Follow by Email

Sunday, 14 September 2014

செங்குருதிச் சாலைகள்..!

புத்தகத்தை விரித்தவுடன் படரும் முதல் பார்வையிலேயே நமக்குள் ஏற்படும் ஓர் உற்சாகம் ; தென்றலாய் மேனியெங்கும் பரவும் பரவசம் ; காலநிலை யாவும் காமிக்ஸிற்குள் புதைந்துப் போகும் அதிசயம் ; கலங்கடிக்கும் கவலைகள் கூட கானல் நீராய் தொலைந்து தொலைவில் நிற்கும் அற்புதம் - என தற்போது ஒரு தமிழ் காமிக்ஸ்  தொடர் வெளிவருகிறது என்றால், அது கமான்சேவின் கௌபாய் சாகசங்கள் தான் ! 

இதற்கு காரணம், அதன் ஓவியங்களா? ; இல்லை வெளிர் நீல வர்ணங்களா? ; அல்லது இடையிடையே தாலாட்டும் மஞ்சள் நிறங்களா? ; காடு, மலை, மேடு என பார்க்கும் காட்சியெங்கும் ஒடுங்கி நிற்கும் ஏகாந்தமா? ; யதார்த்தமான கதையா? ; கதைதோறும் நடமாடும் சாதாரணமான மாந்தர்களா? ; சிக்கலற்ற எளிய கதையமைப்பா? ; இல்லை கமான்சேவின் நடை, உடை, பாவனையில் தெரியும் கண்ணியமும், முகம் சுளிக்க வைக்காத கவர்ச்சியுமா? ; அவளின் அன்பான குணமா? ; மிடுக்கான தோற்றமா? ; துடுக்கான இளமையா? ; அல்லது அகலவிடாத அவளின் அரவணைப்பா? ; கடவுளே, சத்தியமாக எதுவென்றும் தெரியவில்லை ; இவையனைத்துமா என்றும் புரியவில்லை !காமிக்ஸ் எனும் இலகுரக பொழுதுபோக்கிற்கு மிகச் சிறந்த உதாரணமாக ; கவலைகளை மறக்க வைக்கும் மருந்தாக ; காதலின்றி கவிதை எழுத ; கவிதை இன்றி கால்கள் காற்றில் இடற ; உள்ளமெங்கும் உற்சாக வெள்ளத்தில் மிதக்க வைக்கவும் ஒரு காமிக்ஸ் தற்போது நமக்கு கிடைக்கிறது என்றால், அது  கமான்சேவின் கௌபாய் சாகசங்கள் தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை. அப்படியும் உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்றால், நீங்கள்  தேவ இரகசியம் தேடலுக்கல்ல கதையில் வரும் ஜாங் ஜியின்  கலாபக் காதலனே தான் என்பதிலும் ஐயமே இல்லை !

யதார்த்தம், யதார்த்தம் அத்தனையும் willd westன் யதார்த்தம். அதுவும் காமிக்ஸ் எனும் காவியத்தில் கற்பனை கலந்து நிற்கும் போது, அதன்  கதை ஒரு வரியில் இருந்தாலென்ன? ஒன்பது வரியில் இருந்தாலென்ன? எல்லாம் சுகமே ! ஓநாய் கணவாய் தவிர்த்து, இதுவரை முழு வண்ணத்தில் வெளிவந்துள்ள கமான்சேவின் மூன்று கதைகளும்  ஒரே உணர்வை தருவதாக அமைந்திருப்பதே இந்தத் தொடரின் சிறப்பு ! 

எனவே COMANCHE தொடரை மூன்று மூன்று ஆல்பமாக ஒன்றிணைத்து அழகான சிறிய குண்டு புக் அளவில் வெளியிடுவதே - அந்தத் தொடரைப் படைத்த படைப்பாளிகளுக்கு எடிட்டர் செய்யும் பிரதியுபகாரமாக அமையக்கூடும் ; மேலும்,  வாசகர்களுக்கு செய்யக் கூடிய தன்னலமற்ற சேவையாக  தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் இடம் பெறக்கூடும் ! நான் மிகவும் ரசித்துப் படிக்கும் ஒரு தொடராக கமான்சே இருப்பது மட்டுமல்ல, மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் மிக இலகுரக பொழுதுபோக்கு சாதனமாகவும் கமான்சே 2014ல்  கோலோச்சுகிறது என்பதில் நான் எப்பொழுதும் மாற்றுக் கருத்து கொள்ளப் போவதில்லை !

கட்டிளம் காளையர்களை கவர்ந்திழுக்கும் அழகில், கமான்சே சில மாற்று குறைவென்றாலும், ஏனோ வசீகரிப்பில் பத்தரை மாற்று தங்கமாக  ஜொலி ஜொலிக்கிறாள் ; அதிகாரத்தில் ஆணவம் கொண்டாலும், தன் அன்பை வெளிக்காட்டும் உற்சாகத்தில் கண்களிலும், உதட்டிலும் ஆர்ப்பரிக்கிறாள் நம் இதயம் கவர்ந்த கமான்சே ! 

ஹீரோயிஸம் குறைந்தே காணப்பட்டாலும், வேகத்திலும், நேர்மையிலும், துடிப்பிலும், தமிழ் வாசகர்களின் இதயம் கவர்ந்தவனாகிறான் ரெட் டஸ்ட் ! அதிலும் ரஸ் டோப்ஸை  நிராயுதபாணியாக மாற்ற யுக்தி அமைத்து, கடைசியில் கணநேரமும் தயங்காமல் சுட்டு வீழ்த்தும் க்ளைமேக்ஸ் - wild west வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய யதார்த்தம். நல்லதை நிலை நாட்டுபவனே ஹீரோ ; ஹீரோயிஸம்    காட்டுபவன் எல்லாம் பல சமயம் ஜீரோவாக காட்சியளிக்கும் wild west உலகில், நிஜமான ; சராசரியான ; யதார்த்தமான ஹீரோவாக வாழ்ந்து காட்டியிருக்கும் ரெட் டஸ்ட் அவர்களுக்கு ஒரு hats off !

சமகாலத்தில் நமக்கு கிடைத்திருக்கும் காமிக்ஸ் பொக்கிஷ குவியலில் விலை மதிக்க முடியாத ரத்தினமாக ; மனதை குளிர்ச்சியூட்டும் மஞ்சள் புஷ்பராகமாக நம்மில் உற்சாகத்தை விதைத்து, நம் மனதை இலகுவாக்கும் காமிக்ஸாக கமான்சே திகழ்கிறது. அதில் செங்குருதிச் சாலைகள் எனும் பாதையில் நாம் கடந்து விட்ட தூரத்தை 4 என்று இந்த மைல்கல் நமக்கு காட்டுகிறது !இரயிலில் வரும் கடிதமாகட்டும் ; கடிதத்தைப் படிக்கும் கமான்சேவின் முக பாவனையாகட்டும் ; டோபி, க்ளெம் இருவரின் வெள்ளந்தியான வெகுளித் தனமாகட்டும் - ஆஹா.. அற்புதமான காமிக்ஸ் உணர்வுகள் ! ரெட் டஸ்டின் தேடலாகட்டும் ; அவ்வப்போது உதிர்க்கும் வசனங்களாகட்டும் ; துப்பாக்கி சண்டையிடும் கடைசி கட்டமாகட்டும் ; சட்டத்தின் முன் புலம்புவதாகட்டும் - ஆஹா.. யதார்த்தமான பகிர்வுகள் !

கதையிடை நகரும் கதா பாத்திரங்கள் யாவும் நடமாடும் மாந்தர்களாய், கதையை அழகாக நகர்த்திச் செல்வது - அலுங்காமல் குலுங்காமல் பயணிக்கும் பயணிகள் இரயிலைப் போன்று மெதுவாகப் பயணித்தாலும், ரிலாக்ஸான மனநிலைக்கு உத்திரவாதம் அளிக்கிறது ! எங்கோ தொலைவில், ஆர்ப்பரிக்கும் நதியின் நளினமான அரவணைப்பில், ஒரு ஒதுக்குப் புறமான  பண்ணை வீட்டில் வாழும் அம்ப்ரோஸியஸூம், அவர் தாயாரும், சின்னப் பெண்ணும், வேலையாளும் - பழைய MGR காலப் படங்களை ஞாபகப்படுத்துகிறார்கள் !

மொத்தத்தில், சுவையான வாழைக்காய் பஜ்ஜியும், சூடான சிங்கிள் டீயும் போல் - மாலை நேர ஸ்நாக்ஸாக காம்ன்சே நிம்மதி தருகிறது !   

12 comments:


 1. எனவே COMANCHE தொடரை மூன்று மூன்று ஆல்பமாக ஒன்றிணைத்து அழகான சிறிய குண்டு புக் அளவில் வெளியிடுவதே - அந்தத் தொடரைப் படைத்த படைப்பாளிகளுக்கு எடிட்டர் செய்யும் பிரதியுபகாரமாக அமையக்கூடும் #

  நடந்தால் நன்று :-)

  ReplyDelete
  Replies
  1. //*நடந்தால் நன்று*//

   நண்பரே, இது சம்பந்தமாக, உங்கள் மூலமாக ஒரு கடிதம் எழுதி, எடிட்டருக்கு அனுப்பலாமா என்று யோசித்து கொண்டிருக்கிறேன். இது போன்ற விஷயங்களுக்கும் நீங்கள் கடிதம் எழுத வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. ஒரே ஒரு கடிதம் வாயிலாகவே, கிராபிக் நாவலின் சரித்திரத்தையே புரட்டிப் போட்டவர் அல்லவா தாங்கள்? நம் தமிழ் வாசகர்களுக்கு, கிராபிக் நாவலின் மேல் உள்ள பார்வை, இரு துருவங்களாக காட்சியளிப்பதற்கு முக்கிய காரணமாக இன்றும் இருப்பது, தங்களின் கடிதம் ஏற்படுத்திய தாக்கம் தானே?! :-)

   Delete
 2. Replies
  1. ஹா.. ஹா.. இப்படியும் கூடவா ஒரு டெம்ப்ளேட் கமெண்ட் இருக்கிறது ?!

   Delete
 3. Replies
  1. BPL Mobile !

   ஹி.. ஹி.. வோடஃபோன்/க்கு முன்னாடி hutch ன்னா, ஹச்..க்கு முன்னாடி BPL Mobile தானே? :-)

   Delete
  2. செம.

   ஐ லைக் இட்

   Delete
 4. +1
  //இரயிலில் வரும் கடிதமாகட்டும் ; கடிதத்தைப் படிக்கும் கமான்சேவின் முக பாவனையாகட்டும் ; டோபி, க்ளெம் இருவரின் வெள்ளந்தியான வெகுளித் தனமாகட்டும் - ஆஹா.. அற்புதமான காமிக்ஸ் உணர்வுகள் ! ரெட் டஸ்டின் தேடலாகட்டும் ; அவ்வப்போது உதிர்க்கும் வசனங்களாகட்டும் ; துப்பாக்கி சண்டையிடும் கடைசி கட்டமாகட்டும் ; சட்டத்தின் முன் புலம்புவதாகட்டும் - ஆஹா.. யதார்த்தமான பகிர்வுகள் !//
  +2

  //சமகாலத்தில் நமக்கு கிடைத்திருக்கும் காமிக்ஸ் பொக்கிஷ குவியலில் விலை மதிக்க முடியாத ரத்தினமாக ; மனதை குளிர்ச்சியூட்டும் மஞ்சள் புஷ்பராகமாக நம்மில் உற்சாகத்தை விதைத்து, நம் மனதை இலகுவாக்கும் காமிக்ஸாக கமான்சே திகழ்கிறது. அதில் செங்குருதிச் சாலைகள் எனும் பாதையில் நாம் கடந்து விட்ட தூரத்தை 4 என்று இந்த மைல்கல் நமக்கு காட்டுகிறது !//

  +2
  me already Comanche fan so all agreed.

  ReplyDelete
  Replies
  1. //*me already Comanche fan so all agreed*//

   +1

   :D

   Delete
 5. //மொத்தத்தில், சுவையான வாழைக்காய் பஜ்ஜியும், சூடான சிங்கிள் டீயும் போல் - மாலை நேர ஸ்நாக்ஸாக காம்ன்சே நிம்மதி தருகிறது ! //

  for evening it's ok, how did you describe if you read Comanche in morning or afternoon ?

  :D

  ReplyDelete
  Replies
  1. Satishkumar S : //*for evening it's ok, how did you describe if you read Comanche in morning or afternoon ?*//

   ஹா.. ஹா.. அருமை அருமை !

   மன்னிக்க வேண்டும் நண்பரே, இப்படி ஒரு கண்ணோட்டத்தில் நான் சிந்திக்கவே இல்லை. இனி, அதற்கும் ஒரு வியாக்கனம் கொடுத்தால் அது, சமாளிப்பாக மட்டுமே இருக்கும் என்பதால் உங்கள் கேள்விக்கு பதிலளிக்காமலேயே பெருமைபடுத்துகிறேன் !

   Delete