Follow by Email

Sunday, 21 September 2014

காதலிக்கக் குதிரையில்லை !

நண்பர்களே,

வணக்கம். சில சமயம் பெரிய பின்புலம் இருக்கும் ; வரலாற்றுப் பின்னணிச் சார்ந்த  கதைக்களம் இருக்கும் ; நகைச்சுவையும், நையாண்டியும் கொட்டிக் கிடக்கும் ; ஒவ்வொரு கதையும், ஒரு உண்மைச்  சம்பவத்தைக் கூறுவதாக இருக்கும் ; பொழுது போக்கிற்கு ஏற்ற கார்ட்டூன் ரக ஓவியங்கள், தொடரின் பலமாக அமைந்து இருக்கும் !

ஆனால், அந்தத் தொடர் பலருக்கும் பிடிக்காமல் போகலாம், சில சமயம் வெற்றி அடையாமல் கூடப் போகலாம் ; இதற்குக் காரணம் - ரெண்டும் கெட்டான் கதை வரிசையாக இருக்கலாம் ; சிறுவர்களுக்கா அல்லது பெரியவர்களுக்கா என்ற குழப்பம் மேலோங்கி, குழப்பத்தை உண்டு பண்ணுவதாக அமையலாம் ; கேணங்கித்தனமான  வசனங்களும், கோணங்கித்தனமான செய்கைகளும், நம்  IQ லெவலுக்கு சவால் விடுவதாக இருக்கலாம் ; சிரிப்பிற்குப்  பதில், சில நேரம் நமக்கு கடுப்பை உண்டாக்கலாம் ; நகைச்சுவை என்ற பெயரில், அடிமட்ட முட்டாள் தனம் கதையெங்கும் நிரம்பியிருக்கலாம் ; நாம் சிரிப்பதற்குப் பதில், அரைக்கல்லை எடுத்து அவன் மண்டையை உடைக்கலாமா? என்று ஆத்திரம் வரும் அளவிற்கு காமெடி செய்திருக்கலாம்   ; இதுபோன்ற கதைகளில் வரும் 90 சதவீதம் நபர்கள், மடச்சாம்பிராணிகளாக இருக்கலாம் ; அதைப் படித்து நாமும் வாய்விட்டு சிரிக்க வேண்டுமானால், ஒன்று, நமக்கு IQ,  danger லெவலில் இருக்க வேண்டும் அல்லது மூளை என்ற வஸ்து அடிக்கடி மரத்துப் போயிருக்க வேண்டும் !

இது போன்றதொரு கதைத் தொடர் தான்,  ப்ளூகோட் பட்டாளம் ! ஒரே வகையான டெம்ப்ளேட் வகைக் கதைகள் ; கோபம் வரும் மாதிரியான காமெடிகள் ;  முட்டாள் தனமான செய்கைகள், அதற்கும் சில வியாக்கனங்கள் ; சொல்ல வருவதை தெளிவாக சொல்ல இயலாத குழப்ப நிலை ; நையாண்டி என்ற பெயரில், வடக்கத்திய ராணுவத்தை மட்டம் தட்டும் செயல் ; முத்தாய்ப்பாக கூறுவதென்றால், தெற்கத்தியப் புரட்சிப் படை ஆதரவாளர்களின் Troll தனம் என்றும் கூறலாம் !  



இந்த ப்ளூகோட் பட்டாளத்தின் கதைத் தொடரின் அனாடமி இவ்வாறு இருந்தாலும், அந்தக் குள்ளப் பயலால்  மட்டுமே இந்தத் தொடர்களை  நம்மால் ஓரளவுக்கு ரசிக்கவோ ; ரிலாக்ஸாக படிக்கவோ இயலுகிறது ! 


காதலிக்கக் குதிரையில்லை - கதைக்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லை ! காதலிக்க எதுக்குச் சாமி குதிரை என்று, டின் டின்னாக அசடு வழிய வேண்டியிருக்கிறது. வழக்கம் போல இதிலும் IQ குறைந்த ஆசாமிகள் உயர் அதிகாரிகளாக வலம் வருகிறார்கள்.  யூனியன் படையின் உயரதிகாரிகள், கேணப்பயல்களாக   காணப்படும் அதே வேலையில், புரட்சிப் படையின் அதிகாரி அதிபுத்திசாலியாக காட்சியளிக்கிறார். நம் தமிழ்நாட்டில் உலவித்திரிந்து பரப்புரையாற்றும் புலி ஆதரவு பிரச்சாரர்கள் போல், தெற்கத்தியப் படைக்கும் ஒரு பெரிய ஆதரவு கூட்டமே இருக்கும் போல் தோன்றுகிறது ! 

அதே நேரம், நகைச்சுவை என்ற பெயரில் அரங்கேறும் ப்ராங்கோ பென்னியின் கூத்துகள்,  சிரிப்புக்குப் பதிலாக, அடப் போங்கடா... நீங்களும் உங்க காமெடிகளும் என்று சத்தமாகப் புலம்பத் தோன்றுகிறது. ஒரு முறை குதிரையிலிருந்து கீழே விழுந்தாலே முன்வரிசைப் பல்லுக்கு கேரண்டி இல்லை ; எழுந்து திடமாக நிற்க எலும்புக்கும், எனர்ஜிக்கும் உத்திரவாதம் இல்லை ; இதில் மேன்மை தாங்கிய    புளிச்.. தூ.. இரவெல்லாம் பறந்து பறந்து தூர போய் விழுகிறார்.   WWF ல் கூட இத்தனை மணி நேரம் சண்டை நடப்பதில்லை !

புரட்சிப் படையுடன் போரிடுவதற்கு ஒரு இதய நோயாளியான நோஞ்சான் குதிரை, மூன்று கழுதைகள், ஒரு ஒட்டகம் ஆகியவற்றை அனுப்பிவைக்கும் மத்திய தலைமை, எப்பேர்பட்ட கூமுட்டைகளாக  இருப்பார்கள்? அவற்றைப் படித்து, அவற்றை நம்பி, நாமும் சிரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்... ரின் டின் கேன்ல் வரும் மேன்மைதாங்கிய மை கர்னல்   எவ்வளவோ புத்திசாலி  மக்கழே !



கதையின் பலம் : காதலிக்கக் குதிரையில்லை - கதையில் வரும் பல நகைச்சுவை வசனங்கள் ரசிக்க வைக்கின்றன ; சில யுத்த யுக்திகள் மலைக்க வைக்கின்றன ! உதாரணமாக, தெற்கத்திய ஜெனரலின் ரகசியத் திட்டமும், சார்ஜெண்ட் ரூபியின் மதியூகமும், குள்ளப் பயல் ஸ்கூபியின் தடாலடியும் இந்தக் கதைக்கு அச்சாணியாக திகழ்கின்றன ! செவ்விந்தியர்களின் உடையும்,  உருவமும் நம்மை சிரிக்க வைக்கின்றன ; மதியும், மதியூகமும் நம்மை பாராட்ட வைக்கின்றன ! குள்ளனின் சேஷ்டைகள் நம்பும்படியாகவும், நகைச்சுவை மிகுந்ததாகவும் இருக்கின்றன !

இதுபோன்ற கதைகளை, தற்போது நடைமுறையில் உள்ளது போன்றே தனித் தனி பாகமாக வெளியிட்டு, வேறு ஜனரஞ்சகமான கதைத் தொடர்களை, சிறிய குண்டு புக் வடிவில் வெளியிடுவதே சாலச் சிறந்தது !

ப்ளூ கோட்ஸ் - ரெண்டும் கெட்டான் ! காதலிக்கக் குதிரையில்லை - பாம்புன்னு அடிக்கவும் முடியாது, பழுதுன்னு தாண்டவும் முடியாது !பரவாயில்லை படிக்கலாம், மோசமில்லை ரசிக்கலாம், மனமிருந்தால் கொஞ்சம் சிரிக்கலாம் !

Friday, 19 September 2014

நான்... எனது... 2015..!

நண்பர்களே,

வணக்கம். எப்படியும் எடிட்டர், லார்கோ 4 இதழ்கள், ஷெல்டன் 3 இதழ்கள், கமான்சே 6 கதைகள் என்று நிச்சயமாக வெளியிடப்போவதில்லை என்பதாலும், மீண்டும் 2016ல் இதே போன்றதொரு சிந்தனையில் பதிவிட வழிவகை அமையும் என்பதாலும், இந்தப் பதிவுகள் அனைத்தையும் தொகுப்பாக படிக்கவும், கோர்வையாக புரிந்து கொள்ளும் நோக்கிலும் - இவையனைத்தையும் தனிப் பதிவாக என் ப்ளாகில் பதிவேற்றம் செய்ய விரும்புகிறேன். அடடா.. இது என்ன காப்பி பேஸ்ட் போஸ்ட் என்று யாரும் நினைக்க வேண்டாம் நண்பர்களே :​-)




1.மிஸ்டர் மரமண்டை16 September 2014 19:07:00 GMT+5:30

கிட்டத்தட்ட 30 வருடங்கள் ; குற்றம் நடந்தது என்ன? நடப்பது என்ன? நடக்கப் போவது என்ன? என அனைத்தும், அனைவருக்கும் மனப்பாடம் ; பரவசமூட்டாத நகர்வலம் ; பசியாற முடியாத வறுத்த கறி ; தாகச் சாந்தி செய்ய இயலாத சலூன்கள் ; பயந்த ரவுடிகள் ; பதுங்கும் கோழைகள் என படித்துப் படித்து - ஆயாசமாகி விட்டது ! திகைக்க வைக்கும் ஆச்சரியங்களோ ; அகலவிடாத கதைக் கருவோ இன்னும் கூட இருக்கிறதா என்ற சந்தேகம் வலுத்து விட்டது !

வயதாகிய டெக்ஸ் ; கிழமாகிய கார்சன் ; கூட்டமாய் சுற்றி நின்று சுட்டாலும், தெறித்து தூர விழவைக்கும் கவசமாய் மஞ்சள் சட்டை என கதையின் பலவீனங்கள் கண்ணுக்கும், மனதுக்கும் புலப்பட ஆரம்பித்து விட்டன ! அன்று, எல்லையின்றி பாலைவனத்தில் பரந்து விரிந்த எண்ணங்கள், கவலையோடு கதையின் பலவீனத்தில் குவிந்து, குமிந்து நிற்கின்றன இன்று ! 




2.மிஸ்டர் மரமண்டை16 September 2014 19:45:00 GMT+5:30

கைவசம் கணக்கிலடங்காத தொடர்கள் ; இன்னும் படித்தறியா கதைக் களங்கள் - ஒரு வருட slotல் இடம் கிடைக்காமல், வரிசைக்கட்டி lotல் குவிந்து கிடக்கின்றன ! அடுத்தது என்ன என்று யூகிக்க முடியாத தொடரும் பாகங்கள் ; தொட்டு விடத் துடிக்கும் மனதோடு, எட்டி நின்று ஏங்க வைக்கும் புதிய வெற்றிக் கூட்டணிகள் ; நிகழ்கால கதைகள் ; ஹாலிவுட்டை மிஞ்சும் லார்கோ வின்ச், வேயின் ஷெல்டன் திரைக் கதைகள் ; திகைக்க வைக்கும் திரில்லர் - டைலன் டாக் கதைகள் ; இன்னும் கதையின் போக்கே புரியாத மேஜிக் விண்ட் wild westன் சாகஸ கதைகள் ; கற்பனைகளைப் பகுத்தறிய விடாத யதார்த்தங்கள் ; கமான்சேவின், காமிக்ஸ் பூஞ்சோலைகள் ; தோர்கல்/ன் மாய உலகங்கள் - என இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம், ஆனால் இவையனைத்தும் நாம் ரசிக்கும் காலத்திலேயே கிடைக்க வேண்டும் அல்லவா?

இன்னும் பத்து வருடம் கழித்தும் கூட, இவை நமக்குப் புதிய வெளியீடுகளாக கிடைக்கலாம் ; நிலையற்ற ரசனையில், இவையனைத்தும் கூட, நாளை போரடித்து விடலாம் ; பழையன கழிதலும், புதியன புகுதலும் காலத்தால் கருணையின்றி செவ்வனே நடப்பவை ! காலத்தே பயிர் செய்வதும், பருவத்தே அறுவடை செய்வதும் செழிப்பான விவசாயத்திற்கு உத்திரவாதம் அல்லவா? எனவே தான், 27 வருடம் 25 வருடமாக தொடர்ந்து வெளிவரும் தொடர்கள் ; நாயகர்கள் ; டெம்ப்ளேட் வகைக் கதைகள் ; மனப்பாடமாகி விட்ட கதா நாயகனின் வசனங்கள் - நமக்குப் போரடிக்கவோ ; சலிப்படையவோ ; ஆயாசமடையவோ - ஆயத்தமாகி விட்டன ! 



3.மிஸ்டர் மரமண்டை16 September 2014 21:32:00 GMT+5:30

உண்மையைக் கூற வேண்டுமானால், கேப்டன் டைகரின் இரத்தத் தடம் கதை முதல் வெளிவந்த எந்தக் கதையும் சோபிக்கவில்லை என்பதே உண்மை. கேப்டன் டைகர் ரசிகனான எனக்கு, எடுத்தோம் ; படித்தோம் ; கவிழ்த்தோம் என்று படிக்கக் கூட முடியாமல், சுவாரசியம் குறைந்தே காணப்பட்டது. ஒன்று, ஒவ்வொரு கதையிலும் செவ்விந்தியர்களிடம் தூது போகிறார் ; கடைசியில் உயரதிகாரிக்கு அடிபணிந்து அவர்களை பலி கொடுக்கிறார். அல்லது கதையின் ஆரம்பத்தில் இவரின் உயரதிகாரி இவரை, முரடன், ராணுவ ஒழுங்கு அற்றவன், கீழ்படியாதவன் - என்று வசைபாடி விட்டு, கதையின் இறுதியில் டைகரை போல் வரவே வராது என்று பாராட்டுகிறார்கள். இதற்கு காரணம், கதையில் உள்ள வலுவற்ற தன்மையால், இவர்களே டைகருக்கு துதி பாட ஆரம்பித்து விட்டார்கள். என்னைப் பொறுத்தவரை, டைகரோ ; டெக்ஸ்சோ - கதையைப் படித்து விட்டு நாம் தான் அவர்களைப் பாராட்ட வேண்டுமே தவிர, கதையில் வரும் கதாபாத்திரங்களே - பக்கத்திற்கு ஒரு முறை வல்லவன் ; நல்லவன் ; அசகாயசூரன் என்று துதி பாடுவது ஏற்புடையதாக இல்லை !

கடைசியாக வந்த மார்ஷல் டைகர் கதையைப் பற்றிக் கூற வேண்டுமானால் - பசியோடு சாப்பிட உட்கார்ந்தவன், ஒரு வாய் கவளத்தோடு எழுந்து கைகழுவிய நிலைமையில் தான் இருக்கிறேன். இனி அடுத்த பாகம் வருவதற்குள், நமக்கு முதல் பாகம் மறந்து போயிருக்கும். இதே நிலைமை தான், அனைத்து தொடர் கதைகளுக்குமான நிலை. இதற்கு காரணம், ஏகப்பட்ட கதைத் தொடர்கள் நம் கைவசம் இருக்கும் நிலையிலும், வருடத்திற்கு 50 கதைகளுக்கு மேல் பதிவிட இயலாத வியாபார வட்டம் தான் என்பது, அனைவருக்கும் தெரிந்தே தான் இருக்கிறது. சரி, இதற்கு தீர்வு தான் என்ன? இதை அலசப்போவதே என்னுடைய இந்தப் பதிவு. மாறாக டெக்ஸ், டைகர், லக்கி லூக், சிக் பில் கதைகளை குறை சொலவதல்ல என்னுடைய நோக்கம் ! 



4.மிஸ்டர் மரமண்டை17 September 2014 09:26:00 GMT+5:30

இந்த வலைதளம் பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. மிக கடுமையான பல வாதங்களை முன் வைத்திருக்கிறது. ஆனால் இது கொஞ்சம் விசித்திரமானது. வாய்தா மேல் வாய்தா வாங்கி தினம் தினம் பதிவிட்டாலும், வருகின்ற சனிக்கிழமை இரவு வரை நமக்கு நேரம் இருக்கிறது !

2015 அட்டவணை - ஏற்கனவே, எடிட்டரால் முழுமையாக இறுதி செய்யப்பட்டு விட்டது ; இதில் புதிதாக நான் கூறி 2015ல் மாற்றம் ஒன்றும் நடக்கப் போவதில்லை தான் ; ஆனால் குறைந்தபட்சம் 2016 அட்டவணைக்காவது, இந்த எண்ணங்கள் ஒரு சிறிதளவு சிந்தனையைத் தூண்டுவதாக அமையட்டும் என்ற எண்ணத்திலேயே இந்தத் தொடர் பதிவு பதிவிடப்படுகிறது ! 

இப்படி நாம் ஒவ்வொருவரும், நம் எண்ணங்களை வெளியில் கூறாமல் இருப்பதால் தான், பல அரிய காமிக்ஸ் பொக்கிஷ குவியல்கள் நமக்கு கிடைக்காமலேயே சென்று விடுகிறது. உதாரணமாக சாகஸ வீரர் ரோஜர்/ஐக் கூறலாம். இதுவரை பார்த்திராத சாகஸப் பயணங்கள் ; ஆர்ப்பரித்து ஓடும் ஆறுகள் ; சுழித்து உள்ளிழுக்கும் சுழல்கள் ; முதலைகள் ; ஆட்கொல்லி மீன்கள் ; சூறைக்காற்று ; பேய்மழை ; அடர் வனத்திற்குள் ஒரு அட்வெஞ்சர் ட்ரெக்கிங் ; வழியெங்கும் காத்து நிற்கும் கொடூர ஆபத்துகள் ; இயற்கை சீற்றங்கள் ; பழங்குடியின் பழிதீர்க்கும் கொடூரங்கள் ; ஆப்பிரிக்காவின் இயற்கை எழில் கொஞ்சும் வனங்கள் ; புதைபொருள் அகழ்வு ஆராய்ச்சிகள் கண்டெடுக்கும் வரலாற்று ஆவணங்கள் ; இது அத்தனையும் அழகான வர்ணங்களில் என இன்னும் கூட சொல்லிக் கொண்டே போகலாம் - காலத்தின் கால் சுவடுகள்ஐப் பற்றி..!

புதையல் பாதை ; யானைக் கல்லறை/க்குப் பிறகு, அருமையான உணர்வுகளைத் தந்த அற்புதமான வெளியீடாக காலத்தின் கால் சுவடுகள் இருந்தது. ஆனால் நடந்தது என்ன? பெரும்பான்மையான வாசகர்கள் கூறியது என்ன? என்று யோசித்தோமேயானால், எங்களுக்கு அரைத்த மாவையே அரைத்து, மீண்டும் அரைத்து, அதில் விருந்து படையுங்கள் என்பதாகவே இருக்கிறது ! இதில் சம்பந்தப்படும் வியாபார இலாப நஷ்ட கணக்குகளையும் ; விற்பனை எண்ணங்களையும் ; ரசிகர் மன்றங்களின் பிரச்சனைகளையும் பிறகு பார்க்கலாம். அதற்கு முன்... 




5.மிஸ்டர் மரமண்டை17 September 2014 15:13:00 GMT+5:30

கணம் கோர்ட்டார் அவர்களே, எதிர்தரப்பு வக்கீல் சதீஷ் குமார் அவர்கள் நன்றாக வாதிடுகிறார். நல்ல பல அரிய கருத்துகளை முன் வைக்கிறார். என்னைப் போல் அல்லாமல் அவர், சட்டப் படிப்பான B.A.B.L. படித்து இந்த வக்கீல் தொழிலுக்கு வந்திருப்பார் என்றே நினைக்கிறேன் ! 

அவர் நடத்தும் குறுக்கு விசாரணையில், நான் என்ன சொல்ல வருகிறேன் என்று எனக்கே மறந்து போய் விடும் போலிருக்கிறது. எனவே, நான் எதற்காக இந்தப் பொதுநல வழக்கை இங்கே கொண்டு வந்தேன் என்றும், எதற்காக வாதம் புரிகிறேன் என்பதையும் இங்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். இந்த வழக்கின் கருப்பொருளாக நான் கருதுவது - எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே ஆகும். எதையும் வேண்டாம் என்று கூறப் போவதில்லை ; அதற்காக வருடத்திற்கு 150 வேண்டும் என்றும் கேட்கப்போவதில்லை ; அதை எப்படி சொல்லப் போகிறேன் என்றும் தெரியவில்லை ; ஏனெனில் இன்னும் எனக்கு எந்த சிந்தனையும் உதிக்கவில்லை !

ஐயோ.. கடவுளே.. இதுக்கு தான் யாரும் குறுக்க பேசாதீங்கன்னு சொன்னேன். கேட்டீங்களா? இப்ப பாருங்க நானே குழம்பி போயிட்டேன். இனி அடுத்த பதிவ போட்டா தான், நான் என்ன எழுதப் போறேன்னு எனக்கே தெரியும் :-))



6.மிஸ்டர் மரமண்டை17 September 2014 16:09:00 GMT+5:30

அதற்கு முன், வரும் 2015 எப்படியிருந்தால் எனக்குப் பிடிக்கும் என்பதை இங்கு சொல்லி விடுகிறேன். அது நடைமுறைக்கு சாத்தியமில்லா விட்டாலும், 2016ல் சாத்தியமாக, சில யோசனைகளும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். முதலில் நம் இலக்கு என்னவென்று தெரிந்தால் தான், நம் பாதை எதுவென்று புரியும் என்ற நம்பிக்கையில் விருப்பத்தைக் கூறுகிறேன். பாதை மட்டும் தெரிந்து விட்டால், அதில் பயணிக்க வருத்தமோ ; செப்பனிட சிரமமோ இருக்காது என்ற தொலைநோக்கு பார்வையில் முதலில் நமக்கு (எனக்கு) எது வேண்டும் என்று பார்ப்போமே ! 

லார்கோ வின்ச் !

இதில் குறையே வைக்காமல், எடிட்டர் இரண்டு கதைகளை (two volumes - as original) ஒன்றிணைத்து, ஒரே ஆல்பமாக தருகிறார் ; அதுவும் கைக்கு அடக்கமான அழகிய குண்டு புக் உருவில் ! முதலில் அதற்காக எடிட்டருக்கு பாராட்டும், நன்றியையும் தெரிவிப்பது என் கடமையாக கருதுகிறேன். இப்படி இரண்டு கதைகளும் ஒரே புத்தகமாக வராவிட்டால், நாம் இந்தளவு வசியப்பட்டு இருப்போமா என்பதும் கேள்விக்குறியே ! 

தற்போது 4 கதைகளை, இரண்டு சிறிய குண்டு புத்தகமாக எடிட்டர் நமக்கு தருகிறார். இப்படி நாம் படிக்கும் பட்சத்தில் இந்தத் தொடர் முடிய இன்னும் ஒரு 6 வருடங்கள் நாம் காத்திருக்க வேண்டும். அதற்குள் இதுவும் பழைய தொடராக மாறிவிடும். பழக பழக பாலும் புளிப்பது போல், இறுதி வருடங்களில் அதிகளவு விமர்சனத்திற்கும், வியாபார தேக்கத்திற்கும் வழி வகை ஏற்படலாம். அதற்குப் பதிலாக, வருடத்திற்கு 8 கதைகள் கொண்டதாக 4 சிறிய குண்டு புத்தகங்களை வெளியிட வேண்டும் என்பதே என் ஆசை ! So,

1.Largo Winch - 4 books - @ 120 !



7.மிஸ்டர் மரமண்டை17 September 2014 16:34:00 GMT+5:30

வேய்ன் ஷெல்டன் !

இதுவும் நமக்கு, குண்டு புத்தக வடிவிலேயே கிடைக்கிறது. இவர் தற்போது இரண்டாம் இடத்தில் கோலோச்சுகிறார். பரபரப்பிற்கும், கதையின் வேகத்திற்கும், விருவிருப்பிற்கும் பஞ்சமே இல்லை என்பதே இவரின் ஸ்பெஷாலிட்டி ! என்ன கருத்துக் கணிப்பு? யார் எடுத்த கருத்துக் கணிப்பு என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு, நம் சக்தியை விரயம் செய்யாமல் உண்மையை கொஞ்சம் ஒத்துக் கொள்வோமே !

இவர்களுக்கு முன், எம்ஜிஆர் - சிவாஜி ; ரஜினி - கமல் போன்று, டெக்ஸ் வில்லர் - கேப்டன் டைகர் என்ற இரண்டு குதிரை வாலாக்கள், பாலைவனத்தில் குப்பைக் கொட்டிக் கொண்டிருந்தது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம் தானே?! ஆனால் அந்தக் காலம் எல்லாம் மலையேறிப் போய் விட்டது. லார்கோ வின்ச் - வேய்ன் ஷெல்டன் என்பதே தற்போதைய trend. தற்போது இவரின் கதைகள் (two volumes - as original) ஒரு வருடத்திற்கு ஒன்று என்ற ரேஷன் முறையில் தான் கிடைக்கிறது. இதை வருடத்திற்கு 3 ஆக அனுமதிக்க வேண்டும் என்பதே என் ஆசை ! So, 

2.Wayne Shelton - 3 books - @ 120 !




8.மிஸ்டர் மரமண்டை17 September 2014 17:14:00 GMT+5:30

கமான்சே !

இந்தக் கதையைப் பற்றி எழுதச் சொன்னால், நாள் முழுக்க எழுதிக் கொண்டே இருக்கலாம். அப்படி ஒரு எனர்ஜி இந்தக் கதைத் தொடரில் கொட்டிக் கிடக்கிறது என்பதை, இதுவரை வண்ணத்தில் வந்த மூன்று பாகங்களும் நமக்கு பறைசாற்றுகின்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நமக்கு 2 கதைகள் மட்டுமே 2015ல் 60 விலையில் கிடைக்க வாய்ப்புள்ளது !

இது மற்ற தொடர்களைப் போலல்லாமல், படித்தவரை ஒன்றுகொன்று மிகவும் தொடர்பு கொண்டிருக்கிறது. ஒரு கதையை விட்டு ஒரு கதையைப் படிக்கும் போது, முழுமையான அனுபவம் கிடைப்பதில்லை என்பதே இதுவரை வந்துள்ள வெளியீடுகளின் அனுபவப் பாடம். தனித்தனியாக கதை அமைப்பு இருப்பது போல் தோன்றினாலும், இவையனைத்தும் உண்மையான தொடர்கதைகள் தான். எனவே இக்கதைகளில் காணக் கிடைக்கும் எல்லையற்ற உற்சாக உணர்வுகளை கருத்தில் கொண்டு - 3 பாகங்களை ஒன்றாக ஒருங்கிணைத்து, ஒரே புத்தகமாக 150 விலையில் தரவேண்டும் என்பதே என் ஆசை ! So,

3.Comanche - 2 books @ 150 !




9.மிஸ்டர் மரமண்டை17 September 2014 17:31:00 GMT+5:30

தோர்கல் !

இந்தக் கதையை தொடராக மட்டுமே படிக்க வேண்டும். ஏனெனில் நமக்குப் புரியாத ஒரு கதைக் களத்தில், நம் மனம் ஒன்றுவதற்கு நிறைய நேரம் பிடிக்கும். மெல்ல மெல்ல அதில் கால் வைக்கும் நிலையில், சட்டென கதை முடிந்து விடுவதாக இருப்பது மிகவும் சோகமயமான நிகழ்வாக அமைகிறது. அடி எது? முடி எது? என்று தெரியாமல் ஒவ்வொரு பாகமாக படிப்பது, ரசனைக்கு நாம் செய்யும் சங்கடமாகவே அமையும் என்பது என் கருத்து. இந்தத் தொடரில் Spin-Off எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 40 கதைகளுக்கு மேல் இருப்பதால், இதன் தொகுப்பும் அவசியமாகிறது. 

2015ல் 3 கதைகள் கொண்ட தொகுப்பாக ஒரு குண்டு புத்தகம் நிச்சயமாக வெளிவரும் என்றாலும், நமக்கு அது போதாது என்றே தோன்றுகிறது. எனவே, 3 கதைகள் கொண்ட தொகுப்பாக, 2 வெளியீடுகள் வர வேண்டும் என்பதே என் ஆசை ! So,

3.Thorgal - 2 books @ 150 !



10.மிஸ்டர் மரமண்டை17 September 2014 18:10:00 GMT+5:30

இங்கு ஒரு விஷயத்தை சிந்திப்போம். டெக்ஸ் வில்லர் கதைகள் அனைத்தும், விற்பனைக்கு உத்திரவாதமானது என்பதை நாம் அனைவரும் எடிட்டர் வாயிலாக அறிந்திருக்கிறோம். விற்பனைக்கான காரணம் - டெக்ஸ் ; அதிகப் பக்கங்கள் ; சிறிய அளவு ; குறைந்த விலை ; 35 அல்லது 60 - என்பது போன்ற பல காரணங்கள் இருந்தாலும், ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, இத்தனை ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தும், ஒரு டெக்ஸ் வில்லர் கதை புத்தகம் முழுமையாக விற்றுத் தீர, குறைந்தபட்சம் ஒரு வருடம் அவசியமாகிறது ! 

தோராயமாக 5000 x 35 அல்லது 60ல், சந்தாப் பிரதிகள் போக விற்று முடிக்க ஒரு வருடமும், அதற்கு எல்லா ஊரிலும் புத்தகத் திருவிழா ஸ்டால்களும் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு ஊரிலும் புதிய வாசகர் அறிமுகம் என்பது முதல் இரண்டு புத்தகக் கண்காட்சியிலேயே முடிந்து விடும். எனவே அதற்குப் பிறகு, புத்தகக் கண்காட்சிக்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்யப்படும் பணமும், கமிஷன் போக வரும் விற்று முதலும் கையை கடிக்காமல் இருக்க வேண்டும். அப்படியென்றால் டெக்ஸ் வில்லர் விற்பனை என்பது ஒரு மாயை என்பது நமக்குப் புரிந்து வரும் ! 

இருந்தாலும், டெக்ஸ் வில்லர் கதைகளை நாம் அப்படியே விட்டு விட வேண்டாம். அவை நமக்கு அவசியம் வேண்டும். ஏனெனில், குறைந்தபட்ச விலையை எதிர்பார்க்கும் கடைகளுக்கும் ; ஏஜெண்டுகளுக்கும் ; பொதுநல விரும்பிகளுக்கும் ; மாணவர்களுக்கும் ; புதிய அறிமுக வாசகர்களுக்கும் ; புத்தகக் கண்காட்சிகளுக்கும் ; ரசிகர்மன்ற தோழர்களுக்கும் - அவசியம் டெக்ஸ் வில்லர் வேண்டும். எல்லோரும் கூறுவது போல் மிகப்பெரிய வெற்றி நாயகனான டெக்ஸ் வில்லரை - ஏன், சந்தாவில் சேர்க்க வேண்டும் என்பதே என் கேள்வி ? 

டெக்ஸ் வில்லரை சந்தாவில் சேர்ப்பதற்கு பதிலாக, அவர் இடத்தை மேஜிக் விண்ட் மூலம் இட்டு நிரப்பலாம் என்பது என் கருத்து. கிட்டத்தட்ட 130 கதைகள் கொண்ட தொடராக இது இருப்பதால், நமக்கு வேண்டிய மட்டும் கதைகள் கிடைப்பது மட்டும் அல்லாமல், புதிய பாணியில் வெளிவரும் கதைத் தொடரை கொஞ்ச காலம் ரசிக்கலாம். அப்படி என்றால் டெக்ஸ் வில்லரை என்ன செய்வது? எப்படி வெளியிடுவது? என்ற கேள்விகள் எழும்...



11.மிஸ்டர் மரமண்டை17 September 2014 18:31:00 GMT+5:30

டெக்ஸ் வில்லர் !

அப்படி என்றால் டெக்ஸ் வில்லரை என்ன செய்வது? எப்படி வெளியிடுவது? என்ற கேள்விகள் எழும்.. இதற்கு நாம், வருடத்தின் ஆரம்பத்திலேயே, இரண்டுக்கு மேற்பட்ட சந்தா முறைகளை அறிமுகப்படுத்துவதே இதற்கெல்லாம் ஒரே தீர்வாக அமையும் என்பது என் கருத்து. அது எவ்வகையில் இருக்கலாம் என்பதை பிறகு ஆலோசிக்கலாம் !

ஒவ்வொரு வருடமும், டெக்ஸ் வில்லர் அவர்களை தீபாவளி மலரில் ; முழு வண்ணத்தில் ; இரண்டு பெரிய அட்டகாசமான கதைகள் கொண்டு, 500 பக்கங்களுக்கு மேற்பட்டு, குண்டு புத்தகமாக தரிசிக்க வேண்டும் என்பதே என் ஆசை ! அது போக, 35 விலையிலும், 60 விலையிலும் புத்தகக் கண்காட்சிக்காக கருப்பு வெள்ளையில் டெக்ஸ் வில்லர், டேஞ்சர் டயபாலிக், மற்ற கருப்பு வெள்ளை கதைகள் என்று தனியாக ஒரு சந்தாவை அறிமுகப்படுத்தலாம். சந்தா அதிகம் சேராவிட்டாலும், புதிய வாசகர்களின் அறிமுகத்திற்காகவும், புத்தகக் கண்காட்சி விற்பனைகளுக்காகவும், அனைவரும் எளிதாக வாங்கவும், குறைந்த விலையில் காமிக்ஸ் அறிமுகத்திற்காகவும் - இந்தத் தனி வரிசை பேருதவியாக அமையும் என்பது என் கருத்து !




12.மிஸ்டர் மரமண்டை18 September 2014 08:34:00 GMT+5:30

Satishkumar S : //*அப்படியென்றால் டெக்ஸ் வில்லர் விற்பனை என்பது ஒரு மாயை என்பது நமக்கு புரிந்து வரும் ! //*//*your words inviting TEX fans for duel.. best avoid such controversial facts manufacturing and baseless allegations on TEX sale*//

நண்பரே, தங்களின் கூற்று உண்மைதான் என்றாலும், இது ஒரு எளிமையான கணக்கை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. ஈரோடு புத்தகத் திருவிழா - updates (fly.விஜய்) மற்றும் இந்த மாத வெளியீடுகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ள கையிருப்பு பிரதிகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. அதில் மற்ற எல்லா இதழ்களையும் போலவே, டெக்ஸ் வில்லரின் விலை குறைந்த வெளியீடுகளும் ஸ்டாக்கில் இருப்பதாக நமக்குத் தெரிகிறது !

1.சிகப்பாய் ஒரு சொப்பனம் - 50
2.நிலவொளியில் ஒரு நரபலி - 50
3.பூத வேட்டை - 50
4.நில் கவனி சுடு - 65
5.காவல் கழுகு - 35

எனவே, நான் கூறுவதில் உள்ள அடிப்படை கருத்து அனைவருக்கும் புரியும் என்றே நினைக்கிறேன். நன்றி !



13.மிஸ்டர் மரமண்டை18 September 2014 08:55:00 GMT+5:30

சந்தா எண் 3 - கருப்பு வெள்ளை & டெக்ஸ் ஸ்பெஷல் !

1.தீபாவளி மலர் - டெக்ஸ் வில்லரின் இரண்டு கதைகள் ; முழு வண்ணத்தில் !
2.டெக்ஸ் வில்லர் - 1
3.டேஞ்சர் டயபாலிக் - 1
3.மர்ம மனிதன் மார்ட்டின் - 1
4.
5.
6.
7.
8.
9.
10.
11.
12.

வருடத்திற்கு 12 வெளியீடுகள் ; தீபாவளி மலர் ; தீபாவளி மலரை தவிர அனைத்தும் கருப்பு வெள்ளை கதைகள் ; packing and forwarding charges are additional ! இது நன்றாக workout ஆகும் என்று நான் நினைக்கிறேன் !



14.மிஸ்டர் மரமண்டை18 September 2014 15:27:00 GMT+5:30

தற்போது, அநேகமாக எல்லா நகரங்களிலும் நம் காமிக்ஸ் கிடைக்கிறது ; worldmart லும் கிடைக்கிறது ; landmark போன்ற ஷாப்பிங் மால் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது ; இலக்கியவாதிகள், புத்தக நண்பர்கள், பதிப்பக நண்பர்கள் நடமாடும் discovery book palace போன்ற exclusive book store களிலும் நம் காமிக்ஸ் தடையின்றி கிடைக்கிறது ; சிட்டி பஸ்டேண்ட் பெட்டிக் கடைகளிலும் கிடைக்கிறது ; சிறிய புத்தகக் கடைகளிலும் கிடைக்கிறது ; புத்தகத் திருவிழாக்களிலும் நம் ஸ்டால் அமைகிறது ; ஃபோன் செய்து, நெட்டில் பணபரிமாற்றம் செய்து, வேண்டியவற்றை மட்டும் வாங்கும் வசதியும் இருக்கிறது ; சில ஊர்களில் வாசக ஏஜெண்டுகள் மூலம், டோர் டெலிவரியிலும் கிடைக்கிறது ! 

ஷ்ஷப்ப்பா... ஒரு காமிக்ஸ் வாங்க, இத்தனை வசதிகள் இருந்தால், சந்தா எண்ணிக்கை எப்படி அதிகரிக்கும் என்பதே என் கேள்வி? இவை அனைத்தையும் மீறி சந்தா செலுத்தி, நான் காமிக்ஸ் சந்தாதாரர் என்று பெருமையுடன் சொல்லும் வாசகர்கள் தான், காமிக்ஸ் தீவிரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் ; நம் காமிக்ஸ் நிறுவனத்திற்கு தூண் போன்றவர்கள் ! இவர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர், படிக்க ஒன்று ; பாதுகாக்க ஒன்று, என்று இரட்டைச் சந்தா கட்டுபவர்கள் ; இவர்கள் எந்தக் காமிக்ஸ் வந்தாலும் கலெக்ஷனுக்காகவும், படித்து பரவசம் அடையவும் கண்டிப்பாக வாங்கியே தீருவார்கள் ; இவர்களின் காமிக்ஸ் பசி அடங்குவதே இல்லை !

இவர்களை மையப்படுத்தியே சந்தா எண் - 1 அமைய வேண்டும். அதாவது ரெகுலர் சந்தா !



15.மிஸ்டர் மரமண்டை18 September 2014 16:18:00 GMT+5:30

சந்தா எண் 1 - ரெகுலர் சந்தா !

தற்போது நடைமுறையில் உள்ள, காமிக்ஸ் வாங்கும் வசதிகளால், பெரும்பான்மையான வாசகர்கள், ஒவ்வொரு மாதமும் தமக்குப் பிடித்த காமிக்ஸ் மட்டுமே வாங்கிக் கொள்கிறார்கள். அதுவும் cover priceல். எனவே இவர்களை மையப்படுத்தி, விலையிலோ ; கதைத் தேர்விலோ மாற்றத்தைக் கொண்டு வரும்போது, எங்களைப் போன்ற பெரும்பான்மையான சந்தா வாசகர்களுக்கு, அது பெரும் இழப்பாகவே அமைகிறது. அந்த இழப்பு என்பது, கதையில் இருக்கலாம் ; எங்கள் ரசனையில் இருக்கலாம் ; எண்ணிக்கையில் இருக்கலாம் ; அல்லது வருடக்கணக்கில் நீளும் தொடர் கதைகளால் இருக்கலாம் ; இப்படி எதில் வேண்டுமானாலும் எங்களின் இழப்பு இருக்கலாம் !

உதாரணமாக, மிகக் குறைந்த விலையை நிர்ணயிக்க வேண்டும் என்ற அக்கறையில், குறைந்தபட்ச அதிக எண்ணிகையிலான ப்ரிண்ட் ரன் இருக்க வேண்டும் என்பதால், கொடௌன் ஸ்டாக் (godown stock maintain) அதிகமாகிறது ; முதலீடு முடங்குகிறது ; எண்ணிக்கை குறைகிறது ; தொடர்கதைகள் அந்தரத்தில் தொங்குகிறது ; பதிப்பிடும் ஆர்வத்தில் சிரமத்தை நுழைக்கிறது !

எனவே இதில் சில மாற்றங்கள் செய்வது, நீண்டகால காமிக்ஸ் பயணத்திற்கு உதவும் பாலைவனச் சோலையாக அமையும் என்பது என் கருத்து. ஆரம்பத்தில் சிறிதளவும், போகப் போக தேவைக்கேற்ப முழுமையான அளவிலும் செய்யலாம். அவைகள் எப்படி இருக்கலாம் என்பதற்கு சில உதாரணங்களை ஆலோசனைக்காக முன் வைக்கிறேன்..



16.மிஸ்டர் மரமண்டை18 September 2014 16:36:00 GMT+5:30

சந்தா எண் 1 - ரெகுலர் சந்தா !

*இதில், மொத்தம் 24 வெளியீடுகள் (கதைகள் அல்ல) கொண்டதாக மட்டுமே அமைக்கலாம் !

*ஆனால், தொடர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வெளிவர வேண்டும் ! (example : two volume, 3 volumes & 1) 

* cover priceஐ அதிகரித்து, subscription discount கொடுத்து - புத்தகத் திருவிழாக்கள், கடைகளில் வாங்கப்படும் விலைகளுடனான சமநிலையை எட்ட வேண்டும். எந்த வழிமுறையில் வாங்கினாலும் ஒரே விலை கொண்டதாக அமைய வேண்டும் ! 

*முதலீடு ஒரேடியாக முடங்குவதை தடுக்க, print runஐக் குறைக்கலாம் ; அதற்கான விலையை நிர்ணயிக்கலாம் !

*ஜனரஞ்சகமான தேர்வாக கதைகளை அமைக்கலாம் !

ஏனெனில், சந்தாதாரர்கள், எந்தக் காமிக்ஸ் வந்தாலும் வாங்குபவர்கள் ; அவர்களின் காமிக்ஸ் பசி அடங்குவதே இல்லை ! அதே நேரம் சந்தாதாரர்கள் அல்லாத, ஏனைய வாசகர்கள் தங்களுக்குப் பிடித்த புத்தகத்தை மட்டுமே கடைகளில் வாகுகிறார்கள் !



17.மிஸ்டர் மரமண்டை18 September 2014 17:19:00 GMT+5:30

சந்தா எண் 1 - ரெகுலர் சந்தா - எனது ஆசை !

1.Largo Winch - 4 books (120)
2.Wayne Shelton - 3 books (120)
3.Comanche - 2 books (150)
4.Thorgal - 2 books (150)
5.The Bluecoats - 2 books (60)
6.XIII - 1 book (120)
7.Magic Wind - 2 books (65)
8.Lucky Luke - 2 books (60)
9.Chick Bill - 1 book (60)
10.Iznogoud - 1 book (120)
11.மார்ஷல் டைகர் - 1 book (120)
12.கிராபிக் நாவல் - 2 books (120)
13.புதிய அறிமுகம் - 1 book (120)

மொத்தம் 24 காமிக்ஸ் மட்டுமே ! இந்த விலை குறியீடு, புத்தகத்தின் அளவு நமக்குத் தெரிய வேண்டும் என்பதால் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தில் ஏறும், டாலர் விலையைப் பொருத்தும், பேப்பர் விலையைப் பொருத்தும், ப்ரிண்ட் ரன்/ஐப் பொருத்தும், விலையை நிரணயிக்கும் முழு உரிமையும் எடிட்டர் அவர்களுக்கே உள்ளது ! 



18.மிஸ்டர் மரமண்டை18 September 2014 17:30:00 GMT+5:30

//why only 24 books in regular சந்தா, is there any logic?//

லாஜிக் எல்லாம் ஒன்றுமில்லை நண்பரே, 

சந்தா எண் - 1 = 24 BOOKS 
சந்தா எண் - 3 = 12 BOOKS 
சந்தா எண் - 2 = 06 BOOKS 

மொத்தம் 42 வெளியீடுகள் (மறைமுகமாக நிறைய கதைகள்) ! சந்தா தொகையும் குறைவு, கதைகளும் அதிகம் ! புதிய கதைகளும் கிடைக்கும், கருப்பு வெள்ளையும் கிடைக்கும் ! டெக்ஸ் வில்லரும் வரும், தீபாவளி மலரும் வரும் !





19.மிஸ்டர் மரமண்டை19 September 2014 08:33:00 GMT+5:30

சந்தா எண் 2 - Super Six !

1.டைலன் டாக் !
2.Editors' Choice !
3.ditto
4.ditto
5.ditto
6.ditto

ஒவ்வொரு சந்தாவிலும் ஒரு குருவி இருக்குமாறு, இந்தச் சந்தா முறைகள் அமைக்கப்பட்டுள்ளது. சந்தா எண் ஒன்றில் - லார்கோ வின்ச் ; இரண்டில் - டைலன் டாக் ; மூன்றில் - டெக்ஸ் வில்லர் ! எனவே சந்தாதாரர்கள் பலரின் கவனத்தையும் இது கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது !

Packing and courier charges are additional ! 20% discount on super subscriptions which includes all 3 in 1 package ! 

சரி, இதையல்லாம் நடைமுறைபடுத்த எடிட்டர், எந்தவித மனநிலையில் இருக்க வேண்டும் என்று பார்ப்போம்?!

contd.. final lap !




20.மிஸ்டர் மரமண்டை19 September 2014 09:35:00 GMT+5:30

ஒரு சாதனையாளனின் மனநிலையில் இருக்க வேண்டும் ; நாளை என்பது நிச்சயமில்லை என்று கருதியே செயல்பட வேண்டும் ; 100 meters ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கும் ஓட்டப்பந்தய வீரரின் மனநிலையை அடைய வேண்டும், ஒரு நொடியில் 10ல் ஒரு பங்குக் கூட நமக்குச் சொந்தமில்லை என்ற எண்ணவோட்டத்தில் இருப்பவரே 100 meters பந்தயத்தில் ஜெயிக்க முடியும் ! 

அடுத்த வருடமே, புதிய பதிப்பகம் ஒன்று வந்து விட்டால் என்ன செய்வது என்ற போட்டி மனப்பான்மையிலேயே செயல்பட வேண்டும் ; வேறு ஒரு ஜாம்பவான் பதிப்பகம், லார்கோ வின்ச் - பதிப்பக உரிமையில் பாதியை வாங்கி விட்டால் என்ன செய்வது? வேயின் ஷெல்டனில் - மீதியை வாங்கி விட்டால் என்ன செய்வது? என்ற பதைபதைப்புடனேயே ஒவ்வொரு வருடமும் திட்டமிடல் வேண்டும் !

விலை நிர்ணயம் என்பது, வெறும் பேப்பருக்கு ஆகும் செலவும், ப்ரிண்டிங்கிற்கு ஆகும் செலவும், royalty க்கு கொடுக்கும் பணமும் என்று நினைத்து, கூட்டி கழித்து, border marginல் cover price  fix செய்யாமல் - தன்னுடைய அனுபவத்திற்கும் ; நிறுவனத்தின் Goodwill ற்கும் ; மொழிபெயர்ப்பு தரத்திற்கும் ; கதை தேர்வுக்களுக்கும் ; விற்காமல் முடங்கிவிடும் பிரதிகளுக்கும் சேர்த்தே Rate fix செய்ய வேண்டும் !

காமிக்ஸை வியாபாரமாக கருத வேண்டாம், ஆனால், வாடிக்கையாளர் சேவை என்பது, வெறும் குறைந்த விலையில் மட்டுமே அமைவதில்லை ; தரத்திலும், அந்தத் தொழிலை நலிவடையாமல் காப்பாற்றுவதிலும், இலாபகரமான தொழிலாக மாற்றுவதிலும், ஒரு நிலையிலிருந்து அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் அளவிற்கும் - ஒரு தொழிலை நடத்த முயற்சி செய்யும் பொது, அது தானாகவே பலரையும் சென்றடையும் ; அல்லது வேறு பல பதிப்பகங்களும் இந்தத் தொழிலில் கால் பதிக்க ஆசைப்படும் நிலையை தோற்றுவிக்கும் !

காமிக்ஸ் படிக்கும் மனம் கொண்ட அனைவரும், தற்போது காமிக்ஸ் படிக்க ஆரம்பித்து விட்டார்கள் ; வாங்கும் சக்தி கொண்ட அனைவரும் தற்போது நம்மிடையே சந்தாதாரர்கள் ஆகி விட்டார்கள் ; இனி சந்தா அதிகரிக்கவோ, வாசகர் வட்டம் விரிவடையவோ வழியே இல்லை என்ற முடிவுக்கு வந்து, 2015ன் print run/ஐ நிர்ணயம் செய்ய வேண்டும். இன்றைய நிலையில் உள்ள வாசகர் வட்டத்தை கருத்தில் கொண்டே, அனைத்தையும் திட்டமிடல் வேண்டும் ; நாளை ஏற்படும் மாற்றத்தை நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தை கொண்டிருக்க வேண்டும் ; இன்று என்பது மட்டுமே நிச்சயம், என் உழைப்பு, என் அனுபவம், என் ரசனை, என் சேவை, என் பங்களிப்பு - என அனைத்தையும் இன்றே அளித்து விடுவதே என் பாக்கியம் என்பதுபோல், கர்ம யோகம் போன்றதொரு நிலையை எட்ட வேண்டும் ! 

அனைவருக்கும் அனைத்தையும் கொடுக்க இறைவனாலேயே முடியாத போது, சாதாரண மனிதர்களாகிய நம்மால், என்ன செய்து விட முடியும்? என்ற ஞான யோகம் கொண்டு, இறைவனால் நமக்கிடப்பட்ட கடமையை, அவன் துணை கொண்டு பழுதில்லாமல் நடத்திச் செல்ல வேண்டும். எனவே, நம்மால் முடிந்தளவு மேற்கூறிய மூன்று சந்தாக்களை அறிமுகப்படுத்த வேண்டும் ; premium, medium, General என்ற முறையில் திட்டமிடல் வேண்டும். எவரால் எது இயலுகிறதோ அதை அவர்கள் அடைந்தே விடுவார்கள் என்ற வகையில், நாம் மன சஞ்சலமற்று பணியாற்ற வேண்டும் ; உதாரணமாக mobile recharge போன்றோ, மொபைல் போன்களின், மாடலுக்கேற்ற விலையைப் போன்றோ - அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் !



இது ஒரு காமிக்ஸ் வாசகனின் எண்ணவோட்டங்கள் மட்டுமே ; எடிட்டருக்கான யோசனையோ, அவருக்கான ஆலோசனையோ அல்ல என்பதை, நண்பர்கள் உணர்ந்து இதைப் படிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி !

Sunday, 14 September 2014

செங்குருதிச் சாலைகள்..!

புத்தகத்தை விரித்தவுடன் படரும் முதல் பார்வையிலேயே நமக்குள் ஏற்படும் ஓர் உற்சாகம் ; தென்றலாய் மேனியெங்கும் பரவும் பரவசம் ; காலநிலை யாவும் காமிக்ஸிற்குள் புதைந்துப் போகும் அதிசயம் ; கலங்கடிக்கும் கவலைகள் கூட கானல் நீராய் தொலைந்து தொலைவில் நிற்கும் அற்புதம் - என தற்போது ஒரு தமிழ் காமிக்ஸ்  தொடர் வெளிவருகிறது என்றால், அது கமான்சேவின் கௌபாய் சாகசங்கள் தான் ! 

இதற்கு காரணம், அதன் ஓவியங்களா? ; இல்லை வெளிர் நீல வர்ணங்களா? ; அல்லது இடையிடையே தாலாட்டும் மஞ்சள் நிறங்களா? ; காடு, மலை, மேடு என பார்க்கும் காட்சியெங்கும் ஒடுங்கி நிற்கும் ஏகாந்தமா? ; யதார்த்தமான கதையா? ; கதைதோறும் நடமாடும் சாதாரணமான மாந்தர்களா? ; சிக்கலற்ற எளிய கதையமைப்பா? ; இல்லை கமான்சேவின் நடை, உடை, பாவனையில் தெரியும் கண்ணியமும், முகம் சுளிக்க வைக்காத கவர்ச்சியுமா? ; அவளின் அன்பான குணமா? ; மிடுக்கான தோற்றமா? ; துடுக்கான இளமையா? ; அல்லது அகலவிடாத அவளின் அரவணைப்பா? ; கடவுளே, சத்தியமாக எதுவென்றும் தெரியவில்லை ; இவையனைத்துமா என்றும் புரியவில்லை !



காமிக்ஸ் எனும் இலகுரக பொழுதுபோக்கிற்கு மிகச் சிறந்த உதாரணமாக ; கவலைகளை மறக்க வைக்கும் மருந்தாக ; காதலின்றி கவிதை எழுத ; கவிதை இன்றி கால்கள் காற்றில் இடற ; உள்ளமெங்கும் உற்சாக வெள்ளத்தில் மிதக்க வைக்கவும் ஒரு காமிக்ஸ் தற்போது நமக்கு கிடைக்கிறது என்றால், அது  கமான்சேவின் கௌபாய் சாகசங்கள் தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை. அப்படியும் உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்றால், நீங்கள்  தேவ இரகசியம் தேடலுக்கல்ல கதையில் வரும் ஜாங் ஜியின்  கலாபக் காதலனே தான் என்பதிலும் ஐயமே இல்லை !

யதார்த்தம், யதார்த்தம் அத்தனையும் willd westன் யதார்த்தம். அதுவும் காமிக்ஸ் எனும் காவியத்தில் கற்பனை கலந்து நிற்கும் போது, அதன்  கதை ஒரு வரியில் இருந்தாலென்ன? ஒன்பது வரியில் இருந்தாலென்ன? எல்லாம் சுகமே ! ஓநாய் கணவாய் தவிர்த்து, இதுவரை முழு வண்ணத்தில் வெளிவந்துள்ள கமான்சேவின் மூன்று கதைகளும்  ஒரே உணர்வை தருவதாக அமைந்திருப்பதே இந்தத் தொடரின் சிறப்பு ! 

எனவே COMANCHE தொடரை மூன்று மூன்று ஆல்பமாக ஒன்றிணைத்து அழகான சிறிய குண்டு புக் அளவில் வெளியிடுவதே - அந்தத் தொடரைப் படைத்த படைப்பாளிகளுக்கு எடிட்டர் செய்யும் பிரதியுபகாரமாக அமையக்கூடும் ; மேலும்,  வாசகர்களுக்கு செய்யக் கூடிய தன்னலமற்ற சேவையாக  தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் இடம் பெறக்கூடும் ! நான் மிகவும் ரசித்துப் படிக்கும் ஒரு தொடராக கமான்சே இருப்பது மட்டுமல்ல, மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் மிக இலகுரக பொழுதுபோக்கு சாதனமாகவும் கமான்சே 2014ல்  கோலோச்சுகிறது என்பதில் நான் எப்பொழுதும் மாற்றுக் கருத்து கொள்ளப் போவதில்லை !

கட்டிளம் காளையர்களை கவர்ந்திழுக்கும் அழகில், கமான்சே சில மாற்று குறைவென்றாலும், ஏனோ வசீகரிப்பில் பத்தரை மாற்று தங்கமாக  ஜொலி ஜொலிக்கிறாள் ; அதிகாரத்தில் ஆணவம் கொண்டாலும், தன் அன்பை வெளிக்காட்டும் உற்சாகத்தில் கண்களிலும், உதட்டிலும் ஆர்ப்பரிக்கிறாள் நம் இதயம் கவர்ந்த கமான்சே ! 

ஹீரோயிஸம் குறைந்தே காணப்பட்டாலும், வேகத்திலும், நேர்மையிலும், துடிப்பிலும், தமிழ் வாசகர்களின் இதயம் கவர்ந்தவனாகிறான் ரெட் டஸ்ட் ! அதிலும் ரஸ் டோப்ஸை  நிராயுதபாணியாக மாற்ற யுக்தி அமைத்து, கடைசியில் கணநேரமும் தயங்காமல் சுட்டு வீழ்த்தும் க்ளைமேக்ஸ் - wild west வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய யதார்த்தம். நல்லதை நிலை நாட்டுபவனே ஹீரோ ; ஹீரோயிஸம்    காட்டுபவன் எல்லாம் பல சமயம் ஜீரோவாக காட்சியளிக்கும் wild west உலகில், நிஜமான ; சராசரியான ; யதார்த்தமான ஹீரோவாக வாழ்ந்து காட்டியிருக்கும் ரெட் டஸ்ட் அவர்களுக்கு ஒரு hats off !

சமகாலத்தில் நமக்கு கிடைத்திருக்கும் காமிக்ஸ் பொக்கிஷ குவியலில் விலை மதிக்க முடியாத ரத்தினமாக ; மனதை குளிர்ச்சியூட்டும் மஞ்சள் புஷ்பராகமாக நம்மில் உற்சாகத்தை விதைத்து, நம் மனதை இலகுவாக்கும் காமிக்ஸாக கமான்சே திகழ்கிறது. அதில் செங்குருதிச் சாலைகள் எனும் பாதையில் நாம் கடந்து விட்ட தூரத்தை 4 என்று இந்த மைல்கல் நமக்கு காட்டுகிறது !



இரயிலில் வரும் கடிதமாகட்டும் ; கடிதத்தைப் படிக்கும் கமான்சேவின் முக பாவனையாகட்டும் ; டோபி, க்ளெம் இருவரின் வெள்ளந்தியான வெகுளித் தனமாகட்டும் - ஆஹா.. அற்புதமான காமிக்ஸ் உணர்வுகள் ! ரெட் டஸ்டின் தேடலாகட்டும் ; அவ்வப்போது உதிர்க்கும் வசனங்களாகட்டும் ; துப்பாக்கி சண்டையிடும் கடைசி கட்டமாகட்டும் ; சட்டத்தின் முன் புலம்புவதாகட்டும் - ஆஹா.. யதார்த்தமான பகிர்வுகள் !

கதையிடை நகரும் கதா பாத்திரங்கள் யாவும் நடமாடும் மாந்தர்களாய், கதையை அழகாக நகர்த்திச் செல்வது - அலுங்காமல் குலுங்காமல் பயணிக்கும் பயணிகள் இரயிலைப் போன்று மெதுவாகப் பயணித்தாலும், ரிலாக்ஸான மனநிலைக்கு உத்திரவாதம் அளிக்கிறது ! எங்கோ தொலைவில், ஆர்ப்பரிக்கும் நதியின் நளினமான அரவணைப்பில், ஒரு ஒதுக்குப் புறமான  பண்ணை வீட்டில் வாழும் அம்ப்ரோஸியஸூம், அவர் தாயாரும், சின்னப் பெண்ணும், வேலையாளும் - பழைய MGR காலப் படங்களை ஞாபகப்படுத்துகிறார்கள் !

மொத்தத்தில், சுவையான வாழைக்காய் பஜ்ஜியும், சூடான சிங்கிள் டீயும் போல் - மாலை நேர ஸ்நாக்ஸாக காம்ன்சே நிம்மதி தருகிறது !   

Thursday, 4 September 2014

தேவ இரகசியம் தேடலுக்கல்ல !

நண்பர்களே,

வணக்கம். மூன்று பாகமும் ஒரே புத்தகமாக - கலெக்டர்ஸ் ஸ்பெஷல் இதழாக வெளிவந்துள்ள சாதனைக்காகவும் ; அற்புதமான, அழகான ஓவியங்களை காமிக்ஸ் வடிவில் நமக்கு ரசிக்கத் தந்த, அகண்ட காமிக்ஸ் தேடலுக்கும் ; கைக்கு அடக்கமான குண்டு புக்கிற்கும் ; படிக்க படிக்க கதை சட்டென முடிந்து விடாமல் பக்கங்கள்  நகர்ந்து கொண்டே இருப்பதற்கும் ; மறுமுறை படிக்கத் தூண்டும் கதைக் களத்திற்கும் - முதலில் என் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் ! இந்த கிராபிக் நாவலை, ஒவ்வொரு பாகமாக வெளியிடத் தீர்மானித்து இருந்திருந்தால், அடுத்த பாகத்தை வெளியிடும் அளவிற்கு நம் காமிக்ஸ் வாசகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்குமா என்பது சந்தேகமே !

மழையோடு சேரும் மண்வாசம் நம்மை மெய்மறக்க செய்வதைப் போல் ; காற்றோடு கலக்கும் பூ வாசம் நம்மை பரவசமாகுவதைப் போல் ; சாயும் பொழுதோடு தேயும் நிலவொளி நம்மில் ஏகாந்தத்தை விதைப்பது போல் - அற்புதமான ஓவியங்கள் இயற்கையோடு கைகோர்க்கும் போது அங்கே காமிக்ஸ், பொக்கிஷமாகிறது ! அதுவே கதைக் களத்தோடு ஒன்றிவிடும் போது காமிக்ஸ் ராஜ்ஜியம் நமக்கு சொந்தமாகிறது !




தேவ இரகசியம் தேடலுக்கல்ல ! எனும் வசீகரமான தலைப்பைக் கொண்டு வெளிவந்திருக்கும் இம்மாத கிராபிக் நாவல் மூலம் இயேசு பிரானின் கல்லறை - நம் இந்திய காஷ்மீர் மாநிலத்தின்   ஸ்ரீநகரில் உள்ள ரோசா பால் (RozaBal) என்ற இடத்தில் இருப்பதாக நமக்கு தெரிய வருகிறது ; தெரிய வருகிறது என்று சொல்லும் போதே, அதற்கு முன் நமக்கு தெரிந்திருக்கவில்லை  என்று அர்த்தமாவதால், கதையைப் படிக்கும் பலருக்கும் கதையில் ஒன்ற முடியாமல் போகலாம். ஒரு காமிக்ஸ் கதைக் கரு நம்மை ஈர்க்கவில்லை என்றால் அங்கே நம் ஈடுபாடு குறைந்தே தான் போகிறது !

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை அவர் அன்னை மரியாவும், தாமஸும் மீட்டெடுத்து,  திபெத் வழியாக ஸ்ரீநகரில் தஞ்சம் அடைந்ததாகவும்,  நீண்ட பயணத்தில் ஏற்பட்ட தள்ளாமை காரணமாக மரணமடையும் அன்னை மரியா அவர்களின்  நல்லடக்கம் பாகிஸ்தானிலுள்ள ராவல்பிண்டியின் (Rawalpindi) முர்ரீ என்ற சிற்றூரில் நடந்ததாகவும்,  Yuz Asaf என்ற பெயரில் இயேசு பிரான் திபெத்தில் சிலகாலம் தங்கியிருந்ததாகவும் இந்தக் கதை நமக்கு கூறுகிறது. அதன் சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, ஆவணங்கள் மூலம் புரபஸர் ஈகோன் பாயெர் அதை நிரூபிப்பதாகவும்  கதை நகர்கிறது !

சிலுவையில் மரித்து விட்ட இயேசு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த இறைசக்தியையும் ; அற்புதத்தையும் மறுப்பதாக அமையும் இந்த கிராபிக் நாவல் - புரபஸர் ஈகோன் பாயெர் முன் Yuz Asaf  தோன்றி, அவரை மரணத்தின் பிடியிலிருந்து மீட்டெடுத்து காப்பாற்றுவதாகவும், பரிசுத்த ஆத்மாவாக புரபஸரை உருவகப்படுத்துவதும், ரோசா பால் கல்லறையின் வம்சாவளி பாதுகாவலனாக - ஜாடா பஷாரட் சலீம் இருப்பதாக காட்டுவதும் - அழகான முரண்பாடுகள் ! 

ஒருபக்கம் இறைவனை சாதாராணமான மனிதன் என்று சித்தரிப்பதும் ; மறுபக்கம் மனிதனை அற்புத ஆன்மபலம் பெற்றவராக காட்டுவதையும் பார்க்கும் போது - நம்மூர் பழமொழி ஒன்று ஞாபகம் வருவதை தடுக்க முடியவில்லை. பாம்பும் சாகக் கூடாது ; பாம்பை அடிக்கும் கம்பும் கையும் நோகக் கூடாது என்ற பழமொழியை இக்கதை பறைசாற்றுகிறது ! 

திபெத்தின் பனிமலைகளும் ; மடாலயங்களும் நம்மை வசீகரித்தாலும் கதை என்னவோ மிகவும் தொய்வாகவே நகர்கிறது. அடுத்தது என்ன? என்று மனமெங்கும் ஆர்ப்பரிக்கும் காமிக்ஸ் பரவசத்தையோ ; பக்கங்களை அவசர அவசரமாக புரட்டும் ஆர்வத்தையோ இந்த கிராபிக் நாவல் தன்னிடம் இழந்து நிற்பதால், பரவாயில்லை படிக்கலாம் என்ற ரகத்தை சேர்ந்ததாக இருக்கிறது !




சீன ஸ்பெஷல் ஏஜென்ட் ஜாங் ஜியின் இளமையும், அழகும், மிடுக்கும்  நம்மை வசீகரிக்க தவறவில்லை. பனி முகில் மறைத்த நிலவின் இரவின் இருளில் சம்பவிக்கும் மோகமும் தாபமும் அச்சூழலுக்குள் நம்மை இழுப்பது மட்டுமல்லாமல், நாயகன் கெவின் மெக் ப்ரைட்டை  வெறுக்க வைத்து, சீன இளங்குமரியின் மேல் நம்  எண்ணங்களை அலைப்பாய வைப்பதாக இருக்கிறது. காதலுக்கு கண் இல்லை என்பது மட்டுமல்ல, எல்லையும் இடைஞலாக இருக்கவே முடியாது என்பதை நம் மனம் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவதும் ஒரு வித பரவசமே !

காமிக்ஸ் எனும் இந்த கிராபிக் நாவலின் பரிமாணம், நம் காமிக்ஸ் ரசனையின் செரிமானத்தை பதம் பார்ப்பதாக, ஆண் பெண்  அந்நியோன்யக்  காட்சிகள், அழகான ஓவியங்களால் அழுத்தமாக நம்மை முகம் சுளிக்க வைப்பதாக சில இடங்களில் ஆக்கிரமிக்கிறது. மிகச் சரியாக  அந்தப் பக்கங்களின் வாசிப்பில் இருந்த போது, யதேச்சையாக அருகில் நகர்ந்த மனைவியால் பதற்றம் கொண்டு, சட்டென இரண்டு பக்கங்களை அனிச்சையாக  திருப்பி விட்டேன். எப்பொழுதும் டைனிங் டேபிளில் கேட்பாரற்று பல நாட்களாவது இருக்கும் காமிக்ஸ் இம்முறை  பரிணாம வளர்ச்சி பெற்று, படித்து முடித்தவுடன்  ஷெல்பில் அழகாக அடக்கமாகி விட்டதும் நம் காமிக்ஸ் ரசனையின் எல்லை விரிவாக்கமே !



பாவ்லோ க்ரெல்லா !

ஓவியரின் அர்ப்பணிப்புக்காகவும், அற்புதமான சித்திரங்களிற்காகவும், நம் சிந்தனைகளை விரிவாக்க உதவிய கதைக் களத்திற்காகவும் இந்த கிராபிக் நாவலுக்கு வரவேற்பு அளிக்கலாமே தவிர - தலையில் வைத்து கொண்டாடும் அளவிற்கு எல்லாம் இது இல்லை என்பதே உண்மை !