Follow by Email

Wednesday, 19 November 2014

ஒரு நிழல் நிஜமாகிறது !

நண்பர்களே வணக்கம். தன்னுடைய படம் வெளிவரும் போதெல்லாம் அரசியல் ஸ்டண்ட் அடித்து, அளவற்ற துட்டு பார்க்கும் தமிழக சூப்பர் ஸ்டாரை நாம் பார்த்து விட்டோம் ; நாலு இட்லி, ஒரு வடையில் திருடிய ஒரு திரைக்கதையில் 120 கோடி கல்லா கட்டிய, சமுதாயத்தின் மேல் அளவிட இயலாத அக்கறையுள்ள (!!)  producer cum director யும் பார்த்து விட்டோம் ; சமுதாய அவலங்களைக் கண்டு சீறி எழுந்து, அடுத்த 24 மணி நேரத்திற்கு மட்டுமே தம் சீரிய எண்ணங்களை சிதறடிக்கும், Facebookன் அட்டக் கத்தி   அலெக்ஸாண்டர்களையும் நாம் பார்த்து விட்டோம் ;  ஒரு தலைமுறையையே சீரழித்து, வரும் வருமானத்தில் இலவசங்களை கொடுத்து, வறுமையையே   வாட வைத்ததாக கொக்கரிக்கும் ஆட்சிகளையும் பார்த்து விட்டோம் !

பாலியல் வன்கொடுமையை, ஒரு வாரம் திரும்பத் திரும்ப ஒளிபரப்பியும் ;  தீக்குளிக்கும் நபரின் கடைசி மூச்சு நிற்கும் வரை, துடிக்கத் துடிக்கக் காட்சிப்படுத்தியும் ; பெட்ரோல், டீசல் விலை உயர்வைப் பற்றிய மக்கள் கருத்தாக, 7.20 கோடியில் வெறும் நான்கு முகத்தை மட்டுமே காட்டியும் ; கலாச்சார சீரழிவையும் ; மாமா.. மாமா.. எப்ப..  ட்ட்..ரீட்டு..  என்று அந்த வேலையையும் கூட திறம்பட செய்தும் ; தாம் வாழும் சமூகத்தின் பண்பாட்டைத் தவிர மற்ற அனைத்தையும் காட்சிப் பொருளாக்கி, தத்தம் TRP  ratingஐ உயர்த்தி காசாக்கும் டிவி சேனல்களையும் முழுமையாக பார்த்து விட்டோம்; ஆனால்,

சமுதாய கடமை என்றால் என்னவென்று மட்டும் இன்று வரை நமக்குத் தெரியவே இல்லை. அதனால் தான் அடுத்தவர் தெருவில் போடும் குப்பையை நாம் பெருக்கிச் சுத்தம் செய்து,  சமூக சேவையில் நாமும் ஐக்கியம் ஆகி விட்டதாக பெருமிதம் கொள்கிறோம் ! என்னைப் பொறுத்தவரை சமூக சேவை என்பது, சமுதாய விழிப்புணர்ச்சியில் தான் முழுமைப் பெறுகிறது. நம் வீதியில் இருக்கும் குப்பையை நாம் சுத்தம் செய்வதை விட, நம் தெருவில் குடியிருக்கும் மக்கள், குப்பையை தெருவில் வீசாமல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த எவரால் முடிகிறதோ, அவரே சிறந்த சமூக சேவகன் ; தம் நாட்டின் நலன் மீது அக்கறையும் கொண்டவர் ; அவரே உயர்ந்தவர் ; அவருக்கே பேறும், புகழும் ஒன்றாய்ச்  சேரும் !

அதனால் தான், ஒவ்வொரு லார்கோ வின்ச் கதையைப் படிக்கும் போதும் அதன் கதாசிரியரான வான் ஹாமே ஒரு மிகச் சிறந்த சமூக சேவகராக எனக்குத் தெரிகிறார். இந்த மாத வெளியீடான ஒரு நிழல் நிஜமாகிறது ! கதையும் அதற்கு விதிவிலக்கல்ல ! தங்க முக்கோணம் என்றால் என்னவென்பதையும் ; அதில் பயிராகும் கஞ்சாவில் இருந்து கடத்தல் வரையும் ; மார்பின்/லிருந்து  உருமாறும் ஹெராயின் செய்முறையும் ; அதற்குண்டான துல்லியமான விலையும் ; உலகமெங்கும் இருக்கும் நெட்ஓர்க்கும் ; அதனால் ஏற்படும் சீரழிவும் சேதாரமும் - என அனைத்தையும் ஒரு காமிக்ஸில் கொண்டு வந்து, கொஞ்சம் கூட சலிப்புத் தட்டாமல் ஒருவரால்  சமுதாய விழிப்புணர்ச்சியைக் கொண்டு வரமுடியுமென்றால் அது வான் ஹாமேவாகத் தான் இருக்க முடியும் !

தமிழ் காமிக்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் ஹெராயின் சம்பந்தமாக ஒரு Ph.D. வாங்கும் அளவிற்கு ஆராய்ச்சி அறிவு இன்று இருக்கிறது     என்றால் அதற்கு காரணம்,   லார்கோ வின்ச்/ன் துரத்தும் தலைவிதி ! என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை தான் ! அது போன்றே ஒரு சமுதாய விழிப்புணர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதை தான் ஒரு நிழல் நிஜமாகிறது ! சுவாரஸ்யமான கதை மட்டுமல்ல, உலக சூதாட்ட அரங்கங்களின் தலைநகரமான  லாஸ் வேகஸ்/லிலும் ரெனோ/விலும் திரை மறைவில் நடக்கும் அவலங்களைத்  தோலுரித்து கட்டுகிறது !

வேலைத் தேடி வரும் இளம்பெண்களும், ஆசிய நாடுகளிலிருந்து கடத்தப்பட்டு கொண்டு செல்லப்படும் சிறுமிகளும் சென்றடையும் விபச்சார விடுதிகளில், அவர்கள் அனுபவிக்கும் நரகத்தை இவ்வளவு தெளிவாக மட்டுமல்லாது வெளிப்படையாகவும் உலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட முடியுமா என்ற பிரமிப்பு எழுகிறது. உலகமெங்கும் உள்ள உல்லாச விரும்பிகள் காமிக்ஸ் தீவிர வாசகர்களாக இருக்கும் பட்சத்தில் அடுத்தமுறை, லாஸ் வேகஸ் சென்றாலோ ; ரெனோ சென்றாலோ  அவர்கள் அங்குள்ள விடுதிகளில் இருக்கும் இளம்பெண்களைப் பார்க்கும் பார்வையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்றே நினைக்கிறேன். அதுதான் லார்கோ கதைகளின் வெற்றி ; அதுவே வான் ஹாமே சத்தமின்றி மனித சமுதாயத்திற்கு ஆற்றி வரும் சமூக சேவை ; அதுவே நம் வாழ்க்கைக்கும் ஓர் அர்த்தம் தருவதாகவும் அமைகிறது ! என்னைப் பொறுத்தவரை ஒரு காமிக்ஸின் வெற்றி எதில் அடங்கி இருக்கிறது என்றால் - நல்ல தூக்கக் கலக்கத்திலோ ; மன அழுத்தத்தினால் ஏற்படும் அயர்ச்சியினாலோ ; கவலையிலோ சோர்ந்து இருக்கும் போது, ஒரு காமிக்ஸ் படிக்க நேர்ந்தால் - அத்தனையும் இருந்த சுவடுத் தெரியாமல் காணாமல் போக வைக்கும் சக்தி எந்த காமிக்ஸிற்கு இருக்கிறதோ அதுவே சிறந்த காமிக்ஸ் கதை என்று அடித்து கூறலாம் !

பயணக் களைப்பும், தூக்கக் கலக்கமும், உடல் தளர்வும் கொண்ட நிலையில் லார்கோ கதையைப் படிக்கக் கையில் எடுத்தேன். முதல் 18 பக்கங்களில் சைமன் போட்ட மொக்கையால் பிறகு படித்து கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்த நான், அதன் பிறகு கதையின் விறுவிறுப்பாலும், வாசகர்களை தன்னுள் இழுத்துக் கொள்ளும் அந்த காந்தச் சக்தியாலும் எப்படித்தான் படித்து முடித்தேன் என்றே தெரியவில்லை. பொம்மலாட்ட வித்தைக்காரனின் விரலசைவுக்கு ஏற்ப நாட்டியமாடும் பொம்மையைப் போலவே, கதையில் வரும் சம்பவங்களுக்கு ஏற்ப நம் உணர்வுகளும் மாறி மாறி நர்த்தனம் ஆடுவது லார்கோ கதைகளுக்கு என்றே இருக்கும் சூட்சமம் !

Golden Gate சீரியலின் நடிப்பில் சொதப்பும் சைமன், இம்முறை கதை முழுவதிலும் சொதப்பி உள்ளார். முதல் 18 பக்கங்கள் அறுவை மட்டுமல்ல அப்பட்டமான செயற்கை. ஒரு அல்லக்கை ஹீரோவாக நடித்தால் எப்படி இருக்குமோ அப்படி கதையில் மட்டுமல்ல, நிஜத்திலும்  இருக்கிறது. லார்கோ வின்ச்/ன் ஹீரோயிசம் கூட ஆங்காங்கே செயற்கையாகத் தெரிந்தாலும், இந்தக் கதையின் உண்மையான ஹீரோவான கதைக்கரு - எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது !

மேலோட்டமாக பார்த்தால் அதிக விமர்சனத்திற்கு உள்ளாவதைப் போல் தோன்றும் கழுத்து வரை புதைக்கப்பட்ட லார்கோவும், தேள் ; ஓணான் ; செந்நிற கடி எறும்புக்  கூட்டமும்  - கதையோடு நீங்கள் ஒன்றிபோய் படித்திருக்கும் பட்சத்தில் அதன் பின்னணியில் இருக்கும் லாஜிக்கை நீங்களும் ரசித்திருப்பீர்கள் ; சைக்கோவான ப்ளார் டி லா க்ரூஸ்/ன் லார்கோவை பழிவாங்குதலின் எண்ணவோட்டங்களை உங்களாலும் படித்தறிய முடியும் ; செந்தேள் பறந்து தூர விழும் போதில் லார்கோ வின்ச்/ன் திடமனமும், மனோ தைரியமும் எந்தளவு வலிமையானவை என்பதும் புலனாகும் ; லார்கோ காப்பற்றப்படுவதில் உள்ள வேகமும், விவேகமும், கதாசிரியரின் லாவகமும் இத்தொடரின் நிர்ணயிக்கப்பட்ட வெற்றியை எட்டுத் திக்கும் பறைசாற்றும் !


லார்கோ வின்ச் கதைத் தொடரில் இந்தக் கதை சற்றே சுமார் ரகம் தான் என்றாலும் - மற்றக் கதை வரிசைகளுடன் ஒப்பிடும் போது இது ஒரு மெஹா ஹிட் கதை என்பதில் ஐயமில்லை ! ஏனெனில் இந்தக் கதையை  படிப்பதற்கு என ஸ்பெஷலான  மனநிலையோ ; இரவின் தனிமையோ ; இருளின் நிர்சலனமோ  ; ஒத்தி வைக்கப்படும் காலநிலையோ ; காத்திருக்கும் மனோநிலையோ தேவையில்லை. ஏனெனில் புத்தகம் கிடைத்தவுடன்  ; கவரை கிழித்தவுடன் படித்து முடிக்கப்படும் காமிக்ஸ் எதுவோ அதுவே ரசனையிலும் ; பொழுதுபோக்கிற்கும் சிறந்தது !

சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே யின்படி - நம் காமிக்ஸ்  வட்டத்தில் 90 சதவீதம்  வாசகர்கள் 35+ வயதில் உள்ள வாசகர்கள். அதிலும், சில அப்பாவி வாசகர்களைத் தவிர மற்ற அனைவருமே உலக ஞானமும், பொது அறிவும் கொண்டவர்கள். நீங்கள் ஒரு காமிக்ஸைப் படிக்க கையில் எடுக்கும் அதே நேரத்தில், உங்களின் கேள்வி ஞானமும், காமிக்ஸ் ஆர்வமிக்க உங்கள் மனமும் - அந்தக் கதைக்களத்திற்குச் சென்று அழகாய் சம்மணமிட்டு அமர்ந்துக் கொள்ளும் என்பதில் ஐயமேது ?!

McDonald's ல்  இட்லி கிடைக்காது என்பதும் ; KFC யில் மசால் தோசை கிடைக்காது என்பதும் ; Pizza Hut ல் தயிர் வடை கிடைக்காது என்பதும் - நமக்குப் பிறர் சொல்லி தான் தெரிய வேண்டும் என்பதில்லை. உலக நாடுகளின் கலாச்சாரங்கள் ; நடைமுறைகள் ; நடை, உடை, பாவணைகள் ; பேச்சு வழக்குகள் என அனைத்தும்,  காமிக்ஸ் வாசகர்கள் அனைவரும் ஓரளவிற்காவது அறிந்த விஷயம் தான். அதனால் தான் லார்கோ வின்ச், வேய்ன் ஷெல்டன் - என புதிய கதைகள் அறிமுகம் ஆன கையோடு அவைகள் முதலிரண்டு இடத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டன !   

எனவே தான் ஆரம்பம் முதலே நான் ஒரு விஷயத்தை வலியுறுத்தி வருகிறேன். இது போன்ற ஐரோப்பிய ; அமெரிக்க ; ஆங்கில கதைகளின் மொழியாக்கத்தின் போது  காமெடிக்காகவோ ; லோக்கல் டச்சிங்கிற்காகவோ - கவுண்டமணி, வடிவேலு ஜோக்குகளையோ ; தமிழ் சினிமா டயலாக்குகளையோ சேர்க்கக்  கூடாது என்கின்ற என்  நிலைபாட்டில் மிகவும் உறுதியாக இருக்கிறேன். ஏனெனில்..

முதற் காரணம், என்னைப் போன்ற சினிமா, டிவி ஆர்வலர்களாக அல்லாத பட்சத்தில் - அந்த வார்த்தையின்  Sense of humour என்னவென்றே புரியாது. இரண்டாவது காரணம் - ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப்  பிறகு இணையும் இளம் வாசகர்களுக்கு, இதன் சாராம்சம் எதுவுமே புரிந்து வராது. அதே நேரம் இவ்வித வசனங்கள், வாசகர்களை கதைக் களத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது போலவும் அமைந்து விடும் ! சரி அதற்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று யாராவது கேட்பதற்கு முன்பே காரணத்தை கூறி விடுகிறேன். இக்கதையில் வரும் வசனங்களான...

1. குட்டிப்பா     
2. மிஸ்டர் ஜூப்பர் ஸ்டார் 
3. ஐஸ்வர்யா ராயுடன் பல்லாங்குழி ஆடுவதாக... 
4. இந்தியா பக்கமாய்... ஹீரோயின் வேஷம் கொடுத்து ஒரு தென்னை மரத்தைச் சுற்றி ஆட ... 

என்னதான் முயன்றாலும் ''குட்டிப்பா'' தரும் உண்மையான அர்த்தம் எனக்குப் புரியவேயில்லை. ''குட்டிப்பா'' பற்றி தெரியாதது என் குற்றமாகவே இருந்தாலும், நாம் பயணிக்கும் டவுன் பஸ் சட்டென்று  திடீர் ப்ரேக் அடித்து  நம்மை முன்னால்  இருக்கும் கம்பியில் முட்டிக் கொள்ளச் செய்தால் எப்படி இருக்குமோ அப்படி நான் உணர்ந்தது நிச்சயமாக என் தவறல்ல என்பது மட்டும் உண்மை ! ஐஸ்வர்யா ராயுக்கும், லார்கோ வின்ச் ற்கும் என்னப்பா சம்பந்தம் ?! மிஸ்டர் ஜூப்பர் ஸ்டார் என்று விளிக்கும் (!) லார்கோ  வின்ச்  - ஐய்யோ மாமா.. ட்ரவுசர் கழண்டுரிச்சு மாமா... போன்ற படத்தில் வரும் விஜய் சேதுபதியாகவே காட்சி தர ஆரம்பித்து விடுகிறார்.  

சமீபத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்து வெளிவந்த வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில் வரும் அமுல் பேபி வில்லன் இவ்வாறு கூறுவான் - இவனப் பார்த்தாலே எரிச்சலாக இருக்கிறது... இந்த மாதிரி  லோக்கல் பசங்கள சின்ன வயசிலிருந்தே எனக்குப் புடிக்காது... அது என்னமோ  தெரியல.. எனக்கும் இந்த மாதிரி லோக்கல் வசனங்களைப் படிக்க சின்ன வயசிலிருந்தே பிடிப்பது இல்லை :)))