Follow by Email

Tuesday, 16 December 2014

உயரே... ஒரு ஒற்றைகழுகு..!

நண்பர்களே, 

வணக்கம். மனம் முழுவதும் சிலசமயம் சட்டென்று உல்லாசமாக இருக்கும் ; நம் உடலையும், உள்ளத்தையும் வானத்திலிருந்து வரும் ஒரு இளம் தேவதை  தாலாட்டுவதாக உணர்வோம் ; இறைவா... இப்படியே என் உலகம், காலம் முழுவதும் இருந்துவிடக் கூடாதா என்ற ஏக்கம் படரும் ; நேரம், காலம் மறந்து, மனம் மட்டுமே மோகிக்கும் அந்நிலை சில நொடிகளே நீடிக்கும் என்றாலும் அளப்பரியது !

இதற்கெல்லாம் காரணம் என்னவாக இருக்க முடியும் ? அது நமக்குள் சயனித்திருக்கும் கற்பனாச் சக்தியாகத் தான் இருக்க வேண்டும். அந்தக் கற்பனைச் சக்தியில் தான் அனைத்துமே அடங்கி இருக்கிறது என்பதில் தான் வாழ்க்கையின் சூட்சமும் அத்தனையும் உள்ளடங்கி இருக்கிறது.  இந்தக் கற்பனாச் சக்தி, நமக்கு எந்தளவு உணர்வோடு கலந்து, உயிரோடு கரைந்திருக்குமோ அந்தளவு நம் வாழ்க்கை இனிமை நிறைந்ததாக இருக்கும் !

நம் தலைமுறையின் சிறுவயதில் அநேகமாக அனைவருமே பூந்தளிர், அம்புலிமாமா, பாலமித்ரா, கோகுலம் எனும் சிறுவர் மலர்களில் ஏதும் ஒன்றையாவது வாசித்திருப்பார்கள் ; அந்த வாசகர்களில் பலரும் காமிக்ஸ் வாசிப்பிலும் வசமிழந்து இவ்வுலகை மறந்திருப்பார்கள் ;  அதில் சிலராவது மாயாலாஜக் கதைகளைப் படித்து, அந்த மாயலோகத்தில் சஞ்சரித்து, அங்கே காணக் கிடைத்த மந்திர தந்திரங்களால், தன் மதி மயங்கி பிரம்மை பிடித்தவர்களாக கொஞ்ச காலம் வாழ்ந்திருப்பார்கள். இவை எதுவுமே கிடைக்கப் பெறாதவர்களுக்கு பாட்டி சொன்னக்  கதைகள் வழியாகவாவது கற்பனைகள் எல்லையின்றி விரிந்திருக்கும் !

இதுபோன்ற காமிக்ஸ், மற்றும் மாயாஜாலக் கதைகளே நம் கற்பனை சக்தியின் பிறப்பிடமாக இருக்கிறது. அதன் வலிமை, ஒவ்வொருவரின் பால்ய காலத்தில் ஏற்படுத்திய தாக்கத்தின் அளவில் தான் முழுமையாக அளவிடப்படுகிறது. இம்மாத வெளியீடான மேஜிக் விண்ட்/ன் உயரே ஒரு ஒற்றைக் கழுகு அது போன்ற தனித்துவம் வாய்ந்த கதையாக அமைந்திருக்கிறது !தமிழ் காமிக்ஸ் வாசகர்களாகிய நாமெல்லாம்,  கௌபாய் உலகத்தினில் முழுமையாக மூழ்கடிக்கப்பட்டு விட்டோம். அதனால் தான் மேஜிக் விண்ட்/ம் ஒரு கௌபாய் கதையாக அறிமுகப்படுத்தப்பட்டு, அதே மனநிலையில் படிக்கவும் பழகிவிட்டோம். கதையின் ஆரம்பத்தில் சுட்டி லக்கி போன்று சாதராணமாக படிக்கும் மனநிலை எழுந்த போதும், சிறுவனை ஒரு கழுகு உயரே தூக்கிச் செல்ல ஆரம்பித்தவுடன் ஒரு இனம் புரியாத சிலிர்ப்பு, பின் மீண்டும் அதே கௌபாய் உலகம், செவ்விந்திய கிராமம் என்று சாதாரணமாகக் கதை நகருகிறது. இருப்பினும் கதையின் பாதியில் மேஜிக் விண்ட், மரணக் கால்வாயில் கால் பாதிக்கும் போது,  எங்கிருந்தோ வரும் மாயக் காற்று மெதுவாக நம்மைச் சுற்றிச் சுழல ஆரம்பிக்கிறது. திடிரென பட்டுப்போன மரங்களும்  நடக்க ஆரம்பித்தவுடன் நம்மை சூழ்ந்திருந்த மாய வளி, ஒரேடியாக நம்மை தூக்கி வாரிப் போட்டது போன்ற ஒரு உணர்வு  ; அதன் கதையும், கதையின் தன்மையும் ஒரேடியாக மாறியது போன்ற உணர்வுகளால் வேகவேகமாக நகர்ந்து சட்டென்று கதையும் முடிந்துப் போனவுடன், வெகுநாட்களுக்குப் பிறகு ஒரு நிறைவான காமிக்ஸ் பிடித்த திருப்தி மனமெங்கும் வியாபித்து இருந்தது. இன்னும் கூட கொஞ்சம் யதார்த்தத்தைக் குறைத்து, ப்ளாக் உல்ஃபின் உலகத்தை இன்னும் கூட கொஞ்சம் அதிகரித்து இருந்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்குமே என்ற ஆதங்கம் மட்டுமே இக்கதையில் ஒரு குறையாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இது ஒரு மனநிறைவை அளிக்கும் அருமையான காமிக்ஸ், அதுமட்டுமல்ல கிராபிக் நாவல் ரசிகர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய காமிக்ஸும் கூட !உயரே ஒரு ஒற்றைக் கழுகு - கற்பனா உலகத்தின் முதல் மண்டலதிற்கோர்  மீடியம் !

18 comments:

 1. //இது ஒரு மனநிறைவை அளிக்கும் அருமையான காமிக்ஸ்//

  for me too!

  ReplyDelete
  Replies
  1. Satishkumar S :

   ஆனால், புத்தக அச்சுத் தரம் கொஞ்சம் சொதப்பி விட்டது :(

   Delete
 2. //யதார்த்தத்தைக் குறைத்து, ப்ளாக் உல்ஃபின் உலகத்தை இன்னும் கூட கொஞ்சம் அதிகரித்து இருந்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்குமே என்ற ஆதங்கம் மட்டுமே இக்கதையில் ஒரு குறையாக இருக்கிறது.//
  எனக்கும்.

  ப்ளாக் உல்ஃப் பற்றி கொஞ்சம் விளக்கமும் இருந்திருக்கலாம்.!

  ReplyDelete
  Replies
  1. //ப்ளாக் உல்ஃப் பற்றி கொஞ்சம் விளக்கமும் இருந்திருக்கலாம்.!//
   +1

   Delete
  2. கிட் ஆர்ட்டின் KANNAN :

   //ப்ளாக் உல்ஃப் பற்றி கொஞ்சம் விளக்கமும் இருந்திருக்கலாம் // +1

   ப்ளாக் உல்ஃப் பற்றிய விளக்கத்திற்கு ஒரு நாலு பக்கமும், அந்த மரணக் கணவாய் சாகசத்திற்கு இன்னும் ஒரு நாலு பக்கமும் ஒதுக்கி இருந்தால், இந்தக் கதை ரொம்பவே அற்புதமானதாக அமைந்திருக்கும் !

   Delete
 3. //நம் தலைமுறையின் சிறுவயதில் அநேகமாக அனைவருமே பூந்தளிர், அம்புலிமாமா, பாலமித்ரா, கோகுலம் எனும் சிறுவர் மலர்களில் ஏதும் ஒன்றையாவது வாசித்திருப்பார்கள்//

  உண்மை!!!! அதிலும் அம்புலிமாமா -வின் வண்ண கலவை மிகவும் நன்றாக இருக்கும் !!

  ReplyDelete
  Replies
  1. selvam abirami :

   //உண்மை!!!! அதிலும் அம்புலிமாமா -வின் வண்ண கலவை மிகவும் நன்றாக இருக்கும் !!//

   உண்மை !! அதிலும் அந்த நீல வர்ணம், நம் கற்பனாச் சக்தியின் பிறப்பிடமாகவே இருந்தன.. ஹ்ம்ம்.. எல்லாமே தொலைந்துப் போனதும் அல்லாமல், நினைவை விட்டு மறந்தும் போய் விட்டது தான் கொடுமை :(

   Delete
 4. @ மிஸ்டர் மரமண்டை

  //கற்பனைச் சக்தியில் தான் அனைத்துமே அடங்கி இருக்கிறது என்பதில் தான் வாழ்க்கையின் சூட்சமும் அத்தனையும் உள்ளடங்கி இருக்கிறது. இந்தக் கற்பனாச் சக்தி, நமக்கு எந்தளவு உணர்வோடு கலந்து, உயிரோடு கரைந்திருக்குமோ அந்தளவு நம் வாழ்க்கை இனிமை நிறைந்ததாக இருக்கும் !//
  இந்த கற்பன சக்தியின் ஒரு பரிணாமம் கடவுள் நம்பிக்கை என்னும் பிடிமானமாகவும், இன்னொரு பரிமாணமம் பேய்,பிசாசுகள் மீது நம்பிக்கை செலுத்தி பயமென்னும் கற்பனை குழிக்குள் தள்ளி சிதைப்பவை, என நான் அர்த்தம் கொள்வது சரிதானா நண்பரே...?

  ReplyDelete
  Replies
  1. mayavi. siva :

   இந்தக் கற்பனாச் சக்தியின் ஒரு பரிணாமம் கடவுள் நம்பிக்கை என்னும் பிடிமானமாகவும், இன்னொரு பரிமாணமம் பேய்,பிசாசுகள் மீது நம்பிக்கை செலுத்தி, பயமென்னும் கற்பனை குழிக்குள் தள்ளி சிதைப்பவை, என நீங்கள் அர்த்தம் கொள்வது சரியானதல்ல நண்பரே :-)

   ஏனெனில், கற்பனைச் சக்தி ; நம்பிக்கை இரண்டும் வெவ்வேறானவை ! எண்ணங்கள் விரிவடையும் நிலையையே கற்பனை எனவும், எண்ணங்கள் குறுகி ஒரு மையத்தில் பதிவதையே நம்பிக்கை எனவும் கொள்ளலாம் அல்லவா ?!

   Delete
  2. @ மிஸ்டர் மரமண்டை

   அருமையாக பிரித்து வகை படுத்தினிர்கள் ...என் ஆழ்மனம் உங்கள் வரிகளை அழகாக உள்வாங்கி கொண்டது.உங்கள் வார்த்தை அமைப்பு மிக சிலருக்கே வரும்...கற்பனா சக்தியின் முடிவில் நம் முன் தோன்றும் எந்தவகை தோற்றத்தின் மீது நம்பிக்கையை குவிக்கிறோமோ,அதற்கேற்ற வாழ்வில் உயிரோட்டம் மாறுகிறது,உற்சாகமோ,துக்கமோ என உணர்ச்சிகள் கொப்பளிக்கிறது...!

   Delete
 5. //எண்ணங்கள் விரிவடையும் நிலையையே கற்பனை எனவும், எண்ணங்கள் குறுகி ஒரு மையத்தில் பதிவதையே நம்பிக்கை எனவும் கொள்ளலாம் அல்லவா ?!//

  அருமையான சொற்பிரயோகம் !!!!!!!!

  இதைவிட எளிமையாக ,தெளிவாக விளக்குவது கஷ்டம் .....வாவ் !!!!!

  ReplyDelete
 6. கற்பனைக்கும் நம்பிக்கைக்கும் வுள்ள வித்தியாசத்தை விளக்கிய தமிழ்க் கலைஞர் அவர்களுக்கு
  ஒரு சபாஷ் பூதக்கண்ணாடி வழியே குவியும் ஒளி போன்றது நம்பிக்கை,,எல்லையில்லா வானத்தில்
  உயரே உயரே விரிந்து பறந்து சிறகடிப்பது கற்பனை..ஆஹா..சூப்பர் ..

  ReplyDelete
  Replies
  1. VETTUKILI VEERAIYAN

   //பூதக்கண்ணாடி வழியே குவியும் ஒளி போன்றது நம்பிக்கை, எல்லையில்லா வானத்தில் உயரே உயரே விரிந்து பறந்து சிறகடிப்பது கற்பனை// ஆஹா.. சூப்பர் .. அழகான உவமை நண்பரே !

   Delete
 7. உயரே ஒரு ஒற்றை கழுகு., பிரிண்டிங் குளறுபடிகளுக்கு நடுவிலும், கதையின் போக்கால் ரசிக்கவைத்தது. இன்னோன்று கதை படிக்க ஆரம்பித்தால் பத்தே நிமிடங்களில் கதை முடிந்துவிட்டது.,இரண்டு கதைகளை இணைத்து வெளியிட்டிருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. Dr.Sundar,Salem.: //இரண்டு கதைகளை இணைத்து வெளியிட்டிருந்தால் நன்றாகத் தான் இருந்திருக்கும்//

   அடுத்தக் கதை ஒரு கௌபாய் கதைக் களம் என்று ஆசிரியர் கூறியுள்ளார். எனவே, இரண்டு கதைகளைச் சேர்த்து வெளியிட்டிருக்க முடியாது. அதே சமயம், அடுத்த வருடம் தோர்கல் தொகுப்பாய் வெளிவரும் வேளைதனில் இந்த மேஜிக் விண்ட்/ன் மெஸ்மரிசம் காணாமல் போய் விடக் கூடும் என்றே கருதுகிறேன். இந்த வகைக் கதைகள், ஒரு குறுகிய கால அவகாசத்தை சுவாரசியப் படுத்தக் கூடியதாக மட்டுமே அமையலாம். கொஞ்ச காலம் கழித்து நினைத்துப் பார்க்கும் போது, இத்தொடர் தன் ஈர்ப்பை தளர்த்தி விடும் என்பது என்ன கருத்து !

   Delete
 8. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். வல்லவர்கள் வீழ்வதில்லை.. ! கதை விமர்சனம் பதிவிட்டு விட்டேன். இது ஒரு வகை கலாயத்தல் ரக காரசாரமானப் பதிவு என்பதால், அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் உள்ள நண்பர்கள் மட்டுமே படிக்க வேண்டுகிறேன். மற்றவர்கள் தவிர்த்து விடுவதே நலம் :))

  வல்லவர்கள் வீழ்வதில்லை.. ! இதைப் படித்து விட்டு என்னை வசைப்பாடத் தோன்றினால், தாராளமாக என்னைப் போலவே நீங்களும் கலாய்த்து பதிவிடலாம். கமெண்டு போட விருப்பமே இல்லா விட்டாலும் என்னால் அதை புரிந்து கொள்ள இயலும், ஆனால் ஒருவரே ஆறு id யில் வந்து தரம் தாழ்ந்து விமர்சித்து, இராஜபாளையம் நாய் போல் குரைக்கும், சிவகாசி சௌந்தர் போன்று பதிவிட வேண்டாம் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்.. நன்றி !!

  ReplyDelete