Follow by Email

Sunday, 20 September 2015

வரலாற்றின் மறுபக்கம் !


மிஸ்டர் மரமண்டை28 June 2015 at 17:57:00 GMT+5:30 நெருடல் ! (நெருடல் இல்லாமல் இருப்பதே சிறந்தது )

டியர் விஜயன் சார்,

இன்றையப் பதிவில், பௌன்சரின் கறுப்பு விதவை பற்றிய தங்களின் சஞ்சலங்கள் என் மனதில் கலக்கத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. என்னைப் பொறுத்தவரை நான் வாங்கி வாங்கிப் பாதுகாத்து வைக்கும் காமிக் புத்தகங்கள் என்னோடு முடிவடையப் போவதில்லை. வாரிசு உரிமை கோரும் விதமாகவும், இவையனைத்தும் இன்னாருக்கு மட்டுமே பாத்தியமானது என்று உயில் எழுதி வைக்கும் அளவிற்கு பொக்கிஷமானதாகவும் கருதுகிறேன் :) ஆத்மதிருப்தி என்பது ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சிலதில் மட்டுமே லயித்து வாழ்கிறது. அதன் மதிப்போ ; அதன் தேவையோ - அங்கு அடிபட்டு போகும் ஒன்றாகிறது !

பொதுவாகவே நாம் பார்க்கும், கேட்கும், படிக்கும் எந்த ஒரு விஷயமும் நம் ஆழ் மனதை விட்டு அகலுவதே இல்லை. ஆழப்பதிந்து, அதற்கான சமயச் சந்தர்ப்பம் சூழ்நிலையாக அமையும் போது - நம் எண்ணத்தின் வலிமையைப் பொருத்து, அது ஆசையாகவோ ; பாதிப்பாகவோ ; செயல் ஊக்கியாகவோ வெளிப்படுகிறது. அவ்வாறு சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமையாத வரை - குழப்பமான கனவுகளின் வழியாக நம் வாழ்க்கையின் பெரும்பாலான இரவுகளில், பயத்தையும், வேதனையையும், அருவருப்பையும், சோகத்தையும், துன்பத்தையும் அள்ளித் தந்து, ஒவ்வொரு விடியலையும் வேதனைக்குள்ளாக்கியப் பொழுதுகளாக மாற்றிச் செல்கிறது :(

சாதாராண நிகழ்வுகளுக்கே இத்தனை வலிமை எனில், நாம் நேசிக்கும் காமிக்ஸில், சமூகத்திற்கு ஒவ்வாத அருவருப்பான படத்துடனோ ; அதற்கேற்ற வசனங்களுடனோ பரிணமிக்கும் போது - அவையனைத்தும் நம் மனதில் பட்டா போட்டு குடியேறி விட்டால், அவ்வப்போது மனதில் நிழலாடிச் செல்லும் அருவருப்பு சொல்லி மாளாது :( அதற்காக முத்தக் காட்சிகளோ ; அரைகுறை ஆடைகளின் தரிசனமோ கூட வேண்டாம் என்று சொல்லவில்லை. ஏனெனில், இவையெல்லாம் நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத டிவி விளம்பரங்களாகவே இன்று பரிணமித்து விட்டது. இந்த ஆக்கிரமிப்பில் இருந்து மீள்வது இயலாத காரியம் என்பதால் இதில் (காமிக்ஸில்) அளவுக்கு மீறிய சென்சார் என்பது எந்த விதத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால்,


மிஸ்டர் மரமண்டை28 June 2015 at 18:30:00 GMT+5:30 contd.. 

எத்தனையோ விதமான நெருடல்கள் இருக்கலாம், அதே சமயம் ஒவ்வொருவருக்கும் அதில் ஏதோ ஒரு விஷயம் நெருடலின்றி தோன்றலாம். ஆனால் இன்றும் நாம் வாழும் நம் சமுதாயத்திற்கு ஏற்பு இல்லாத, அதனாலென்ன என்று வசியப்படாத மனப்பக்குவத்திற்கு எதிரான விஷயங்களை தயவு செய்து சென்சார் செய்து விடவும். கதையின் போக்கு சிறிது மாறினாலும் கூட எடிட் செய்வது நலம் பயப்பதாகவே அமையும். ஏனெனில், இன்னும் கூட காமிக்ஸ் வாசகர்களில் 90 சதவிகிதம் நபர்கள், கிராபிக் நாவலுக்கு அடிமையாவாதவர்கள் தான் அல்லவா :-)

ப்ளுகோட் (த.தே.சி) கதை விமர்சனத்தில் கூட இதைத்தான் நான் கோடிட்டு காட்டியிருந்தேன். உதாரணமாக, இயற்கை வகுத்துள்ள விதிக்கு மாறான பாலியியல் உறவுகளைச் சித்தரிக்காமல் விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்பதே என் வேண்டுகோள். எங்கோ நடந்தால் நடந்து விட்டுப் போகட்டும், அதுவே அங்கு நடைமுறையாக இருந்தாலும் தொலைந்து போகட்டும். நாம் நாமாக இருக்கலாமே ?!

ஊர் உலகத்தில் நடக்காததையா நாம் படிக்கப் போகிறோம் என்ற கேள்வி எழாமலிருக்கப் போவதில்லை தான்.. அதற்காக நாம், நமக்கு ஒவ்வாத சில விஷயங்களை விலாவரியாக நம் மண்டைக்குள் திணித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதே என் இறுதிக் கருத்து. நன்றி சார் !!
மிஸ்டர் மரமண்டை29 July 2015 at 08:30:00 GMT+5:30 வரலாற்றின் மறுபக்கம் ! 

கர்ணன் படத்தைப் பார்க்கும் போதெல்லாம் உங்களுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் - நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் அற்புதமான நடிப்பு உங்கள் கண்முன்னே வந்து நின்றால், அது கர்ணன் திரைப்படத்தின் தோல்வியாகவே கருத வேண்டும் அல்லது சிவாஜி கணேசனின் மிகப்பெரிய தோல்வியாக கூட அது இருக்கலாம் :) 

கர்ணன் திரைப்படத்தில், மஹாபாரதத்தின் சாரத்தை உங்களால் உணரமுடியாமல், சிவாஜியின் நடிப்பு மட்டுமே உங்களை கவர்ந்திழுக்குமானால், கர்ணன் என்ற திரைப்படம் - சினிமா என்ற ரசனையைப் பொறுத்தவரை ஒரு தோல்விப் படமாகவே கருத வேண்டும் அல்லவா ?!

அது போலவே, ஓக்லஹோமா அல்லது வேறு எந்தக் காமிக்ஸாக இருந்தாலும், அதன் பின்னணித் தகவல்கள், வரலாற்று உண்மைகள், உண்மைச் சம்பவங்கள் - என அலசி ஆராயும் போது, காமிக்ஸின் உண்மையான சுவையை நாம் இழந்து விடுகிறோம் அல்லவா ?!

ஓக்லஹோமா உண்மை ; கதைக் களம் உண்மை ; கதையின் கால கட்டம் உண்மை ; land rush உண்மை என்று உங்களின் மூளை தீர்க்கமாக நம்பும் போது, டெக்ஸ் வில்லர் மற்றும் கார்சன் இருவரும் ஜோடிக்கப்பட்ட கதாப்பாத்திரங்கள் என்றே உங்களின் ஆழ்மனம், ஆழமாக நம்பத் தொடங்கும். இந்தக் கதையில் சுவாரசியம் குறையாமல் இருக்கலாம் ஆனால், உங்களின் ஆழமான நம்பிக்கை, வரப்போகும் டெக்ஸ் வில்லரின் ஒவ்வொரு கதையிலும், உண்மையையும் கற்பனையையும் பிரித்துப் பார்க்க ஆரம்பித்தால், நீங்கள் காமிக்ஸ் வாசிப்பு என்ற அற்புதமான சுவையை இழந்து விடுவீர்களே ?!


மிஸ்டர் மரமண்டை29 July 2015 at 08:31:00 GMT+5:30 contd.. 

அநேகமாக, நாம் அனைவருமே மெத்த படித்தவர்கள்.. பூகோளம், சரித்திரம், கணிதம், நிதி, சட்டம், திட்டம், இயற்பியல், வேதியல், உயிரியல், அறிவியல், அரசியல், விஞ்ஞானம், மருத்துவம் என்று அனைத்தையும் சிறுவயதில் கொஞ்சமாகப் படித்து, மேற்படிப்பில் ஏதோ ஒன்றில் வல்லமைப் பெற்று விட்டோம். அதனால் தான் இன்று நாம் ஒரு வக்கீலாகவோ ; டாக்டராகவோ ; ஆலோசகராகவோ ; ஆசிரியராகவோ ; ஐ டி ஆபிசராகவோ ; போலீசாகவோ ; வியாபாரியாகவோ ; அதிகாரியாகவோ ; தொழிலாளியாகவோ ; தொழில் முனைவோராகவோ ; இன்னும் ஏதோவாகவோ வாழ்க்கையில் சாதித்து வருகிறோம் ! 

பொழுது விடிந்து பொழுது போனால் ஏதோ ஒரு பிரச்சனை ; காலையில் சீக்கிரம் விழித்தெழ பிரச்சனை : பிள்ளைகள் பள்ளிக்குக் கிளம்பிச் செல்வதற்குள் ஆயிரம் பிரச்சனைகள் ; ஆபிஸ் போவதற்கும் பிரச்சனை ; அங்கு போனப் பின்பும் பிரச்சனை ; அலுவல் முடித்து வீடு வந்து சேருவதற்குள் போதும் போதும் என்று சொல்லுமளவிற்குப் பிரச்சனைகள் ; தாக்குப் பிடித்து வீடுச் சேர்ந்தால், குழந்தைகளின் வீட்டுபாடப் பிரச்சனை ; இத்தனைப் பிரச்சனையில் எங்கோ தவறி ஒரு முறை வாயை விட்டால், வாழ்க்கைத் துணைவியிடம் ஓராயிரம் பிரச்சனைகள் :)

இதற்கு இடையில் இளைப்பாறவே காமிக்ஸ் எனும் ஆலமரத்தடியில் சற்றே ஓய்வெடுக்கிறோம். தன்னை மறந்து, தத்தம் கவலைகள் மறந்து, சுற்றுபுறம் மறந்து, சுற்றுச் சூழல் மறந்து, சிந்தனையின்றி வேறோர் உலகத்தில் சஞ்சரிக்கவே காமிக்ஸ் வாசிப்பு நமக்கு உதவுகிறது அல்லவா ?! இதிலும் P.hd செய்ய வேண்டிய அவசியம் தான் என்ன? கடைசியில், சிறுகச் சிறுக காமிக்ஸ் ரசனைய இழப்பதில் தான் இது போன்ற பாதைகளின் முடிவு இருக்கும். வரலாறு நமக்கு அவசியம் என்றால் சரித்திரத்தைத் தனியாகப் படிப்போமே, அதற்காக காமிக்ஸ் என்ற உன்னதமான ரசனையைப் பாழ்படுத்திக் கொள்வதில் பயனேதும் இருக்கப் போவதில்லை !

சூப்பர் மேன், ஸ்மர்ஃப் போன்ற சிலவகையான காமிக்ஸ் தவிர, எல்லா காமிக்ஸும் ஏதோ ஒரு வகையில் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டதாகத் தான் இருக்கப் போகிறது ; அதன் பின்னணியில் ஏதோ ஒரு உண்மைச் சம்பவத்தைக் கருபொருளாக கொண்டே கதை அமைக்கப் படுகிறது - இதையெல்லாம் ஆராய்ந்து கொண்டே இருந்தால், நம்மால் மீண்டும் ஒரு முறை - ஒரு தங்கக் கல்லறை, ஒரு மின்னும் மரணம், ஒரு இரத்தப் படலம் போன்ற வாசிப்பு அனுபவத்தை பெற தான் முடியுமா நண்பர்களே ?! 

காமிக்ஸை காமிக்ஸாக மட்டும் படிப்போமே ! காமிக்ஸை காமிக்ஸாக மட்டும் ரசிப்போமே !!
மிஸ்டர் மரமண்டை26 July 2015 at 10:23:00 GMT+5:30 comic sunday ! Reply / Delete / ignore !? 

நண்பர்களே, வணக்கம் ! நம்முடைய மிகச் சிறு வயதில், நம் வீட்டிற்கு வருகைத் தரும் சொந்தங்களில் ஒரு சிலராவது, நம்மிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பார்கள், அனேகமாக தாய்வழிப் பாட்டி நிச்சயம் அதில் இடம் பிடித்திருப்பார் - உனக்கு அம்மாவை ரொம்பப் பிடிக்குமா? அப்பாவை ரொம்பப் பிடிக்குமா? என்ற கேள்வி தான் அது. உடனே நாம், எனக்கு ரெண்டுப் பேரையும் ரொம்பப் பிடிக்கும் ஆயா.. என்று கூறியிருப்போம். உடனே நம் பாட்டி, யாராவது ஒருத்தரை மட்டும் சொல் என்றவுடன், எனக்கு அம்மாவை மட்டும் தான் ரொம்ப ரொம்பப் பிடிக்கும் ஆயா... என்று உணர்ச்சி மேலிடக் கூறி, அவரை சந்தோஷத்தில் திளைக்கச் செய்திருப்போம். ஏனெனில்,

ஜனிக்கும் முன்பே தாயின் கருவறையில் உண்டு, உறங்கி, சுவாசித்து, யாசித்து - ஜனித்தப் பின்பும் ஒட்டி உறவாடி, தொட்டுத் தழுவி, உச்சிமோந்து, அவளுடனே அழுது, சிரித்து, துடித்து, துவண்டு வளர்ந்த அந்த சிறுவயதுப் பிராயத்தில், தாயை விட சிறந்த உலகம் வேறு எதுவுமே இருந்திருக்காது அல்லவா ?! போலவே, இந்தக் காமிக்ஸ் வலைதளமா அல்லது என்னுடைய மிஸ்டர் மரமண்டை என்ற பெயரா என்ற கேள்வி எழுந்தால், எனக்கு இரண்டுமே அவசியம் வேண்டும் என்றே கூறுவேன். இல்லையில்லை ஏதாவது ஒன்று மட்டுமே சாத்தியம் என்றால், மிஸ்டர் மரமண்டை என்ற அடையாளத்தை மட்டுமே தேர்ந்தெடுப்பேன் :-)

தெரிந்தோ, தெரியாமலோ மரமண்டை என்ற பெயரில் மட்டுமே அறிமுகம் ஆனேன் ; மரமண்டை என்ற ஒரு ஐடியில் மட்டுமே பதிவிட்டு வந்தேன், வருகிறேன் ; இரண்டு ஐடியில் பதிவிட நான் கோழையும் அல்ல, மரமண்டை என்ற புனைபெயரில் இருப்பதால் நான் குற்றவாளியும் அல்ல - ஆனால், அனைவரையும் போன்றே நானும் ஒரு சராசரி காமிக்ஸ் வாசகன் மட்டுமே !

இதுவரை எந்தப் புத்தகக் கண்காட்சிக்கும் சென்றதுமில்லை, இனி, செல்லப் போவதும் இல்லை. இதுவரை ஆசிரியரை சந்தித்ததும் இல்லை, இனிமேல் சந்திப்பேனா என்பதற்கு, தற்போது என்னிடம் விடையே இல்லை ! இதுபோன்ற என் விளக்கப் பதிவுக்கு என்னை ஆளாக்கிய நண்பர்கள் பெரியதாக சந்தோஷப்பட்டுக் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே, சென்ற டிசம்பரில் இருந்து, ஜூன் வரை, 6 மாதங்கள் முழுமையாக இங்கிருந்து நான் ஒதுங்கியே தான் இருந்தேன் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். ஏனெனில், என் மீதான, Palani kumar, Vinoth kannan அவர்களின் கீழ்த்தரமான / தரங்கெட்ட பதிவும், அதை ஆசிரியர் அவர்கள் Delete செய்யாமல் அப்படியே விட்டு வைத்திருந்த காரணமும் தான் என்பதில் என்னிடம் மாற்றுக் கருத்து இல்லை. அவ்வளவு ஏன், இதோ இப்போதும் கூட, ''கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்'' அவர்களின், ''மாமா, உங்கள் சேவை நாட்டுக்கு தேவை, கழிசடை'' போன்ற வார்த்தைகள் அடங்கியத் தரம் தாழ்ந்த பதிவுகள், அப்படியேத் தானே இருக்கிறது ? ஏனென்றால், அவர் உண்மை பெயரில் பதிவிடுவது மட்டுமே காரணமாக இருக்க முடியும் :)

//ஒரு மைல்கல் இதழ் வெளியான 3 வாரங்களுக்குள்ளாகவே ; இன்னுமொரு மைல்கல் ஒரே வாரத்தில் காத்திருக்கும் வேளைதனில் - இங்கே ஓடும் நமது பின்னூட்டங்களின் பெரும்பகுதி தேவையற்ற திசைநோக்கிப் பயணம் போகும் போதே - நாம் செல்லும் பாதை சரியில்லை என்பது புரிவதில் சிரமம் தானேது ?// 

அப்படியில்லை விஜயன் சார், இந்த வலைதளத்தில் முன்பிருந்த காமிக்ஸ் மீதான ஈர்ப்பும் / அது சம்பந்தமான பதிவுகளும் தன்னுடைய வலிமையை இழந்து விட்டதே காரணம். ''மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள்'' என்ற காலத்தை கடந்து, தற்போது ''தேவைக்கு மட்டுமே காமிக்ஸ் வாசிப்பு'' என்ற நிலைக்கு வந்து விட்டோமா என்ற சிறுச் சிந்தனை கூட ஒரு விதத்தில் உங்களுக்கு நன்மை பயக்கும் எ.எ.தா.கருத்து. மேலும், இன்னும் வரப்போகும் நாட்களில், புத்தகக் கண்காட்சியில் உங்களைச் சந்திக்க வரும் வாசகர் வட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தே போகும் என்பதிலும் சந்தேகம் ஏது? டெக்ஸ் வில்லர் கதைகள் மீதான  ஆர்வங்கள் கூட ஒரு விதத்தில் தீபாவளியை எதிர்நோக்கும் சிறுவர்களின் மனோநிலையை ஒத்திருப்பதாக தங்களால் யூகிக்க முடியவில்லையா ? தினம் தினம் தீபாவளி என்றால் தித்திக்குமா? திகட்டுமா? என்பதை காலம் தான் தீர்மானிக்கும். நன்றி !
மிஸ்டர் மரமண்டை29 July 2015 at 08:56:00 GMT+5:30 பொன் முட்டையிடும் வாத்து ! 

டெக்ஸ் வில்லர் கதைகள் பொன் முட்டையிடும் வாத்து தான் என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது :)

1.ஸ்மர்ஃப் !
2.லியனார்டோ !
3.கர்னல் க்ளிப்டன் !
4.சிக்பில் !

ஆகிய கதைகளைத் தாங்கி, தமிழ் காமிக்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக gift / box செட்டாக வரும் CCC - முத்து 350 சிறப்பிதழ் என்ற மைல்கல் சாதனைக்கு - கேட்பாரே இல்லாமல் போய் விட்டதே ?! கார்ட்டூன் கதைகள் என்பதால் வரவேற்பு இல்லாமல் போய் விட்டதா? அல்லது டைகர் மற்றும் டெக்ஸ் வில்லர் கதைகளைத் தவிர, மைல்கல் சிறப்பிதழுக்கு என்று வேறு எதற்கும் நம்மிடம் எதிர்பார்ப்போ ; ஆர்வமோ இல்லை என்பது தான் இதற்கு அர்த்தமாகிடுமோ ?! 

விஜயன் சார் சற்று யோசிக்க வேண்டிய விஷயம்... அதுமட்டுமல்ல பொன்முட்டையிடும் வாத்தைப் பொரியல் போடும் முயற்சியாய் எதையும் செய்யும் முன்பே சற்றே நிதானித்தல் நலமாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து !மிஸ்டர் மரமண்டை20 September 2015 at 08:52:00 GMT+5:30 comic sunday - Tex vs Vex ?! 

தற்போதெல்லாம் மனதில் தோன்றுவதை அப்படியே எழுத தயக்கமாக இருப்பதால் தான் அதிகமாக பதிவிடுவதில்லை. ஏற்கனவே 6 டெக்ஸ் இதழ்கள் என்பதே அதிகமாகவும் கொஞ்சம் அயர்ச்சியாகவும் தெரிகிறது. அதற்கு காரணம், கதைக்களம் மாறினாலும், இடமும் பின்னணியும் மாறினாலும் கூட - டெக்ஸ் கார்சனை கலாய்ப்பார் ; டெக்ஸ் எதிரிகளின் முகரையில் முஷ்டியை இறக்குவார் ; டெக்ஸ் எதிரிகளை வெல்லுவார் என்ற ரீதியிலான, ஒரே வகையான டெம்ப்ளேட் வகைக் கதைகள் - படிப்பற்கு கொஞ்சம் சுவாரசியம் குறைவு தான் :-)

இங்கு எழும் இவ்வளவு எதிர்பார்ப்பும், ஆர்வமும் - டெக்ஸ் தனிச் சந்தா கிடைக்கும் வரை நீடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் எழப்போவதில்லை. அதுவே வருடக்கணக்கில் தொடருமா என்பதில் தான் சற்று சஞ்சலம் எழுகிறது. இதற்கு இன்று பதிலளிப்பது மிகவும் எளிதானது தான், ஆனால் காலம் அளிக்கும் பதிலுக்கு முன்னால் பல கேள்விகள் தலைகுனிந்து தான் நிற்கின்றன.யோசித்து செய்யவும் சார்.

மறுபதிப்புகள் பற்றிய சிந்தனை மிகவும் சிறப்பான ஒன்று. வருடத்திற்கு 5 என்பதும் கூட வரவேற்க கூடிய ஒன்றாக இருக்கும். அதாவது மும்மூர்த்திகள் 12 + 5 டெக்ஸ் மறுபதிப்பு இதழ்கள் - வெற்றிக்கான கூட்டணியாக அடுத்த 3 வருடங்கள் வெற்றிவாகைச் சூடும் என்பது என் கருத்து. யோசித்து முடிவு எடுக்கவும் சார் !36 comments:

 1. Replies
  1. வரவேற்றமைக்கு நன்றி ஐயா.

   Delete
 2. // வரலாறு நமக்கு அவசியம் என்றால் சரித்திரத்தைத் தனியாகப் படிப்போமே, அதற்காக காமிக்ஸ் என்ற உன்னதமான ரசனையைப் பாழ்படுத்திக் கொள்வதில் பயனேதும் இருக்கப் போவதில்லை ! //

  உண்மை தான். உழைப்பும் கவனமும் தேவைப்படும் விஷயம் வரலாறு.

  அத்தோடு காமிக்ஸ் ஆர்வம் வறட்சியுற்ற நிலப்பகுதியில் வசிக்கும் நாம் கதைகளின் வரலாற்றுத் தகவல்களை ஆராய்ந்து கொண்டிருந்தால், காமிக்ஸ் புத்தகங்கள் பாடப்புத்தகத்தைப்போல மரியாதை கலந்த அலட்சியத்தையே சம்பாதிக்கும்!

  (@மிம, நீங்கள் இந்தக் கருத்தை முன்பு கமெண்ட்டாக தெரிவித்த நேரம் சரியில்லை/பொருத்தமில்லை என்பதனால் பதிலளிக்கவில்லை - எனவே இப்போது!)

  ReplyDelete
  Replies
  1. மிஸ்டர் மரமண்டை.!நான் ரொம்ப நாளாக உங்களிடம் ஒன்றை கேட்க வேண்டும் நினைப்பேன்.! ஆனால் உங்களுக்கு நிறைய எதிரிகள் என்பதால் பர்சனலாக எந்த கேள்வி கேட்டாலும் அது வில்லங்கத்தில் போய் முடியும் என்று கேட்பதில்லை.!

   ""நல்ல திறமையான எழத்தாற்றலும் ,மனதில் பட்டதை துணிச்சலாக பட் என்று சொல்வதும் , நல்ல காமிக்ஸ் ரசிகராகவும் இருக்கும் நீங்கள் ஏன் உண்மையான பெயரில் பதிவிடக்கூடாது.?
   (நான் இந்த தளத்திற்கு புதியவன் முன்பு நடந்த சச்சரவுகள் தெரியாது.! நல்ல காமிக்ஸ் ரசிகரான உங்களை ஏன் படுபயங்கரவில்லன் போல் பழைய வாசகர்கள் கருதுகின்றனர்.? இது எனக்கு புரியவில்லை.? )

   Delete
  2. Ramesh Kumar : //அத்தோடு காமிக்ஸ் ஆர்வம் வறட்சியுற்ற நிலப்பகுதியில் வசிக்கும் நாம் கதைகளின் வரலாற்றுத் தகவல்களை ஆராய்ந்து கொண்டிருந்தால், காமிக்ஸ் புத்தகங்கள் பாடப்புத்தகத்தைப்போல மரியாதை கலந்த அலட்சியத்தையே சம்பாதிக்கும்//

   +1 சத்தியமான உண்மை இது ரமேஷ் !

   And, எவ்வளவு தான் ''இடம், பொருள், ஏவல்'' பார்த்து பதிவிட்டாலும், நமக்கு எதிராக சிறிய க்ரூப் ஒன்று உள்ளடி வேலை செய்தால் முன்பிருக்கும் சாதகமான சூழ்நிலை மொத்தமாக மாறி அசாதாரணமாகி விடுவது தான் தொல்லையே... ஒருவர் பின்னால் ஒருவர் என, எதிர் கருத்துகளை உள்நோக்கத்தோடு பதிவிடும்போது - அவை தன்னுடைய கெட்ட இலட்சியத்தை அடைந்து விடுகிறது :-))

   Delete
  3. Madipakkam Venkateswaran : //உங்களை ஏன் படுபயங்கரவில்லன் போல் பழைய வாசகர்கள் கருதுகின்றனர்.? இது எனக்கு புரியவில்லை.?//

   உண்மையாக கூற வேண்டும் என்றால், இன்றுவரை எனக்கும் புரியாத புதிர் இதுவாகத் தான் இருக்க முடியும். சில நேரங்களில், நாம் நண்பர்களாக அதுநாள் வரை எண்ணி பழகி வந்தவர்களே, விரோதி போல் நடந்து கொள்ளும் போது வெறுப்புக்குப் பதிலாக, சலிப்பு தான் ஏற்படுக்கிறது. இப்போதெல்லாம் இது போன்ற சங்கடங்கள் என்னை பாதிப்பதில்லை ; மனதில் சலனங்களை ஏற்படுத்துவதில்லை ; கடந்து செல்லும் பக்குவம் வந்து விட்டதாகவே நினைக்கிறேன் :))

   //நீங்கள் ஏன் உண்மையான பெயரில் பதிவிடக்கூடாது.?//

   உங்கள் பதிவிலேயே பதிலும் இருக்கிறது :)) //ஆனால் உங்களுக்கு நிறைய எதிரிகள் என்பதால்//

   நான் உண்மையான பெயரில் வரவிடாமல் தடுத்தது இவர்களாக தான் இருக்க முடியும். நம்முடைய உண்மையான பெயரில் வந்து, இவர்களிடம் கேவலமாக வாங்கிக் கட்டிக் கொள்ள நமக்கு என்ன தலையெழுத்து என்ற எண்ணமே காரணம்... ஒரு காமிக்ஸ் ரசிகனாக மட்டும் இருந்தால் போதாதா ? நம் ரிஷி மூலம், நதி மூலம் பற்றி விவரிக்க வேண்டிய அவசியம் அனைவருக்கும் இருப்பதாக நான் நினைக்கவில்லை !

   லயன் வலைதளத்தில் ஒருவர் இவ்வாறு கூறினார்.. நண்பர்களுடன் கூடி குதூகலிக்கும் மகிழ்ச்சி என்னவென்று தெரியாதவன்.. கிணற்றுத் தவளை... புத்தகக் கண்காட்சி பயணம் ஒரு உல்லாசப் பயணம்.. அதை தொலைப்பது.. blah blah..

   நண்பர்கள் என்றால் காமிக்ஸ் படிப்பவர்கள் மட்டும் தான் என்றும், பயணம் என்றால் புத்தகக் கண்காட்சி நடக்கும் ஈரோடு மற்றும் சென்னை மட்டும் தான் என்றும் - கற்பனையில் வாழ்பவர்களை என்னவென்பது? அறியாமையைத் தவிர வேறு எதுவும் அங்கே இருப்பதாகத் தெரியவில்லை :(

   அதற்கும் மேலே வாழ்வதற்கும் ரசிப்பதற்கும் எவ்வளவோ இருக்கிறது நண்பரே !!

   Delete
  4. நண்பரே.! உங்கள் உள்ளக் குமுறல் புரிகிறது.! ஆனாலும் எடிட்டரே வருத்தப்பட்டு அவருடைய தளத்தையே மூன்று வாரங்கள் சஸ்பெண்ட் செய்யும் அளவுக்கு போய்விட்ட ஒரு நிகழ்வை , திரும்பவும் கிளறி விட்டதைப்போல் இருந்த உங்கள் கமெண்ட் , எனக்கு மனவருத்தத்தை கொடுத்தது.!

   எடிட்டர் தனது தளத்தை உங்கள் தளம் போல் நீங்கள் உங்கள் கருத்தை சுதந்திரமாக பதிவிடலாம் என்று கூறினாலும் நாம் நமக்கு என்று ஒரு சில கட்டுப்பாடுகளை வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.!

   எங்காவது புகைந்தால் போதும் , பெட்ரோல் ஊற்றி கொளுத்த நிறையபேர் காத்து உள்ளனர்.!


   எடிட்டர் சங்கடம் கொள்ள தெரிந்தோ தெரியாமலோ நானும் ஒரு காரணம் ஆக விரும்பவில்லை.

   எனவே ஞாயிறுவரை எடிட்டர் பிளாக் கிற்கு போகக்கூடாது என்று சிறு கட்டுப்பாடு எடுத்துள்ளேன்.ஏனெனில் படிக்க மட்டும் செல்லலாம் என்றால் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் மணிவண்ணன் ஒயின் ஷாப் முன்னாடி பாட்டில் மூடியை திறந்த கதையாகிவிடும்.!

   எனது குட்டி சபதம் "பிரசவ கால வைராக்கியம் " போல் ஆகிவிடாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.! ஆனால் நீங்கள் விரும்பினால் இங்கு தவறாமல் வருவேன்.! நன்றி.!

   Delete
  5. Madipakkam Venkateswaran : //நீங்கள் விரும்பினால் இங்கு தவறாமல் வருவேன்.! //

   என்ன நண்பரே இப்படி கேட்டு விட்டீர்கள் ?! உங்களைப் போன்ற நண்பர்கள் இங்கு வராமல் இருந்து விட்டால் இந்த தளத்திற்கு என்று என்ன பெருமை இருக்க முடியும்? எனவே தவறாமல் வாருங்கள், எப்படி வேண்டுமானாலும் பதிவிடுங்கள், என்ன கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள்... பதிலளிக்கவும், விவாதம் செய்யவும் தயாராக இருக்கிறேன். நன்றி !

   //ஆனாலும் எடிட்டரே வருத்தப்பட்டு அவருடைய தளத்தையே மூன்று வாரங்கள் சஸ்பெண்ட் செய்யும் அளவுக்கு போய்விட்ட ஒரு நிகழ்வை , திரும்பவும் கிளறி விட்டதைப்போல் இருந்த உங்கள் கமெண்ட் , எனக்கு மனவருத்தத்தை கொடுத்தது.!//

   மன்னிக்க வேண்டும் நண்பரே, அந்த வாரம் நடந்த சம்பவங்களாலும், பின்னூட்டங்களாலும் தான் நான் அவ்வாறு பதிவிட்டேன். அன்றே பதிவிட்டிருக்கலாம் தான், ஆனால் மொத்த பிரச்சனையையும் என் மேல் திருப்பி விட்டிருப்பார்கள் என்பதால் தான் நான் அன்று கருத்து சொல்ல முயலவில்லை. எடிட்டருக்கு ஏற்பட்ட மனவருத்தத்தை விட எனக்கு ஏற்பட்ட மனத்துயரம் மிகவும் அதிகம். குறிப்பாக ''உத்தமவில்லன்'' எடிட்டரை சாடிய அந்தக் கீழ்த்தரமான பின்னூட்டங்கள். நான் எடிட்டரின் நிலையில் இருந்து இருந்தால், ஒன்று அந்த idயை block செய்திருப்பேன்.. அல்லது சைபர் க்ரைமில் புகார் செய்திருப்பேன். எதுவாக இருந்தாலும் ஒரு அளவோடு தான் இருக்க வேண்டும் அல்லவா ?!

   Delete
  6. நன்றி நண்பரே.! பட்பட் என உண்மை போட்டு உடைத்தாலும், எடிட்டர் மீது நீங்கள் காட்டும் மதிப்பும் மரியாதையும் தான் உங்கள் மீது உள்ளமதிப்பை எனக்கு உயர்த்தியது.!

   //சைபர் க்ரைமில் புகார் கொடுத்திருப்பேன்.//
   ஹஹஹஹஹஹ.......................

   என் வீட்டில் உள்ள நான்கு பேரும் நான்கு விதமாக உள்ளோம்.!பொது இடத்தில் அதுவும் நம் காமிக்ஸ் நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குண நலன் இவ்வளவு பேரை சமாளிப்பது எடிட்டருக்கு பெரும் சிரமம்தான்.!

   Delete
  7. Madipakkam Venkateswaran : //பொது இடத்தில் அதுவும் நம் காமிக்ஸ் நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குண நலன் இவ்வளவு பேரை சமாளிப்பது எடிட்டருக்கு பெரும் சிரமம்தான்//

   என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் ஒரு சிரமமே இல்லை. லயன் ப்ளாகில் பின்னூட்டமிடும் நாம் அனைவருமே Notify me கொடுத்து ஈமெயில் மூலமாகத் தான் அனைத்து கமெண்டுகளையும் படிக்கிறோம். சாதாரண வாசகர்களாகிய நாமே இவ்வளவு முனைப்பும் ஆர்வமும் காட்டும் போது, ஒரு blog owner, ஒரு publisher, ஒரு editor, ஒரு காமிக்ஸ் காதலர், ஒரு promoter, ஒரு surveyor - என இத்தனை முகங்களில் உள்ள நம் எடிட்டர், ஏன் Notify me கொடுத்து பின்னூட்டங்களைப் படிக்கக் கூடாது என்பதே என் கேள்வி?

   அட.. உடனுக்குடன் கூட வேண்டாம், ஓய்வான நேரத்தில் அல்லது மாலையில் ஒருமுறையாவது மொபைலில் உள்ள அனைத்துப் பின்னூட்டங்களையும் ஒருமுறை படித்துப் பார்த்தால் கூட போதுமானது. அதில் தேவையில்லாத கமெண்டுகளை உடனுக்குடன் நீக்க முடியாதா என்ன? பிரச்சனை செய்ய மட்டுமே அங்குப் பதிவிடும் போலிகளான Sundar Raj, நவீன வள்ளுவன், உத்தமவில்லன், etc., etc., போன்ற idகளை நிரந்தரமாக தடை செய்ய முடியாதா என்ன?! அதுவுமில்லாமல் இந்த போலி idகளில் வரும் நபர்கள் யார், யார் என்று தெரியாத அப்பாவியும் அல்ல நம் எடிட்டர் என்பது என் எண்ணம். பிறகு ஏன் அவர்களின் ஒரிஜினல் idகளுக்கு (Sundar Raj தவிர்த்து) அந்தப் பதிவிலேயே அல்லது அடுத்தப் பதிவிலேயே குழைந்து குழைந்து பதிலிட வேண்டும்?! அன்பால் திருத்த இந்தத் தந்திரம் என்றால் கடைசி வரை அவதிபட்டுத் தான் தீர வேண்டும் :))

   மனம் இருந்தால் மார்க்கம் உண்டு Mv சார் !

   Delete
  8. // பின்னூட்டங்களை உடனுக்குடன்.//

   எடிட்டர் இந்த தளத்தை ஒரு கருத்து பரிமாற்றம் மற்றும் காமிக்ஸ் சம்பந்தமான வாசகர்கள் கருத்தை கண்டறிந்து அதன் மூலம் திட்டமிடல் என்பதே நோக்கம்.. அது திசைமாறி ஈகோ மோதல் ஆகும் போது அவர் பூனைக்கும் தோழன் பாலுக்கும் என்ற நிலைமைக்கு ஆளாகி விடுகிறார். காமிக்ஸ் ரசிகர்களுடன் கலந்துரையாடல் என்பது எனக்கும் கூட மிகவும் சந்தோஷமான விஷயம்.!.!

   உங்களின் ப்ளஸ் ஆன விஷயம் உங்கள் கருத்தை தெளிவாக ,உண்மையை பட் என்று தைரியமாக போட்டு உடைப்பதுதான்.! ஆனால் அதுவே சில சமயங்களில் உங்களுக்கு பெரிய மைனஸ்சாக போய்விடுகிறது இல்லையா .?
   அதற்காக உங்களை குறைசொல்ல முடியுமா.? ஏனென்றால் அது இயல்பு.!


   அது போலத்தான் பெரும்பாலன வாசகர்கள்.

   உத்தம வில்லன் அவதாரமும் அப்படித்தான். அதிக உரிமை எடுத்துக் கொள்ளுவதினால் ஏற்பட்ட தடுமாற்றம்.! உண்மையில் தற்போது வரும் " "நல்ல "போலி ஐ.டி.க்கள் யாரென்று யூகிக்க ரெகுலராக இங்கு பதிவிடும் வாசகர்களுக்கு சிரமமே கிடையாது.! எழத்து நடையே மண்டையில் இருக்கும் கொண்டை போல் காட்டி கொடுத்துவிடுகிறது.!

   இன்னொரு விஷயம் , போலி ஐ.டிக்கே ஒரு போலி ஐ.டி.உருவாக்கும் கலாச்சாரத்தில் உங்கள் பெயரிலும் ஒரு போலி ஐ.டி.உருவாக்கினாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை.!

   Delete
  9. //இன்னொரு விஷயம் , போலி ஐ.டிக்கே ஒரு போலி ஐ.டி.உருவாக்கும் கலாச்சாரத்தில் உங்கள் பெயரிலும் ஒரு போலி ஐ.டி.உருவாக்கினாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை.!//

   ஆ... என்னுடைய பிரச்சனையின் ஆரம்பமே இது தான் நண்பரே.. 2012 நவம்பரில் என் பெயரிலேயே ஒரு போலி id உருவாகி தரம் தாழ்ந்து பதிவிட்டதால் எழுந்த பிரச்னை தான் இன்றுவரை முடிவில்லா யாத்திரையாக அமைந்து விட்டது :))

   Delete
  10. //உத்தம வில்லன் அவதாரமும் அப்படித்தான். அதிக உரிமை எடுத்துக் கொள்ளுவதினால் ஏற்பட்ட தடுமாற்றம்.! உண்மையில் தற்போது வரும் " "நல்ல "போலி ஐ.டி.க்கள் யாரென்று//

   ஒரு முறை தரம் தாழ்ந்து பதிவிட்டாலேயே அவர் மனமும் உள்ளமும் கபடம் நிறைந்தது என்பது தான் அர்த்தம்? ஆனால் உத்தம வில்லனோ தொடர்ச்சியாக போரட்டக் குழுவிற்கு ஆதரவாக மற்றவரை தரம் தாழ்ந்து விமர்சிப்பது எந்த விதத்திலும் ஞாயம் இல்லை.. அதன் தொடர்ச்சி கடைசியாக ஆசிரியரை அவமதிப்பதில், சேற்றை / சாக்கடையை வாரி இறைப்பதில் வந்து நிற்கிறது. அப்படி என்றால் போராட்டக்குழுவில் உள்ள ஒருவர் தானே இவ்வாறு உத்தமவில்லன் என்ற போலி idயில் வலம் வருவது? இதைத் தான் மீரான் ஒருமுறை கடுமையாக, தொடர்ச்சியாக சாடி வந்தார். கடைசியில் அதுவும் மற்றவர்களால் திசை திருப்பப்பட்டு என் தலையில் தான் விடிந்தது :))

   //நல்ல "போலி ஐ.டி.//

   ஹா.. ஹா.. நல்ல பழமாக இருந்தாலும் அழுகி விட்டால் அது தூக்கி எறியப்பட வேண்டிய ஒன்று தானே?! அது போல தான் உத்தமவில்லனும் அவரின் ஒரிஜினல் id யும் என்பது என் கருத்து. இதில் உங்கள் கருத்து மாறுபடலாம் அதில் தவறில்லை :-)

   Delete
  11. //எடிட்டர் இந்த தளத்தை ஒரு கருத்து பரிமாற்றம் மற்றும் காமிக்ஸ் சம்பந்தமான வாசகர்கள் கருத்தை கண்டறிந்து அதன் மூலம் திட்டமிடல் என்பதே நோக்கம்.. //

   இந்த நோக்கம் தளத்தை ஆரம்பிக்கும் போதும், கடந்த வருடம் வரையிலும் கூட இருந்திருக்கலாம். ஆனால் தற்போது தொடர்ச்சியாக பதிவிடும் வெறும் 10 நபர்களின் கருத்து மட்டுமே உண்மையைக் கூறுவதாக அமைந்து விடாது என்பது நம் எடிட்டருக்கும் தெரியும். ஆனால் இந்தப் பத்து பேரும் கூட குறைந்து விட்டால் என்ன செய்வது என்ற கலக்கமே ஆசிரியரின் தடுமாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என்பது என் யூகம். இது உண்மையாக இருந்தாலும் அதை உண்மை என்று யாராவது ஏற்றுக்கொள்வார்களா என்ன?! :))

   Delete
 3. ஏங்க ? எடிட்டர் மீது இந்த கொலவெறி ? நமக்குள் நடக்கும் பிரச்சினைகளில் அவரை ஏன் இழக்கனும்.? நீங்கள் அனைவரும் எடிட்டர் மீது அதிகப்படியாக உரிமை கொண்டாடுகிறீகள் என்று கருதுகிறேன்.!

  ஒன்றுமட்டும் நிச்சயம் !, இந்த உலகில் யாரும் யாரை நம்பியும் இல்லை.! இரயில் பயணம் மாதிரிதான் வாழ்க்கை யார் ஏறினாலும் இறங்கினாலும் இரயில் அதுபாட்டுக்கு போய்க்கிட்டேதான் இருக்கும்.!

  சார் இங்கே சிலர்மீது எனக்கு வருத்தம் வந்தது உண்டு ஆனால் என்றுமே கோபப்பட்டது கிடையாது. சி.சி.வ.படித்ததிலிருந்து எடிட்டர் மீது இருந்த மதிப்பு பலமடங்கு உயர்ந்துவிட்டது.!

  ReplyDelete
  Replies
  1. //ஏங்க ? எடிட்டர் மீது இந்த கொலவெறி ? நமக்குள் நடக்கும் பிரச்சினைகளில் அவரை ஏன் இழக்கனும்.? //

   தவறான கண்ணோட்டம் Mv சார் :)

   //பொது இடத்தில் அதுவும் நம் காமிக்ஸ் நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குண நலன் இவ்வளவு பேரை சமாளிப்பது எடிட்டருக்கு பெரும் சிரமம்தான்.!// --------

   தாங்கள் முன் வைத்த இந்த விவாதத்தின் தொடர்ச்சியாக மட்டுமே நீங்கள் என் கருத்தைப் பார்த்தால் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்வீர்கள். இங்கு, என்னை நீங்கள் ஒரு விமர்சகராக / என் கருத்தை ஒரு விமர்சனமாக மட்டுமே பார்த்தால் அங்கே எடிட்டர் மறைந்து விடுவார். மாறாக ஒரு blog administrator ஆக மட்டுமே திரு விஜயன் உங்கள் கண் முன்னே தோன்றுவார் அல்லவா ?!

   என் விமர்சனம் தப்பாக இருக்கலாம் ஆனால் விமர்சிப்பதே தவறு என்று கூற முடியாதல்லவா நண்பரே ?

   Delete
  2. //ஒன்றுமட்டும் நிச்சயம் !, இந்த உலகில் யாரும் யாரை நம்பியும் இல்லை.! இரயில் பயணம் மாதிரிதான் வாழ்க்கை யார் ஏறினாலும் இறங்கினாலும் இரயில் அதுபாட்டுக்கு போய்க்கிட்டேதான் இருக்கும்.!//

   என் கருத்தும் அது தான் Mv சார். எடிட்டர் blogல் யார் பதிவிட்டாலும் பதிவிடாவிட்டாலும், வந்தாலும் வராவிட்டாலும் அது தொடர்த்து பயணித்துக் கொண்டேதான் இருக்கப் போகிறது. பழைய வாசகர்கள் வந்தாலும் வராவிட்டாலும் அது தன் வெற்றிப் பயணத்தை தொடரத் தான் போகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

   நீங்கள் கூறிய இரயில் பயணம் போலதான் இதுவும். ஆனால், ஒரு கம்பார்ட்மெண்டில் அமைதியாக பயணிக்கும் 60+ பயணிகளுக்கு ஒன்றிரண்டு குடிகார பயணிகளால் தொடர்ந்து தொல்லை வந்தால், அவனை அடக்கி வைப்பதோ முடியாவிட்டால் அடுத்த ஸ்டேஷனில் இறக்கி விடுவதோ TTE யின் கடமை அல்லவா ?!

   //இங்கே சிலர்மீது எனக்கு வருத்தம் வந்தது உண்டு ஆனால் என்றுமே கோபப்பட்டது கிடையாது/./

   உங்களைப் போல் அனைவராலும் இருக்க முடியாது நண்பரே. இங்கு நான் ஒரு விமர்சகனாக மட்டுமே என் கருத்தைத் தெரிவித்துள்ளேன். நமக்கு நடைபெறாதவரை வரை அது ஒரு சம்பவம் மட்டுமே. இதில் விரோதமோ, பகையின் சாடலோ எங்கும் இல்லை. இங்கு ஒரு கருத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்... உத்தமவில்லன் அங்கு ஒருவரை ''மாமா வேலை செய்'' என்று கூறினார், அதுமட்டுமல்ல ''கூட்டிக் கொடுங்கள்'' என்றும் பதிவிட்டிருந்தார். இதுபோல் இன்னும் நிறையவே தொடர்ந்தது, தொடர்கிறது... நமக்கு இது ஒரு சம்பவமே, ஆனால் சம்பந்தப்பட்டவருக்கு எப்படி இருந்து இருக்கும் என்று யோசித்துப் பார்த்தீர்கள் என்றால் என் கருத்தின் ஆழம் நிச்சயம் உங்களுக்கும் புரியும் :))

   Delete
  3. உங்கள் மனதின் வலி புரிகிறது.! பேஸ்புக் மற்றும் இதுபோன்ற இடங்களில் மிகச் சுலபமாக அவமானப்பட்டு போகிறோம் ஆனால் இதற்கு எல்லாம் சீக்கிரமே முற்றுப்புள்ளி வரும் நாள் தொலைவில் இல்லை.!

   நான் அடிக்கடி கருத்தை கொஞ்சம் மாற்றிக் கொண்டாலும் ,வலைதளத்திற்கு அப்பாற்பட்ட நண்பர்களும் என்னை ஜால்ரா என்று கூறினாலும் எடிட்டர் மீது என் கண்மூடித்தனமான நம்பிக்கை மாறாது.

   அப்புறம் நண்பரே.! லயன் & முத்து கலெக்ஷன் முழுவதும் உங்களிடம் உள்ளதா.?
   (என்னிடம் 80 % புத்தகங்கள் உண்டு .)

   Delete
  4. சட்ட சபையில் ஒரு மரபு உண்டு . அது , ஒரு உறுப்பினர் எழந்து நின்று பேசிக்கொண்டு இருக்கும்போது சபாநாயகர் எழந்து நின்றால் , நின்று பேசிக்கொண்டு இருக்கும் உறுப்பினர் பேச்சை நிறுத்தி விட்டு உட்கார வேண்டும் இதுதான் மரபு.!( ஆனால் இதை தற்போது பாலோ பன்றாங்களா என்று தெரியாது.! )

   அதைப்போல எடிட்டரின் முந்தைய பதிவில் நடந்த பிரச்சினைகளை அடுத்த பதிவில் பேசாமல் இருப்பது நமக்கு எல்லோருக்கும் நன்மையைத்தரும்.! நமக்கும் மரபுகள் அவசியம்.!

   நீங்கள் இனி காலையில்தான் வருவீர்கள் ? அப்படித்தானே.? எனவே நாளை எடிட்டர் பிளாக்கில் சந்திப்போம்.! நன்றி நண்பரே.! நீங்கள் அடிக்கடி வரவேண்டும்.!(நேரம் இருந்தால்.அப்பறம் ஒருவிஷயம், வழக்கத்திற்கு மாறாய் பார்வைகள் அதிகரித்து உள்ளதா.?)

   Delete
  5. //நீங்கள் இனி காலையில்தான் வருவீர்கள் ? அப்படித்தானே.? //

   அப்படியெல்லாம் இல்லை நண்பரே, கமெண்டு போட எனக்குக் கம்ப்யூட்டர் வேண்டும் அவ்வளவு தான். நேரம் காலம் பற்றியெல்லாம் கவலையில்லை. மொபைலில் கமெண்டு போடுவதில்லை என்பதால் நினைத்த நேரத்தில் பதிவிட இயலுவதில்லை !

   //அதைப்போல எடிட்டரின் முந்தைய பதிவில் நடந்த பிரச்சினைகளை அடுத்த பதிவில் பேசாமல் இருப்பது நமக்கு எல்லோருக்கும் நன்மையைத்தரும்.! நமக்கும் மரபுகள் அவசியம்.!//

   நிச்சயம் ஏற்றுக் கொள்ளவேண்டிய கருத்து தான் என்பதில் சந்தேகம் இல்லை. நானும் இதை முழுமனதாக கடைப்பிடிக்க முயற்சி செய்கிறேன். ஆனால் என்னவொன்று என்னைப் போன்ற 'செமி ரெகுலர்' வலைதள வருகையாளர்கள் இந்த மரபை கடைப்பிடித்தால் பல விஷயங்களில் தம் கருத்தை பதிவு செய்ய இயலாமலேயே போய்விடும். இருந்தாலும் தங்களின் ஆலோசனையை முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறேன்.

   //அப்பறம் ஒருவிஷயம், வழக்கத்திற்கு மாறாய் பார்வைகள் அதிகரித்து உள்ளதா.?//

   ஆமாம், அப்படிதான் நினைக்கிறேன். ஏன் அப்படி ? :))

   Delete
  6. //லயன் & முத்து கலெக்ஷன் முழுவதும் உங்களிடம் உள்ளதா.?//

   இல்லை Mv சார், ஒரு 5 சதவீதம் கூட என்னிடம் கிடையாது. நான் ஒரு சம கால வாசகன் என்பது வேண்டுமானால் கிட்டத்தட்ட உண்மையாக இருக்கலாம். அதனால் தான் மறுபதிப்புகளின் மேல் எனக்கு அவ்வளவு ஆர்வம். இம்மாத இதழ்களில் 'சிறைப்பறவை' கதையைப் படிக்கும் போது, கடைசிவரை ஒரு சஸ்பென்ஸ் ''இப்போதும்'' மெயின்டைன் ஆகிறது என்றால், அன்றைய காலகட்டத்தில் படித்தவர்கள் எவ்வளவு ரசித்திருப்பார்கள் என்று திகைப்பே மேலிடுகிறது.

   என்னிடமும் சில கறுப்பு வெள்ளை கடைசிகால காமிக்ஸ் கைவசம் இருக்கிறது. அதன் மறுபதிப்பு வெளிவரும் சமயத்தில் என்னிடம் உள்ளவைகளை வேறு யாருக்காவது கொடுத்து விடலாம் என்று இருக்கிறேன். குறிப்பாக பாக்கெட் சைஸ் அதிக அளவில் இருக்கிறது :)

   Delete
  7. நான் 1984 ல் இருந்து 1989 வரை தீவிர வாசகன் பின் துருவ கரடியின் குளிர்கால தூக்கம் போல் நீண்ட இடைவெளிக்கு பின் 2003 லிருந்து.........

   Delete
  8. //பாக்கெட் சைஸ் புத்தகம் அதிகம் உள்ளது.!//

   எனக்கு வயது 42 ஆகிறது பாக்கெட் சைஸ் புத்தகங்களில் உள்ள சிறிய எழத்துக்களை படிக்க சிரமப்படுகிறேன்.நான் புது புத்தகங்கள் மட்டுமே ஓ.சி. யில் கொடுப்பேன். பழைய புத்தகங்கள் ஒன்லி எக்ஸ்சேஞ் மட்டும்தான்.! எனது இரண்டாம் வருகைக்கு காரணம் நண்பர் ஆர்.டி.முருகன் அவர்கள்தான்.அவர் வீட்டின் அருகில்தான் உள்ளேன்.!நான் முதன் முதலில் சந்தித்த காமிக்ஸ் நண்பர் அவர்தான்.! இப்படி ஒரு காமிக்ஸ் உலகம் உள்ளது என்று அறிமுகப்படுத்தியதும் அவர்தான்.! என் வீட்டில் உள்ள அனைவரும் என்னை காமிக்ஸ் பைத்தியம் என்று திட்டுவது உண்டு.! ஆனால் தற்போது நான் ஒரு சுள்ளான் என்று உணர்கிறேன்.!

   Delete
  9. //ஆனால் தற்போது நான் ஒரு சுள்ளான் என்று உணர்கிறேன்.!//

   :)))

   சுள்ளான் என்று நினைத்தால் நாம் எல்லோருமே இங்கு சுள்ளான் தானே சார் ? நம் எடிட்டர் விஜயன் அவர்கள் கூட ஒரு முறை, இது போன்ற ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்... ''கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு'' என்பது நம் காமிக்ஸ் உலகத்திற்கும் பொருந்தும் :)

   Delete
 4. நண்பரே.!

  தோர்கல் எனக்கு ஆரம்பத்தில் பிடிக்கவில்லை.ஆனால் , சா.சா.யின் இம்மாத இதழ் அட்டகாசம்.! நீங்கள் படித்துவிட்டீர்களா.? உங்களது கருத்தை அறிய ஆவல்.!

  ReplyDelete
  Replies
  1. Madipakkam Venkateswaran : நண்பரே, இம்மாத இதழ்கள் அனைத்தையும் மேலோட்டமாக படித்துவிட்டேன். ஆனால் அனைவரும் சிலாகிக்கும் அளவில் ''தோர்கல்'' இல்லையோ என்ற ஐயம் தான் ஏற்படுகிறது. இரண்டாவது முறை படித்துப் பார்த்தால் தான் முழுமையாக அளவிட இயலும் என்று நினைக்கிறேன் :)

   Delete
  2. எனக்காக நேரம் ஒதுக்கி மாலை நேரத்தில் பதில் அளித்ததற்கு நன்றி.! நான் ஒரு 15 பக்கங்கள் படித்துவிட்டு "முடியல"என்று தூக்கிபோட்டுவிட்டேன்.! பிறகு எடுத்துபடித்தேன் 20 பக்கங்கள் மேல் நல்ல விறுவிறுப்புடன் சென்றது.! மற்ற மூன்றும் கதைகள்.?

   Delete
  3. //நான் ஒரு 15 பக்கங்கள் படித்துவிட்டு "முடியல"என்று தூக்கிபோட்டுவிட்டேன்.! பிறகு எடுத்துபடித்தேன் 20 பக்கங்கள் மேல் நல்ல விறுவிறுப்புடன் சென்றது//

   நாம் எந்தளவு ஒரு கதையை எதிர்பார்க்கிறோமோ அந்தளவு நமக்குக் கதையைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது. அதே அளவு எதிர்பார்ப்புடன் கதையைப் படிக்கும் போது, அந்தக் காமிக் நமக்கு மிகவும் சுவாரசியம் அளிப்பதாக இருக்கிறது என்று கருதுகிறேன். அது போலவே ஒரு காமிக்கை ரசித்துப் படிக்க நமக்கு அதற்கேற்ற ஓய்வான நேரமும் நிச்சயம் அமைய வேண்டும் என்பதில் நானும் தற்போது உடன்படுகிறேன். 'சிறைப்பறவை' நான் இதுவரை படிக்காத புதுக் கதை என்பதால் என்னால் ரசிக்க முடிந்தது என்பது தான் உண்மையான காரணமாக இருக்க முடியும் !

   //மற்ற மூன்று கதைகள்.?//

   இந்த மாதம் வந்த நான்கு காமிக்ஸும் மிகவும் சுவாரசியமாக இருந்தது :)

   Delete
 5. எனக்காக நேரம் ஒதுக்கி , என்னுடன் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சார்.! உங்களுடன் உரையாடினால் கண்ணிவெடிகளுக்கு மத்தியில் செல்வது போல் ஒரு உணர்வு ஏற்படும்.இங்கு நிம்மதியுடன் இருந்தது.! நம் காமிக்ஸ்வட்டமோ மிககுறுகியது .மனக்கசப்புகளை மறந்து அனைவரும் ஒன்றுகூடி இருந்தால் அது சந்தோசமாக இருக்கும்.! நான் இந்த உலகிலேயே மிகவும் அதிகமாக வெறுக்கும் ராஜபக்ஷே ஒரு தமிழ்காமிக்ஸ் ரசிகராக இருப்பின் எனக்கு அவரையும் பிடிக்கும்.!

  ReplyDelete
  Replies
  1. //எனக்காக நேரம் ஒதுக்கி , என்னுடன் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி//

   நமக்குள் நன்றிகள் எல்லாம் அவசியம் இல்லை நண்பரே... என்னைப் பொறுத்தவரை காமிக்ஸ் சம்பந்தமாக நான் மனதில் நினைப்பதை பின்னூட்டமாக வலையேற்றம் செய்யும் போது மனம் இலகுவாகுகிறது. அத்தகைய வாய்ப்பை எனக்கு வழங்கிய உங்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும். [ மீண்டும் முதல் வரியை படிக்கவும் :-)) ]

   //நம் காமிக்ஸ் வட்டமோ மிககுறுகியது .மனக்கசப்புகளை மறந்து அனைவரும் ஒன்றுகூடி இருந்தால் அது சந்தோசமாக இருக்கும்//

   +1

   மீண்டும் நாளை எடிட்டர் blogல் சந்திப்போம் !!

   Delete
 6. ///காமிக்ஸ் படிக்க ஓய்வான நேரம் அவசியம்.!///

  உண்மை.! உண்மை.! சிறுவயதில் நான் புத்தகம் வாங்கியவுன் அங்கேயே ஒரு ஓரமாக உட்கார்ந்து படித்து விடுவேன்.! தற்போது அதற்கான தனிமை சூழ்நிலைக்காக காத்து இருப்பேன்.!

  சில வருடங்களுக்கு முன்பெல்லாம் காமிக்ஸ் வந்தவுடன் படித்துவிடுவேன். நான் அமைதியான சுபாவம் . அதுவும் என் குழந்தைகளிடத்தில் கோபப் படுவதே கிடையாது. அதுவும் குழந்தைகள் முன் பரமசாது .!ஒரு சமயம் காமிக்ஸ் வந்தவுடன் ஆவலுடன் பார்சலை பிரித்து படிக்க ஆரம்பித்து விட்டேன். நான் அதிக ஆர்வத்துடன் காமிக்ஸ் படித்தை கண்டு எரிச்சலடைந்த என் இளையமகன் இடையூறு செய்தான்.நான் இதனால் என்னை அறியாமல் சீறி எழந்து விட்டேன்.இதனால் என் இளையமகன் மட்டுமல்லாது மூத்த மகனும் மிரண்டு பயந்து போய் அம்மாவின் மடியில் அமர்ந்து அழ ஆரம்பித்துவிட்டனர். இதுவரை சாதுவாக மட்டுமே பார்த்த என் மகன்கள் இருவரும் பயந்து நடுநடுங்கி அழ ஆரமித்துவிட்டனர். அப்போது என் மனைவி நான் நடந்துகொண்டதைபற்றி பின்வருமாறு கூறினாள் .! "பசியுடன் கறிசோறு சாப்பிடும் நாயின் சாப்பாடு தட்டை பிடுங்கினால் நாய் எப்படி வள் ன்னு சீறுமோ அதைப்போல இருந்தது என்றாள்." அதன் பின் குழந்தைமுன் காமிக்ஸ் படிப்பதே இல்லை.!

  ReplyDelete
 7. ///90%வாசகர்கள் கி.நா. விற்கு பழகவில்லை.////

  உண்மை நண்பரே.! நீங்கள் கி.நா.வுக்கு பழகிவிட்டீர்களா.? எனக்கு தெரிந்த காமிக்ஸ் தொடர்பான நண்பர்கள் யாருக்குமே கி.நா. பிடிக்கவில்லை.! நீங்கள் குறிப்பிட்டது சரிதான்.!

  மீறிபோனால் ஒரு 15% கி.நா.ரசிகர்கள் இருந்தால் பெரிய விஷயம்.! என்ன நண்பரே நான் கூறுவது சரியா.?

  ReplyDelete
  Replies
  1. Madipakkam Venkateswaran : //(//90%வாசகர்கள் கி.நா. விற்கு பழகவில்லை//) நீங்கள் கி.நா.வுக்கு பழகிவிட்டீர்களா.?//

   நண்பரே, இது யாருக்கான பதில் / பதிவு என்று தெரியவில்லை :​-))

   நான், காமிக்ஸ் / கிராபிக் நாவல் என்று பிரித்துப் பார்ப்பதில்லை. என்னைப் பொறுத்தவரை எல்லாமே காமிக்ஸ் மட்டும் தான். எனவே, எனக்கு இந்த காமிக்ஸ் பிடித்தது ; எனக்கு இந்த காமிக்ஸ் பிடிக்கவில்லை என்பதோடு என்னுடைய காமிக்ஸ் ரசனை முற்றுப் பெறுவதாக நினைக்கிறேன்.

   Delete
 8. மிஸ்டர் மரமண்டை.! வணக்கம்."!

  நீண்ண்ண்ட இடைவெளி ஆகிவிட்டதே ஒரு சூப்பர் பதிவு போட்டால் என்ன.?

  ReplyDelete
  Replies
  1. Madipakkam Venkateswaran: //நீண்ண்ண்ட இடைவெளி ஆகிவிட்டதே ஒரு பதிவு போட்டால் என்ன.?//

   அடடே ! Mv சார், இங்கே க்ளிக்கவும் :)

   Delete