொண்ட இரு லைப்ரெரியன்களைப்  (librarians) பார்த்து பதறி துடித்து, காப்பாற்ற உதவிக் கோரி, கதறித் தவிக்கும் மேபெல்லை - பெல்க்நாப்பும், மிஸஸ்  லாங்கும் மடக்கிப் பிடித்து, பயத்தில் அலற அலற அவளுக்கு ஊசி போடும் போது, நமக்கு பயத்திலும், இயலாமையின் பரிதவிப்பிலும் பேச்சின்றி, துக்கமும் பயமும் தொண்டையை அடைக்க    நாமும் செய்வதறியாது திகைத்து நிற்கிறோம்.  துயிலெழுந்தப் பின் அவளும் அவ்வாறே செய்வதறியாது வீடு வந்து சேருகிறாள். ஆனால் அன்றைய இரவு தரும் கனவில் நடந்த உண்மையை உணர்ந்து, இலண்டன் நகர வாசியான, தீக்கனவு புலனாய்வு நிபுணர் டைலான் டாக்/ற்கு போன் செய்ய, நாமும் கொஞ்சம் ஆறுதலாகவே உணர்கிறோம்... இன்வெராரியின் ஃபைன் ஏரி படகுத் துறையில், தன்னுடைய புராதன  சொகுசுக் கப்பலுடன் காத்திருக்கும் சரோன்ம் அவர் புராதானக் கப்பலும் -  நம்மை திகலடையச் செய்வதாக இருக்கிறது. இதயத் துடிப்பு எகிற நாமும் அவர்களோடு பயணிப்பதான உணர்வுகள் நிச்சயம் திகில் கதைகளின் அதிர்வலைகளே ! படகு பயணத்தின் பாதியிலேயே,  மேபெல் தண்ணீருக்குள் விழுந்து தத்தளிப்பதைக் கண்டு டைலான் டாக் ஏரிக்குள் குதிக்க, நாம் பதறித் துடிக்கும் மனதோடும், ஐயோ கடவுளே அவளைக் காப்பாற்று என்ற பிரார்த்தனையும் கொண்டு பக்கங்களை கபளீகரம் செய்ய - டைலான்  டாக் எதுவுமே செய்ய இயலாமல் அவளை நீர்ச்சுழலுக்கு தாரைவார்க்கும் போது, எழுத்தில் வடிக்க இயலாத உணர்வுகள், நம்மை உள்ளுக்குள் சத்தமின்றி பதம் பார்க்கின்றன !.  
மேபெலின் மரணச் செய்தியை அவள் தாயிடம் தெரிவிக்க வரும் டைலான் டாக் - அங்கே மேபெல் உயிரோடு இருப்பதைக் கண்டு திடுக்கிடுகிறார்.  நம் கண்முன்னே நடந்த நிழ்ச்சியை, கண்கொட்டாமல் பார்த்து வந்த நமக்கோ அது எப்படி சாத்தியம் என்று யூகிக்க முடியாவிட்டாலும் சந்தோஷத்திலும், அதிர்ச்சியிலும், திகிலுடன் கூடிய  சந்தோஷ பெருமூச்சு ஒன்றை  விடுகிறோம் !  

மீண்டும் ஒரு மூடுபனி, நம்மையும் கதையின் நாயகர்களையும் இன்வெராரியின் சுடுகாட்டிற்கு அழைத்துச் செல்கிறது. அந்த  அற்புதமான மயான உணர்வுகள்  ஒரு சில நிமிடங்களே நீடிக்க, மேபெலின் வயது 61 என்று தெரியவரும் போது நம் மனம் சுக்குநூறாக உடையும் சத்தம் நமக்கே கேட்கிறது. இது என்னவிதமான உணர்வுகள் என்று இனம் காண விழையும் போதே பிணம் ஒன்று  சவப்பெட்டியிலிருந்து எழுந்திருக்க - நம் பேய்க்கதை ஆர்வமும், இந்த மானிடப் பிறப்பும் ஜென்ம சாபல்யம்  அடைகிறது !
இதற்கு பிறகு வரும் கதையில்,  மேபெலும் ஒரு ஸோம்பியே (zombie) என்பதும், அந்தக் கிராமத்தின் அத்தனை ஜனங்களும் வெறும் பிணங்களே என்பதும்,  டாக்டர்  ஹிக்ஸ் ஸோம்பிகளின் கடவுள் என்பதும், காலச் சக்கரம் சுழலாமல் நின்று போன கிராமமே இன்வெராரி என்பதும் போன்ற பல பகிர் உண்மைகள் நமக்கு தெரியவந்தாலும் அதன் பிறகு, திகிலுறையும் உணர்வுகள் மட்டும் நமக்கு வரவேயில்லை என்பது தான் மிகப்பெரிய குறை !!டைலான் டாக் - சிவப்பு சட்டையிலும் கருப்பு கோட்டிலும் மிகவும் வசீகரிக்கிறார் ! 

டைலான் டாக் உதவியாளர் பேசும் வசனங்கள் சில சமயம் கடியாக, சில சமயம் ஜோக்காக  இருந்தாலும் - நமக்கு  சிறுவயது  ஞாபகத்தை மீள்பதிவு செய்வதாகவே அமைந்திருக்கிறது. சிறுவயதில் நாம், மாலை முழுவதும் மணலில், மண்ணில், செம்மண் ரோட்டில், கடகால் குழியில், எங்கெங்கும் நிறைத்து கிடந்த காலி கிரௌண்டில் - பள்ளி அலுப்புத்தீர விளையாடி, அயர்ச்சியோடு இரவில் கும்மிருட்டில் வீடுவந்து,  கைகால் முகம் அலம்ப  கொல்லைப்பக்கம்  இருக்கும் கிணற்றிற்கு நீர் இறைக்கச் செல்லும் போது 'அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா' என்று திக்கித் திணறி பாடுவோமே - அந்த அந்தி சாய்ந்த இருண்ட பொழுதுகளை மனக்கண் முன்னே கொண்டு வருவதாக இருக்கிறது !  Well done Mr.க்ரௌச்சோ !

ஒரு ஸோம்பியான டாக்டர் ஹிக்ஸ், தன் கிராமத்து  ஸோம்பிகளுடன் மட்டுமே பழகிப்  பழகி காலமெல்லாம் போரடித்திருந்த நிலையில் - வெளி மனிதனான டைலான் டாக்/ஐக் கண்டவுடன் தன் உணர்ச்சிகளை கொட்டித் தீர்த்துவிடுவது நம்மால் புரிந்து கொள்ள கூடிய ஒன்று தான் ! பேய்களின்  கதையாக  இது இல்லையென்றாலும், பிணங்களின் கதையாக இது இருப்பதால் அந்தி மண்டலம், காலமெல்லாம் காலச் சக்கரம் சுழலாமல் ஜீவனோடு ஜீவித்திருக்க ஹிக்ஸை மனதார வாழ்த்துவோம் !


7 comments:

 1. அடடே................

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நண்பரே, நீங்களும் கறுப்புக் கிழவி கழகத்தில் ஐக்கியமாகி விடலாமே..?

   Delete
 2. Replies
  1. வணக்கம், நல்வரவு நண்பரே !

   Delete
 3. பேய் பயம் மற்றும் திகிலான உணர்வுகளுக்கு பேய்கள் காரணமல்ல என்பது என் கருத்து. (இதை மனதில் வைத்துக்கொண்டு இன்றிரவு என்னை அலைக்கழிக்க வேண்டாமே Please (போச்சு.. இன்றிரவு பேய் வராவிட்டாலும் பேயை சீண்டிவிட்டோமென்ற பய உணர்ச்சியே என்னை அலைக்கழிக்கப் போகிறது (அய்யய்யோ, வெறும் பய உணர்ச்சி என சொன்னதை சவாலாக எடுத்துக்கொண்டு இன்றைக்கு நேரில் வந்து Proof பண்ணிவிடாதீர்கள் )))

  பேய் பயம் ஒரு அற்புதமான உணர்வு. மனித நடமாட்டமும், போக்குவரத்தும் மலிந்துவிட்ட தற்காலத்தில் நாமாக ரிஸ்க் எடுத்த திகிலை உண்டு பண்ணிக் கொள்ள வேண்டிய சங்கடமான நிலையில் உள்ளோம்.

  பேய்ப்படங்களை கூட்டமாக தியேட்டரில் பார்க்காமல், வீட்டில் தனியாக இருக்கும்போது பார்க்கலாம். பேய்க்கதைகளை யாரும் வீட்டில் இல்லாதபோது நள்ளிரவில் மட்டும் படிக்கலாம் - என்ற சீரிய கொள்கையுடையவன் நான். அந்த வகையில் அந்தி மண்டலம் எனக்கு நல்ல அனுபவத்தை தந்தது. :D

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிவைப் படித்தவுடன், ஒரு நிமிடம் எனக்கே சந்தேகம் வந்து விட்டது. நம்புங்கள் ரமேஷ், நானும் மனிதன் தான் :-)

   //*பேய் பயம் ஒரு அற்புதமான உணர்வு. மனித நடமாட்டமும், போக்குவரத்தும் மலிந்துவிட்ட தற்காலத்தில் நாமாக ரிஸ்க் எடுத்து திகிலை உண்டு பண்ணிக் கொள்ள வேண்டிய சங்கடமான நிலையில் உள்ளோம்*//

   +1

   Delete
 4. அடடே................

  I am not a fan of this genre so only அடடே................

  ReplyDelete